ஆங்கில எழுத்து Z யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை குறிப்பிடும் முத்திரையாக பார்க்கப்படலாம். அதே வேளையில், முக்கோண வடிவம் யுக்ரேனின் மிக துணிச்சலான பதிலடியை பிரதிபலிக்கிறது.

சுமி பிராந்தியத்தில் உள்ள ரஷ்ய எல்லைப் பகுதியை நோக்கி செல்லும் ஒவ்வொரு சரக்கு வாகனம், ராணுவ சண்டை வாகனம்(டேங்க்) அல்லது தனிநபர் வாகனங்களின் இரு பக்கங்களிலும் முக்கோணங்களை வரைந்தோ அல்லது ஒட்டியோ வைத்துள்ளனர் யுக்ரேனியர்கள்.

குர்ஸ்க் எல்லைப் பிராந்தியத்தின் ரஷ்ய பொறுப்பு அதிகாரி, அந்த பிராந்தியத்தில் உள்ள 28 பகுதிகள் யுக்ரேனியர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், 2 லட்சம் ரஷ்யர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

யுக்ரேனின் இந்த எல்லை தாண்டிய படையெடுப்பு பணியில் இருந்து திரும்பி வந்த தோமாஷ், இந்த படையெடுப்பு பரபரப்பற்றதாக இருந்தது என கூறுகிறார்.

அவர்களின் டிரோன் பிரிவு, இரண்டு நாட்கள் செலவழித்து, இந்த எல்லை தாண்டிய ஊடுருவலுக்கு வழி வகுத்து.

“நாங்கள் இங்கே வரவேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் எதற்காக என்று எங்களுக்கு அப்போது தெரியவில்லை,” என்று கூறுகிறார் தோமாஷ். காபி குடிப்பதற்காக ஒரு பெட்ரோல் பங்கில் நின்ற தோமாஷுக்கு இந்த உத்தரவு வந்துள்ளது.

நாங்கள் எதிரிகளின் (ரஷ்யர்களின்) அனைத்துவிதமான தொலைத்தொடர்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களை முறியடித்து இந்த படையெடுப்புக்கு அனைத்தையும் சரி செய்து கொடுத்தோம் என்கிறார் தோமாஷ்.

யுக்ரேனிய படை எவ்வளவு தூரம் ரஷ்ய பகுதியை ஆக்கிரமித்துள்ளது என்று தெரியவில்லை. இருப்பினும் ராணுவ தளபதி ஒலக்ஸாண்டர் சிர்ஸ்கி, கிட்டத்தட்ட ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பு தற்போது யுக்ரேனியர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று குறிப்பிட்டார்.

மேற்கொண்டு யுக்ரேனிய படைகள் ரஷ்யாவுக்குள் ஊடுருவ மேற்கொண்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டுவிட்டதாக செவ்வாய்கிழமையன்று ரஷ்ய பாதுகாப்பு துறை தெரிவித்தது. ஆனால் அவர்கள் கூறுவது தவறு என்று முன்பு நிரூபிக்கப்பட்டுள்ளது.

உண்மை என்னவோ, யுக்ரேன் இந்த ராணுவ முயற்சியில் உறுதியாக உள்ளது.

2022ம் ஆண்டு ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, சுமி (sumy) பிராந்தியத்தின் அண்டை பகுதியில் நான் பார்த்திராத பல நடவடிக்கைகள் இப்போது நடைபெற்று வருகிறது.

கடந்த 18 மாதங்களாக நடைபெற்று வரும் போரில் இது வரவேற்கதக்க ஒன்று. ஆனால் இது வெற்றியா அல்லது தோல்வியா என்பதை முன்கூட்டியே கூறிவிட இயலாது.

இந்த ராணுவ தாக்குதலின் இலக்கு என்னவென்று இன்னும் தெளிவாக இல்லை. இருப்பினும் யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா எங்கிருந்தெல்லாம் தாக்குதல் நடத்துமோ அந்த பகுதியை இலக்காக கொண்டு முன்னேறுவது, ”அமைதிக்கு” அருகில் இட்டுச்செல்லும் என கூறினார்.

யுக்ரேன் தன்னுடைய தலைசிறந்த ராணுவ துருப்புகளை இந்த பணிக்காக களம் இறக்கியுள்ளது வெளிப்படையாக தெரிகிறது.

முன்னேறும் யுக்ரேனிய படையினர்

உடற்பயிற்சி செய்து நன்றாக தோற்றமளிக்கும் வீரர்கள் அவர்களுக்கு ஏற்ற வகையிலான வாகனங்களில் வலம் வருகின்றனர். சிலர் ஊடகங்களிடம் பேச மறுக்கின்றனர். சிலர் மிகவும் சோர்வுற்று இருக்கின்றனர்.

டெலிகிராம் செயலி மூலம், ரஷ்யாவில் இருக்கும் யுக்ரேன் வீரர் பேசிய போது, யுக்ரேனின் எல்லைப்பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் ரஷ்ய துருப்புகளை வெளியேற்ற அந்நாட்டை கட்டாயப்படுத்த மாதக் கணக்கில் திட்டமிடப்பட்டதைப் பற்றி தெரிவிக்கிறார்.

“ஆச்சரியமாக இது நிறைவேறிவிட்டது. குறைவான எதிர்ப்புகளுடன் நாங்கள் ரஷ்யாவுக்குள் நுழைந்தோம். ஆகஸ்ட் 6ம் தேதி இரவு, முதல் குழுக்கள் பல்வேறு இடங்களில் ரஷ்யாவின் எல்லைக்குள் நுழைந்தன,” என்று கூறினார் அவர்.

“அவர்கள் உள்ளே நுழைந்ததும், சுத்ஸா நகரின் மேற்கு புற நகர் பகுதியை அடைந்தனர்,” என்றும் அவர் தெரிவித்தார்.

ரஷ்ய எல்லையில் ஊடுருவிய யுக்ரேனிய படை

 

ரஷ்யா கூறுவது என்ன?

இது போன்ற நடவடிக்கைகளில் ராணுவத்தினர் ரகசியத்தை பாதுகாக்கின்றனர். ஆனால் பொதுமக்களும் அப்படி இருப்பார்கள் என்று கூறிவிட இயலாது.

வான்வழி தாக்குதல் மற்றும் போர் மூண்ட பிறகு, எல்லையின் இரண்டு பகுதிகளிலும் ஆயிரக் கணக்கான மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

“நாங்கள் பார்க்கும் ரஷ்ய மக்கள் எங்களை எதிர்ப்பதில்லை,” என்று தெரிவிக்கும் யுக்ரேனிய வீரர், “நாங்கள் அவர்களை தாக்குவதில்லை. ஆனால் அவர்கள் எங்களை எதிர்மறையாக அணுகுகின்றனர் அல்லது கோபத்துடன் நடத்துகின்றனர். அல்லது எதுவும் சொல்லாமல் கடந்துவிடுகின்றனர்,” என்று குறிப்பிட்டார்.

ரஷ்ய துருப்புகள் தொடர்பாக அவர்கள் எங்களை ஏமாற்றுகிறார்கள் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

கார்கிவ், போக்ரோவ்ஸ்க் மற்றும் தொரேத்ஸ்க் போன்ற கிழக்கு எல்லைப் பகுதிகளில் ரஷ்ய படைகள் முன்னேறி வருவதை உறுதி செய்வதற்காக நாங்கள் சில யுக்ரேனிய வீரர்களிடம் பேசினோம்.

ஆனால் ரஷ்ய படை மெதுவாக முன்னேறி வருவது குறித்து அவர்கள் எதுவும் நம்மிடம் தெரிவிக்கவில்லை.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ரஷ்யாவில் நடைபெற்றிருக்கும் முதல் ஆக்கிரமிப்புக்கு ‘சரியான பதிலடி’ தரப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

 

தொடர்ந்து நடைபெற்று வரும் போரால் இரண்டு எல்லைப் பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர்

எல்லைப் பகுதியில் இருந்து வெளியேறும் ரஷ்ய மக்கள்

எல்லையோர பகுதிகளில் வசிக்கும் யுக்ரேனியர்கள் கருதுவது என்ன?

அச்சுறுத்தலை ஏற்படுத்த கூறப்பட்ட அவரின் வார்த்தைகள், தொடர்ச்சியாக ரஷ்ய ராணுவப்படைகளின் தாக்குதலுக்கு ஆளான, எல்லையோர பகுதிகளை இன்னும் சென்று சேரவில்லை.

ஸ்தெத்ஸ்கிவ்கா என்ற கிராமத்தில், மிஷாவும் அவருடைய நண்பர் வலேராவும் எங்களை தாண்டி அவர்களின் ஆரஞ்ச் நிற காரில் சென்றனர்

“அவர்கள் இதனை (குர்ஸ்க் பிராந்தியத்தை) எடுத்துக் கொண்டு இப்படி செய்யட்டும்,” என்று கைகளை முறுக்கிறார் மிஷா.

“அவர்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளட்டும். மாஸ்கோவையும் கூட எடுத்துக் கொள்ளட்டும்,” என்கிறார் அவர்.

2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், ரஷ்யாவின் முழு அளவு படையெடுப்பால் தொடர்ச்சியாக இன்னலுக்கு ஆளாகி வருவதால் ஏற்பட்ட கோபம் மக்களிடம் நங்கூரமிட்டுள்ளது.


மிஷாவைப் போன்ற பல யுக்ரேனியர்களும், தங்களின் படை குர்ஸ்க் பிராந்தியத்தை தாண்டியும் ரஷ்யாவுக்குள் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்

“ரஷ்யா தான் முதலில் தாக்கியது. நாங்கள் இல்லை,” என்கிறார் வலேரா. “தற்போது எங்களின் ராணுவத்தினர் அதற்கு பதலடி கொடுத்து அவர்களால் என்ன முடியும் என்பதை காட்டியுள்ளனர். எங்களுக்கு மட்டும் அனுமதி கிடைத்திருந்தால் நாங்கள் இப்பகுதியை முன்கூட்டியே ஆக்கிரமித்திருப்போம்,” என்று தெரிவித்தார் அவர்.

எல்லை தாண்டிய தாக்குதலுக்காக காத்துக் கொண்டிருந்த யுக்ரேனுக்கு மேற்கத்திய நாடுகள் பச்சைக் கொடி காட்டியிருப்பது போல் தெரிகிறது.

சுமியின் புறநகர் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு படையினரை பார்த்தால் அச்சுறுத்தல்கள் இன்னும் அதிகமாகவே இருக்கின்றன.

கடந்த வாரம் வரை, ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஆளாவதற்கான அச்சம் யுக்ரேனின் வடக்கு பகுதியில் நிலவி வந்தது. தற்போது யுக்ரேனின் இந்த படையெடுப்பு தோல்வி அடைந்தால், அந்த அச்சம் உடனே உறுதியாகிவிடும்.

யுக்ரேன் படை வீரர்களின் எண்ணிக்கை முன்பும் இப்போதும் ரஷ்ய படைவீரர்களைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது.

இந்த பதில் தாக்குதலின் மூலம் அமைதிப் பேச்சுவார்த்தையில் தன்னுடைய இடத்தை யுக்ரேன் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று யுக்ரேனியர்கள் பலர் நம்புகின்றனர்.

ஆனால் இந்த நடவடிக்கை பேச்சுவார்த்தையை மேலும் தாமதமாக்கவும் செய்யலாம்.

Share.
Leave A Reply

Exit mobile version