ரஷ்யாவில் 1,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கைப்பற்றிவிட்டதாக யுக்ரேன் ராணுவம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த தாக்குதலை ‘கடுமையான ஆத்திரமூட்டும் நடவடிக்கை’ என்று குற்றம்சாட்டியுள்ளார். யுக்ரேன் படைகளை ரஷ்ய எல்லையில் இருந்து துரிதமாக விரட்டியடிக்க வேண்டும் என்று ரஷ்ய ராணுவத்திற்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்யாவின் கர்ஸ்க் பிராந்தியத்தில் யுக்ரேன் – ரஷ்யா இடையே கடந்த ஒரு வாரமாக மோதல் நிலவி வருகிறது. ரஷ்யாவின் கர்ஸ்க் பகுதியில் இந்தத் தாக்குதலை நடத்த யுக்ரேன் முடிவு செய்தது ஏன்?

யுக்ரேனின் எல்லைக் கடந்த இந்த நடவடிக்கை தொடர்பாக இதுபோன்ற 5 கேள்விகள் எழுந்துள்ளன. அதற்கான பதில்களை இந்த கட்டுரையில் நாங்கள் உங்களுக்குச் சொல்லவிருக்கிறோம்.

கர்ஸ்க் பகுதியில் என்ன நடந்தது?

ஆகஸ்ட் 6 ஆம் தேதி, யுக்ரேன் எல்லையோரம் உள்ள ரஷ்யாவின் கர்ஸ்க் பகுதியில் யுக்ரைன் இராணுவ வீரர்கள் திடீரென தாக்குதலை துவங்கினர். இந்த தாக்குதல் எவ்வளவு பெரிது என்பது குறித்த துல்லியமான தகவல்களை சேகரிப்பது கடினம்.

ஆரம்பத்தில், இந்த நடவடிக்கை விளாடிமிர் புதினின் அரசாங்கத்தை எதிர்க்கும் ரஷ்ய குழுக்களின் ஊடுருவலாக தோன்றியது. இந்த குழுக்கள் யுக்ரேன் வழியாக ரஷ்யாவிற்குள் நுழைந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

ரஷ்ய எல்லையில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் எதிரிகளுடன் கடும் சண்டை நடந்ததாக ரஷ்ய ராணுவ பிளாகர்ஸ் (MIlitary Bloggers) தெரிவித்தனர்.

ரஷ்யாவின் சில கிராமங்கள் யுக்ரேன் வசம் பிடிப்பட்டதை அடுத்து, இந்த தாக்குதலில் ஈடுபட்டிருப்பது யுக்ரேன் படைகள் தான் என்பது தெளிவாக உறுதிசெய்யப்பட்டது என அதிபர் புதினிடம் கர்ஸ்க் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய எல்லையில் பாதுகாப்பு குறைவாக இருந்த இடத்தின் வழியே ரஷ்யாவுக்குள் ஊடுருவ யுக்ரேன் முடிவெடுத்ததாக தெரிகிறது.

பெயர் குறிப்பிட விரும்பாத யுக்ரேனிய உயர் அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம், ‘நாங்கள் ஆக்ரோஷமாக உள்ளோம். எதிரி வீரர்களை முடிந்தவரை காயப்படுத்த முயற்சிக்கிறோம். ரஷ்யாவால் தனது சொந்த எல்லையை பாதுகாக்க முடியாது என்பதை நிரூபிப்பதன் மூலம் ரஷ்யாவை ஸ்திரத்தன்மையற்ற நாடாக மாற்ற விரும்புகிறோம்.’ என்றார்.

வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

ரஷ்யாவின் குர்ஸ்க் மீது தாக்குதல் யுக்ரைன் நடத்தியது ஏன்?

ஆரம்பத்தில் யுக்ரேன் இந்த தாக்குதல் குறித்து அமைதி காத்து வந்தது. பின்னர், ஆகஸ்ட் 10 ஆம் தேதி, அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மறைமுகமாக ஒப்புக்கொண்டார்.

‘யுக்ரேன் தொடர்ந்து போரை ஆக்கிரமிப்பாளர்களின் எல்லைக்குள் எடுத்து செல்லும்’ என்று அவர் தெரிவித்தார்.

ஆனால், ஆகஸ்ட் 12-ஆம் தேதி அன்று, சுமார் 1,000 சதுர கிலோமீட்டர் அளவிலான ரஷ்ய நிலப்பரப்பை கைப்பற்றியிருப்பதாக யுக்ரேன் அறிவித்தது.

யுக்ரேனின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ள ரஷ்யாவின் கவனத்தை திசை திருப்புவது இந்த ஊடுருவலின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கலாம் என்பதை பெரும்பாலானோர் ஒப்புக்கொள்கிறார்கள்.

கடந்த பல மாதங்களாக தனது கிழக்கு எல்லை வழியே ரஷ்ய இராணுவம் ஊடுருவுவதை தடுத்து நிறுத்த முடியாமல் தடுமாறுகிறது யுக்ரைன்.

ரஷ்ய இராணுவ படைகள் கடந்த மாதம் புவியியல் ரீதியாக முக்கியமான நகரமான சாசிவ் யார் (Chasiv Yar) பகுதியைக் கைப்பற்றி முன்னேறி வருகின்றன. யுக்ரேனின் நிலைமை வட-கிழக்கு மற்றும் தெற்கில் கடினமாகவே உள்ளது.

தனது கிழக்கு பகுதிகளில் நிலைமையை இலகுவாக்குவதற்காக, ரஷ்யாவின் கர்ஸ்க் பகுதிக்குள் ஊடுருவ யுக்ரேன் முடிவு செய்துள்ளது.

யுக்ரேனின் துருப்புகளை திரும்பப் பெறுமாறு கோரும் ஆர்வலர்கள்

ரஷ்ய இராணுவத்துடன் ஒப்பிடுகையில் யுக்ரேன் ராணுவம் எண்ணிக்கையிலும், ஆயுத ரீதியாகவும் சிறியது. ஆனாலும், யுக்ரேனிய ராணுவ அதிகாரிகள் இந்த ‘சூதாட்டம்’ போன்ற தாக்குதலை நடத்தி ரஷ்ய துருப்புக்களை சிதறடித்தனர்.

பிபிசியிடம் பாதுகாப்பு நிபுணரான பேராசிரியர் மார்க் கலியோட்டி இதுகுறித்து பேசுகையில், “யுக்ரேன் கடந்த சில மாதங்களாக போர்க்களத்தில் சிக்கியுள்ளது. போர்க்களத்தில் மிகச்சிறிய அளவிலேயே இயங்கி வந்தது. இப்போது, தாக்குதலை மேற்கொள்ள துணிந்து செயல்பட வேண்டி இருக்கிறது.” என்றார்.

ஒரு யுக்ரேனிய தளபதி, தி எகனாமிஸ்ட் பத்திரிகையிடம் பேசுகையில், இது ஒரு சூதாட்டம் என்று கூறினார்: “எங்கள் முன்கள படைகளை, அவர்களின் மிகவும் அபாயகரமான எல்லை பகுதிக்குள் அனுப்பியுள்ளோம்.” என்றார்.

ஆனாலும், யுக்ரேன் எதிர்பார்த்த அளவுக்கு இந்த தாக்குதல் வேகமான பலனளிக்கவில்லை என்றார்.

‘ரஷ்ய தளபதி ஒன்றும் ஒரு முட்டாள் அல்ல. அவர்கள் தனது இராணுவத்தை முன்னோக்கி நகர்த்துகின்றனர். ஆனால் நாங்கள் விரும்பும் அளவுக்கு வேகமாக இல்லை. எங்களால் ஆயுத தளவாடங்களை 80 அல்லது 100 கிமீ வரை நீட்டிக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும்.’ என்று அவர் கூறினார்.

யுக்ரேனின் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷ்யா கூறியுள்ளது

ரஷ்யாவின் பதிலடி என்ன?

யுக்ரேன் தாக்குதலால் கர்ஸ்க் பகுதியில் இருந்து 1,20,000 பேரையும், அண்டை மாகாணாமான பெல்கொரோட்டில் (Belgorod) இருந்து மேலும் 11,000 பேரையும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு ரஷ்யா கேட்டுக் கொண்டுள்ளது.

ரஷ்ய அதிகாரிகள் உள்ளூர்வாசிகளுக்கு ஒரு நபருக்கு $115 வீதம் இழப்பீடு வழங்கியுள்ளது. அப்பகுதிகளில் அவசர நிலையும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடிக்கு தீர்வு காண அதிபர் புதின் தலைமையில் ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த சிறப்பு கூட்டத்தில் ஜெனரல் ஜெரசிமோவ் கலந்து கொள்ளவில்லை.

புதினின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான பெடரல் பாதுகாப்பு சேவையின் (FSB) தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

சம்பவங்கள் குறித்த தனது சமீபத்திய அறிக்கையில், அமைதியான குடிமக்களை யுக்ரேன் தாக்குவதாக ரஷ்ய அதிபர் புதின் குற்றம் சாட்டினார். இதற்கு “தகுந்த பதிலடி” அளிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

யுக்ரேன் ரஷ்யாவிடம் இருந்து உண்மையான அச்சுறுத்தலை கடுமையான பதிலடி மூலம் எதிர்கொள்ள நேரிடும் என பேராசிரியர் கலியாட்டி (Galeotti) கூறியுள்ளார்.

“தனது வேண்டுகோள் மூலம் புதின் அவரது ஆயுதப் படையில் லட்சக்கணக்கான வீரர்களை சேர்க்க முடியும். மோதலை அதிகரிக்க ரஷ்யா வேறு வழிகளைக் கண்டறியும்” என்று அவர் கூறினார்.

சமீபத்திய மாதங்களில் ரஷ்யாவின் குண்டுவீச்சால் யுக்ரேனின் எரிசக்தி கட்டமைப்பின் பெரும்பகுதி அழிந்தது (அல்லது) சேதமடைந்தது.

ரஷ்யாவின் இந்த தாக்குதல் இன்னும் தீவிரமானதாக மாறக்கூடும்.

யுக்ரேன் போரின் போக்கையே மாற்றிவிட்டதா?

மார்க் கலியாட்டி, “ரஷ்யாவுக்கு யுக்ரேன் கைப்பற்றியுள்ள பகுதி சுமார் 50 மைல் நீளமும் 20 மைல் அகலமும் கொண்டதாகும். ரஷ்யாவின் ஒட்டுமொத்த பரப்புடன் ஒப்பிடுகையில் இது ஒன்றுமே இல்லை. ஆனாலும் இதன் அரசியல் தாக்கம் மிகவும் முக்கியமானது.”என்று கூறினார்.

யுக்ரேன் தனது மேற்கத்திய நட்பு நாடுகளிடம், குறிப்பாக அமெரிக்காவிடம், அதன் இராணுவத்தால் தொடர்ந்து சண்டையிட முடியும் என்று காண்பித்துக் கொள்ள விரும்புகிறது என்று சில ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர்.

இது குறைந்தபட்சம் தற்காலிகமாக பேச்சுவார்த்தை நடத்தும் யுக்ரேனின் திறனை அதிகரித்துள்ளது.

யுக்ரேனிய படைகள் ரஷ்ய எல்லைக்குள் 30 கிலோமீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளதால், போர் நிறுத்தம் குறித்த எந்தவொரு பரிந்துரையையும் ரஷ்யா ஏற்பதற்கு சாத்தியமில்லை.

யுக்ரேனின் இந்த நடவடிக்கை, ரஷ்யர்களிடையே போர் குறித்த சொல்லாடலை மாற்றியதுள்ளது.

யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு இனி “சிறப்பு இராணுவ நடவடிக்கை” என்று பெயரிடப்பட்ட முடியாத மோதலாக பார்க்கப்படும். ஏனெனில், யுக்ரேனின் நடவடிக்கை அவர்களை நேரடியாக பாதிக்கும் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

“ரஷ்யாவில் ஊடகக் கட்டுப்பாடு அமலில் உள்ள சூழலிலும், மக்கள் சிலர் கேள்விகளைக் கேட்க துவங்கியுள்ளனர் என்பது கர்ஸ்க் பிராந்தியத்திலிருந்து வரும் தகவல்களில் இருந்து தெளிவாகிறது.” என்று பிபிசியின் கிழக்கு ஐரோப்பிய செயதியாளர் சாரா ரெயின்ஸ்ஃபோர்ட் கூறுகிறார்


ரஷ்யா-யுக்ரேன் போரில் பல்பொருள் அங்காடி மீது ரஷ்ய தாக்குதல் (கோப்பு படம்)

ஜெலன்ஸ்கி மற்றும் புதின் எதிர்காலத்தில் எத்தகைய தாக்கம் வரும்?

ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய இரு நாடுகளின் அதிபர்களுக்கும் இதுவொரு ஒரு முக்கிய தருணம் ஆகும்.

விளாடிமிர் புதின், பெரும்பாலும் ஒரு சர்வாதிகார மற்றும் கடுமையான தலைவராகக் கருதப்படுகிறார். அவர் தனக்கு நெருக்கமான வட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் குறிப்பாக பாதுகாப்பு சேவைகளை நம்பியிருக்கிறார்.

யுக்ரேனின் எதிர்பாராத தாக்குதல் அவர்களுக்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது. இதில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கையை மறைப்பது கடினமாகியுள்ளது.

ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் இடம்பெயர்ந்துள்ளதால், நிலைமை எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது, அல்லது இது முழுமையான போர் அல்ல என்ற பிம்பத்தை கட்டமைப்பதும் இனி கடினமாகும்.

படக்குறிப்பு, ரஷ்யா-யுக்ரேன் போர்

பல காரணங்களுக்காக, ரஷ்யாவிற்குள்ளான யுக்ரேனின் இந்த தாக்குதல் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி-க்கும் சம அளவவில் பிரச்னையாக அமையலாம்.

யுக்ரேனில் போர் நடக்கும் மிக முக்கியமான இடங்களில் இருந்து ரஷ்யா தனது படைகளை பின்வாங்கினால் யுக்ரேனுக்கு அது சிறந்த பலனாக அமையும் என்று ஆய்வாளர் எமில் கஸ்தெல்மேயர் (Emil Kaszthelmeyer) கருதுகிறார்.

இது யுக்ரேனியர்களை சிறிது காலத்திற்கு உற்சாகமாக உணரவைக்கும் அதே வேளையில், அதன் கிழக்குப் பகுதியில் ரஷ்யா இன்னும் அதிகமான நிலங்களைக் கைப்பற்றுவதற்கு இது வழிவகுக்கக் கூடும்.

இங்கு இரு நாடுகளுக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது, இன்னும் உறுதி செய்யப்படாத போதிலும் சில ரஷ்ய ராணுவ பிளாகர்ஸ் வெற்றிகள் குறித்து பேசுகின்றனர்.

போரில் தற்போது நிலவும் தேக்கநிலைக்கு தீர்வு காண்பதற்கு விஷயங்களை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்று பேராசிரியர் கலியோட்டி கூறுகிறார்.

இருப்பினும், கொந்தளிப்புகள் வேகமாக ஏற்பட்டு வருகின்றன. ஆனால் இதன் முடிவு என்னவாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

-BBC TAMIL NEWS-

Share.
Leave A Reply

Exit mobile version