தனது மகன் நாமல் ராஜபக்சவை அடுத்த அரசியல் வாரிசாக அறிவிப்பதற்கு சகல முயற்சிகளையும் செய்து வந்தவர் மகிந்த ராஜபக்ச. இதன் காரணமாக உள்ளுக்குள் பஸில் ராஜபக்ச மாத்திரமே எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தார்.
2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டதற்கும் அதுவே காரணம்.
ஆனால் கோட்டாபய பலிகடாவாக்கப்பட்டார். ராஜபக்ச குடும்பத்துக்குள் கோட்டாபய நடுநிலைமையான ஒருவர் என்பதால் நாமல் மற்றும் பஸில் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் இருக்கவில்லை.
ஆனால் அவர் 69 இலட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற பிறகு ராஜபக்ச சகோதரர்களுக்குள் மீண்டும் சமரசம் ஏற்பட்டது. மகிந்தவுக்கு பிரதமர் பதவி கிடைத்தது மாத்திரமல்லாது நாமலுக்கு கபினட் அந்தஸ்த்துள்ள அமைச்சரவை பதவியை மகிந்த வாங்கிக்கொடுத்தார்.
தேசிய பட்டியல் மூலம் பஸில் பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்து நிதி அமைச்சர் என்ற பொறுப்பையும் வகித்தார்.
இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாது என்ற சரத்தை கொண்ட 21 ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்படுவதை அறிந்த அவர் தனது பதவியை இராஜிநாமா செய்திருந்தார்.
பின்னர் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக மாத்திரம் பதவி வகித்தார். எனினும் 2022 ஆம் ஆண்டு ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிராக அரகலய போராட்டம் இடம்பெற்ற பின்னர் கடும் சரிவை சகோதரர்கள் எதிர்கொண்டனர்.
கோட்டாபய நிரந்தரமாக அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். ஆனால் மகிந்தவுக்கு தனது மகன் நாமல் ராஜபக்சவை என்றாவது ஒரு நாள் இந்நாட்டின் ஜனாதிபதியாக்கி பார்க்க வேண்டும் என்ற பேராசை மனதுக்குள் இருந்தது.
இவ்வருடம் இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் தான் களமிறங்கினால் ராஜபக்ச சகோதரர்கள் மீதுள்ள கோபத்தால் தனக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருக்காது என ரணில் நினைத்தார்.
ஆனால் அவரை வைத்து குதிரை ஓடும் நினைப்பில் மகிந்த இருந்தார். மொட்டு கட்சியிலேயே ரணில் போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மகிந்த தரப்பினர் இருந்தனர். அதை ரணில் நிராகரித்தார். ஆனாலும் ஆதரவை அவர் வேண்டாம் என சொல்லவில்லை.
இந்நிலையில் வர்த்தகர் தம்மிக்க பெரேராவை கட்சி ஊடாக பாராளுமன்றத்துக்குள் கொண்டு வந்த மகிந்த, அவரை வைத்து தேர்தல் செலவுகளை பார்க்கலாம் என கணக்கு போட்டார்.
ஒரு கட்டத்தில் ரணில் தம்மை விட்டு நீங்குவதை உணர்ந்த மகிந்த தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி வேட்பாளர் என்று அறிவிக்கும்படி கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் ஊடாக பல செய்தியாளர் மாநாடுகளை நடத்தும்படி கூறினார்.
மறுபக்கம் இந்த காரியத்தை ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க முன்னெடுத்தார்.
இவை அனைத்தும் ரணிலை எரிச்சலடையச்செய்யும் என்பது இவர்களின் நோக்கம். ஆனால் அவர் இவற்றையெல்லாம் கடந்து தான் சுயேச்சையாக போட்டியிடுவேன் என அறிவித்து விட்டார்.
நாமும் எமது வேட்பாளரை அறிவிப்போம் என கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக மகிந்த தரப்பினர் அறிவித்தல் விட்டனர்.
ஆனால் வேட்பாளரை அறிவிக்கும் தினத்துக்கு முதல் நாள் தம்மிக்க பெரேரா தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என மொட்டு கட்சியின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்து விட்டார்.
இதன் பின்னணியில் பல சந்தேகங்கள் நிலவுகின்றன. அவ்வாறு கடிதம் அனுப்ப சொன்னது ரணிலா அல்லது நாமலை களமிறக்குவதற்காக மகிந்த செய்த வேலையா என்பது மர்மமாகவே உள்ளது.
ஆனால் மகிந்த வேறு வழியின்றி தனது மகன் நாமல் ராஜபக்சவை வேட்பாளராக அறிவித்தார்.
இதற்கு மகிந்தவின் மூத்த சகோதரரான சமல், இளைய சகோதரர் பஸில் மற்றும் சமலின் மகன் சசீந்திர ஆகியோர் விரும்பியிருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. மகிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவும் ரணிலை வேட்பாளராக்குவதற்கே விருப்பம் கொண்டிருந்தார் எனக் கூறப்படுகின்றது.
இதன் காரணமாக முழு மனதுடன் நாமல் ராஜபக்சவுக்கு மகிந்தவின் சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர் பிரசார நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் அரகலய போராட்ட நிகழ்வுகள் இன்னும் மக்கள் மனதிலிருந்து அகல வில்லையென்பதால் நாமல் ராஜபக்சவின் பிரசார கூட்டத்தில் மக்கள் முன்பாக எவ்வாறு மேடைகளில் ஏறுவது என்ற தயக்கமும் அச்சமும் ராஜபக்ச சகோதரர்களிடம் எழுந்துள்ளது. மேலும் மகிந்த தற்போது மிகவும் தளர்ந்து போயுள்ளார். உதவிக்கு இருவர் இல்லாமல் அவரால் தனியாக நடந்து செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.
இதன் காரணமாக மொட்டு கட்சி ஏற்பாடு செய்துள்ள சுமார் 100 பிரசார நடவடிக்கைகளில் அவரது சொந்த மாவட்ட நிகழ்வில் மாத்திரமே அவர் கலந்து கொள்வார் என்று கூறப்படுகின்றது.
நாமல் ராஜபக்சவுக்கு மகிந்தவின் பிரசார உதவி இல்லாமல் தனித்து இயங்குவது சாத்தியமல்ல.
சில இடங்களில் அவருக்கு எதிர்ப்புகள் உள்ளன. அதே போன்று ஒரு காலத்தில் பஸிலின் கட்டுப்பாட்டில் இருந்த கம்பஹா மாவட்டத்திலும் நாமலுக்கு ஆதரவை பெறுவதில் சிக்கல்கள் உள்ளன. அம்மாவட்டத்தின் பிரதான அரசியல் பிரமுகரான பிரசன்ன ரணதுங்க ரணிலுக்கு ஆதரவளிக்கும் ஒருவராக மாறி அவருக்கான தேர்தல் பிரசார நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
எனினும் இந்த சிக்கல்களை நன்கறிந்த மகிந்த இறுதி தடவையாக சமல் மற்றும் பஸிலிடம் தனது மகனுக்காக பிரசார களத்தில் இறங்குமாறு கெஞ்சி கேட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாமலை வேட்பாளராக அறிவித்தவுடன் அமெரிக்க பறக்க தயாரான பஸில் இதன் காரணமாக தனது பயணத்தை ஒத்தி வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாமல் வெற்றி பெற போவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த பரீட்சித்த முயற்சியில் அவர் கணிசமானதொரு வாக்குகளைப் பெற்றால் அது தமது அரசியல் எதிர்காலத்துக்கு ஆபத்தாக முடியும் என பஸிலும் சமலும் நினைக்கின்றனர். சமல் ராஜபக்சவுக்கு தனது மகன் சசீந்திர ராஜபக்சவை அரசியலில் தூக்கி விட வேண்டும் என்ற ஆசை உள்ளது. அவர் ஊவா மாகாண முதலமைச்சராகவும் விளங்கினார் என்பது முக்கிய விடயம்.
வேட்பு மனு தாக்கல் செய்ததன் பின்னர் மத வழிபாடுகளுக்குச் சென்ற நாமலுடன் அவரது தந்தை மகிந்த மாத்திரமே சென்று கொண்டிருக்கின்றார் என்பது முக்கிய விடயம்.
எது எப்படியானாலும் நாமல் ராஜபக்சவுக்காக களமிறங்கும் செயற்பாடுகளில் பஸில் மற்றும் சமல் ஆகியோர் அரை மனதுடனேயே சம்மதித்துள்ளனர் என்பது முக்கிய விடயம்.
-சிசி என்-