கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி புட்ச் வில்மோர் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஸ்பேஸ் எக்ஸ்(SpaceX) விண்கலம் மூலம் பூமிக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் பயணித்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் “ஆளில்லாமல்” திருப்பிக் கொண்டு வரப்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு விண்வெளி வீரர்களும் ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர். ஆரம்பத்தில் அவர்கள் 8 நாட்கள் அங்கு இருப்பார்கள் எனத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் அவர்கள் இப்போது விண்வெளி சுற்றுப்பாதையில் 8 மாதங்கள் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அருகில் சென்றபோது அதில் சிக்கல்கள் ஏற்பட்டன. விண்கலத்திற்கு உந்துசக்தியை வழங்கக்கூடிய ஐந்து உந்துகலன்கள் வேலை செய்யாமல் போனது.

ஹீலியம் வாயுவும் தீர்ந்துவிட்டதால், அந்த விண்கலம் எரிபொருளைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது.

நாசா தனது விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல வணிக விண்கலங்களுக்காக போயிங், ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய தனியார் நிறுவனங்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது.

போயிங் 4.2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் ஈலோன் மஸ்க்கின் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் 2.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.

ஆளில்லாமல் திரும்பும் ஸ்டார்லைனர் விண்கலம்

இதுவரை, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி வீரர்களுடன் ஒன்பது விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. ஆனால், ஆட்களுடன் போயிங் விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்படுவது இதுவே முதன்முறை.

போயிங் மற்றும் நாசாவில் உள்ள பொறியாளர்கள் ஸ்டார்லைனர் விண்கலத்தின் தொழில்நுட்ப சிக்கல்களைப் புரிந்துகொள்வதில் அதிக நேரம் செலவிட்டனர்.

அவர்கள் விண்வெளியிலும் பூமியிலும் பல சோதனைகளை நடத்தி தரவுகளைச் சேகரித்தனர். பிரச்னையின் ஆணிவேரைக் கண்டறிந்து, “விண்வெளி வீரர்களை பூமிக்குப் பாதுகாப்பாக அனுப்புவதற்கான வழியைக் கண்டுபிடிப்போம்” என்று அவர்கள் நம்பினர்.

சனிக்கிழமையன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், நாசா நிர்வாகி பில் நெல்சன், இந்த விண்கலத்தைச் சரிசெய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதற்காக போயிங் நிறுவனத்துடன் நாசா நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகக் கூறினார்.

சுனிதா வில்லியம்ஸ்: விண்வெளியில் அதிக நாட்கள் தங்குவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?- நாசா கூறிய புதிய தகவல் என்ன?

ஸ்டார்லைனர் விண்கலம் போயிங் நிறுவனத்தின் சோதனை விண்கலம்

“பாதுகாப்பான அல்லது தொடர்ந்து இயக்கப்படும் விண்கலமாக இருந்தாலும் அது ஆபத்தானது. சோதனை வின்கலத்தைப் பொறுத்தவரை பாதுகாப்பானதும் அல்ல, அது தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஏற்றதும் அல்ல. பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம், அதுதான் எங்களை வழிநடத்துகிறது” என்று அவர் தெரிவித்தார்.

தற்போது இரண்டு விண்வெளி வீரர்களும் விண்வெளி நிலையத்தில் பிப்ரவரி 2025 வரை இருக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு, அவர்கள் ‘ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன்’ எனும் விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்புவார்கள்.

இந்தக் கூடுதல் நேரம், ஸ்பேஸ் எக்ஸ் அதன் அடுத்த விண்கலத்தை ஏவுவதற்கான நேரத்தை வழங்கும். அந்த விண்கலம் செப்டம்பர் இறுதியில் விண்வெளிக்குச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு முன், அந்த விண்கலத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் செல்வதாகத் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், இருவர் மட்டுமே அதில் செல்லவுள்ளனர். அதன்மூலம், விண்கலம் பூமிக்குத் திரும்பும்போது அந்த இரு விண்வெளி வீரர்களுடன் சுனிதா வில்லியம்ஸும் புட்ச் வில்மோரும் இணைந்துகொள்வார்கள்.

பூமிக்கு எப்படி திரும்புவர்?

தற்போது விண்வெளியில் இருக்கும் இரு விண்வெளி வீரர்களும் இதற்குமுன் இரண்டு முறை நீண்ட காலத்திற்கு விண்வெளியில் இருந்ததாகவும், நிர்ணயிக்கப்பட்ட வரம்பைவிட அதிக நேரம் விண்வெளியில் தங்கியிருப்பது உள்ளிட்ட சோதனை விமானங்கள் தொடர்பான அபாயங்களை அவர்கள் புரிந்து இருப்பதாகவும் நாசா கூறியுள்ளது.

பூமிக்குத் திரும்பும் திட்டத்தை, 58 வயதான சுனிதா வில்லியம்ஸ், 61 வயதான வில்மோர் ஆகிய இருவரும் முழுமையாக ஆதரித்துள்ளதாகவும் நாசா கூறியது.

அதோடு, “அதுவரை அவர்கள் விண்வெளி நிலையத்தில் அறிவியல் சார்ந்த பணிகள், விண்வெளியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் அவர்கள் ‘விண்வெளி நடைபயணம்’ கூடச் செய்வார்கள்” என்றும் நாசா தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதம் இரு விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும்

விண்கலத்தின் தயாரிப்பில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக போயிங்கின் ஸ்டார்லைனர் ஏற்கெனவே பல ஆண்டுகள் தாமதமானது.

முந்தைய ஆளில்லா விண்கலங்களும் தொழில்நுட்பப் பிரச்னைகளை எதிர்கொண்டன.

“விண்கலத்தில் செல்பவர்களின் பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக” போயிங் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதில், “நாசாவின் தீர்மானிக்கப்பட்ட திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். மேலும், அந்த விண்கலம் பாதுகாப்பாக, வெற்றிகரமாக பூமிக்குத் திரும்ப நாங்கள் தயாராகி வருகிறோம்” என்று கூறியுள்ளது.

ஸ்டார்லைனரில் என்ன தவறு நடந்தது?

ஸ்டார்லைனர் விண்வெளிக்கு அனுப்பப்பட்டபோது, சிறியளவில் ஹீலியம் கசிவு ஏற்படத் தொடங்கியது. ஆனால், சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும் அதில் மேலும் இரு கசிவுகள் ஏற்பட்டன.

முதல்முறை ஏற்பட்ட கசிவு சிறிய ளவிலும், இரண்டாவது முறை ஏற்பட்ட கசிவு ஐந்து மடங்கு பெரியதாகவும் இருந்தது.

விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நெருங்கியதும், 28 உந்துகலன்கள் மூடப்பட்டன. அதில், நான்கு உந்துகலன்கள் மீண்டும் செயல்படத் தொடங்கின. இதற்குப் பிறகு, உந்துவிசை அமைப்பில் மேலும் இரண்டு ஹீலியம் கசிவுகள் கண்டறியப்பட்டன.

போயிங் நிறுவனத்தின் மார்க் நாபி கூறுகையில், மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கல சோதனைகளில் மட்டுமே இந்தப் பிரச்னைகளைக் கண்டறிய முடியும் எனத் தெரிவித்தார்.

ஆனால் சில பொறியாளர்கள் இந்தச் சிக்கல் ஆளில்லா சோதனைப் பணிகளின்போது அல்லது விண்கல வடிவமைப்பின் ஆரம்பக் கட்டங்களில் கண்டறியப்பட்டிருக்கலாம் என்று நம்புகின்றனர்.

போயிங் விண்கலத்தில் முன்பு ஏற்பட்ட சிக்கல்கள்

ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஹீலியம் கசிவு ஏற்பட்டது

இது போயிங் விண்கலத்தில் ஏற்பட்ட முதல் பிரச்னை அல்ல.

கடந்த 2019ஆம் ஆண்டில் அதன் முதல் ஆளில்லா விண்கலத்தில் ஏற்பட்ட மென்பொருள் கோளாறு காரணமாக, அதை இயக்க முடியாமல் போகவே, அந்த விண்கலம் விண்வெளி நிலையத்தை அடைய முடியவில்லை.

கடந்த 2022இல் இரண்டாவது முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த விண்கலத்தில் மீண்டும் சில உந்துகலன்கள் குளிரூட்டும் அமைப்பில் சிக்கல்களை எதிர்கொண்டன.

இதற்கிடையில், போயிங்கின் போட்டியாளரான ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டிராகன் விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியது. அதையடுத்து, ஸ்டார்லைனர் விண்கலங்கள் விண்வெளி வீரர்கள் மற்றும் சரக்குகளை விண்வெளி நிலையத்திற்குச் சுமந்து செல்கிறது.

பூமியில் போயிங் விமானங்களில் முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் நோக்கம் அதிகரித்து வரும்போது இவை அனைத்தும் நடக்கின்றன.

போயிங் ஸ்டார்லைனர் ஒரு ஏவுதளமாக மாறுவதற்கு இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியிருக்கும் என்பது இப்போது உறுதியாகத் தெரிகிறது.

நீண்ட காலம் விண்வெளியில் தங்கியிருந்தால் உடலில் என்ன நடக்கும்?

“விண்வெளிக்குச் செல்லத் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் பல்வேறு சோதனைகளைக் கடக்க வேண்டியுள்ளது.

அதற்குக் காரணம் பூஜ்ஜிய ஈர்ப்புவிசை சூழல் என்பது மனித உடலில் பல வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது” என்று பிபிசி தமிழிடம் முன்னர் பேசிய இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.

“பூஜ்ஜிய ஈர்ப்புவிசை நிலையில் அதிக நாட்கள் இருக்கும்போது விண்வெளி வீரர்களுக்கு தசை வலிமையும், எலும்பின் அடர்த்தியும் குறையும். அதுமட்டுமல்லாது உடல் எடை குறைவது, பார்வைத் திறனில் பாதிப்பு, நரம்பு மண்டலத்தில் மாற்றம் ஆகியவையும் பல நாட்களுக்கு விண்வெளியில் தங்குபவர்களுக்கு ஏற்படும்” என்கிறார் அவர்.

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன்

“சத்தான உணவுகள், முழுமையான உறக்கம், உடற்பயிற்சி ஆகியவை மட்டுமே அவர்களை விண்வெளியில் ஆரோக்கியமாக இருக்க உதவும்” என்கிறார், இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன்

விண்வெளியில் இருக்கும் ஒவ்வொரு மாதமும் விண்வெளி வீரர்கள் 1-2% எலும்பின் அடர்த்தியை இழக்கின்றனர். ஆறு மாத காலத்தில் சுமார் 10% வரை எலும்பின் அடர்த்தியை இழக்கின்றனர்.

(அதுவே பூமியில் ஆண்கள் மற்றும் பெண்கள் சராசரியாக ஒவ்வோர் ஆண்டும் 0.5%-1% வரை எலும்பின் அடர்த்தியை இழக்கின்றனர்.)

இது எலும்பு முறிவு ஏற்படுவதற்கான ஆபத்தையும் அதிலிருந்து குணமடைவதற்கான காலம் அதிகமாவதற்கும் வழிவகுக்கிறது.

பூமிக்குத் திரும்பிய பின்னர் அவர்களின் எலும்பின் அடர்த்தி இயல்பு நிலைக்குத் திரும்ப சுமார் நான்கு ஆண்டுகள் வரை ஆகலாம்.

அமெரிக்காவின் விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ செப்டம்பர் 21, 2022இல், ஆறு மாத கால பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றார். ஆனால் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக அவரால் பூமிக்குத் திரும்ப முடியவில்லை.

இறுதியாக, 371 நாட்களை விண்வெளியில் கழித்த பிறகுதான் அவரால் பூமிக்குத் திரும்ப முடிந்தது. நீண்ட காலம் விண்வெளியில் தங்கியதால் அவரது உடலில் ஏற்பட்ட விளைவால், கேப்ஸ்யூலில் இருந்து மீட்புக் குழுவினரால் அவர் தூக்கிக்கொண்டு வரப்பட்டார்.

“சத்தான உணவுகள், முழுமையான உறக்கம், உடற்பயிற்சி ஆகியவை மட்டுமே விண்வெளியில் அவர்கள் ஆரோக்கியமாக இருக்க உதவும்.

இதற்காக அவர்களுக்கு அவ்வப்போது உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த சோதனைகள் விண்வெளி நிலையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன” என்று சிவன் பிபிசி தமிழிடம் கூறினார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version