அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ்தான் வெற்றி பெறுவார் என பிரபல தேர்தல் கணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 5 ஆம் திகதி நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் கடந்த 19ம் திகதி குடியரசு கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்று குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.
ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்கிய தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் விலகிய நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில், தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என பிரபல தேர்தல் கணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடந்த 2016 ஆம் ஆண்டில் டொனால்ட் டிரம்பின் வெற்றி மற்றும் 2020 ஆம் ஆண்டில் ஜோ பைடனின் வெற்றி ஆகிய இரண்டையும், ஆலன் லிச்மேன் துல்லியமாக கணித்திருந்தார்.
இந்த தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ், தனது போட்டியாளரான குடியரசுக் கட்சி வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் டிரம்பை தோற்கடிப்பார் என்று ஆலன் கணித்துள்ளார். ஆலனின் கணிப்பு, கடந்த 10 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களில் 9 தேர்தல்களில் உண்மையாகியுள்ளது.
2000 ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜோர்ஜ் புஷ்ஷை, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அல் கோர் தோற்கடிப்பார் என்று அவர் கணித்தது மட்டுமே தவறிப்போனது. இதுதவிர, ஜனநாயகக் கட்சிக்கு தனது தனிப்பட்ட ஆதரவை, ஆலன் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதியில், டிரம்புக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையிலான ஜனாதிபதி விவாதம் நடக்கவுள்ள நிலையில், ஆலனின் அதிபர் கணிப்பு அமெரிக்க அரசியலில் பேசுபொருளாகி வருகிறது.