ஹைதியில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள், ஓஹையோ மாகாணத்த்தில் இருக்கும் ஒரு சிறிய நகரத்தில் செல்லப்பிராணிகளை உண்கிறார்கள் என்ற ஆதாரமற்ற கூற்றை டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறியிருக்கிறார்.

ஏ.பி.சி செய்தி சேனலின் அதிபர் தேர்தல் விவாதத்தின் போது பேசிய ​​டிரம்ப், “ஸ்பிரிங்ஃபீல்டில், அவர்கள் நாய்களைச் சாப்பிடுகிறார்கள். நாடுக்குள் நுழைந்தவர்கள் பூனைகளைச் சாப்பிடுகிறார்கள். அவர்கள் அங்கு வசிக்கும் மக்களின் செல்லப்பிராணிகளைச் சாப்பிடுகிறார்கள்,” என்றார்.

ஆனால் அந்நகரின் அதிகாரிகள், இது உண்மையில் நடந்ததற்கான ‘நம்பகமான செய்திகள் எதுவும் இல்லை’ என்று பிபிசி வெரிஃபை-யிடம் தெரிவித்தனர்.

இந்த ஆதாரமற்றக் கூற்று சமூக ஊடகங்களில் பரவியது. குடியரசுக் கட்சியின் துணைத் அதிபர் வேட்பாளர் ஜே.டி வான்ஸ் எக்ஸ் சமூக வலைதளத்தில் அதைப் பரப்பினார். புதன்கிழமை (செப்டம்பர் 11) நிலவரப்படி, அந்தப் பதிவு 1.1 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தேசியப் பாதுகாப்புக் கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, ஜே.டி வான்ஸின் கருத்துக்கள் ‘ஆபத்தானவை’, ‘சதி கோட்பாடு… இனவெறிக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டது’ என்று கூறினார்.

இது எங்கிருந்து துவங்கியது?

டிரம்பை ஆதரிக்கும் சமூக ஊடகக் கணக்குகளால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தக் கூற்று, பல்வேறு அடிப்படை ஆதாரமற்ற மூலங்களிலிருந்து வந்ததாகத் தெரிகிறது.

ஸ்பிரிங்ஃபீல்ட் நகர ஆணையம் ஆகஸ்ட் 27-ஆம் தேதி நடத்திய கூட்டத்தில் பேசிய ‘சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர்’ என்று தன்னை அழைத்துக்கொண்ட ஒருவர், ஹைதியில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கெதிராகப் பேசினார்.

அவர்கள் உணவுக்காக, பூங்காவில் இருக்கும் வாத்துகளைக் கொல்கிறார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுகளின் நீண்ட பட்டியலை அவர் வழங்கினார். மேலும், குடியேற்றவாசிகளை அழைத்து வர நகர அதிகாரிகள் பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டினார். ஆனால் இந்தக் கூற்றுகளுக்கு அவர் எந்த ஆதாரமும் தரவில்லை.

செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 10) நடந்த அதிபர் தேர்தலுக்கான விவாதத்தின்போது, ​​டிரம்ப் ”தொலைக்காட்சியில் ‘என் நாய் கடத்தப்பட்டு உண்ணப்பட்டது’ என்று சிலர் கூறியதை கண்டேன்” என கூறினார்.

பிபிசி வெரிஃபை, ஃபாக் ஸ், சி.என்.என், மற்றும் சி.பி.எஸ் உட்பட முக்கிய அமெரிக்க செய்தி சேனல்களின் பழைய வீடியோக்களைப் பார்த்தது.

இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் தேட, முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தியது. ஆனால், டிரம்ப் சொன்னதுபோன்ற எந்தவொரு தொலைக்காட்சி நேர்காணலையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஸ்பிரிங்ஃபீல்ட் நகரில் நடக்கும் குற்றங்கள் பற்றிய ஒரு ஃபேஸ்புக் பதிவு, ஹைதியில் இருந்து குடியேறியவர்கள் பூனைகளைக் கொல்வது பற்றி கூறுகிறது. அது அடுத்த வீட்டாரின் மகளின் தோழியால் கூறப்பட்டது என்று கூறுகிறது.

ரெடிட் சமூக வலைதளத்தில் இடப்பட்ட ஒரு பதிவில், ஓஹையோ மாகாணத்தின் கொலம்பஸ் நகரில், இறந்த வாத்து போல் தோன்றும் ஒரு பொருளை எடுத்துச் செல்லும் ஒரு நபரின் புகைப்படம் பதிவிடப்பட்டு, இதே கூற்றுகள் சொல்லப்பட்டிருந்தன.

மேலும், ஆகஸ்ட் மாத இறுதியில், ஒரு பூனையைக் கொன்று சாப்பிட்டதற்காகக் கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றிய செய்தியும், காவல் துறையின் பாடிகேம் வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.

பல வலதுசாரி அரசியல் வர்ணனையாளர்கள், அந்தப் பெண் ஹைதியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு, ஹைதியில் இருந்து குடியேறியவர்கள் இதேபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர் என்ற அடிப்படையற்றக் கூற்றுக்கான ஆதாரமாக அந்த செய்தியை சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால், ஸ்பிரிங்ஃபீல்டில் இருந்து சுமார் 273கி.மீ., தொலைவில் உள்ள ஓஹையோவின் கேண்டன் நகரில் இந்த சம்பவம் நடந்தது.

அந்த நபர் 1997-ஆம் ஆண்டு பிறந்தவர் என்றும், அவர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர் என்றும் கான்டன் போலீசார் பிபிசி-யிடம் தெரிவித்தனர். அவர்கள், “ஹைதியிலிருந்து குடியேறியவர்கள் பற்றிய எந்தப் புகாரையும் நாங்கள் கையாளவில்லை,” என்று பிபிசி-யிடம் தெரிவித்தனர்.

ஜே.டி.வான்ஸைத் தவிர, இந்த ஆதாரமற்ற கூற்றுகளை அடிப்படையாகக் கொண்ட மீம்ஸ்களை எலோன் மஸ்க்-ம் பதிவிட்டுள்ளார். அவை பல கோடி முறைகள் பார்க்கப்பட்டுள்ளன.

‘டர்னிங் பாயின்ட்’ என்ற பழமைவாத ஆர்வலர் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி சார்லி கிர்க், “ஹைதி மக்கள் தங்கள் குடும்பச் செல்லப்பிராணிகளைச் சாப்பிடுவதாக ஸ்பிரிங்ஃபீல்டில் வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்,” என்றார்.

குடியரசுக் கட்சியின் அதிகாரபூர்வ சமூக ஊடகச் சேனல்களான குடியரசுக் கட்சியின் நீதித்துறைக் குழுவின் எக்ஸ் கணக்கு போன்றவையும் இந்தக் கூற்றுக்களைக் குறிப்பிடுகின்றன.

“ஓஹையோவில் எங்கள் வாத்துகள் மற்றும் பூனைக்குட்டிகளைப் பாதுகாக்கவும்!” என்ற தலைப்புடன் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் ஒரு வாத்து மற்றும் பூனையை கட்டிப்பிடிக்கும் செயற்கை நுண்ணறிவுப் படத்தை இந்தக் கணக்கு வெளியிட்டுள்ளது.

அந்தப் பதிவு, கிட்டத்தட்ட 7 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது.

பிபிசி வெரிஃபை ஸ்பிரிங்ஃபீல்ட் நகர ஆணையத்திடம் இந்தக் கூற்றுகளைப் பற்றிக் கேட்டது.

“புலம்பெயர்ந்த சமூகத்தில் உள்ள தனிநபர்களால் செல்லப்பிராணிகள் பாதிக்கப்படுவது, காயப்படுத்துவது, அல்லது துஷ்பிரயோகம் செய்யப்படுவது பற்றிய நம்பகமான செய்திகள்அல்லது கூற்றுக்கள் எதுவும் இல்லை,” என்று அதிகாரிகள் பிபிசி-யிடம் கூறினர்.

செவ்வாக்கிழமை (செப்டம்பர் 10), ஜே.டி.வான்ஸ், தனது முந்தைய கருத்துக்குப் பிறகு எக்ஸ் பக்கத்தில், “இந்த வதந்திகள் அனைத்தும் பொய்யாகி விடக்கூடும்,” என்று பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து கருத்து கேட்க, டிரம்பின் தேர்தல் பிரசாரக் குழுவை பிபிசி தொடர்பு கொண்டுள்ளது.

தென்மேற்கு ஓஹையோ மாகாணத்தில் இருக்கும் ஸ்பிரிங்ஃபீல்ட் நகரம்
ஸ்பிரிங்ஃபீல்டில் ஹைதி குடியேறிகள்

தென்மேற்கு ஓஹையோ மாகாணத்தில் இருக்கும் ஸ்பிரிங்ஃபீல்ட் நகரம், தொழில்துறை வீழ்ச்சியைச் சந்தித்ததால், 1980-களில் ‘துருப்பிடித்த பகுதி’ என்றழைக்கப்பட்டது. சுமார் 60,000 மக்கள் வசிக்கும் இந்த இடத்திற்கு, சமீப ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் வந்திருக்கின்றனர்.

இவர்களில் பலர் ஹைதியைச் சேர்ந்தவர்கள். நகர அதிகாரிகள், சமீபத்திய ஆண்டுகளில், ஹைதி குடியேறிகள் 20,000 பேர் வரை ஸ்பிரிங்ஃபீல்டில் குடிபுகுந்துள்ளனர், என்கின்றனர்.

கடந்த 60 ஆண்டுகளில் 20,000-க்கும் அதிகமான எண்ணிக்கையில் வீழ்ச்சியைக் கண்ட இந்த நகரத்தின் மக்கள்தொகை, இதனால் மீண்டும் உயர்ந்தது.

இந்தக் குடியேறிகள், உள்ளூர் தொழில்துறை நிறுவனங்களுக்கு புத்துயிர் அளித்தனர், ஆனால் பொதுச் சேவைகள் மீது அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். ஓஹையோவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் செனட்டரான ஜே.டி.வான்ஸ், ஸ்பிரிங்ஃபீல்டில் இருந்து ஒரு மணிநேரம் தொலைவில் இருக்கும் ஒரு இடத்தில் வளர்ந்தார். அவர், தனது பிரசாரத்தில் இந்த நகரத்தைப் பற்றி பலமுறை பேசியிருக்கிறார்.

Share.
Leave A Reply

Exit mobile version