சீனாவில் ஒரே நாளில் 23 பற்களும் பிடுங்கப்பட்ட நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஜெய்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள ஜின்ஹுவா நகரில் பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஹூவாங் என்ற நபருக்கு மாற்று பற்கள் பொருத்தும் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையின்போது, ஹூவாங்கின் 23 பற்களும் பிடுங்கப்பட்டு அதே நாளில் 12 புதிய பற்கள் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் மருத்துவமனையிலிருந்து திரும்பிய அவர் இரண்டு வாரங்கள் கழித்து ஆகஸ்ட் 28 ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து உயிரிழந்தவரின் மகள் இணையத்தில் வெளியிட்ட பதிவில், “பற்களை பிடுங்கிய பிறகு தொடர்ச்சியாக வலியை அனுபவித்து வந்த எனது தந்தை இவ்வளவு சீக்கிரம் உயிரிழப்பார் என்று நினைக்கவில்லை. நாங்கள் புதிதாக வாங்கிய காரை ஓட்டும் வாய்ப்புகூட அவருக்கு கிடைக்கவில்லை” என தெரிவித்திருந்தார்.

இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், பலரும் இதற்கு கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இது அறுவை சிகிச்சை என்பதை விட இது அறுவை சிகிச்சை என்பதை விட ஏதோ மருத்துவ எக்ஸ்பெரிமெண்ட் போல உள்ளது என்று பலரும் கூறியுள்ளனர். மேலும் ஒரே நாளில் 10 பற்கள் பிடுங்கப்படுவதே அதிகம் என்று பல் மருத்துவர்கள் தங்களின் அபிப்பிராயங்களைக் கூறி வருகிறனர். பற்களை பிடுங்குவதற்காக அளிக்கப்பட்ட மருந்தின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டதா? அல்லது வேறு காரணம் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version