ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கு எதிர்பார்க்கப்பட்டளவு வாக்குகள் கிடைக்கவில்லை.
இது ஒரு முக்கியமான பின்னடைவு என்று கண்மூடித்தனமான விமர்சனங்கள் சில முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இது தர்க்கபூர்வமாக ஆராயப்பட வேண்டிய விடயம். ஏனென்றால், தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்காலத்துடன் இது தொடர்புடையது.
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக, இலங்கை தமிழ் அரசு கட்சி கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருந்தது. இந்த முயற்சியை எப்படியாவது தோற்கடிப்பதென்று சுமந்திரன் தலைமையில் கங்கணம் கட்டி செயற்பட்டது.
தமிழ் அரசு கட்சியில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக இருந்த மாவை சேனாதிராஜா, சிறிதரன் போன்றவர்கள் கூட, இரண்டு பக்கங்களிலும் நல்ல பிள்ளையாக நடிக்கப் பார்த்தனரே தவிர, தமிழ் பொது வேட்பாளரை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயற்பட்டிருக்கவில்லை.
அவர்கள் அவ்வாறு செயற்பட்டிருந்தால் இவர்களின் சொந்த தொகுதிகளான, குறைந்தபட்சம், கிளிநொச்சியிலும், காங்கேசன்துறையிலும், தமிழ் பொது வேட்பாளர் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கமாட்டார்.
தமிழ் அரசு கட்சியினர் பலர் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக பணியாற்றியிருந்த போதும் அதன் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள்,சஜித் பிரேமதாசவுக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலேயே தொங்கிக் கொண்டிருந்தனர்.
இவ்வாறான ஒரு சூழலை எதிர்கொண்டு தான், தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு 226,000 வாக்குகள் கிடைத்திருக்கின்றன.
இதனைக் கொண்டு, தமிழ் மக்கள் தமிழ் பொது வேட்பாளரை நிராகரித்து விட்டனர், இந்த முயற்சியை தோற்கடித்து விட்டனர் என்று சுமந்திரன் போன்றவர்கள் கூறித் திரிகின்றனர்.
“வடக்கு கிழக்கிலே 80 சதவீதமானோர் நாம் அடையாளம் கண்ட மூன்று பிரதான வேட்பாளர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். இது எமது கட்சி எடுத்த நிலைப்பாட்டிற்கான மாபெரும் அங்கீகாரம். மாறாக அரியநேத்திரனுக்கு வடக்கு,கிழக்கில் 14 சத வீதத்திற்கும் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளன.
1982 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், போட்டியிட்ட குமார் பொன்னம்பலம் 2.67 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார். வெறும் 1.69 சதவீத வாக்குகளையே பெற்றதன் மூலம் அரியநேத்திரன் தமிழ் மக்களால் ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லை ” என்றும் அவர் கூறியிருந்தார்.
தமிழ் பொது வேட்பாளரை எந்தளவுக்கு தோல்வியுற்ற ஒருவராக மாற்ற முடியுமோ, அந்தளவுக்கு பலவீனப்படுத்த வேண்டும் என்ற வக்கிர எண்ணத்துடன் அவர் செயற்பட்டிருக்கிறார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
அரியநேத்திரனுக்கு வாக்களித்த 226,000 மக்களும், சுமந்திரனுக்கு பொருட்டாகவே தெரியவில்லை. அவர்கள் தமிழ் மக்களாகவும் தெரியவில்லை.
தமிழ் மக்களால் பொருட்டாக கருதப்படாத ஒருவருக்கு எப்படி 226,000 வாக்குகள் கிடைத்தன? அந்த வாக்குகளை அளித்தது யார்?
அதைவிட, வடக்கு, கிழக்கில் தாங்கள் அடையாளம் கண்ட மூவருக்கும், 80 சதவீதம் வாக்குகள் கிடைத்திருப்பதாக சுமந்திரன் பெருமையோடு குறிப்பிட்டது, தமிழ் தேசியப் பற்றுடன் வெளியிட்ட ஒரு கருத்தாக தெரியவில்லை.
மூன்று சிங்கள வேட்பாளர்களுக்கும், 80 சதவீதமான தமிழ் மக்களை வாக்களிக்க வைத்திருக்கிறோம் என்றே அவர் பெருமைப்பட்டுக் கொள்கிறார்.
தமிழ் வேட்பாளருக்கு 14 சதவீத வாக்குகள் தான் கிடைத்தன என்று, அவர் மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
2009 மே 18ஆம் திகதி தமிழ் மக்கள் மரண ஓலமிட்டுக் கொண்டிருந்த போது. பாற்சோறு கொடுத்துக் கொண்டாடியவர்களுடன் கரம் கோர்த்து நின்றவர்களிடம் இருந்து இவர் எவ்வாறு வேறுபடுகிறார்?
1982 ஜனாதிபதி தேர்தலில், குமார் பொன்னம்பலத்திற்கு சதவீத அடிப்படையில், 2.67 சதவீத வாக்குகள் கிடைத்தன. ஆனால், எண்ணிக்கை அடிப்படையில் அவருக்கு கிடைத்தது ஒரு இலட்சத்து 76 ஆயிரம் வாக்குகள் தான்.
அதை விட 50 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பொது வேட்பாளருக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் வாக்கு வீதம், 1.67 சதவீதம் தான். அதற்குக் காரணம் அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையே ஆகும்.
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் விகிதாசாரம் மிக மோசமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. 1982 ஆம் ஆண்டு நாட்டின் மொத்த வாக்காளர்கள் 66 இலட்சம். இன்று அந்த எண்ணிக்கை இரண்டரை மடங்காக அதிகரித்திருக்கிறது.
ஆனால், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 1982 ஆம் ஆண்டு சுமார் ஐந்து இலட்சம் வாக்காளர்கள் இருந்த நிலையில், இப்போது அது வெறும் ஆறு இலட்சமாகத் தான் உயர்ந்திருக்கிறது.
யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை இரண்டரை அல்லது மூன்று மடங்காக உயர்ந்திருக்கிறது. ஆனால் யாழ்ப்பாணத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை வெறும் ஒரு இலட்சத்தினால் மாத்திரம் அதிகரித்திருக்கிறது.
1982 ஆம் ஆண்டின் நிலையுடன் பார்க்கும் போது, உண்மையில் இப்போது யாழ்ப்பாணத்தில் வாக்காளர் எண்ணிக்கை குறைந்தபட்சம் 12.5 இலட்சத்துக்கு மேல் இருந்திருக்க வேண்டும்,
அப்படியான நிலை இருந்திருந்தால் தமிழ் பொது வேட்பாளருக்கு, இன்னமும் அதிக வாக்குகள் கிடைத்திருக்கும். அது அவரது வாக்கு வீதத்தையும் உயர்த்தியிருக்கும்.
இதனை உணராமல், தமிழ் பொது வேட்பாளரை ஒரு தோல்வியாக வெளிப்படுத்த முனைந்திருக்கிறார் சுமந்திரன்.
உண்மையில் இது தோல்வி என்றால் – 2020 பாராளுமன்றத் தேர்தலில், இலங்கைத் தமிழ் அரசு கட்சி சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு, மொத்த வாக்குகளில் 2.82 வீதம் தான் கிடைத்தது.
இது 1982ல் குமார் பொன்னம்பலம் பெற்ற வாக்கு வீதத்தை விட சற்று வாக்குகள் தான் அதிகம்.
2020 பொதுத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு 327,168 வாக்குகள் கிடைத்தன . இப்போது தமிழ் பொது வேட்பாளருக்கு 226,000 வாக்குகள் கிடைத்திருக்கின்றன.
அப்படியானால், சஜித் பிரேமதாசவுக்க ஆதரவளித்த இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாக்கு வங்கி வெறுமனே ஒரு இலட்சம் தானா என்ற கேள்வியையும் எழுப்பலாம்.
இந்த தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற முயற்சியை தமிழ் மக்கள் ஆதரித்திருக்கிறார்கள். அதனை அங்கீகரித்திருக்கிறார்கள் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒரு உண்மை. ஆதரிக்கப்பட்ட அளவில் குறைபாடுகள் இருந்திருக்கலாம்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆறு தொகுதிகளில் பொது வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார்.
இதனை உதாசீனம் செய்ய முடியாது. தமிழ் மக்கள் பொருட்டாக கருதவில்லை என்றால், இந்த ஆறு தொகுதிகளிலும் தமிழ் அரசுக் கட்சி ஆதரித்த மூன்று சிங்கள வேட்பாளர்களாலும் ஏன் வெற்றி பெற முடியாமல் போனது?
பொது வேட்பாளர் முயற்சிக்கு ஆதரவளிக்காத- தேர்தலை நிராகரிக்க கோரிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆக்கபூர்வமான ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
இந்த தேர்தலில் வாக்களிக்காதவர்கள், கடுமையான தமிழ் தேசியத்தை பேசி பொது வேட்பாளரை நிறுத்தியவர்கள், தமிழ்த் தேசியம் பேசும் தமிழ் அரசுக் கட்சியின் ஆலோசனைப்படி சிங்களக் கட்சிகளுக்கு வாக்களித்தவர்கள் என்று பார்த்தால், பெரும்பாலான தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்திருக்கிறார்கள் என்று அவர் கூறியிருந்தார்.
இது, நியாயமான கருத்து. தமிழ்த் தேசியத்தை குறைமதிப்பிற்குட்படுத்தாத கருத்து.
ஆனால், சுமந்திரன் தமிழ்த் தேசியத்தை பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தும் கருத்தை முன்வைத்து, பொதுவேட்பாளரைச் சிறுமைப்படுத்த முனைகிறார். சுய வெற்றியை நிரூபிப்பதற்காக தமிழ்த் தேசியத்தை பலிகொடுக்கத் தயாராகிறார்.
அவர் இப்போது தமிழ் தேசியம் பேசுகின்ற நிலையில் இல்லை. அவர் இலங்கையின் தேசியத்தை வெற்றி பெற வைக்க முற்படுகிறார்.
இனவாதம் இல்லாத ஒரு இலங்கை உருவாகி விட்டதாக தமிழ் மக்களை நம்ப வைக்க பார்க்கிறார். அதனால் அவர் தமிழ் தேசியத்தை புறம் தள்ளிவிட்டு, அதை சார்ந்திராத ஒரு அரசியலை முன்னெடுப்பதற்கு திட்டமிடுகிறார்.
பொது வேட்பாளர் என்பது நிச்சயமாக ஜனாதிபதியாக வருவதற்காக, நிறுத்தப்பட்ட ஒரு முயற்சி அல்ல. தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் அபிலா ஷைகளையும் தனித்துவமாக வெளிக்காட்டும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட ஒன்று.
இந்த முயற்சி பெருவெற்றியை பெறாமல் இருக்கலாம், ஆனால் பலவீனப்படவில்லை. ஏனென்றால் தமிழ் தேசிய கட்சிகள் அனைத்துக்கும் தங்களின் பலம் என்ன – பலவீனம் என்ன- தாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பது இப்போது நன்றாக தெரிந்திருக்கும்.
அடுத்து வரப் போகின்ற தேர்தல்களில் ஏன் இணைந்து செயற்பட வேண்டும், ஒற்றுமையாக கூட்டாக போட்டியிட வேண்டும் என்பது அவர்களுக்கு இதன் மூலம் புரிந்திருக்கும்.
மதில் மேல் பூனை போலவும், விலாங்கு மீனை போலவும் நடந்து கொண்டால் இதுதான் நடக்கும் என்பதும் அவர்களுக்கு தெரிந்திருக்கும்.
இனிமேலும் தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுக்காமல் அவர்கள் அரசியலை நடத்த முற்பட்டால், தங்களை ஓரம் கட்டி விட்டு ஒரு அரசியல் பலம் கட்டி எழுப்பப்படும் என்பதும் அவர்களுக்கு புரிந்திருக்கும்.
அடுத்த வரும் தேர்தல்களில் தமிழ்த் தேசிய பலத்தை கட்டி எழுப்புவதற்கு , தமிழ் பொது வேட்பாளர் மிகப் பலமான அத்திவாரத்தை அமைத்திருக்கிறது.
இதன் மீது வலுவான கட்டடம் ஒன்றைக் கட்டியெழுப்புவதா அல்லது, பாழடைய விட்டுச் செல்வதா என்று தீர்மானிக்க அதிக காலம் தேவையில்லை. ஏனென்றால் அடுத்த தேர்தல் இப்போதே வந்து விட்டது.
– என்.கண்ணன்-