அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீதான நேரடித் தாக்குதலின் விளிம்பில் நிற்கின்றன. இது மத்திய கிழக்கிற்கும் உலகம் முழுவதற்கும் மிகப் பரந்த மற்றும் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.

விமானந்தாங்கிக் கப்பல் யுஎஸ்எஸ் டுவைட் டி. ஐசன்ஹோவரும், விரைவு போர் ஆதரவுக் கப்பலான யுஎஸ்என்எஸ் விநியோகக் கப்பலும் டிசம்பர் 14, 2023 அன்று ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கின்றன. [Photo: Navy Petty Officer 2nd Class Keith Nowak]

செவ்வாய்க்கிழமை இஸ்ரேலிய இராணுவ உள்கட்டமைப்பின் மீதான ஈரானின் தாக்குதலை சாக்காக பயன்படுத்தி, வெள்ளை மாளிகை அப்பிராந்தியத்தின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டிற்கு எதிராக சட்டவிரோதமான தாக்குதலை நடத்த இஸ்ரேலுக்கு முழு அதிகாரத்தை வழங்கியுள்ளது.

“இஸ்ரேலியர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை நாங்கள் அவர்களுடன் விவாதிப்போம்,

ஆனால் நாங்கள் ஏழு பேரும் [ஜி 7 நாடுகளைக் குறிப்பிடுகிறோம்] பதிலளிக்க அவர்களுக்கு உரிமை உண்டு என்பதை ஒப்புக்கொள்கிறோம்” என்று பைடென் புதன்கிழமை கூறினார்.

ராய்ட்டர்ஸ் ஒரு செய்தி அறிக்கையில், “பதிலடி கொடுப்பதைத் தவிர்க்குமாறு இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கவில்லை” என்று கூறியது.

காஸா இனப்படுகொலை தொடங்கி ஓராண்டிற்கு பின்னர், இஸ்ரேல் அக்டோபர் 7 நிகழ்வுகளை பயன்படுத்தி அனைத்து பாலஸ்தீனிய பகுதிகளையும் இனச்சுத்திகரிப்பு செய்து இணைத்துக் கொள்ளும் நீண்டகால திட்டங்களை செயல்படுத்தியது என்பது தெளிவாகியுள்ளது.

இது சியோனிச அரசு அதன் விவிலிய எல்லைகள் என்று கூறுவதை கைப்பற்ற மத்திய கிழக்கு முழுவதிலும் நடக்கும் ஒரு பிராந்திய போரின் பாகமாகும்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, இது எண்ணெய் வளம் நிறைந்த மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் மீது ஏகாதிபத்திய கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கும், ரஷ்யா மற்றும் சீனாவுடனான தனது மோதலை முன்னெடுப்பதற்காக அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கான ஒரு உறுதியான தளமாக மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவை நிலைநிறுத்துவதற்குமான ஒரு வழிமுறையாக இருந்து வந்துள்ளது.

இஸ்ரேல் அமெரிக்காவிலிருந்து சுயாதீனமான ஒரு செயல்பாட்டாளர் என்ற பொய்யான கருத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது.

இஸ்ரேலின் முதன்மைப் பணியானது முழுப் பிராந்தியத்திலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காக தாக்குதல் நாயாகவும் கருவியாகவும் செயல்படுவதே ஆகும்.

எப்பொழுதும் போல, அமெரிக்க அரசாங்கமோ அல்லது செய்தி ஊடகமோ இப்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் மாபெரும் விளைவுகள் பற்றி பொதுமக்களுக்கு தெரிவிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

செவ்வாயன்று ஜனநாயகக் கட்சியின் டிம் வால்ஸிற்கும் குடியரசுக் கட்சியின் ஜேடி வான்ஸிற்கும் இடையே நடந்த முதல் மற்றும் ஒரே ஒரு துணை ஜனாதிபதி தேர்தல் விவாதத்தின்போது, நடுவர் மார்கரெட் பிரென்னன் இரு வேட்பாளர்களிடமும், “ஈரான் மீதான இஸ்ரேலின் தவிர்க்க முடியாத தாக்குதலை நீங்கள் ஆதரிப்பீர்களா அல்லது எதிர்ப்பீர்களா?” என்று கேட்டார்.

“நாங்கள் எமது படைகளையும் எமது கூட்டுப் படைகளையும் பாதுகாப்போம், மேலும் அதற்கான விளைவுகள் இருக்கும்” என்று ஜனநாயகக் கட்சியின் வால்ஸ் கூறினார். குடியரசுக் கட்சியின் வான்ஸ் மேலும் இவ்வாறு கூறினார், “பாருங்கள், தங்கள் நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பது இஸ்ரேலின் முடிவே. தீய சக்திகளுடன் போராடும்போது, நமது கூட்டாளிகள் எங்கிருந்தாலும் நாம் அவர்களை ஆதரிக்க வேண்டும்.”

வேட்பாளர்கள் தங்களது ஒற்றை வரி பதில்களை வழங்கிய பிறகு, முதலாவதாக, அத்தகைய தாக்குதல் முற்றிலும் சட்டவிரோதமானது என்பதையும், இரண்டாவதாக, அது உலகம் முழுவதற்கும் மாபெரும் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் யாரும் சுட்டிக்காட்ட முனையவில்லை.

ஈரானுடன் வளர்ந்து வரும் அமெரிக்க-இஸ்ரேலிய போர் முழுப் பிராந்தியத்தையும் அழிவில் மூழ்கடிக்க அச்சுறுத்துகிறது.

இந்த வாரம், துருக்கிய பிரதம மந்திரி எர்டோகன் பின்வருமாறு எச்சரித்தார்: “இஸ்ரேலிய அரசாங்கம் வாக்களிக்கப்பட்ட நிலம் என்ற மாயையில், மத வெறியுடன் செயல்படுகிறது.

பாலஸ்தீனம் மற்றும் லெபனானுக்குப் பிறகு, எங்கள் தாயகம்தான் அவர்கள் பார்வையில் இருக்கும். இப்போது எல்லாமே இதை நோக்கியே உள்ளது.” எர்டோகனின் அறிக்கை, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் செயல்கள் எந்த அளவிற்கு பிராந்தியம் மற்றும் உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன என்பதைக் காட்டுகிறது.

அமெரிக்காவும் அதன் இஸ்ரேலிய தாக்குதல் நாயும் கட்டுப்பாட்டை இழந்துவிட்டன என்ற உணர்வு வளர்ந்து வருகிறது.

அமெரிக்க ஊடகங்கள் ஈரான் மீது நிகழவிருக்கும் இஸ்ரேலிய தாக்குதலை, செவ்வாய்க்கிழமை இஸ்ரேலிய இராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கான பதிலடியாக சித்தரிக்கின்றன.

உண்மையில், ஈரானின் தாக்குதல் மத்திய கிழக்கு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற தொடர்ச்சியான அமெரிக்க-இஸ்ரேலிய குண்டுவீச்சுகள், படுகொலைகள் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான பதிலடியாகவே இருந்தது.

லெபனானில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதலைத் தொடங்கிய ஒரே ஒரு நாளுக்குப் பின்னர், இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் நடந்துள்ளது.

சனிக்கிழமையன்று, இஸ்ரேல் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை 85, 2,000 பவுண்டு எடையுள்ள குண்டுகளைப் பயன்படுத்தி படுகொலை செய்தது, அவை உயரமான குடியிருப்பு கட்டிடங்களை முற்றிலுமாக தரைமட்டமாக்கின,

நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றன. ஈரானிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ விருந்தினராக இருந்த தெஹ்ரானில் உள்ள ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவரை இஸ்ரேல் படுகொலை செய்ததைத் தொடர்ந்து இது நடந்துள்ளது.

ஈரானிய ஆட்சி அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தூண்டுதல்களுக்கு மீண்டும் மீண்டும் அடக்கமான நிலைப்பாட்டை கடைபிடித்து வந்துள்ளது.

2020-ல் காசெம் சுலைமானியின் படுகொலைக்கு எந்த குறிப்பிடத்தக்க பதிலடியும் இல்லை, மேலும் ஈரானின் ஆட்சி விஞ்ஞானிகளின் தொடர்ச்சியான படுகொலைகளையும், மிக சமீபத்தில் தெஹ்ரானில் நடந்த இஸ்ரேலிய குண்டுவெடிப்பையும் கூட சகித்துக் கொண்டுள்ளது.

ஈரானிய ஆளும் வர்க்கத்தின் சார்பாக பேசும் ஈரானின் ஜனாதிபதி மசூத் பெஜேஷ்கியன், ஏகாதிபத்திய சக்திகளை நோக்கி மீண்டும் மீண்டும் மிகவும் சமரசமான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இந்த சமரச முயற்சிகள் இப்போது தோல்வியடைந்துள்ளன,

மேலும் ஈரானிய ஆட்சி எதிர்க்கவும் பதிலடி கொடுக்கவும் அதிகரித்து வரும் அழுத்தத்தின் கீழ் வருகிறது.

மத்திய கிழக்கில் வன்முறையின் இரத்தக்களரியைத் தொடங்குவதன் மூலமும், எல்லா “சிவப்புக் கோடுகளையும்” மீறிச் செல்வதன் மூலமும், பல தசாப்தங்களாக அமெரிக்க ஏகாதிபத்தியம் சந்தித்த படுதோல்விகளின் விளைவுகளை அவர்களால் மாற்ற முடியும் என்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைவர்கள் நம்புகின்றனர்.

அவர்கள் தங்களையே ஏமாற்றிக் கொள்கிறார்கள். 90 மில்லியன் மக்கள்தொகை கொண்ட, மிகவும் நவீனமான சமூகமான ஈரானுடனான போர், ஈராக் மீதான படையெடுப்பை விட சிறந்த முடிவைத் தரும் என்று நம்ப அவர்களை எது தூண்டுகிறது?

ஈராக் போருக்கு முன்னதாக, 2003 ஆம் ஆண்டில் உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எழுதியது:

தொடங்கியுள்ள மோதலின் ஆரம்ப கட்டங்களின் விளைவு என்னவாக இருந்தாலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் பேரழிவை சந்திக்கும் கட்டத்தில் உள்ளது.

அதனால் உலகை வெல்ல முடியாது. அது மத்திய கிழக்கு மக்கள் மீது காலனித்துவத் தளைகளை மீண்டும் சுமத்த முடியாது.

போர் என்ற ஊடகத்தின் மூலம் அதன் உள் சிக்கல்களுக்கு ஒரு சாத்தியமான தீர்வைக் காண முடியாது. மாறாக, போரினால் தோற்றுவிக்கப்பட்டுள்ள எதிர்பாராத இடர்பாடுகளும், பெருகிவரும் எதிர்ப்பும் அமெரிக்க சமூகத்தின் உள் முரண்பாடுகள் அனைத்தையும் தீவிரப்படுத்தும்.

இந்த வார்த்தைகள் இன்றும் சற்றும் குறைந்தவை அல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தொடக்கப்பட்ட உலகப் போரானது அமெரிக்க முதலாளித்துவம் முகங்கொடுக்கும் எந்தப் பிரச்சினையையும் தீர்க்கப் போவதில்லை.

மாறாக, அது அதன் உள் முரண்பாடுகள் அனைத்தையும் தீவிரப்படுத்தி, கருவூலத்தை காலி செய்து, டாலரின் நிலையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும், எல்லாவற்றிற்கும் மேலாக, வர்க்கப் போராட்டத்திற்கு எரியூட்டும்.

ஈரானுக்கு எதிரான போர்த் தயாரிப்புக்கள் பெருகியிருப்பது ஆழ்ந்த நெருக்கடியின் வெளிப்பாடுதானே அன்றி வலிமையின் வெளிப்பாடு அல்ல.

2008ஆம் ஆண்டு நிதிய நெருக்கடியும் அதனைத் தொடர்ந்து வந்த செல்வவளத்தின் பாரிய மேல்நோக்கிய மறுபகிர்வும் அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடியைப் பரந்தளவில் தீவிரப்படுத்தின,

இது 2020 இல் கோவிட்-19 பெருந்தொற்று நோய் வெடித்ததால் புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது, அதனுடன் சேர்ந்து, இன்னும் பெரிய அளவில் பெருநிறுவன பிணையெடுப்பும் நடந்தேறியது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய தீவிரப்பாட்டின் உடனடி உள்ளடக்கமானது, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போரில் அமெரிக்கா மற்றும் நேட்டோவுக்கு ஏற்பட்ட படுதோல்வியாகும்.

புதன்கிழமை, டான்பாஸ் முழுவதிலும் ரஷ்ய முன்னேற்றம் துரிதப்படுத்தப்பட்ட நிலையில், மற்றொரு நகரத்திலிருந்து பின்வாங்குவதாக உக்ரேன் அறிவித்தது.

ஆனால் உக்ரேனிய பேரழிவுக்கு அமெரிக்காவின் விடையிறுப்பு, ரஷ்யாவுக்கு எதிராக நேரடியாக இல்லாவிட்டாலும், மத்திய கிழக்கில் தீவிரப்படுத்துவதாகும். அவை உக்ரேனில் பேரழிவில் இருந்து ஈரானில் பேரழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.

காஸா இனப்படுகொலை தொடங்கி ஓராண்டுக்குப் பின்னர், இந்தப் படிப்பினையை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்: அதாவது அதிகரித்து வரும் உலகளாவிய போரை வேண்டுகோள்களாலும் போராட்டங்களாலும் நிறுத்த முடியாது.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு, அதனை நோக்கி செயல்படும் ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமாக மட்டுமே அதை நிறுத்த முடியும்.

அமெரிக்கா ஈரானுடனான போரின் விளிம்பில் இருக்கும் நிலையில், கிழக்கு மற்றும் வளைகுடா கடற்கரைகள் முழுவதும் பத்தாயிரக்கணக்கான துறைமுகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்,

மேற்குக் கடற்கரையில் பத்தாயிரக்கணக்கான போயிங் தொழிலாளர்களுடன் இணைந்துள்ளனர்.

ஏகாதிபத்திய சக்திகள் தொடங்கியுள்ள உலகளாவிய போரில் போராடி உயிரிழக்க வைக்கப்படுவது தொழிலாள வர்க்கமே, மேலும் போர் முயற்சிகளின் பெயரால் தங்களது வாழ்க்கைத் தரத்தை தியாகம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதும் தொழிலாளர்களே ஆவர்.

போருக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமான பணி என்னவென்றால், தொழிலாள வர்க்கத்தின் பொருளாதாரப் போராட்டத்தை, சோசலிசத்திற்கான போராட்டத்தில் போருக்கு எதிரான அரசியல் போராட்டத்துடன் இணைப்பதே இன்றியமையாத பணியாகும்.

இழக்க இன்னும் நேரமில்லை. ஏற்கனவே இலட்சக்கணக்கான உயிர்களைப் பலி கொண்டுள்ள, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தால் தொடங்கப்பட்ட உலகளாவிய போர்,

இப்போது ஒரு புதிய மற்றும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இரத்தம் சிந்தும் கட்டத்தின் விளிம்பில் உள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version