சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் நேரடிக் காலனித்துவ ஆட்சி உலகில் மறைந்துவிட்டபோதிலும் இன்றும் உலகில் முன்னேறிய நாடுகள் பல தத்தமது நோக்கங்களுக்காக ஏனைய நாடுகளை பல்வேறு வழிகளில் மறைமுகமாக நவகாலனித்துவ முறையில் தமது கட்டுப்பாட்டுக்குள் அல்லது சார்பு நிலையில் வைத்திருப்பதையும் வைத்திருக்க முயல்வதையும் காணமுடியும்.
இதற்கு அந்நாடுகள் பொருளாதார காரணிகளை பிரதான வழிமுறையாகக் கையாண்டாலும் மறைமுகமான, சிலவேளைகளில் நேரடியான அரசியல் தலையீடுகள் மூலமும் இதனைச் சாதிக்க முனைகின்றன.
தமக்குச் சார்பான ஆட்சியாளர்களை அதிகாரத்தில் கொண்டுவர முனைவது போலவே முரண்டுபிடிப்போரை அதிகாரத்திலிருந்து அகற்றுதல், சிலவேளைகளில் அவர்களை படுகொலை செய்தல் என்பனவும் அவ்வழிமுறைகளுக்குள் அடங்கும்.
இன்று பெரும்பாலான நாடுகளில் ஜனநாயகமுறைத் தேர்தல்கள் மூலம் ஆட்சித் தலைவர்கள் தெரிவு செய்யப்படுவதால் தமக்குச் சார்பானவர்களை வெற்றி பெறச் செய்வதற்கு இந்நாடுகள் பல்வேறு உபாயங்களக் கையாளுகின்றன.
அதிலொன்று தேர்தல் செலவுகளுக்காக குறித்த நபருக்கு அல்லது கட்சிக்கு நிதியை வாரி வழங்குவது.
இலங்கை வரலாற்றிலும் இது நிகழ்ந்தே வந்தாலும் அது தொடர்பான தகவல்கள் அரிதாகவே வெளிவருகின்றன.
அதேபோல அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்றம்பை வெற்றிபெறச் செய்வதற்கான முறைகேடுகளில் ரஸ்யா ஈடுபட்டதான குற்றச்சாட்டும் உண்டு.
நாடுகளுக்கிடையில் இவ்வாறு நடப்பதை ஒத்த செயற்பாடுகள் இன்று ஈழத் தமிழ் மக்களின் அரசியலிலும் வேறொரு வடிவில் அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது.
குறிப்பாக 2009 ஆம் ஆண்டில் யுத்தம் நிறைவுக்கு வந்ததிலிருந்து இன்றுவரை இலங்கையில் நடந்த அத்தனை தேர்தல்களிலும் அரசியல் கட்சிகளுக்கு கணிசமான நிதி புலம்பெயர் நாடுகளிலிருந்து உட்பாய்ந்த வண்ணமே உள்ளது.
ஆரம்ப காலத்தில் இது ஒரு உதவியாகவே கருதப்பட்டாலும் இன்று பல்வேறு வழிகளில் விரிவடைந்து தமிழ் மக்களின் அரசியலைத் தூரவிருந்தே இயக்கும் ஒரு நிலைக்கு அது பரிணாம வளர்ச்சியடைந்து விட்டதை அவதானிக்க முடிகிறது.
அதாவது தேர்தல் மற்றும் பிற செயற்பாடுகளுக்கு நிதி வழங்குவதன் மூலம் நிதி வழங்கும் புலம்பெயர் சக்திகள் தாயகத்தின் அரசியலை அது விருப்பத்துக்கு இயக்கும் நிலை வளர்ந்து வருகிறது.
இதனால் இன்னுஞ் சிறிது காலத்தில் இங்குள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவரும் புலம்பெயர் நாடுகளில் இருந்து எம்மவர் சிலரால் இயக்கப்படும் ரோபோக்களாக மாறி விடுவார்களோ என்ற ஐயம் மக்கள் மத்தியில் இன்று பரவலாக எழத்தொடங்கிவிட்டது.
இதனால் ஏலவே பலவீனமடைந்துள்ள தமிழ் மக்களின் அரசியலை மேலும் படுகுழிக்குள் தள்ளுவதற்கான மோசமான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளது.
தொடக்கத்தில் தமிழ் அரசியல் கட்சி என்ற வகையில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கே புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து பணம் அனுப்பப்பட்டது.
குறிப்பாகத் தமிழரசுக்கட்சியின் கனடாக் கிளையினர் சகல தேர்தலுக்கும் அக்கட்சிக்குப் பணம் திரட்டி அனுப்பி வைத்தனர்.
இதில் அதிகம் பாடுபட்ட திருகோணமலைக் குகதாசன்தான் தமிழரசுத் தலைவர்களின் பேச்சை நம்பி இலங்கை வந்து இன்று ஓரங்கட்டப்பட்டு நிற்பவர் என்பது பலரும் அறிந்த ஒன்று.
பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ்,ரெலோ போன்ற கட்சிகளின் முன்னாள் உறுப்பினர்கள் அக்கட்சிகளின் வெளிநாட்டுக் கிளை என்ற பெயரில் பணத்தைத் திரட்டி அக்கட்சிகளின் தேர்தல் செலவுகளுக்கு அனுப்பத் தொடங்கினர்.
இந்நிதி வரையறுக்கப்பட்ட தொகை மற்றும் தேர்தல் காலச் செலவுகளுக்கான ஒரு ஆதரவு என்ற வகையில் பிரச்சினைக்குரியதாக இருந்ததில்லை என்பதுடன், அவ்வாறு நிதி வழங்கியோர் கட்சிகளின் தீர்மானங்களில் தலையிட்டதுமில்லை.
ஆனால் அண்மைக்காலங்களில் தேர்தல்கள், போராட்டங்கள் போன்ற பல்வேறு செயற்பாடுகளுக்கும் யார் யாரிடமிருந்தோ இங்கு எவரெவர்க்கோ பணம் கைமாற்றப்படுவதுடன், அவற்றில் செல்வாக்குச் செலுத்தும் நிலையும் அதிகரித்து வருகிறது.
நாங்கள் பணம் அனுப்புகிறோம்; நீங்கள இதைச் செய்யுங்கள் என்றவகையிலான கட்டளைகள்கூட சில சந்தர்ப்பங்களில் பிறப்பிக்கப்படுவதை அறிய முடிகிறது.
இங்கு இதுபோன்று புலம்பெயர்ந்தவர்களால் பணம் அனுப்பப்படுவது அல்லது இங்குள்ள கட்சிகளின் தலைவர்களோ, குழுக்களோ அதனைப் பெற்றுக் கொள்வது பிரச்சினையன்று. ஆனால் அவை என்ன நோக்கங்களுக்காக யாரால் அனுப்பப்படுகின்றன என்பதை ஆராயும்போதே தமிழரின் எதிர்கால அரசியல் தொடர்பான கவலைகள் மக்களிடையே அதிகரிக்கின்றன.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு பணம் அனுப்புபவர்கள் யாரெனப் பார்த்தால் முன்னாள் போராளிகள்.
குறிப்பாக விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த அமைப்புகள் அல்லது அவர்களது செயற்பாடுகளுடன் இணைந்திருந்தவர்கள், அவர்களின் பெயரைச் சொல்லிக் காரியமாற்றுபவர்கள், புலம்பெயர்ந்தோர் சமூக அமைப்புகள், தனிமனிதர்கள், குழுக்கள் என விரிந்து செல்லும்.
இவர்களில் பலர் அல்லது சில அமைப்புகள் அரசியல் தேவைகளுக்கு மட்டுமன்றி மக்களுக்கு , குறிப்பாக யுத்தத்தால் பாதிப்படைந்த மக்களுக்கும் போராளிகளுக்கும் அதிகளவு நலன்புரி உதவி செய்பவர்களாகவும் உள்ளனர்.
ஆனால் இங்குள்ள முக்கிய பிரச்சினை என்னவென்றால், இவர்களுக்கிடையில் ஒத்த கொள்கைகளோ, பொதுவான நோக்கங்களோ, ஒருங்கிணைப்புகளோ அதிகம் இருப்பதில்லை. பதிலாகத் தனியன்களாகவும் எதிரெதிர் செயற்பாடுகளை ஊக்குவிப்பவர்களாகவும் இருப்பதைக் காணமுடிகிறது.
புலம்பெயர் நாடுகளில் எவ்வாறு பிரிந்திருக்கிறார்களோ அவ்வாறே இங்கும் மக்களையும் அரசியல் தலைவர்களையும் பிரிப்பவர்களாகவும் அவர்களை அரசியல் எதிரிகளாக மாற்றுபவர்களாகவும் காணப்படுகின்றனர்.
13ஐ ஆதரிக்கும் கட்சிகளுக்கு ஒரு தரப்பு நிதி வழங்குகிறது. அதை எதிர்க்கும் கட்சிக்கு இன்னொரு தரப்பு நிதி வழங்குகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளருக்கு சில தரப்புகள் ஆதரவளிக்கின்றன. மறுபுறத்தில் வேறுதரப்புகள் அதனை எதிர்ப்பதற்காக உதவுகின்றன.
இதில் ஒரு சில தரப்புகள் ஆதரிக்கும் எதிர்க்கும் இரண்டு தரப்புகளுக்கும் வேறுபட்ட மூலங்களினூடாக நிதி வழங்கி கூத்துப்பார்க்க விரும்புகின்றன. தேர்தல் செலவுகளுக்கு மட்டுமன்றி உரிமைகளுக்கான மக்கள் போராட்டங்களிலும் இதே நிலைமைகளை ஊக்குவிக்கின்றனர்.
இதன்மூலம் ஒன்றுபட்டு நிற்கும் அமைப்புகளை பிரிக்கவும் முயற்சிக்கின்றனர். இதற்கு நல்ல உதாரணம், ஒன்றுபட்டு நின்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பை இரண்டாகப் பிளந்து அதனைப் பலவீனமாக்கியது.
ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றாக இணைந்து செயற்பட்ட தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு நாடாளுமன்றத் தேர்தலிலும் இணைந்து போட்டியிடுவது என்று முதலில் எடுத்த தீர்மானத்தை பின்னர் மறுதலித்தமைக்கு நிதி வழங்கிய புலம்பெயர் தரப்புகள், சிவில் அமைப்புகளின்மீது பிரயோகித்த அழுத்தமே காரணமென சில அரசியல் தலைவர்கள் குற்றஞ்சாட்டுவதையும் காணமுடிகிறது.
இன்று கட்சிகளின் வேட்பாளர்களாக யாரைப் போடவேண்டும், யாரைப் போடக்கூடாது என்பதையும் அவர்களே தீர்மானிக்கின்றனர். பல சுயேட்சைக் குழுக்களின் பிறப்புக்குப் பின்னாலும் அவர்களே உள்ளனர்.
முன்னாள் போராளிகள் அல்லது போராட்டத்துடன் இணைந்திருந்த அமைப்புகள் அல்லது சமூக அமைப்புகள் என்றாலும் ஒவ்வொன்றும் வேறான முரண்பட்ட நோக்கங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் நிதி வழங்கி ஊக்குவிப்பது ஆச்சரியமானது மட்டுமன்றி கவலைப்படவேண்டியதுமாகும்.
இத்தகைய தவறான விருத்தியின் இன்னொரு பரிணாம வளர்ச்சியாகக் கருதப்படுவது புலம்பெயர் தமிழ் தொழிலதிபரொருவர் தமிழர் அரசியலை முழுமையாகக் குத்தகை எடுக்கவிருப்பதாக வரும் செய்திகளாகும்.
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சில கட்சிகளையும் தலைவர்களையும் இணைத்து புதியவர்களையும் உள்வாங்கி புதிய கட்சியொன்றின் பெயரில் வடக்கு,கிழக்கு, மலையகம், கொழும்பு ஆகிய இடங்களில் பரந்தளவில் தேர்தலில் ஈடுபடுத்துவதற்கு குறித்த தொழிலதிபர் எண்ணியதாகவும் காலம் போதாமையால் அதனைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு தற்போது தேர்தலில் இறங்கும் சில கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் நிதி வழங்கும் செயற்பாட்டில் இறங்கியிருப்பதாகவும் நம்பிக்கையான வட்டாரங்களிலிருந்து அறிய முடிகிறது.
புதிய கட்சி தொடர்பாக ஜனநாயக தமிழ்த்தேசிய முன்னணித் தலைவர்கள் சிலருடனும் தமிழ் மக்கள் கூட்டணியைச் சேர்ந்த ஒருவருடனும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சிலருடனும் கட்சிசாராத சில முக்கிய பிரமுகர்களுடனும் தொடக்கக் கட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவர்களுள் தற்போது தேர்தலில் போட்டியிடுவோர்க்கு நிதி வழங்கப்பட்டதாகவும் சித்தார்த்தன், சிறிகாந்தா போன்றவர்கள் அதை நிராகரித்துவிட்டதாகவும் அறியக் கிடைக்கிறது.
இவரைப்போன்ற பெரும் வர்த்தகப் புள்ளிகள் தங்கள் தொழில் நிறுவனங்களின் பாதுகாப்புக் கருதியும் சலுகைகளுக்காகவும் அரசியல் தலைவர்களின் தேர்தல் செலவுகளுக்காக நிதி வழங்குவது வழமை.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில், சஜித்துக்கு மட்டுமல்ல மாற்றத்துக்கான வேட்பாளர் அனுரவுக்கும் இவரால் பலகோடி ரூபாக்கள் கொடை வழங்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும் தொழிலதிபர் என்ற வகையில் தனது வர்த்தக நலன்சார்ந்து இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு நிதி வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியும்.
ஆனால் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு தேர்தல் நன்கொடை வழங்குவதன் நோக்கம்தான் என்ன? அதிலும் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கி பணபலத்தால் தமிழ் மக்களின் அரசியலைக் கட்டுப்படுத்த விரும்புவதன் பின்னாலுள்ள தேவைகள் என்ன? இப்பொழுதே விலைபோகத் தொடங்கிவிட்ட நமது அரசியல் தலைவர்கள் எதிர்காலத்தில் என்ன செய்வார்கள் என்று ஊகிப்பது கடினமானதொன்றல்ல.
ஏலவே புலம்பெயர் தமிழ் குழுக்களாலும் அமைப்புகளாலும் பணத்தினூடாகச் சின்னாபின்னமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர் அரசியலில் இந்த தொழிலதிபரின் தலையீடு ஆரோக்கியமானதொன்றாக இருக்கப் போவதில்லை.
தனது வர்த்தக நலனுக்காக தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அரசியல் நலனையும் இலங்கை ஆட்சியாளரிடம் அடகு வைப்பதற்கான ஒரு முயற்சியாகவே இது கருதப்பட வேண்டும். மக்கள் நலன்கருதி இதற்கு எதிரான நிலைப்பாட்டினை எடுக்கும் நிலையிலும் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் இங்கில்லை.
எரிகிற வீட்டில் பிடுங்குகிறது மிச்சம் என்ற மனநிலையிலேயே அவர்கள் உள்ளனர். புலம்பெயர் அமைப்புகள் ஒரேகுடையின் கீழ் ஒரே கொள்கையினடிப்படையில் இயங்குகின்ற போது அல்லது அரசியல் கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் புலம்பெயர் தரப்புகள் வழங்கும் நிதி நிறுத்தப்படும்போது மட்டுமே தமிழ் மக்களின் அரசியல் சரியான பாதையில் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். ஆனால் அதற்கான எதிர்காலம் அண்மையில் இருப்பது போலத் தெரியவில்லை.