மத்திய கிழக்கில் இரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் அங்கு நிலவும் போர்ப் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இரானின் தலைமைத் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியும் அவரின் முதன்மை ஆலோசகர்களும் எடுத்த முக்கியமான முடிவுகளில் போர் மேலும் விரிவடைவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் என்பது முக்கியமாக அமைந்தது.
கடினமான முடிவுகளில் குறைவான பாதிப்புகளை ஏற்படுத்தும் முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகியுள்ளனர். இது, இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தலாம் என்பதற்கு நேரெதிராக உள்ளது. இரான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் பதிலடி தரப்படும் என்று இஸ்ரேல் ஏற்கனவே எச்சரித்துள்ளது.
இரான் பதில் தாக்குதல் நடத்தாத பட்சத்தில் அது பலவீனமாக இருப்பது போல் தோன்றக் கூடும். அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் இஸ்ரேலின் ராணுவ பலம் மற்றும் அரசியல் உறுதிப்பாட்டால் மிரட்டப்பட்டு ஒடுக்கப்பட்டதாக தோற்றமளிக்கும்.
இஸ்ரேலுக்கு குறைவான அளவுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய முடிவை எடுக்க இரான் தலைவர்களும் அவர்களின் ஆலோசகர்களும் முடிவெடுக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்று மிரட்டல்கள்?
இஸ்ரேலின் தாக்குதலுக்கு முன்னும் பின்னும், இரானின் அதிகாரப்பூர்வ ஊடகம் வாயிலாக, இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தும் முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டதாக கூறியது. இஸ்ரேலைப் போன்றே, பாதுகாப்பிற்காக திருப்பித் தாக்கும் உரிமை இருப்பதாக இரான் அறிவித்தது. ஆனால் அதன் பின்விளைவுகள் மிகவும் அதிகமாக இருக்கக் கூடும் என்பதால் தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியிருக்கலாம்.
இஸ்ரேல் தன்னுடைய பாதுகாப்பிற்காக தாக்கலாம் என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்ட பிரிட்டனின் பிரதமர் ஸ்டாமரும் இந்த நிலைப்பாட்டின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார்.
இரானின் தாக்குதலுக்கு எதிராக, தன்னை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என்பதில் தெளிவாக இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில் “அந்த பிராந்தியத்தில் போர் சூழல் பெரிதாகக் கூடாது. அனைத்து தரப்பினரும் தாக்குதலை நிறுத்த வேண்டும். இந்த தாக்குதலுக்கு இரான் பதிலடி தரக்கூடாது” என்று ஸ்டாமர் கூறினார்.
அக்டோபர் ஒன்றாம் தேதி அன்று இஸ்ரேல் மீது இரான் தாக்குல் நடத்திய பிறகு தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. கடந்த வாரம் இரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி துருக்கியின் என்.டி.வி. நெட்வொர்க்கில் பேசும் போது, “இரான் மீது நடத்தப்படும் எந்த ஒரு தாக்குதலும் சிவப்புக் கோட்டை மீறும் செயலாகும். அதற்கு பதில் கிடைக்காமல் போகாது,” என்று கூறினார்.
இஸ்ரேல் தாக்குதலுக்கு சில மணி நேரத்திற்கு முன்பு, இரானின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய், “இரான் மீது இஸ்ரேல் நடத்தும் எத்தகைய தாக்குதலுக்கும் முழு அளவிலான எதிர் தாக்குதல் இருக்கும்,” என்று அவர் கூறினார். இஸ்ரேலின் சிறிதளவிலான தாக்குதலுக்கு இரான் பதில் தாக்குதல் நடத்தாது என்று இது தவறாக பொருள்படுத்தப்பட்டுள்ளது என்று விளக்கினார் அவர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி அன்று 70 வெளிநாட்டினர் உட்பட 1,200 பேரைக் கொன்ற ஹமாஸ் தாக்குதலை இரான் ஆதரித்து வருகிறது என்று இஸ்ரேல் நம்புகிறது.
இஸ்ரேல் ஒரு தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறது என்று அஞ்சிய இரான், இஸ்ரேலுக்கு எதிராக ஒரு முழுமையான போரை நடத்த விரும்பவில்லை என்று தொடர்ச்சியாக கூறி வந்தது.
அதற்காக, இஸ்ரேலுக்கும் அதன் கூட்டாளிகளுக்கு தனது ஆதரவு ஆயுதக் குழுக்கள் வாயிலாக தொடர்ச்சியாகவும், சில நேரங்களில் கொடூர தாக்குதல்கள் மூலமாக அழுத்தம் தருவதை நிறுத்துவதற்கு இரான் தயாரானது என்று அர்த்தமாகிவிடாது.
நேரடியான தாக்குதலுக்கு பதிலாக எதிர்ப்பின் அச்சு என்று வரையறுக்கப்படும் அதன் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மூலமாக இஸ்ரேல் மீது இரான் தாக்குதலை நடத்தியது. ஏமனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹௌத்தி அமைப்பு, செங்கடலில் கடல் போக்குவரத்தை தடுத்து நிறுத்தி அதனை சீர்குலைத்தது. லெபனானில் இருந்து ஹெஸ்பொலா அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவியது. இதனால் 60 ஆயிரம் இஸ்ரேலியர்கள் அவர்கள் வீட்டில் இருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டது.
இஸ்ரேலின் பதில் தாக்குதல் இரண்டு மடங்கு லெபனான் மக்களை வீட்டில் இருந்து வெளியேற்றியது. ஆனால் அதனையும் தாண்டி செயல்படும் முனைப்பில் இருந்தது இஸ்ரேல். இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்துவதை நிறுத்திவிட்டு எல்லைப் பகுதியை விட்டு ஹெஸ்பொலா பின்வாங்காவிட்டால் உரிய பதிலடி தரப்படும் என்று இஸ்ரேல் எச்சரித்தது.
அவ்வாறு நடக்காத போது, இரான் திட்டப்படி தன் மீது அழுத்தம் கொடுக்கும் வகையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடி தர எல்லையை கடக்க இஸ்ரேல் தீர்மானித்தது. இஸ்ரேல் நடத்திய பலமான எதிர் தாக்குதல் இரானின் இஸ்லாமிய அரசை நிலைகுலைய வைத்து, அதன் வியூகங்களை ஒன்றுமில்லாமல் ஆக்கியது. இதனால் தான் இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலுக்கு பிறகு இரானிய தலைவர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
இரான் முழு போரில் ஈடுபட விரும்பவில்லை என்று காட்டிய தயக்கத்தை இஸ்ரேல் பலவீனமாக புரிந்து கொண்டது. இரான் மற்றும் அதன் ஆதரவு ஆயுதக்குழுக்கள் மீது அழுத்தத்தை அதிகரித்தது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேலின் ராணுவத் தளபதிகள் துணிச்சலாக செயல்பட முடிந்தது.
கூடுதலாக ஜோ பைடனின் தெளிவான ஆதரவு இஸ்ரேலுக்கு உண்டு. தேவையான ஆயுதங்களை வழங்வதன் மூலம் மட்டும் ஒரு பாதுகாப்பான வளையத்தை இஸ்ரேலுக்காக அமெரிக்கா உருவாக்கவில்லை. இஸ்ரேலை பாதுகாக்க உறுதியேற்ற அமெரிக்கா, தேவையான அளவுக்கு அமெரிக்க துருப்புகள் விமானப்படை மற்றும் போர்க்கப்பல்கள் மூலமாக மத்திய கிழக்கிற்கு அனுப்பி வைத்துள்ளது.
ஏப்ரல் 1-ம் தேதி அன்று சிரிய தலைநகரான டமாஸ்கஸில் செயல்பட்டு வந்த இரான் தூதரக கட்டடத்தின் ஒரு பகுதியை வான்வழி தாக்குதல் மூலம் அழித்தது இஸ்ரேல். இரானிய பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெஜா ஜஹேதி மற்றும் இஸ்லாமிய புரட்சிகர படையினரின் மூத்த அதிகாரிகளும் அந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
தங்கள் படையினர் எச்சரிக்கையுடன் இருக்க தேவையான நேரத்தை வழங்கவில்லை என்றும் இது குறித்து அறிவிக்கவில்லை என்றும் அமெரிக்கர்கள் கோபம் அடைந்தனர். ஆனாலும், ஜோ பைடன் தன்னுடைய ஆதரவை விலக்காமல் தொடர்ந்தார்.
ஏப்ரல் 13-ஆம் தேதி இரான் ஆளில்லா விமானங்கள், குரூயிஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜோர்டன் ராணுவத்தினரின் உதவியுடன் அவற்றை சுட்டுவீழ்த்தியது இஸ்ரேல்.
தற்போது விரிவடைந்து வரும் மத்திய கிழக்குப் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஜோ பைடன் கூறியிருக்கிறார். இரானின் வான் பாதுகாப்பு அமைப்பு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதன் மூலம் பைடனின் திட்டம் பயனளிப்பது போல் தெரிகிறது.
இரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற இஸ்ரேலின் எண்ணமானது, இஸ்ரேல் எல்லையோரம் லெபனானில் செயல்பட்டு வரும் ஹெஸ்பொலா பதில் தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தால் சிதறடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
2006-ஆம் ஆண்டு நடைபெற்ற போருக்கு பிறகு உருவாக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த துவங்கியது இஸ்ரேல். ஹெஸ்பொலா பயன்படுத்தி வந்த பேஜர்கள் வெடிக்க வைக்கப்பட்டன. லெபனானில் ஊடுருவிய இஸ்ரேல், அந்த நாட்டை பல ஆண்டுகளாக எதிர்த்து வந்த ஹெஸ்பொலாவின் தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லாவை கொன்றது.
இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய தாக்குதலில் 2500க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பெய்ரூட்டில் உள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றன. நிதி நெருக்கடியை சந்தித்து வரும் அந்த நாட்டில் இந்த தாக்குதல் 12 லட்சம் நபர்களின் இடம் பெயர்வுக்கு காரணமானது.
ஹெஸ்பொலா தற்போதும் லெபானானில் இருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீது அதிக எண்ணிக்கையில் ராக்கெட்டுகளை ஏவி தாக்குதலை நடத்துகிறது. ஆனாலும், தலைவர் கொல்லப்பட்டது மற்றும் ஆயுதங்கள் தீர்வதால் ஏற்பட்டுள்ள பாதிப்பையும் உணர்ந்துள்ளது ஹெஸ்பொலா.
அதன் அனைத்து வியூகங்களும் நொறுங்கத் துவங்கிய போது தான் இரான் பதில் தாக்குதலை நடத்தியது. பதிலடி தராமல் தன்னுடைய ஆதரவு ஆயுதக் குழுக்கள் போரிட்டு உயிரிழக்க அனுமதிப்பது இஸ்ரேலுக்கு எதிரான, மேற்கத்திய படைகளுக்கு எதிரான கூட்டமைப்புக்கு தலைமையேற்று செயல்படும் தனது பொறுப்பை இரான் தட்டிக் கழிப்பதாக அமைந்துவிடும். அதனால்தான், அக்டோபர் ஒன்றாம் தேதி அன்று இஸ்ரேல் மீது மிகப்பெரிய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை நடத்தியது இரான்.
அக்டோபர் 25, வெள்ளிக்கிழமை அன்று இஸ்ரேல் அதற்கு பதில் தாக்குதல் நடத்தியது. பலரும் எதிர்பார்த்ததைக் காட்டிலும் இந்த பதிலடியைத் தர இஸ்ரேல் அதிக காலம் எடுத்துக் கொண்டது. அவர்களின் ரகசிய திட்டங்கள் வெளியானதும் இதற்கு ஒரு காரணமாக அமைந்தது.
வடக்கு காஸாவில் இஸ்ரேல் பெரிய அளவில் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. காஸா போரின் இருண்ட தருணம் இது என்று ஐநாவின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் வோல்கர் டர்க் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு காஸாவில் இருந்து சர்வதேச கவனத்தை திசை திருப்பவே இரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதா என்று வெளிநபராக என்னால் உறுதியாக தெரிந்து கொள்ள இயலவில்லை. ஆனால் இதுவும் ஒரு பகுதியாக இருக்கலாம்.
பதில் தாக்குதல் நடத்தாவிட்டதால் நாம் பலவீனமாக இருப்பதாக தோன்றக் கூடும் என்று நினைத்து நாடுகள் பதில் தாக்குதல்களில் ஈடுபடுவதை நிறுத்துவது கடினம். அதுதான் நிலைமை கைமீறிப் போய் பெரும் போர்களில் கொண்டு போய் விடுகிறது.
இந்த நேரத்தில் இஸ்ரேலுக்கு பதிலடி தர இரான் தயார் நிலையில் இருக்கிறதா என்பதுதான் தற்போது கேள்வியாக எழுகிறது. அக்டோபர் 1-ம் தேதி இரான் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் என்ற இஸ்ரேலின் முடிவுக்கு அமெரிக்காவின் பைடன் அரசு ஆதரவு வழங்கியது.
ஆனால் மோசமாக போர் விரிவடைவதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக இஸ்ரேல் இரானின் முக்கிய சொத்துகளான அணுமின் நிலையங்கள், எண்ணெய் கிடங்குகளில் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று பொதுவெளியில் பைடன் கேட்டுக் கொண்டார்.
தாட் வான் பாதுகாப்புக் கவசத்தை பயன்படுத்தி தன்னை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று இஸ்ரேலுக்கு ஆலோசனை வழங்கினார் பைடன். அதனை ஒப்புக் கொண்டார் நெதன்யாகு.
அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அன்று நடக்கும் தேர்தல் மத்திய கிழக்கில் அடுத்து என்ன நடக்கலாம் என்பதை தீர்மானிக்கும் காரணியாக அமைந்துள்ளது. டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால் இரானுக்குப் பதிலடியாக அதன் எண்ணெய், எரிவாயு மற்றும் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக குறைவான அக்கறையையே அவர் செலுத்துவார்.
இரானின் முக்கிய இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தாததால், பதில் தாக்குதல் நடத்துவதை டெஹ்ரான் தள்ளிப்போடலாம். இது இரு நாட்டு ராஜ்ஜிய அதிகாரிகளும் பேச்சுவார்த்தைக்கு தங்களை தயார் செய்ய கால அவகாசம் கிடைக்கும். கடந்த மாதம் ஐ.நா. பொது சபையில் பேசிய போது இரானியர்கள் அணு ஒப்பந்தம் தொடர்பாக புதிய பேச்சுவார்த்தைகளுக்கு தயாராக இருப்பதாக கூறினர்.
இவை மத்திய கிழக்கிற்கு வெளியிலும் முக்கியமான நகர்வுகள். அணுகுண்டு தங்களுக்கு வேண்டும் என்ற கருத்தை இரான் இதுநாள் வரை மறுத்தே வந்துள்ளது. ஆனால் அணு ஆயுதம் தொடர்பான அதன் நிபுணத்துவமும், யுரேனிய வளமும் அணு ஆயுதங்களை பெறுவதற்கு அருகில் அதனை கொண்டு வந்துள்ளது.
தங்களின் எதிராளிகளை அச்சுறுத்த இரானின் தலைவர்கள் புதிய வழிகளை தேடி வருகின்றனர். பாலிஸ்டிக் ஏவுகணைகளில் பயன்படுத்துவதற்கான அணு ஆயுதங்களை உருவாக்குவது அதன் திட்டங்களில் ஒன்றாக இருக்கலாம்.
பிபிசி