சீனாவின் ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு மனிதன், ஐந்து பெண்களை ஒரே நேரத்தில் ஏமாற்றி பணத்தை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தை சேர்ந்த சியாஜுன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தன்னை பணக்காரன் என்று கூறி, 5 பெண்களை ஏமாற்றியுள்ளார். சியாஜுன் பணக்கார பின்புலத்தில் பிறந்திருக்கவில்லை. அவரது தந்தை கட்டுமானத் துறையில் பணிபுரிந்து வந்தார். மேலும் அவரது தாயார் குளியல் இல்லத்தில் உதவியாளராக இருந்து வருகிறார்.

ஏழ்மையின் காரணமாக படிப்பை விட்டுவிட நேர்ந்தாலும் தன்னை பணக்காரனாக காட்டிக் கொண்டு, ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திக்கொண்டார். அவரிடம் பெரும் பணக்காரன் போல நடித்து, விலை உயர்ந்த பரிசுப் பொருட்களையும் கொடுத்து வந்தார். ஒரு கட்டத்தில் கர்ப்பமான அந்த பெண், சியாஜுனை திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணத்திற்கு பிறகு, சியாஜுனின் உண்மையான பொருளாதார நிலை அவருக்கு தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த அவர், சியாஜுனை விவாகரத்து செய்யாமல், அவரை வீட்டை விட்டு துரத்தியுள்ளார். மேலும் பிறக்கும் குழந்தையை தானே வளர்க்கவும் முடிவு செய்துள்ளார். வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, சியாஜுன் தனது லீலையை தொடர்ந்துள்ளார். ஆன்லைனில் ஒரு பெண்ணுடன் பழகி, அதே பணக்காரன் கதையை சொல்லியுள்ளார்.

இந்த பெண்ணிடம், வீட்டை சீரமைத்ததாக கூறி, ரூ.16.50 லட்சம் வாங்கியுள்ளார். மேலும் தனது புதிய காதலியை தன்னுடைய கர்ப்பிணி மனைவி இருக்கும் அதே குடியிருப்பில் தங்க வைத்துள்ளார். அந்த பணத்தை, மேலும் சில பெண்களை கவர்வதற்கு அவர் பயன்படுத்தி வந்துள்ளார்.

மேலும் அதே குடியிருப்பில் வசித்த இரண்டு பல்கலைக்கழக மாணவிகளையும், ஒரு செவிலியரையும் தனது வலைக்குள் விழ வைத்து, அவர்களிடம் ரூ.1.7 லட்சம், ரூ.1.18 லட்சம், 94 ஆயிரம் என வசூல் செய்துள்ளார். ஒரு கட்டத்திற்கு பிறகு, தான் கொடுத்த பணத்தை ஒரு பெண் கேட்டபோது, போலி நோட்டுகளை கொடுத்துள்ளார். இதை கண்டுபிடித்த அந்த பெண், காவல்துறையில் புகாரளித்தார்.

காவல்துறை நடத்திய விசாரணையில் தான், இவர் ஒரே குடியிருப்பில் ஒரு மனைவி மற்றும் நான்கு காதலிகளுடன் கடந்த நான்கு வருடங்களாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவரது மனைவியும், முதல் காதலியும் ஒரே கட்டிடத்தில் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்கள் குழந்தைகளை வாக்கிங் கூட ஒன்றாக அழைத்து சென்று பழகியுள்ளனர். ஆனால் இருவருக்கும் ஒரே கணவர் இருப்பதை அவர்கள் கண்டுபிடிக்கவே இல்லை.

இந்த சியாஜுனுக்கு நீதிமன்றம் 9.5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 14 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழந்த பணத்தை திரும்பக் கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version