வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது.

நாடளாவிய ரீதியில் சீரற்ற வானிலை நிலவுகின்றபோதிலும் கொட்டும் மழைக்கும் மத்தியில் மிகவும் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது.

வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வருடந்தோறும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் மாவீரர் நாள் நினைவேந்தல் நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டது.

 

முல்லைத்தீவு

முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில்…

முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் கொட்டும் மழைக்கு மத்தியிலும் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அந்தவகையில் முள்ளிவாய்க்கால் துயிலுமில்ல வளாகத்தில் மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் பிரதான பொதுச் சுடர் மாவீரரின் தாயாரான வள்ளிபுரம் புஷ்பமலரினால் ஏற்றி வைக்க ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் ஏற்றி வைக்கப்பட்டது.

தொடர்ந்து துயிலுமில்ல பாடல் ஒலிபரப்பாகியது. இதன் போது மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் மிகவும் அமைதியாக கண்ணீர் மல்க மாவீரர்களை நினைவு கூர்ந்ததுடன் பெருந்திரளான பொதுமக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டு அஞ்சலியினை செலுத்தி இருந்தனர்.

முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில்…

முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் இடைவிடாத கொட்டும் மழையிலும் மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது.

சரியாக மாலை 06.05மணிக்கு மணி ஓசை எழுப்பப்பட்டு, தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டதையடுத்து மாவீரர்களுக்கான பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

அந்தவகையில் பிரதான பொதுச்சுடரினை மாவீரர் மேஜர் பாலுவின் சகோதரியும், மாவீரர் லெப்ரினன்ட் பொன்னம்பலத்தின் மனைவியுமான கமலாதேவியினால் பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

அத்தோடு சமநேரத்தில் ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டதுடன், மாவீரர்களின் உறவுகள் கண்ணீர்சொரிந்து உணர்வெழுச்சியுடன் நினைவேந்தலை மேற்கொண்டனர்.

மேலும் குறித்த அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் மாவீரர்களின் உறவுகளுடன் இணைந்து உணர்வெழுச்சியுடன் மாவீரர்நாள் நினைவேந்தலில் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம்

கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில்….

மாவீரர் தின நிகழ்வு யாழ்ப்பாணம் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை இடம் பெற்றது.

பொதுச்சுடரை மூன்று மாவீர்ர்களின் தந்தை கந்தசாமி ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஏனைய தீபங்கள் ஏற்றப்பட்டு அக வணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

 

யாழ். குடத்தனை வடக்கில் மாவீரர் நினைவேந்தல்

மாவீரர் வாரத்தின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனையிலும் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக சிவப்பு மஞ்சள் கொடி ஏற்றப்பட்டது.

கொடியினை மாவீரர் றதிகலாவின் தந்தை கே.கனகரத்தினம் ஏற்றியதை தொடர்ந்து பொதுச் சுடரினை வீரவேங்கை தொழில்வாயினியின் தாயார் இராசசுந்தரம் சின்னக்கிளி ஏற்றிவைத்ததை தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

 

யாழ் தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில்…

யாழ் தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில் மாலை 06.05 மணி ஒலி எழுப்பப்பட்டு ஒரு கரும்புலி மாவீரர் உட்பட மூன்று மாவீரர்களின் பெற்றோரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது

அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள்  உறவினர்களால் சுடர்களை ஏற்றப்பட்டு மாவீரர்கள் நினைவு கூரப்பட்டனர்

அதனைதொடர்ந்து நினைவு கற்களுக்கு மலர்மாலை அணியப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது

 

 

வவுனியா

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில்…

வவுனியா ஈச்சங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது.

இதன்போது  பிரதான ஈகைச்சுடர் இரண்டு மாவீரர்களின்  தாயாரான பாக்கியத்தினால் ஏற்றி வைக்கப்பட்டது.  அதனைத்தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டன.

ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில் அதற்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் குறித்த மாவீரர்தின நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது.

கடும் மழைக்கு மத்தியிலும் ஆயிரணக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலியினை செலுத்தியிருந்தனர்.

 

 

வவுனியா நகரசபை மண்டபத்தில் மாவீரர் நாள்….

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினால் மாவீரர் தின நினைவேந்தல் இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது மாவீரர்களின் தாயார் இருவரினால் ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டதுடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவுகள் மற்றும் பொதுமக்களால் மாவீரர்களின் நினைவுருவ படத்திற்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

 

 

கிளிநொச்சி

சமத்துவக் கட்சி அலுவலகத்தில் மாவீரர் நாள்…

2024 மாவீரர் நாள் நிகழ்வை முன்னிட்டு கிளிநொச்சி சமத்துவக் கட்சி அலுவலகத்தில் முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

கட்சியின் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் போராளி வேங்கை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பொதுச் சுடரினை  மாவீரர்களின் கப்டன் சிவரூபன், விரவேங்கை சிவரூபன், விரவேங்கை இளமயில் ஆகியோரின் தாயார் நடராசா சீலாவதி பொதுச் சுடரினை ஏற்றி வைத்தார்.

ஏனைய ஈகை சுடர்கள் மாவீரர் இரண்டாம் லெப்டினன் பாபுவின் தந்தை இராமையாவும் கப்டன் வண்ணனின் தந்தை விஜயசேகரமும் ஏற்றி வைத்தனர் இதனை தொடர்ந்து மலர் மாலையை முன்னால் போராளிகளான  வேந்தன் மற்றும் பாலன் அவர்கியோர்கள் அணிவித்தனர். தொடர்ந்து ஏனைய சுடர்களும், மலர் அஞ்சலியும் இடம்பெற்றது.

மட்டக்களப்பு

மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில்…

தமிழர்கள் இந்த நாட்டில் சுயநிர்ணய உரிமையுடன் ஏனைய இனங்கள்போன்று சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக தன்னுயிர்களை தியாகம் செய்த விடுதலை வீரர்களை நினைவுகூரும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் கொட்டும் மழையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக நரடைபெற்றது.

மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

பெருமளவான மாவீரர்களின் உறவினர்களின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.

சரியாக 6.10 மணியளவில் பிரதான சுடர் ஏற்றப்பட்டு மாவீரர் இசை இசைக்கப்பட்டதுடன் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில்

மாவீரர் நினைவு நாள் இன்றயதினம் தமிழர் தயாகத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் மிகவும் உணர்வு பூர்வமான முறையில் நடைபெற்றன.

தற்போது நிலவி வருகின்ற வெள்ள அனர்த்த நிலமைக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவினர்கள், உள்ளிட்ட பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் அதிகளவான மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், உள்ளிட்ட  பலரும் இதன்போது கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் 2ஆம் லெப்பினட்  தங்கநிலா என்பவரின் தாயார் கிருஷ்ணபிள்ளை புண்ணியவதி பொதுச்சுடர் ஏற்றினார். தொடர்ந்து இரண்டாயித்துக்கு மேற்பட்ட  பொதுமக்கள் மாவீர்ரகளின் பெற்றோர் கலந்துகொண்டு தீபங்களை ஏற்றி அஞ்சலி செய்தனர்.

மன்னார்

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில்…

மாவீரர் தினத்தையொட்டி மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்க விட்டு உணர்வுபூர்வமாக மாவீரர் நினைவு தினம் இன்றைய தினம் புதன்கிழமை (27) மாலை நினைவு கூரப்பட்டது.

ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழுவினால் நினைவேந்தல் ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழ் தேசிய விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த இரு மாவீரர்களின் தந்தை ஒருவர் பொதுச் சுடரை ஏற்றி எழுச்சி பூர்வமாக நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார்.

ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவினர்கள் பெருந்திரளான மக்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அம்பாறை

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில்…

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நடைபெற்றது.

இன்று கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில்  நவம்பர் மாதம் 27ஆம் திகதி மாலை தமிழரின் தேசிய மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன.

இன்று மாலை 6.05 நிமிடத்தில் மாவீரர்களுக்கான  பொதுச் சுடர் ஏற்றி நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிக்க அங்கு சென்ற மக்களிடம் பொலிஸார் பாதுகாப்பு கெடுபிடிகளை விதித்து அங்கு செல்வதை தடுக்க முயற்பட்டள்ளனர்.

அத்துடன் அங்கு சென்ற வாகனங்களின் நம்பர் பலகைகள் பொலிஸாரினால் பதியப்பட்ட பின்னர் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அத்துடன் அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனும் பொலிஸார் முரண்பட்டதுடன் அங்கு சிறு பதற்ற நிலையும் ஏற்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு மாவீரர் துயிலும் இல்லம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் அமைந்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட மாவீரர்களின் நினைவுச்சுடர்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன.

திருகோணமலை

ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில்…

சம்பூர் ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினால் இன்றையதினம் (27) சம்பூர் – ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமான முறையில் இடம்பெற்றது.

இதன்போது மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு பொதுச்சுடர் ஏற்றும் நிகழ்வு இடம்பெற்றது. பொதுச் சுடரை மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஏற்றி வைத்தார். சீரற்ற காலநிலையினையும் பொருட்படுத்தாது பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இதன்போது தமிழர்களின் விடிவிற்காக உயிர் தியாகம் செய்த மாவீர்கள் விதைக்கப்பட்ட கல்லறைகள்மீது அவர்களது உறவினர்கள் மலர்தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியதுடன் கண்ணீர் மல்கி கதறி அழுது தமது கவலைகளையும் ஆதங்கங்களையும் வெளிப்படுத்தியதை காண முடிந்தது.

Share.
Leave A Reply

Exit mobile version