பாராளுமன்ற தேர்தலில் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள், தமது தலையில் தாமே மண்வாரி போட்டுக்கொண்டுள்ளன.
ஒற்றுமையின்மையால் ஏற்பட்ட பாதிப்புகளை விட, தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொண்ட, பாதிப்பு இது.
தேசிய மக்கள் சக்தியை தமிழர்கள் எங்கு வைக்க வேண்டும், எப்படி வைக்க வேண்டும் என்பதை பற்றிய, தீர்க்கமான ஒரு திட்டம், தமிழ் தேசிய கட்சிகளிடம் இருக்கவில்லை.
இது இந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் எதிர்கொண்ட பின்னடைவுக்கான முக்கியமான ஒரு காரணம்.
ஏனென்றால்,தேசிய மக்கள் சக்தி தொடர்பாக, அதன் உண்மையான முகம் தொடர்பாக, இளம் வாக்காளர்கள் அறிந்திராத விடயங்கள் பல இருந்தன.
ஜே.வி.பி.யை அறிந்து கொண்டவர்களுக்கு கூட, தேசிய மக்கள் சக்தியை தெரியாதிருந்தது.
அச்சு ஊடகங்களின் செல்வாக்கு குறைந்துள்ள சூழலில், சமூக ஊடகங்களில் தேசிய மக்கள் சக்தி தொடர்பான விமர்சனங்கள் தமிழில் வெளியானது மிக மிகக் குறைவு.
அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகியவுடன், அவரைப் பற்றி, அவரது வீட்டைப் பற்றி, அவரது ஊரை பற்றி புகழ்ந்து பேசி, தமிழர்களை ஆச்சரியத்துக்குள் மூழ்க வைத்த பெருமை சமூக ஊடங்களுக்கு உள்ளது.
இந்த விடயத்தில், சமூக ஊடகங்கள், சமூகப் பொறுப்பை சரியாக நிறைவேற்றினவா என்பது சந்தேகம். உண்மை வரலாற்றை வெளிக்கொண்டு வரும் வேலையை சமூக ஊடகங்கள் செய்யவில்லை.
மாறாக தேசிய மக்கள் சக்தி பற்றிய ஒரு மாய விம்பமே, சமூக ஊடகங்களால் உருவாக்கப்பட்டது. அதற்காக பலருக்குப் பணம் கைமாறியதான குற்றச்சாட்டுகளையும் பொது வெளியில் காண முடிந்தது.
சமூக ஊடகங்கள், வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது பொய் வாதம்.
ஏனென்றால், அச்சு ஊடகங்கள் சென்றடையாத- நேரடி பிரசாரங்கள் மேற்கொள்ளப்படாத இடங்களில் எல்லாம் இரண்டு தரப்புக்கள் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தன.
ஒன்று, தேசிய மக்கள் சக்தி. இன்னொன்று, யாழ்ப்பாணத்தில் போட்டியிட்ட சுயேட்சை குழு 17. திசைகாட்டியும் ஊசியும் எவ்வாறு இந்த மக்களை சென்றடைந்தன என்பது ஆச்சரியமானது. சமூக ஊடகங்கள் தான் அதற்குக் காரணம்.
ஜே.வி.பி.யின் சின்னமாக இருந்த மணியை இப்போது தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்களுக்கு தெரியுமோ தெரியாது.
திசைகாட்டி என்று சரியாக இனம் காண முடியாத ஒரு சின்னத்தை, அந்த கட்சி அறிமுகப்படுத்திய போது, இதற்கு மக்கள் வாக்களிப்பார்களா என்ற கேள்வி இருந்தது.
ஆனால், சின்னம் என்பது ஒரு பொருட்டே அல்ல என்பதை வாக்காளர்கள் நிரூபித்திருக்கிறார்கள். அது இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டதற்கு காரணம், சமூக ஊடகங்கள் தான்.
வயது வேறுபாடு இன்றி, சமூக ஊடகங்களை கையாளுவோர் எண்ணிக்கை பல்கிப் பெருகி விட்டது. கருத்துக்களை பதிவிடுபவர்களை விட அதனை பார்வையிடுபவர்கள் அதிகம்.
தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்த விடயத்தில் சரியான புரிதலை கொண்டிருக்கவில்லை.
கடந்த காலத்தில் ஜே.வி.பி. அல்லது தேசிய மக்கள் சக்தி தமிழ் அரசியல் பரப்பில் என்ன செய்தது, என்ன செய்யப் போகிறது என்பதை தெளிவாக கூறக்கூடிய நிலையில் அவர்கள் இருக்கவில்லை. இது முக்கியமான ஒரு பலவீனம்.
1971 ஆம் ஆண்டு ஜே.வி.பி.யின் முதலாவது கிளர்ச்சியின் போது அதன் தலைவர்கள் பல இடங்களில் கூட்டாக கைது செய்யப்பட்டார்கள். அவர்களில் பலர் யாழ்ப்பாணம் கோட்டையில் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.
அதேபோல, பல முக்கிய தலைவர்கள் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பதுங்கி இருந்தார்கள். யாழ்ப்பாணம் வழியாக இந்தியாவிற்கும் தப்பிச் சென்றார்கள்.
1987 -1989 கிளர்ச்சியின் போது அவர்களால் வடக்கு, கிழக்கிற்கு தப்பிச் செல்ல முடியவில்லை. அதனால் அவர்கள் கூட்டாக படுகொலை செய்யப்பட்டார்கள்.
அவர்கள் தப்பிச் செல்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டதற்கு இந்தியாவுடன் ஏற்பட்ட பிரச்சினையை காரணம். அவர்கள் இந்திய எதிர்ப்பை முதன்மையான கோஷமாக முன் வைத்திருந்தார்கள். இந்தியப்படைகளுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டு இருந்தார்கள்.
அந்த காலகட்டங்களில் விடுதலைப் புலிகள் இந்திய படைகளுக்கு எதிராக போரிட்டுக் கொண்டிருந்த போதும்- அவர்களுடன் ஜேவிபி இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய நிலை இருக்கவில்லை.
கருத்தியல் ரீதியாக அவர்கள் விடுதலைப் புலிகளுடன் முரண்பட்டிருந்தார்கள்.இது ஜே.வி.பி.யின் பழைய தலைமைத்துவம் அழிக்கப்பட்டமைக்கும் இன்றைய புதிய தலைமைத்துவம் உருவாகியமைக்கும் பிரதான காரணம்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2004 மாவீரர் நாள் உரையில், “இனவாதமும் மதவாதமும் பழமைவாதக் கம்யூனிசமும் ஒன்றுகலந்த குளறுபடியான கருத்தியலில் ஊறித் திளைத்த, தமிழர் விரோதக் கட்சி ” என்று ஜே.வி.பி.யை விழித்திருந்தார்.
ஜே.வி.பி. கடந்த காலங்களில் தமிழருக்கு எதிரான போரில் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டிருந்தது,எவ்வாறான பங்களிப்பை வழங்கியது,அதனால் தமிழருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன என்பது பற்றிய தெளிவு சரியாக தமிழ் மக்களிடம் எடுத்துச் செல்லப்படவில்லை.
அதற்கு மாறாக, தமிழ் அரசியல்வாதிகள் தேசிய மக்கள் சக்தியை ஒரு நட்பு சக்தியாக, வடக்கு, கிழக்கில் அறிமுகப்படுத்த முயன்றது, அவர்களின் இருப்புக்கே ஆப்பாக அமைந்து விட்டது.
அவர் ஜே.வி.பி.யின் மாநாடுகளில், பேரணிகளில் விருந்தினராக பங்கேற்றவர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்த போது, தனிப்பட்ட முறையில் தமது நிலைப்பாடு தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவுக்கே என்று அவர் வெளிப்படையாக கூறியிருந்தார்.
தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் வரவேற்றத்தக்கவை என்று பகிரங்கமாக அவர் கூறியிருந்தார்.
அதுமாத்திரமன்றி, ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் பொது வேட்பாளர் பெற்ற வாக்குகளின் பெறுமதியைக் குறைத்து கூறுவதற்காக, வடக்கு கிழக்கில் உள்ள 82 சதவீதமான மக்கள், தாங்கள் ஆதரவளிக்க பரிசீலனை செய்த சஜித், ரணில், அநுரவுக்கே வாக்களித்திருக்கிறார்கள் என்றும் அவர் பெருமையோடு கூறியிருந்தார்.
அது மாத்திரமல்ல தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சி இடம் பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதையும் அவர் சூசகமாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை, தமிழரசுக் கட்சியோ, சுமந்திரனோ எதிரியாக தமிழ் மக்கள் முன்பாக நிறுத்தவில்லை.
சில இடங்களில் அவ்வாறு பேசினாலும், அவர்களைத் தோற்கடிக்க வேண்டியதன் அவசியத்தை வாக்காளர்களிடம் கொண்டு செல்லவில்லை.
அதேபோல, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஊடக சந்திப்புக்களில் வெளியிட்ட கருத்துக்களும், தேசிய மக்கள் சக்திக்கு வலு சேர்த்ததே தவிர தமிழ்த் தேசிய கட்சிகளை பலப்படுத்தவில்லை.
ஜனாதிபதியாக அநுரகுமார இருக்கின்ற சூழலில், வேறொரு கட்சி ஆட்சி அமைப்பது நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அவர் ஊடகச் சந்திப்புகளில் கூறியிருந்தார்.
முன்னர் சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் இருந்த சூழலையும் அவர் எடுத்துக் காட்டி இருந்தார். அது உண்மையானது தான்.
ஊடகங்கள் அதனைப் பற்றி பேசுயிருந்தாலும், அரசியல்வாதிகள் அதைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இருக்கவில்லை.
இந்தக் கருத்து, தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பதற்கு மக்களை தூண்டி இருக்கிறது. அந்த கட்சி ஆட்சி அமைத்தால்தான் நாட்டை முன்னோக்கி நகர்த்த முடியும் என ஒரு பகுதியினரையாவது சிந்திக்க வைத்திருக்கிறது.
இப்படி ஒரு சிக்கல் வரும் என்று சுமந்திரன் அல்லது சுரேஷ் பிரேமச்சந்திரன் உணர்ந்திருக்க வில்லை.
தமிழ்த் தேசிய அரசியல் என்பது, எப்போதுமே சிங்கள தேசிய அரசியலுக்கு எதிரானது. அதில் சமரசத்துக்கு இடமிருக்க முடியாது.
சிங்கள தேசிய அரசியலை முன்னெடுக்கும் தேசிய மக்கள் சக்தி ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியுடனோ, ஐக்கிய மக்கள் சக்தியுடனோ இணக்கப்பாட்டை ஏற்படுத்தாது.
அவர்களின் கூட்டத்தில் பங்கேற்காது. அவர்களுடன் பேரணிகளில் இணைந்து கொள்ளாது.
ஆனால் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் அதற்கு மாறாக சிந்தித்தார்கள். தேசிய மக்கள் சக்தியுடன் அரவணைத்து செல்வதன் ஆபத்தை அவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை.
அது இன்று அவர்களின் ஆசனங்களை அபகரித்துக் கொண்டு செல்லும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியலில் நண்பர்களை விட எதிரிகள் முக்கியம். அவர்கள் தான் ஒவ்வொரு கட்சியின் வளர்ச்சியை தீர்மானிக்கிறார்கள்.
தமிழ்த் தேசிய அரசியலில் யாருக்கு இடம் இருக்க வேண்டும் யாருக்கு இருக்கக் கூடாது என்பதை தமிழ் கட்சிகள் வரையறுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றன என்பதே உண்மை.
-கபில்