இலங்கையின் அரசியலானது பெரும் கொந்தளிப்புகளுக்குப் பின், நிலையானதொரு அமைதிக்கு சென்றுள்ளது. நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் வெற்றியானது 61 சதவீத வாக்குகளையும் பாராளுமன்றத்தில் 225 ஆசனங்களில் 159 ஆசனங்களையும் பெற்று இலங்கையின் தேர்தல் அரசியல் வரலாற்றில் பெரும் மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது. இந்த வெற்றியே நாட்டில் அரசியல் அமைதி ஏற்பட காரணமாகவும் உள்ளது.
எனினும், நாட்டின் சிறுபான்மை இன மக்களின் எதிர்பார்ப்புகள் புதிப்பிக்கப்பட்டுள்ள சூழலை அண்மைய இரு தேர்தல்களும் உணர்த்தியுள்ளன. தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஒரு தனிக் கட்சியாக அதிக வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்டுள்ளது. இதுவரைக் காலமும் யாழ்ப்பாணம், திருகோணமலை, வன்னி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தென்னிலங்கை சார்ந்த அரசியல் கட்சிகள் காலூன்றுவது சவாலாகவே இருந்துள்ளது.
குறிப்பாக, யாழ்ப்பாணத்தை பொறுத்த வரையில், இலங்கையின் இனப் பதட்டங்களுக்கும் அரசியல் இயக்கங்களுக்கும் மையமாக இருந்துள்ளது. ஒரு சுதந்திரமான தமிழ் அரசை உருவாக்க தமிழீழ விடுதலைப் புலிகள் முனைந்ததால் உள்நாட்டுப் போரின் மையப் புள்ளியாகவும் யாழ்ப்பாணம் உள்ளது. எனவேதான் இன்றளவில் குறிப்பிடத்தக்க அரசியல் மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாகவும் தொடர்கிறது.
யாழ்ப்பாணம், வன்னி மற்றும் பிற சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் வடக்கு கிழக்கு மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றியானது பாரம்பரிய தமிழ்க் கட்சிகளை இரண்டாம் அல்லது மூன்றாம் இடத்திற்கு தள்ளியது.
சிறுபான்மையினத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் தேர்தல் வெற்றியை ஆராய்வதன் ஊடாக, பாரம்பரிய பிரதேச அரசியல் கட்சிகளை நிராகரிக்கும் பரந்த போக்குகளின் பின்னணியில், தமிழ் தேசியவாத அரசியலின் சிதைவுகள் வெளிப்படுகின்றன.
தேசிய அரசியல் மீதான அதிருப்திகள்
பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இனரீதியான தேர்தல் எல்லைகளை தேசிய மக்கள் சக்தியால் கடக்க முடிந்துள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குறித்து யாழ்ப்பாண மக்களின் நிலைப்பாடுகளும் உரையாடல்களும் இந்த வாதத்தை மீண்டும் வலியுறுத்துகின்றன.
செப்டெம்பர் 21ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வடக்கில் தேசிய மக்கள் சக்தியின் (ஜே.வி.பி) கடந்தகால மோசமான செயற்பாடுகளை ஏனைய கட்சிகள் தேர்தல் பிரசார மேடைகளில் தெரிவித்திருந்த போதிலும், பெரும்பாலான மக்கள் அவற்றை ஏற்றிருக்கவில்லை. மேலும் சிலர் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் பற்றி தெரியாது என்றும் அதில் நம்பிக்கை இல்லை என்றும் கூறியிருந்தார்கள்.
எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க வெற்றிபெற்று அரசியல் அதிகாரத்தை பொறுப்பேற்றதும், சில இராணுவ முகாம்களை மூடியதுடன் காணி விடுவிப்பு போன்ற பல சாதகமான நடவடிக்கைகளை வடக்கில் மேற்கொண்டார்.
சிங்கள மக்கள் ஆதிக்கம் செலுத்தும் தென்னிலங்கையில், மேல்தட்டு அரசியல் மீதிருந்த வெறுப்புணர்வுகள் அநுரகுமார திசாநாயக்கவின் பெரும் வெற்றிக்கு உயிர்கொடுத்தது போன்று, வடக்கில் பாரம்பரிய தமிழ்க் கட்சிகள் மீதான மக்களின் விரக்தி நிலை அவர்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
வடக்கில் காலாகாலமாக நிலைகொண்டிருந்த அரசியல் சக்திகள் அந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் தோல்விகண்டுள்ளனர். மறுபுறம், புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட கட்சிகள் உட்பட பரந்த அளவிலான அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள், தமிழர்களின் வாக்குகளை துண்டாடியமையினால், தேசிய அரங்கில் அந்த மக்களின் அரசியல் நிலைப்பாடு பலவீனமடைந்தது.
2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.சம்பந்தனின் மறைவைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் உட்பூசல்களும் ஒரு பங்கைக் கொண்டிருந்தன. தேர்தல் வாக்குறுதிகளில் அர்ப்பணிப்பு இன்மை மற்றும் அதிகாரப் பகிர்வு, போர்க்கால பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் பாரம்பரிய தமிழ் கட்சிகள் அதிக கவனம் செலுத்தாதன் மூலமும் தமிழர்கள் விரக்தியடைந்துள்ளனர்.
வாழ்க்கைச் செலவு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் வீட்டுக் கடன் அதிகரிப்பு போன்ற அடிப்படை பிரச்சினைகளைத் தீர்க்காது, அரசியல் அதிகாரத்தை ஒருங்கிணைக்கவும் பராமரிக்கவும் நீண்ட காலமாக இனப் பிளவுகளை தமிழ்த் தலைவர்கள் பயன்படுத்தினர்.
கொவிட்-19 தொற்று நோய்க்குப் பிறகு அதிகரித்த வாழ்க்கைச் செலவு, குறிப்பாக உணவு மற்றும் போக்குவரத்துச் செலவுகள் குறித்து மக்கள் விரக்தியை வெளிப்படுத்திய போதிலும் அந்த மக்களின் பிரதிநிதிகளாக தமிழ் தலைவர்கள் எதுவும் செய்யவில்லை.
காணி, அபிவிருத்தி, உள்கட்டமைப்பு நெருக்கடிகள்
காணி தொடர்பான பிரச்சினைகள் பாரிய பிரச்சினையாக காணப்படுவதாக வடக்கு மக்கள் நீண்ட காலமாக கூறிவருகின்றனர். அதே போன்று யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் தற்போது போதைப்பொருள் இலகுவாகக் கிடைப்பதனால், அந்த பகுதிகளில் அழுத்தமான பிரச்சினையாக போதைப்பொருள் பாவனை மாறியுள்ளது.
இதேவேளை, கொவிட் – 19 தொற்று நோயின் போது, தினசரி ஊதியம் பெறுபவர்களுக்கு வருமானம் இல்லாமை, அரசிடமிருந்து நிதி மற்றும் பொருள் ஆதரவு கிடைக்காமை மற்றும் இயற்கை விவசாயத்தை நோக்கி மாறுவதற்கான சவால்கள் போன்ற பிரச்சினைகளை வடக்கு மக்கள் நீண்ட காலமாக கூறி வருகின்றனர். இந்த பிரச்சினையை தீர்ப்பதில் பாரம்பரிய கட்சிகள் அக்கறைக்காட்டவில்லை.
தமிழ் அரசியலில் புதிய தலைமுறை 13 ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு ஆகியவற்றின் கருப்பொருளில் குறைவான பற்றுதலைக் கொண்டுள்ளனர். மறுபுறம் பொருளாதார சமத்துவமின்மை, ஊழல் மற்றும் ஆட்சியதிகாரம் போன்ற பரந்த அடிப்படையிலான பிரச்சினைகளை புதிய தலைமுறையினர் ஆதரிக்க தொடங்கியுள்ளனர்.
இதன் தாக்கத்தை கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் எதிரொலிப்புகளாக உணர முடிந்தது. 45 வயதுக்கு உட்பட்ட பலருக்கு உள்நாட்டுப் போரின் நினைவே இல்லை என்றும், அரசியல் மற்றும் அரசியலமைப்பு பிரச்சினைகளுக்கு அவர்கள் முன்னுரிமை கொடுக்க மாட்டார்கள் என்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த புத்திஜீவி ஒருவர் குறிப்பிட்டார்.
அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிகாரப்பகிர்வு போன்ற விடயங்களை முன்வைத்த தமிழ் அரசியல் கட்சிகள் சிறப்பாகச் செயற்படவில்லை. ஒரே இனப் பின்னணியைக் கொண்டிருந்தாலும் தமிழ் அரசியல் இளம் தலைமுறையினருக்கும் அந்த கட்சிகளுக்கும் இடையிலான புரிதல் எட்டாத்தூரத்திலேயே இருந்தது.
இத்தகைய பின்னடைவுகள் இனி தமிழ் அரசியலில் தமிழ் கட்சிகள் ஏக அரசியல் பிரதிநிதிகள் அல்ல என்ற கருப்பொருளை உருவாக்கியுள்ளதுடன், தமிழர் அரசியலையும் மாற்றியுள்ளது. ஆனால், தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரங்கள், இன நல்லிணக்கம் தொடர்பான அரசியல் நிலைப்பாட்டை மாற்றியமைத்துள்ளது.
இனவாதத்துக்கு பதிலாக பல்லின சமூகங்களை ஒன்றிணைக்கும் வகையில் சமூக ஒற்றுமையை ஏற்படுத்துவதாக தேசிய மக்கள் சக்தி கூறியது. இத்தகைய அறிவிப்புகள் இந்த கட்சி மீதான வடக்கின் இளம் சமூகத்தின் ஆர்வத்தை தூண்டியது.
தேசிய மக்கள் சக்தி ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்த திணறியது. இதற்கு முக்கிய காரணமாக, 1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) வன்முறைகள் காணப்பட்டன. ஆனால், ஜே.வி.பி.யின் மறுசீரமைப்புகள் ஊடான தேசிய மக்கள் சக்தியின் உதயம் சிறப்பான பலன்களை வழங்கியது.
குறிப்பாக 2020 ஆம் ஆண்டு மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கு இடையில் தேசிய மக்கள் சக்தி வடக்கில் விரிவடைந்தது. உள்நாட்டுப் போரின் பயங்கரத்தை எதிர்கொள்ளாத இளைய தலைமுறையினர் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள், பிரசாரம் மற்றும் வாக்குறுதிகளை நோக்கி ஈர்க்கப்பட்டனர்.
இதற்கு மாறாக, தமிழர்கள் மத்தியில் ஓரளவு ஆதரவைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி, கடந்த சில வருடங்களாக அடிமட்டத்திலிருந்தே சீர்குலைந்துள்ளது. அது மாத்திரமன்றி ஏனைய பெரும் கட்சிகளும் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் மக்களின் எதிர்ப்புகளுக்கு உள்ளாகியிருந்தன. இந்த சூழல் தேசிய மக்கள் சக்தியை வடக்கில் வலுவாக நிலைக்கொள்ள வழிவகுத்தது.
முக்கிய நெருக்கடிகளின் முன்னுரிமைகளை மாற்றுதல்
இராணுவமயமாக்கல், காணி உரிமைகள் மற்றும் அதிகாரப்பகிர்வு போன்ற சவால்களுடன் யாழ்ப்பாணம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் அதேவேளை, தேசிய மக்கள் சக்தி போன்ற பலதரப்பட்ட அரசியல் குரல்களின் தோற்றம் வடக்கின் அரசியல் நிலப்பரப்பில் சாத்தியமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் பொருளாதாரப் போராட்டங்களில் கவனம் செலுத்தாமல், இனம் சார்ந்த அரசியல் முன்னோக்கிய பலன்களை வழங்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது.
சமூக இயக்கங்களில் இளைஞர்கள் முன்னணியில் இருப்பதோடு, வேறுபட்ட யதார்த்தத்தை தேடுவதன் மூலம் தீவிரமான மாற்றங்களைச் செய்கிறார்கள் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. நகர்ப்புறங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் வடக்கு உட்பட நாட்டில் மிகவும் தேவையான மாற்றத்தை கொண்டு வர தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் திறனை நம்புகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
தேசிய மக்கள் சக்தி ஒரு பரந்த அடிப்படையிலான கூட்டணியாக ஆட்சி செய்யும் என்றும், அதன் முந்தைய அவதாரமான ஜே.வி.பி மற்றும் சிங்கள-பௌத்த தேசியவாதத்துடனான அதன் தொடர்பிலிருந்து வேறுபட்டதாக இருக்கும் என்றும் பலர் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
பல மூத்த அரசியல்வாதிகள் பாராளுமன்றத்திலிருந்து வெளியேறுவதும், புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பதும் நாடு முழுவதும் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார மாற்றத்திற்கான வலுவான விருப்பத்தை குறிக்கிறது. மக்கள் தங்கள் இனம், மதம், பாலினம் மற்றும் வயது ஆகியவற்றை மீறி, தேசிய மக்கள் சக்திக்கு அதன் உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கான ஆணையை வழங்குவதன் மூலம் தனித்துவமான மற்றும் முன்னோடியில்லாத வழிகளில் ஒன்றுபட்டுள்ளனர்.
போருக்குப் பிந்தைய, யாழ்ப்பாணத்தின் அரசியல் உள்கட்டமைப்புகளை மீளக் கட்டியெழுப்புதல், போர் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்தல், தமிழர் உரிமைகள் மற்றும் அதிகாரப் பகிர்வுக்காக வாதிடுவதைச் சுற்றியே உள்ளது. சில முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், காணி உரிமைகள், இராணுவ மயமாக்கல் மற்றும் சமமான வளப் பகிர்வு போன்ற பிரச்சினைகள் வடக்கு அரசியலில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்துகின்றன.
இத்தகைய சூழலில் தேசிய மக்கள் சக்தி, மாற்றத்திற்கான அதன் உறுதிப்பாட்டை நிறைவேற்றுமா அல்லது கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் தாக்கத்தை ஏற்படுத்திய பழைய அரசியல் கலாசாரத்திற்கு மீண்டும் திரும்புமா என்பதை பொறுத்திருந்தே அறிய முடியும்.
லியோ நிரோஷ தர்ஷன் Virakesari