பொது­வாக மழைப்­பாங்­கான கால­நி­லையில் இருமல், தடிமன், சிறு­காய்ச்சல் என்­பது சதா­ர­ண­மா­னது என்­பது பல­ரு­டைய பொதுப்­ப­டை­யான அபிப்­பி­ராயம். இதற்­காக ஒரு­சி­லரே வைத்­தி­ய­சா­லைக்குச் சென்று சிகிச்சை பெறுவர். பலர் தன்­னம்­பிக்­கை­யுடன் ‘கை வைத்­தி­யத்­துடன்’ மீண்டு விடுவர்.

அண்­மைய நாட்­களில் மழை­யு­ட­னான தீவி­ர­மான கால­நிலை வடக்கில் நீடித்­தி­ருந்த நிலையில் அங்கு ஓரி­ரு­வ­ருக்கு காய்ச்சல் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. ஆரம்­பத்தில் நிலைமை மோச­மாக இல்­லாது விட்­டாலும் சில­மணி நேரத்­துக்குப் பின்னர் அவர்­க­ளுக்கு மிகப்­ப­ல­வீ­ன­மான நிலை­மையே ஏற்­பட்­டுள்­ளது.

அதை­ய­டுத்து, உட­ன­டி­யா­கவே யாழ். போதனா வைத்­தி­ய­சா­லையில் அவர்கள் அனு­ம­திக்­கப்­பட்­டனர். எனினும், சிகிச்­சைகள் பல­னின்றி சிலர் உயி­ரி­ழந்­தனர். திடீர் காய்ச்சல், மர்­ம­மான மர­ணங்கள் ஓரிரு நாட்­க­ளி­லேயே தீவி­ர­மான நிலையை அடைந்­தன.

அதன் ஆபத்­துக்­களை உணர்ந்த வைத்­தி­ய­சாலை நிர்­வாகம், காய்ச்­சலால் பீடிக்­கப்­பட்­ட­வர்­க­ளி­ட­மி­ருந்து பெறப்­பட்ட மாதி­ரி­களைப் பெற்று பேரா­த­னைக்கும், கொழும்­புக்கும் ஆய்­வு­க­ளுக்­காக உட­ன­டி­யா­கவே அனுப்பி விடு­கின்­றது.

அங்கு மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வு­களில் வடக்கில் தீவி­ர­மாக பர­வி­வ­ரு­வது, ‘லெப்­டோஸ்­பை­ரோஸிஸ்’ எனப்­ப­டு­கின்ற ‘எலிக்­காய்ச்சல்’ என்­பது உறுதி செய்­யப்­பட்­டது.

நாட்டில் அண்­மையில் ஏற்­பட்ட சீரற்ற கால­நி­லை­யுடன் வெள்ளம் ஏற்­பட்ட பகு­தி­களில் எலிக்­காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சின் தொற்­று­நோய்ப்­பி­ரிவு இம்­மாத முற்­ப­க­தியில் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­தது

அந்த எச்­ச­ரிக்கை அறி­விப்பில் இரத்­தி­ன­புரி, காலி, களுத்­துறை, அம்­பாறை, குரு­நாகல், கேகாலை மற்றும் மாத்­தறை ஆகிய மாவட்­டங்கள் அதிக ஆபத்­துள்ள பிர­தே­சங்­க­ளாக இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தாக தொற்­று­நோ­யியல் பிரிவு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

ஆனால், இம்­மா­வட்­டங்­களை விடவும் தற்­போது வடக்கு மாகா­ணத்தின் ஐந்து மாவட்­டங்கள் தான் அதிகம் நெருக்­க­டி­களை எதிர்­கொள்ளும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

யாழ். பிராந்­திய சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் வைத்­திய கலா­நிதி ஆ.கேதீஸ்­வரன் ‘தற்­போது பரவி வரும் காய்ச்­சலால் யாழ். மாவட்­டத்தில் இது­வ­ரையில் 7 இறப்­புக்கள் பதி­வா­கி­யுள்­ள­தோடு 58 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்’ என்று குறிப்­பிட்­டுள்ளார்.

அத்­துடன், யாழ். போதனா வைத்­தி­ய­சா­லை­யிலும் 32 பேரும் பருத்­தித்­துறை சுகா­தார வைத்­திய அதி­காரி பிரிவில் 24 பேரும், கர­வெட்டி சுகா­தார வைத்­திய அதி­காரி பிரிவில் 24 பேரும், மரு­தங்­கேணி சுகா­தார வைத்­திய அதி­காரி பிரிவில் 6 பேரும் மற்றும் சாவ­கச்­சேரி சுகா­தார வைத்­திய அதி­காரி பிரிவில் 4 பேரும் சிகிச்­சை­களைப் பெற்று வரு­கின்­றனர் என்றும் அவர் கூறி­யுள்ளார்.

இதே­நேரம், வட மாகா­ணத்தில் காய்ச்சல் கார­ண­மாக உயி­ரி­ழந்த 7 பேரில் 2 பேர் எலிக்­காய்ச்சல் கார­ண­மாக உயி­ரி­ழந்­துள்­ளமை உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சின் விசேட வைத்­திய நிபுணர் துஷானி தாபரே அறி­வித்­துள்ளார். குறிப்­பாக, யாழ்ப்­பா­ணத்தில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளி­ட­மி­ருந்து பெறப்­பட்டு அனுப்­பப்­பட்ட மாதி­ரி­களில் 3 பேருக்கு எலிக்­காய்ச்சல் நோய் இருப்­ப­தாக கொழும்பு மருத்­துவ ஆராய்ச்சி நிறு­வ­னத்­தினால் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

அண்­மைய நாட்­களில் வடக்கில் எலிக்­காய்ச்­சலின் தாக்கம் அதி­க­மாக இருக்­கி­றது. எனினும், நாடா­ள­விய ரீதியில் கணி­ச­மான அள­வுக்கு அக்­காய்ச்சல் ஆதிக்கம் செலுத்­து­கின்­றது என்­பதை மறுப்­ப­தற்­கில்லை.

இதனை உறு­திப்­ப­டுத்தும் வகையில் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்­திய நிபுணர் குமுது வீரகோன், ‘இந்த ஆண்டின் இது­வ­ரை­யி­லான காலத்தில் 10ஆயி­ரத்­துக்கும் அதி­க­மா­ன­வர்கள் எலிக்­காய்ச்­சலால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்’ என்று கூறி­யுள்ளார்.

அத்­துடன், நாட­ளா­விய ரீதியில் கடந்த வருடம் மாத்­திரம் எலிக்­காய்ச்­சலால் பாதிப்­புற்ற 9ஆயிரம் பேர் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­துடன் 200 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். இரத்­தி­ன­புரி, குரு­நாகல், காலி, மாத்­தறை, கொழும்பு ஆகிய மாவட்­டங்­க­ளி­லேயே அதிக நோயா­ளர்கள் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளனர் என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

பத்துத் தொடக்கம் 12 மாவட்­டங்கள் அதி­யுயர் அபாயம் மிக்க பகு­தி­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன என்றும், எலிக்­காய்ச்­சலின் தீவி­ரத்­தன்­மையை உணர்ந்து நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும் விசேட வைத்­திய நிபுணர் குமுது வீரகோன், தெரி­வித்­துள்ளார்.

நிலை­மைகள் இவ்­வா­றி­ருக்­கையில், எலிக்­காய்ச்சல் என்றால் என்ன என்­பதும், அதன் தாக்கம் எவ்­வா­றா­னது என்­பதும், அதனால் அதிகம் ஆபத்­துக்­குள்­ளாகக் கூடி­ய­வர்கள் யார் என்­ப­தையும் கவ­னத்தில் கொள்ள வேண்­டி­யது தற்­போ­தைய சூழலில் இன்­றி­ய­மை­யா­த­தா­க­வுள்­ளது.

அந்­த­வ­கையில், எலிக்­காய்ச்சல் தொடர்பில் சுகா­தார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கையின் அடிப்­ப­டையில், எலிக்­காய்ச்­ச­லா­னது (வயல் காய்ச்சல், சுரங்கக் காய்ச்சல், சேற்­றுக்­காய்ச்சல்) எலி­களால் அல்­லது வேறு சில விலங்­கு­களால் (மாடுகள், எரு­மைகள்) பரப்­பப்­படும் காய்ச்­ச­லாகும் என்று அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

இந்தக் காய்ச்­ச­லா­னது, மனி­தனில் இருந்து மனி­த­னுக்கு பரப்­பப்­ப­டு­வ­தில்லை. மாறாக, Leptospira interrogans எனப்­ப­டு­கின்ற ஒரு வகை பக்­டீ­ரி­யாவால் ஏற்­ப­டு­கி­றது. இந்த நோய்க் கிருமி பொது­வாக எலி போன்ற மிரு­கங்­களின் சிறு­நீ­ருடன் வெளி­யேற்­றப்­ப­டு­கி­றது. இவ்­வாறு வெளி­யேற்­றப்­பட்ட நோய்க்­கி­ருமி நீர்த்தேக்­கங்­களில் இருந்து மனி­தனின் தோலில் உள்ள சிறு புண்கள் ஊடா­கவோ அல்­லது தோலின் மென்­மை­யான பகு­திகள் ஊடா­கவோ மனித உடலின் குருதிச் சுற்­றோட்­டத்தைச் சென்­ற­டை­கின்­றது. சில சந்­தர்ப்­பங்­களில் இந்த நோய்க் கிருமி உள்ள நீரைப் பரு­கு­வ­தாலும் மனித உடலைச் சென்­ற­டை­கின்­றது.

அவ்­வாறு மனித உட­லுக்குள் கிருமி சென்­ற­டைந்­த­வுடன் ஏழு முதல் பன்­னி­ரெண்டு நாட்கள் கழித்தே எலிக்­காய்ச்சல் நோயின் அறி­கு­றிகள் தென்­படும். முதல் வாரத்தில் குளிர்க்­காய்ச்சல், நடுக்கம், தலை­வலி, உடல் வலி, உடல் தளர்வு, கண்கள் சிவந்­து­போதல், கண் கூச்சம், வயிற்று வலி, வாந்தி, உடலில் தடிப்­புகள் போன்­றவை ஏற்­படும்.

அதன்­பி­றகு, சுமார் ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை காய்ச்சல் இல்­லாமல் இருக்கும். இரண்­டா­வது கட்­டத்தில், கிரு­மிகள் பல்­வேறு திசுக்­க­ளையும் உடல் உறுப்­பு­க­ளையும் தாக்­கு­வதால் பாதிப்பு ஏற்­படும். கல்­லீரல், சிறு­நீ­ரகம் அதி­க­மாக பாதிக்­கப்­படும்.

இந்த நிலையில் ஒரு­போதும் எந்த ஒரு சிகிச்­சை­யி­னையும் பெறாமல் இருந்தால், இரு­தயம், மூளை, பாதிப்­ப­டை­வ­தோடு சிறு­நீ­ருடன் இரத்தம் கலந்து வெளி­யே­றுதல், சிறுநீர் வெளி­யே­று­வது குறைதல் ஆகிய நிலை­மைகள் உரு­வெ­டுக்கும். அதி­லி­ருந்து மீள முடி­யாத நிலை­மையில் உயி­ரி­ழப்பு ஏற்­படும்.

வயல்­களில் வேலை செய்யும் விவ­சா­யிகள், சேற்று நிலங்­களில் பயிர்ச்­செய்­கை­களில் ஈடு­ப­டு­ப­வர்கள், ஆறுகள் அல்­லது வயல் வெளி­களில் செங்கல் தயா­ரித்தல் அல்­லது மணல் அள்­ளுதல் போன்ற செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­ப­வர்கள், இரத்­தி­னக்கல் சுரங்கத் தொழி­லா­ளர்கள், சேற்று நிலம் அல்­லது நீர் தேங்­கிய இடங்­களில் விளை­யாட்டு அல்­லது செயற்­பா­டு­களில் ஈடு­ப­வர்கள் இந்த நோய்த் தாக்­கத்­துக்கு இல­கு­வாக உள்­ளாகக் கூடி­ய­வர்­க­ளாக உள்­ளனர்.

இவ்­வா­றான நிலையில், குறித்த நோய்­நி­லை­மையில் இருந்து எவ்­வாறு பாது­காப்பைப் பெற்­றுக்­கொள்ள முடி­யு­மென்றும் மேற்­கொள்ள வேண்­டிய முன்­னெச்­ச­ரிக்­கைகள் குறித்தும் யாழ். போதனா வைத்­தி­ய­சாலை பொது வைத்­தி­ய­நி­புணர் வைத்­தியர் த.பேரா­னந்­த­ராஜா விளக்­க­ம­ளித்­துள்ளார்.

வயல்கள், சேற்று நிலங்கள், கழி­வுநீர் வாய்க்­கால்கள் போன்­ற­வற்றில் பணி­பு­ரி­ப­வர்கள் கவ­சங்­களை (கையு­றைகள், காலு­றைகள்) பயன்­ப­டுத்­து­வது பொருத்­த­மா­ன­தாக இருக்கும்.

தேவை­யில்­லாமல் நீர் தேங்­கி­யி­ருக்கும் இடங்­க­ளுக்கோ அல்­லது சேற்று நிலங்­க­ளுக்கோ போவதை தவிர்ப்­ப­தோடு அவ்­வா­றான இடங்­களில் குளிப்­ப­தையோ அல்­லது கழு­வு­வ­தையோ தவிர்க்க வேண்டும்.

வயல்கள் மற்றும் வாழிங்­க­ளுக்கு அருகில் உள்ள பகு­தி­களை சுத்­த­மாக வைத்­தி­ருப்­பதும் நீர் தேங்கி நிற்­கா­த­வாறு பார்த்­துக்­கொள்­வதும் அவ­சி­ய­மாகும்.

பொது­இ­டங்­களில் கிடைக்­கின்ற நீரைப்­ப­ரு­கு­வதை தவிர்ப்­ப­தோடு கொதித்து ஆறிய நீரைப் பரு­கு­வது மிகப்­பொ­ருத்­த­மா­ன­தொரு பாது­காப்பு முறை­யாகும்.

நீர்­நி­லைகள், சதுப்பு நிலங்கள், கழிவு வாய்க்கால்கள் போன்ற பகுதிகளில் அதிகம் பிரசன்னம் உடையவர்கள் அருகில் உள்ள சுகாதாரப் பணிமனைக்கோ அல்லது வைத்தியசாலைகளுக்கோ நேரடியாகச் சென்று முற்பாதுகாப்பு மாத்திரைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அதேநேரம், நோய்த்தொற்று அறிகுறிகளைக் கொண்டவர்கள் உடனடியாக, அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்குச் சென்று வைத்திய அதிகாரியைச் சந்திப்பதும் உரிய சிகிச்சைகளை பின்பற்றுவதும் மிகவும் முக்கியமானதாகும்.

பொது வைத்திய நிபுணர் வைத்தியர் த.பேரானந்தராஜாவின் ஆலோசனைகள் இவ்வாறிருக்கையில், வடக்கில் இம்முறை ஏற்பட்ட அதிக மழையின் காரணத்தால் ஏற்பட்டுள்ள வெள்ளம் வடிந்தோட முடியாமலிருக்கும் சூழல் தான் எலிக்காய்ச்சலுக்கான அடிப்படையாக இருக்கின்றது.

ஆக, வடக்கின் வடிகாலமைப்பு முறைமையை மீளாய்வு செய்தலாலே எலிக்காய்ச்சலின் கணிசமான தாக்கத்தில் இருந்து மீட்சி பெற்றுக்கொள்ளக்கூடிய இயலுமையை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஆர்.ராம்-Virakesari

Share.
Leave A Reply

Exit mobile version