ஸ்பெயினிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டதற்குச் சரியாக ஐந்து ஆண்டுகள் கழித்து, போர்ச்சுகலும் யூதர்களை விரட்டியடிக்க முடிவு செய்தது. அதாவது, கி.பி. 1497-ம் ஆண்டு. இதெல்லாம் பின்னால் மற்ற அனைத்து ஐரோப்பிய நாடுகளும் செய்யப்போகிற மாபெரும் விரட்டல்கள், மிகப்பெரிய இனப்படுகொலைகளுக்கு ஒரு சிறு முன்னோட்டம் மாதிரி நடைபெற்ற சம்பவங்கள்.
யூத வெறுப்பு என்பது, தொட்டுத்தொட்டு காட்டுத்தீ மாதிரி தேச எல்லைகளைக் கடந்து ஐரோப்பா முழுவதும் பரவிக்கொண்டிருந்த சமயம். எப்போதும் பாதுகாப்பற்ற உணர்வுடனேயே யூதர்கள் அங்கே இருந்தார்கள். ஆனால், அந்தச் சமயத்திலும் அவர்கள் மொத்தமாக, குழுக்கள் குழுக்களாகத்தான் இருந்தார்கள். அதாவது, எந்த ஒரு இடத்திலும் ஒரு தனி யூதக்குடும்பத்தைப் பார்த்துவிடமுடியாது! மாறாக, ஒரு யூதக்குடும்பம் உங்கள் கண்ணில் தென்படும் இடத்தில் குறைந்தது ஐம்பது குடும்பங்கள் வசிக்கின்றன என்பதே அர்த்தம்.
கஷ்டங்களை அவர்கள் சேர்ந்தேதான் அனுபவித்தார்கள். திட்டங்கள் தீட்டப்படும்போதும் ஒருமித்த முடிவாகத்தான் எதையுமே செய்தார்கள். ஒரு தவறான முடிவை எடுக்க நேர்ந்தால்கூட தனியாக எடுக்க விரும்பாத இனம் அது.
ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலிலிருந்து புறப்பட்ட யூதர்களில் பெரும்பாலானோரை அரபு தேசங்களுக்கே அனுப்புவது என்று யூத குருமார்களின் சபைதான் முதலில் தீர்மானித்தது. அந்தத் தேசங்களில் வாழ்ந்து வந்த மொத்த யூதர்களையும் கணக்கிட்டுப் பிரித்து, வேறு வேறு தேசங்களுக்கு அனுப்பினாலும், ‘மிக முக்கியமான நபர்கள்’ என்று அடையாளம் காணப்பட்ட அத்தனை பேரையும் அரபு தேசங்களுக்கே அனுப்பினார்கள்!
மிக முக்கியமான நபர்கள் என்றால், யூத குலத்துக்கு, அந்தக் காலகட்டத்தில் மிக முக்கியத் தேவை என்று கருதப்பட்ட நபர்கள். பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள், எழுத்தாளர்கள், சட்ட நிபுணர்கள், ராஜதந்திரிகள், கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் இப்படி. ஒரு நெருக்கடி நேர்ந்திருப்பதால் வேறு வேறு தேசங்களுக்குப் போக நேரிடுகிறது.
போகிற இடங்களில் எல்லாம் பிரச்னையில்லாமல் வாழ முடியுமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. குறைந்தபட்சம், இனக் காவலர்கள் என்று கருதப்படுகிறவர்களாவது ஓரளவு பாதுகாப்புடன் வாழவேண்டும் என்பதற்காகவே அவர்களை அரபு தேசங்களுக்கு அனுப்பினார்கள் என்று பெரும்பாலான யூத சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஆனபோதிலும் அவர்கள் மத்தியில் போயிருப்பது, கிறிஸ்துவ தேசங்களுக்குப் போவதைக் காட்டிலும் நல்லது என்று யூத குருமார்கள் கருதினார்கள்!
கான்ஸ்டாண்டிநோபிள் என்று அன்றைக்கு அழைக்கப்பட்ட, இன்றைய துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்தான் அன்றைக்கும் ஒட்டோமான் பேரரசின் தலைநகரமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் உலகின் மிக முக்கிய நகரங்களுள் ஒன்றாகக் கருதப்பட்ட நகரம் அது. இன்றைய பாரீஸ் நகரம் போலக் கலைகளின் தாயகம். உலகக் கவிஞர்கள், ஓவியர்கள், மாபெரும் சிந்தனையாளர்கள் எல்லாரும் ஏதாவது மாநாடு கூட்டுவதென்றால் கான்ஸ்டாண்டிநோபிளில் நடத்தலாம் என்றுதான் முதலில் சொல்லுவார்களாம். அந்தளவுக்கு ஒட்டோமான் சுல்தான்கள், கலையை வளர்ப்பவர்களாக இருந்திருக்கிறார்கள்.
கலைகள் வளரும் இடத்தில் சகிப்புத்தன்மைக்கும் சகோதரத்துவத்துக்கும்கூட உரிய இட ஒதுக்கீடு இருந்தே தீரும். அந்த வகையில், ஐரோப்பா துரத்திக்கொண்டிருந்த யூதர்களுக்கு கான்ஸ்டாண்டிநோபிள் இருகரம் நீட்டி வரவேற்பும் அடைக்கலமும் தந்துகொண்டிருந்தது அப்போது.
கொஞ்சம் இழுபறியாக இருந்த பாலஸ்தீன், 1512-ம் வருடம் முழுவதுமாக துருக்கிப் பேரரசரின் ஆளுகையின் கீழ் வந்துவிட்டது. இதில் அதிகம் சந்தோஷப்பட்டது, முஸ்லிம்களைக் காட்டிலும் யூதர்களே ஆவார்கள். பாலஸ்தீனிலும் யூதக்குடியிருப்புகளை மீண்டும் உருவாக்கித்தர அவர்கள் சுல்தானிடம் கோரிக்கை வைத்தார்கள்.
முன்னதாக, ஏற்கெனவே சுமார் முந்நூறு பேர் அடங்கிய ஆய்வுக்குழு ஒன்று சிலுவைப்போர்கள் முடிந்த சூட்டிலேயே பாலஸ்தீனுக்கு வந்து இழந்த இடங்களை மீண்டும் பெறுவது தொடர்பான ஏற்பாடுகளை ஓரளவு செய்து முடித்துவிட்டுத் தகவல் தந்திருந்ததால், அவர்கள் நம்பிக்கையுடன் சுல்தானிடம் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்கள்.
அப்போது துருக்கியின் சுல்தானாக இருந்தவர் பெயர், பயஸித். (Bayazid 2). மனமுவந்து குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் யூதர்களேயானாலும், அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதும் தம் கடமை என்று நினைத்தார் அவர். ஆகவே, யூதர்கள் பாலஸ்தீனுக்குச் செல்வதில் தமக்கொன்றும் ஆட்சேபணை இல்லை என்று சொல்லிவிட்டார்.
எத்தனை நூற்றாண்டுகள்! பரவசத்தில் துள்ளிக்குதித்தார்கள் யூதர்கள். மீண்டும் பாலஸ்தீன். மீண்டும் ஜெருசலேம்! (ஆனால் பெரும்பாலான யூதர்கள், பாலஸ்தீனில் கலிலீ (Galilee) என்கிற இடத்தில்தான் – இன்று இது சிரியா-குடியிருப்புப் பகுதிகளை அமைத்துக்கொள்ள முடிந்தது என்று தெரிகிறது.)
சிலுவைப்போர்கள் ஆரம்பித்த சூட்டில் தப்பிப்பிழைக்கப் புறப்பட்டுப் போன யூதர்கள், மீண்டும் தம் பிறந்த மண்ணை தரிசிக்கும் ஆவலில் கான்ஸ்டாண்டிநோபிளில் இருந்து குழுக்களாக மூட்டை கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள்.
நூறு அல்லது இருநூறு ஆண்டுகள் என்பது, பொதுவாகவே மிகப்பெரிய காலகட்டம். அத்தனை இடைவெளிக்குப் பிறகு ஒரு தலைமுறை தனது பூர்வீக இடத்தை நோக்கி வரும்போது நியாயமாக, ஒரு புதிய இடம், புனித இடம், நமது முன்னோர்கள் இருந்த இடம் என்கிற உணர்ச்சி வேண்டுமானால் இருக்கலாமே தவிர, தாமே வாழ்ந்த மண்ணுக்குத் திரும்பி வந்தது போல உணர முடியுமா!
உலகில் வேறெந்த சமூகமும் எந்தச் சந்தர்ப்பத்திலும் அப்படி உணர்ந்ததாகத் தெரியவில்லை. அது சாத்தியமும் இல்லை. ஆனால் யூதர்கள் அப்படித்தான் இருந்தார்கள்! யூதர்களின் சமூகத்தில் புதைந்திருக்கும் ஏராளமான ரகசிய ஆச்சர்யங்களுள் ஒன்று அது!
எத்தனை தலைமுறைகள் மறைந்தாலும், எந்த ஆட்சிகள் மாறினாலும், என்னதான் தாங்க முடியாத சூழல் தகிப்புகளுக்கு உட்பட நேர்ந்தாலும் ஜெருசலேம் என்று சொல்லிவிட்டால் போதும். எந்த நாட்டு யூதரும் அந்த திசை நோக்கி வணங்குவார். அவர்களது ரத்தத்தில் சிவப்பணு, வெள்ளையணு மட்டுமல்ல; ஜெருசலேம் அணுவும் பிறக்கும்போதே சேர்ந்து உதித்துவிடும் போலிருக்கிறது.
பெற்றோர் முதல் மத குரு வரை எத்தனையோ பேர் சொல்லிச்சொல்லி வளர்த்துக்கொண்ட ஊர்ப்பாசம் ஓரளவு என்றால், ஜெருசலேத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட யுத்தங்களின் சத்தம் எக்காலத்திலும் அவர்களின் மனக்காதுகளில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும். அது தங்கள் மண், தங்கள் மண் என்று தினசரி ஒரு தியானம் போலச் சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள்.
சரித்திரத்தில், எத்தனையோ சந்தர்ப்பங்களில் அவர்கள் ஜெருசலேத்திலிருந்து விரட்டப்பட்டிருக்கிறார்கள். எத்தனையோ சந்தர்ப்பங்களில் அவர்களாகவே கூட விட்டு ஓடியிருக்கிறார்கள். ஆனால் ஒருபோதும் அவர்கள் அந்த நகரை விட்டு நிரந்தரமாகப் பிரிவது என்று சிந்தித்துப் பார்த்ததே கிடையாது. அவர்கள், இறைவனின் விருப்பத்துக்குரிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஜெருசலேம் நகரம், இறைவனும் இறைத்தூதர்களும் குடிகொண்ட பூமி. இந்த எண்ணம்தான். இது ஒன்றுதான். இதைத்தவிர வேறு எதுவுமே கிடையாது!
1512-ம் ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதம் தொடங்கி, யூதர்கள் பாலஸ்தீனுக்கு வரத் தொடங்கினார்கள். ஒவ்வொரு யூதக்குடும்பமும் சிறிய அளவில் தோட்டங்கள் அமைத்து காய்கறிகள் பயிரிட்டன. அல்லது சிறு பண்ணைகளை நிறுவி ஆடு, மாடுகள் வளர்க்கத் தொடங்கினார்கள். கொஞ்சம் வசதி மிக்கவர்கள் எண்ணெய் வித்துக்களைப் பயிரிட்டார்கள். இந்த சுய தொழில்கள் பரவலாக பாலஸ்தீனில் வாழவந்த அத்தனை யூதர்களாலும் மேற்கொள்ளப்பட்டவை.
முதல் சில ஆண்டுகளில் ஏதோ செய்து பிழைக்கிறார்கள் என்பதற்கு மேல் யாருக்கும் அதைப்பற்றிப் பெரிதாக சிந்திக்கத் தோன்றவில்லை. ஆனால் நான்கைந்து வருடங்கள் கழிந்ததும் ஒட்டுமொத்த பாலஸ்தீனிலும் காய்கறி, எண்ணெய் வித்துக்கள், பால், பாலாடைக் கட்டி, வெண்ணெய் போன்ற பொருள்களின் முழு விற்பனையாளர்கள் யூதர்களாகவே இருந்தார்கள்! அரேபியர்களோ, கிறிஸ்துவர்களோ இந்த வியாபாரங்களில் மருந்துக்குக்கூட இல்லை!
யூதர்களை இப்படித்தான் நாம் புரிந்துகொள்ள முடியும். வாழ்வின் மீது அவர்களுக்கு உள்ள தீவிரமா, தமது இருப்பை நியாயப்படுத்தத்தான் இப்படிக் கடுமையாக உழைக்கிறார்களா, அல்லது தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகத்தான் இப்படி எடுக்கும் அத்தனை பணிகளிலும் ஏகபோக அதிபதிகளாவதற்குப் பாடுபடுகிறார்களா? எது அவர்களை இத்தனை தீவிரமாகச் செயல்பட வைக்கிறது என்பதற்கு இன்றுவரை விடை இல்லை.
ஆனால் ஒன்று உறுதி. ஒரு யூதர் ஒரு விஷயத்தில் ஈடுபடுகிறார் என்றால், அதில் மற்றவர்களைக் காட்டிலும் அவருக்குத்தான் வெற்றியின் சாத்தியங்கள் அதிகம் தென்படும். ஏதாவது செய்து தன்வசப்படுத்திக்கொள்வது என்கிற வழக்கம், யூதர்களின் தனி அடையாளமாகக் காணப்பட்டு, காலப்போக்கில், யூத மதத்தின் இயல்பாகவே அது சித்திரிக்கப்படத் தொடங்கிவிட்டது!
உண்மையில் மதத்துக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது, அந்த இனத்தவர்களின் இயல்பு. அப்படியே காலம் காலமாகப் பழகிப்போய்விட்டார்கள்.
இழந்த செல்வம், செல்வாக்கு, நிலங்கள் போன்றவற்றைத் தங்கள் சொந்த மண்ணில் மீண்டும் பெறுவதற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு ஒட்டோமான் அரசு எந்தத் தடையும் செய்யவில்லை. யூத சரித்திரத்தில், அவர்கள் கவலையின்றித் தூங்கிய காலங்களில் இதுவும் ஒன்று!
இந்தக் காலகட்டத்தில்தான் யூதர்கள் தமது புராதன புராணக் கதைகளை, தொன்மையான ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட பேரிலக்கியங்களை, மத நூல்களை மீட்டெடுக்கும் முயற்சியையும் ஆரம்பித்தார்கள்.
அது ஒரு மிகப்பெரிய கதை. யூதர்களின் புனித மதப்பிரதிகளான தோரா (Tora), தால்மூத் (Talmud) உள்ளிட்ட சில அதிமுக்கியமான விஷயங்கள் அனைத்தும் புராதன ஹீப்ரு மொழியில் எழுதப்பட்டவை. அதாவது சுமார் நாலாயிரம் வருடப் புராதன மொழி. சரித்திரம் முழுவதும் உயிர் வாழ்வதற்காகவும், பிழைப்பு நடத்துவதற்காகவும் உலகின் பல்வேறு தேசங்களுக்கு இடம்பெயர்ந்து தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்து இறந்த யூதர்கள், தமது ஹீப்ரு மொழியைக் கிட்டத்தட்ட மறந்துபோயிருந்தார்கள். எந்தெந்த நாடுகளில் வாழ்கிறார்களோ, அந்தந்த தேசத்தின் மொழியே யூதர்களின் மொழியாக இருந்தது.
ஆனால் ஹீப்ரு முழுவதுமாக அழிந்துபோய்விட்டது என்று சொல்வதற்கில்லை. மிகச்சில ஆசார யூதர்கள் விடாமல் அம்மொழியைப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்கள்தான். ஆனாலும் எண்ணிக்கையில் அத்தகையவர்கள் மிகவும் குறைவு. மேலும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்துவந்த ஹீப்ரு மொழி, தன் பழைய முகத்தை இழந்து, அந்தந்தப் பிராந்திய மொழிகளின் தாக்கத்துக்கு உள்ளாகி, வேறு வடிவமெடுத்திருந்தது அப்போது.
இதனால், அந்தத் தலைமுறை யூதர்களுக்குத் தம் புராதன மத நூல்களை, புராண இதிகாசங்களைப் படித்து அறிவது இயலாத காரியமாக இருந்தது. ஆனால், அவர்கள் தம் தொன்மங்களைத் தெரிந்துகொண்டே தீரவேண்டும் என்று யூத மதகுருக்கள் மிகத்தீவிரமாக எண்ணினார்கள்.
அதற்கான முயற்சிகளை முதலில் விளையாட்டாகத்தான் ஆரம்பித்திருக்கிறார்கள். பின்னால் நிகழவிருக்கும் யூதகுலத்தின் மாபெரும் எழுச்சிக்கு அந்த மொழிப்புரட்சிதான் முதல் வித்தாக அமையப்போகிறது என்பதெல்லாம் அவர்களுக்கு அப்போது தெரிய நியாயமில்லை.