முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக வருடமொன்றுக்கு 1,100 மில்லியன் ரூபாவும் அதில் 326 மில்லியன் ரூபா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக மாத்திரம் செலவிடப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் செலவினத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களில் 116 பேர் பொலிஸ் கடமைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 60ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் அதிகரிப்பதா அல்லது குறைப்பதா என்பது தொடர்பில் மீள ஆராயப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்துக்கு அமைய முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய அரசாங்கத்தினால் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

இந்த குழுவினால் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காக இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன்போது முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வருடமொன்றுக்கு 1100 மில்லியன் ரூபா நிதி செலவிடப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மாத்திரம் அதில் வருடமொன்றுக்கு 326 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செலவினத்தை கட்டுப்படுத்தும் நிலையில், மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 60ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதம் ஏந்திய படை தொடர்ந்தும் கடமையில் இருக்கும் எனவும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் அதிகரிப்பதா அல்லது குறைப்பதா என்பது தொடர்பில் மீள ஆராயப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார்.

மேலும் பொலிஸ் சேவையில் 24 ஆயிரம் பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் இதற்கு முன்னர் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு மற்றும் பிரதமர் பாதுகாப்பு பிரிவுகளில் கடமையாற்றிய 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் பொலிஸ் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

அத்துடன் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களது பாதுகாப்பு நிமித்தம் கடமைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் மீள பெறப்படவில்லை எனவும் அதனையும் பரிசீலனை செய்து குறைப்பதன் ஊடாக குற்றத்தடுப்பு பிரிவு உள்ளிட்ட இதர பொலிஸ் கடமைகளுக்காக அவர்களை ஈடுபடுத்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version