இலங்கை தமிழரசுக்கட்சிக்கு வயது எழுபத்தி ஐந்தாம் .

அதற்கு பிறப்பு முதல் இன்றுவரை அனைத்து தேர்தல்களிலும் அளிக்கப்பட்ட வாக்குகள் சமஷ்டிக்கானவையாம்.

தமிழரசுக்கட்சி 75 ஆண்டுகளாக சமஷ்டி கோரிக்கையுடன் பயணிக்கிறதாம்.

தமிழரசு அரசியல்வாதிகளின் இந்த வார்த்தைகளில் உள்ள உண்மைத்தன்மை, அரசியல் நேர்மை என்ன?

ஒரு அரசியல் நிறுவனமான தமிழரசுக்கட்சியின் செயற்பாட்டு காலப்பகுதியை கொண்டாடுவது அவர்கள் நினைப்பது போன்று ஒன்றும், வெறுமனே கலண்டர் கணக்கல்ல. அக்கட்சியின் கொள்கை அடிப்படையிலான செயற்பாட்டு அரசியலின் அடைவு மதிப்பீடு. கடந்த காலங்களில் அது பெற்ற அரசியல் வெற்றி, தோல்விகளை சுயவிமர்சனம் செய்வது. இதனை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகர் எஸ்.ஜே.வி .செல்வநாயகத்தின் சிலைக்கு ஏணி வைத்து ஏறி ஆண்டு தோறும் மாலை போடுவதால் அடைய முடியாது.

1949 டிசம்பர் 18 ம் திகதி. ஸ்தாபிக்கப்பட்ட தமிழரசுக்கட்சி 1951 இல் தனது முதலாவது கட்சி மாநாட்டை திருகோணமலையில் நடாத்தியது.

எஸ்.ஜே.வி.செல்வநாயகம்

இதன்போது கட்சியின் தலைவராக எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தெரிவு செய்யப்பட்டார். அதே திருகோணமலையில் தான் தமிழரசுக்கட்சியின் கடந்த கட்சி மாநாடும், தலைவர் தெரிவும் இந்த ஆண்டில் இடம்பெற்றது.

இன்று யாருக்கு மாலை போடுகிறார்களோ அவரின் கொள்கைகளை நிராகரித்து, அவரை அவமதித்து, பதவிக்காக கட்சியை குற்றக்கூண்டில் நிறுத்தியிருக்கிறார்கள். அதற்குள் பாரம்பரியம், பழம்பெருமை, பெரிய கட்சி என்ற கதையாடல்கள் வேறு.

திருகோணமலை முதல் மாநாட்டில் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் ஆற்றிய உரையில் ஒரு வாசகம் இது.

“…. நாங்கள் எங்கள் நோக்கில் (சமஷ்டி) வெற்றி பெற கடவுள் எங்களுக்கு துணைபுரிவார்”

அதே செல்வநாயகம் தனது இறுதிக்காலத்தில் கூறிய வார்த்தைகள் இவை.

” …… தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” .

இப்படி கடவுளின் நம்பிக்கையில் கட்சியை ஆரம்பித்து அதன் இயலாமையை இறுதியில் கடவுளிடம் ஒப்படைத்த கதைதான் தமிழரசுக்கட்சியின் 75 ஆண்டு காலக்கதை. இதன் அர்த்தம் செல்வநாயகத்தின் காலத்திலேயே அது தன் இலக்குகளில் தோற்று விட்டது. அந்த தோல்வியின் இயலாமை தான் அவர் தமிழ்மக்களை கடவுளிடம் பாரம் கொடுத்து பரலோகம் சென்ற கதை.

தமிழரசுக்கட்சி தம்பட்டம் அடிக்கின்ற இந்த பவளவிழா தமிழ்தேசிய பாராளுமன்ற அரசியலின் தோல்வி விழா. இதில் இன்னும் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் தமிழரசுக்கட்சி 75 ஆண்டுகளாக இயங்கியது என்று காட்ட முற்படுவது. தமிழரசுக்கட்சியானது தமிழர் கூட்டணி , தமிழர்விடுதலைக்கைட்டணி என்ற வேறு போர்வையுடன் , வீட்டு சின்னத்தையும் தவிர்த்து உதயசூரியன் சின்னத்திலேயே 1974 முதல் 2004 வரை முப்பது ஆண்டுகள் தமிழர் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயர்களை போர்த்திக்கொண்டு செயற்பட்டது.

2004 பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக போட்டியிட்டது. அதன் சின்னம் உதயசூரியன். இந்த முப்பது ஆண்டுகளில் தமிழரசுக்கட்சி என்பதும், அதன் சின்னம் வீடும் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட பேப்பரில் தான் இருந்தது.

புலிகளின் ஆசீர்வாதத்துடன் 2001 இல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அமைக்கப்பட்டு, 2004 பாராளுமன்ற தேர்தலில் சட்டரீதியாக தமிழர் விடுதலைக்கூட்டணி பெயரையும், உதயசூரியன் சின்னத்தையும் பயன்படுத்தும் உரிமை ஆனந்தசங்கரிக்கு கிடைத்ததால் வேறுவழியின்றி மீண்டும் ‘வீட்டுக்குள்’ நுழைந்தவர்கள் தான் இன்றைய தமிழரசுக்காரர்.

உண்மையில் தமிழரசு கட்சி என்பது தேர்தல் சின்னத்திற்காக மட்டும் புலிகளின் அங்கீகாரத்துடன் பயன்படுத்தப்பட்ட ‘புலிவீடு’. இப்படியிருக்கையில் தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டை கணக்கிட்டு அத்தோடு அதுபடுத்து தூங்கிய உறங்குகாலமான ‘தனிநாடு’ ஆயுதப்போராட்ட. காலத்தையும் சேர்த்து பவள விழா கொண்டாட்டம் நடக்கிறது.

தமிழரசுக்கட்சி 75 ஆண்டுகளாகவும், ஒவ்வொரு தேர்தல்களிலும் சமஷ்டி கூட்டாட்சிக்கு மக்களிடம் வாக்கு கேட்டது என்று தமிழரசுக்கட்சியினர் இன்று பேசியும், எழுதியும் வருவது தமிழ்த்தேசிய அரசியல் பெருங்கதையாடல் -வரலாற்று திரிபு.

சமஷ்டி கட்சி என்று ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட தமிழரசுக்கட்சி சமஷ்டியை தனது நீண்ட கால அரசியல் இலக்காகக் கொண்டது. இந்த நீண்ட காலம் என்பது முக்கால் நூற்றாண்டையும் கடந்த வெற்று அரசியல் பயணமாக நகரும் என்று எஸ்.ஜே.வி. கூட கனவிலும் நினைத்திருக்க மாட்டார். சமஷ்டி கோரிய தமிழரசுக்கட்சி அதை கைவிட்டு தனி நாட்டு தமிழீழக்கோரிக்கையை வட்டுக்கோட்டை பிரகடனத்தின் மூலம் முன் வைத்தது.

முரண் நகையாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கத்தின் மாவட்ட சபைகளை பிற்காலத்தில் ஏற்றுக்கொண்டது.

. அமிர்தலிங்கம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் சௌ.தொண்டமானின் அனுசரணையுடன் மாவட்ட மந்திரிகளை ஏற்க விரும்பிய போதும், ஆலோசனைகளை மேற்கொண்ட போதும் புலிகளின் ஆயுத கலாச்சாரம் அந்த முடிவுக்கு குறுக்கே நின்றதால் அமிர்தலிங்கத்தின் அந்த விருப்பம் நிறைவேறவில்லை. அமிர்தலிங்கம் ஐந்து மாவட்ட மந்திரிகள் கேட்க ஜே.ஆர்.மூன்றுதான் தரலாம் என்ற இழுபறியில் மாவட்ட மந்திரி கனவு கலைந்து போனது.

அதிகாரங்கள் அற்ற மாவட்டசபைகளை ஏற்றுக்கொண்டு, தேர்தலில் பங்கேற்று, மாவட்ட சபை நிர்வாகத்தை ஏற்று நடாத்தியவர்கள் இந்திய -இலங்கை சமாதான உடன்படிக்கை மூலமான மாகாண சபையை ஏற்க முன்வரவில்லை.

ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க காலத்தில் நீலன் திருச்செல்வம் அவர்களின் முயற்சியினால் முன்மொழியப்பட்ட பிராந்தியங்களின் ஒன்றியத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நிராகரித்தது.

இதற்கு காரணம் தனித் தமிழீழம் தான் தமிழர் கோரிக்கை என்ற கொள்கை ரீதியிலான வட்டுக்கோட்டை தீர்மானமா? சமஷ்டியை அடையக்கூடிய அதிகாரப்பகிர்வை வழங்கிய மாகாண சபையை மற்றும் , பிராந்தியங்களின் ஒன்றிய கட்டமைப்பை இவர்கள் ஏற்க மறுதலித்தது ஏன்? இதற்கு காரணம் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை விடவும் புலிகளில் இருந்து தப்பித்தல் -அரசியல் பிழைப்பு முதன்மை பெற்றிருந்ததாகும்.

இதுவரையான 1957 யூலை 26 இல் செய்யப்பட்ட பண்டாரநாயக்கா- செல்வநாயகம் ஒப்பந்தம், 1965 மார்ச் 24 இல் செய்யப்பட்ட டட்லி சேனநாயக்கா -செல்வநாயகம் ஒப்பந்தம் என்பனவற்றை விடவும் 1987 யூலை 29 இல் இந்திய -இலங்கை அரசுகள் ஒப்பமிட்ட ஒப்பந்தம், சந்திரிகா அரசாங்கத்தின் பிராந்தியங்களின் ஒன்றியம் என்பன இனப்பிரச்சினைக்கான தீர்வில் எவ்வளவோ முன்னேற்றகரமான சமஷ்டியின் நுழைவாயில்.

அது மட்டுமின்றி மாகாண சபை முறைமைக்கு இந்திய உத்தரவாதம் இருந்தது. இன்னும் சிலர் இந்திய -இலங்கை உடன்பாடு தமிழ் தரப்பாக புலிகளை ஒப்பந்தத்தில் ஒரு தரப்பாக ஏற்றுக்கொண்டு புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான ஒன்றாக அமையவில்லை என்று கூறுகிறார்கள்.

இந்த குற்றச்சாட்டை தமிழரசுக்கட்சியின் அரசியல்வாதிகளும் கூறுகிறார்கள். 13 வது திருத்தம் ஆரம்ப புள்ளியே இல்லை என்று பூச்சியத்தில் நின்று கொண்டு 75 வருடத்தை சமஷ்டி,-தனிநாடு – சமஷ்டி- ஏக்கராட்சிய என்று சங்கீதக்கதிரை அரசியல் செய்பவர்கள் இவர்கள்.

இவர்கள் தான் மாகாணசபை முறையை அல்லது 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவுக்கு பங்குண்டு என்று கூறுபவர்கள். இந்திய பிரதமர் மோடிக்கு கடிதத்திற்கு மேல் கடிதம் எழுதுபவர்கள். நாள் குறைந்தாலும் சந்திப்பு குறையாமல் இந்திய தூதரகத்தை மூன்று முறை வலம் வந்து தேங்காய் உடைத்து 13 க்காக பூசைத்தட்டு கொடுத்து நேர்த்தி வைப்பவர்கள்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவின் இந்திய விஜயத்தின்போது அவருக்கு பிரதமர் மோடி அதிகபட்ச அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று கூவுபவர்கள். இப்போது இவர்களிடம் ஒரே ஒரு கேள்வி இத்தனைக்கும் இந்த ஒப்பந்தத்தில் புலிகளும், இலங்கை அரசாங்கமும் ஒப்பமிட்டிருந்தால் ஆகப்பிந்தியது முள்ளிவாய்க்காலோடு இந்த ஒப்பந்தத்தின் கதை முடிந்திருக்கும். காலாவதியாகியிருக்கும் . இன்றும் இந்தியாவை கோருவதற்கு இந்தியா ஒரு தரப்பாக ஒப்பமிட்டதாலேயே சாத்தியமாகிறது.

இதனால் தான் தமிழரசுக்கட்சி இன்று கூறுகின்ற தமிழ்மக்கள் சமஷ்டிக்கு கடந்த 75 ஆண்டுகளாக வாக்களித்தார்கள் என்பதில் உண்மையில்லை. 1970 க்கு பின்னர் தமிழ் மக்கள் சமஷ்டித்தீர்வுக்கு வாக்களிக்கவில்லை. இது 2009 முள்ளிவாய்க்கால் முடிவு வரையான சகல பாராளுமன்ற தேர்தல்களிலும் ‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ‘ என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாக காட்டப்பட்டது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அமைக்கப்பட்டு கடன் வாங்கப்பட்ட தமிழரசின் வீட்டு சின்னத்தில் போட்டியிட்டபோதும் அது சமஷ்டி கோரிக்கையை முன்வைத்த தேர்தல் அல்ல தமிழீழத்திற்கான தமிழ் மக்களின் அங்கீகாரத்தை, புலிகளை ஏகபிரதிநிதிகளாக இலங்கை அரசை, பிராந்தியத்தை, சர்வதேசத்தை அங்கீகரிக்க கோரிய தேர்தல்.

ஆகவே சமஷ்டி 1976 இல் வட்டுக்கோட்டை பிரகடனம் முதல் 2009 வரை கைவிடப்பட்ட ஒன்று என்பதே தமிழரசின் வரலாறு. அது மட்டுமின்றி தமிழரசுகட்சி தேர்தல் சின்னத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. 2009 இல் ஆயுதப்போராட்டம் அடைந்த படுதோல்வியும், தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் பலவீனமும் மீண்டும் சமஷ்டி போர்வையை போர்த்த காரணமானது.

கடந்த 75 ஆண்டுகளில் தமிழ்த்தேசிய அரசியல் 1950-1975 சமஷ்டி காலப்பகுதியிலும், 1976-2009 தனித்தமிழீழ காலப்பகுதியிலும், 2010- 2024 மீண்டும் சமஷ்டி காலப்பகுதியிலும் தமிழரசுக்கட்சி, தமிழர் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, மீண்டும் தமிழரசாக, தமிழரசு ஒரு பிரதான கட்சியாக இந்த முக்கிய அரசியல் தீர்வுக்கான இலக்குகளில் எதையும் நெருங்கக்கூட இல்லை.

நல்லாட்சி கால அரசியல் அமைப்பு மாற்றம் என்பதும் வெறும் கண்துடைப்பாகவே இருந்துள்ளது. இனப்பிரச்சினைக்கான தீர்வில் மட்டுமன்றி,போருக்கு பின்னரான எந்த கோரிக்கையிலும் தமிழரசுக்கட்சி கொழும்பிலோ, பிராந்தியத்திலோ, சர்வதேசத்திலோ சாதிக்கவில்லை. காலத்திற்கு காலம் காற்று வளத்தைபார்த்து பட்டம் விடுதலே தொடர்கிறது. அதுவும் இவர்களின் கணிப்பீடு எதிர்காற்றாக மாறியதே அதிகம். இதுதான் 75 ஆண்டுகால பழம்பெரும் பாரம்பரிய அரசியலால் மக்களுக்கு கிடைத்தது.

தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகர் எஸ்.ஜே.வி. செல்வநாகத்தின் பயோகிராப்பியை எழுதிய பேராசிரியர் வில்சன், செல்வநாயகம் பற்றி இப்படி குறிப்பிடுகிறார்.

“செல்வநாயகம் கேக் வேண்டும் என்பதற்காக பாண் வேண்டாம் என்று அடம் பிடிப்பவர் அல்லர் “.

காலனித்துவ கலாச்சாரத்தில் வில்சன் கூறியததைத்தான் அரங்கம் அரசியல் பத்தியாளர்கள் தமிழ்த்தேசிய கலாச்சாரத்தில் ……

” வேட்டிதான் வேண்டும் என்று அடம்பிடித்து தமிழ்த்தேசிய அரசியல் கோவணத்தையும் இழக்கும் நிலையில் வந்து நிற்கிறது “. என்கிறார்கள்.

இவர்கள் கோவணத்தோடு ஏறி செல்வநாயகத்தின் சிலைக்கு மாலை போட்டிருப்பதே அவருக்கு செய்யும் 75 ஆண்டு மரியாதையாக இருந்திருக்கும். இந்த நத்தார் காலத்தில் பாவமன்னிப்புக்கோரலாகவும் அமைந்திருக்கும்.

— அழகு குணசீலன் —

Share.
Leave A Reply

Exit mobile version