இன்று வரை முல்லா ஒமரின் உறுதியான புகைப்படம் என்று ஒன்று கூட இல்லை
கட்டுரை தகவல்
ஒசாமா பின்லேடனால் உலகின் எந்த மூலையிலும் பதுங்க முடியாத சூழலில், அப்போதைய தாலிபன் தலைவர் முல்லா ஒமர் தனது நாடான ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் கொடுத்தார்.
ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் புகுந்த பின்னர் ஒசாமா பின்லேடன், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தை தாக்க திட்டமிட்டார். அந்த தாக்குதலில் சுமார் 3000 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு, “எல்லா இடங்களிலும் முல்லா ஒமரின் ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே பரவலாகக் காணப்பட்டது” என்று நெதர்லாந்து பத்திரிகையாளர் பெட்டி டாம் முல்லா ஒமரின் வாழ்க்கை வரலாற்றில் எழுதியுள்ளார் (புத்தகத்தின் பெயர் : Looking for the Enemy, Mullah Omar and the Unknown Taliban).
“அந்த ஒரே ஒரு புகைப்படமும் முல்லாவினுடையதா என்பது யாருக்குமே உறுதியாகத் தெரியாது.” என்றும் எழுதியுள்ளார்.
2001-ஆம் ஆண்டிற்குப் பிறகு முல்லா ஒமர் எங்கு சென்றார் என்பது குறித்து இன்னமும் எந்தத் தகவலும் இல்லை.
ஆப்கானிஸ்தான் அரசும், அமெரிக்க அரசும், அமெரிக்க ஊடகங்களும் அவர் பாகிஸ்தானில் வசிப்பதாக நம்பிய நிலையில், தாலிபன்கள் இதை மறுத்தனர். அவர் ஆப்கானிஸ்தானில் இருப்பதாக தெரிவித்தனர்.
2001ஆம் ஆண்டு முதல் முல்லா ஒமர் இறந்துவிட்டதாக அடிக்கடி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
2012 ஆம் ஆண்டில், முல்லா ஒமர் பற்றிய தகவல்களைத் தெரிவிப்பவர்களுக்கு அமெரிக்க அரசாங்கம் பல லட்சம் டாலர்களை வெகுமதியாக அறிவித்தது.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் (மோஸ்ட் வாண்டட்) பட்டியலில் ஒமரை பின்வருமாறு விவரித்தனர்:
முடி – கருப்பு
தோற்றம்- உயரமானவர்
குடியுரிமை – ஆப்கானிஸ்தான்
முக்கிய அடையாளம் – வலது கண்ணில் காயம்
சோவியத் ராணுவத்திற்கு எதிரான போர்
ஒமர் ஆரம்பத்திலிருந்தே அமெரிக்காவின் எதிரியாக நடந்து கொள்ளவில்லை. அவர் சோவியத் ராணுவத்திற்கு எதிராக போராடியவர்களில் ஒருவராக இருந்ததால் அமெரிக்கர்கள் அவரை தங்களுக்கு பயனுள்ள ஒரு மனிதராகக் கருதினர்.
ஒமர் ஆப்கானிஸ்தானின் காந்தஹாரில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர்.
ஒமரின் தந்தை இறந்த போது அவருக்கு இரண்டு வயதுதான். அவர் 22-23 வயதாக இருந்தபோது, சோவியத் ராணுவத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கேற்கத் தொடங்கினார்.
“மோதல்களின் போது அவருக்கு ‘ராக்கெட்’ என்று செல்லப் பெயர் சூட்டப்பட்டது. ஏனெனில் அவர் ஏவிய ராக்கெட்டுகள் இலக்குகளை மிகவும் துல்லியமாக தாக்கின, இதன் விளைவாக பல அப்பாவி பொதுமக்கள் இறந்தனர்” என்று டச்சு எழுத்தாளர் பெட்டி டேம் விவரித்திருக்கிறார்.
பெட்டி டாமிடம் முன்னாள் தாலிபன் வெளியுறவு அமைச்சர் வாகில் அகமது முதவாகில், “ஒமர் சோவியத் வீரர்களின் பார்வையில் சிக்கிவிட்டார். ஒருமுறை அவர்கள் வானொலியில் `உயரமான மனிதர்'(முல்லா) கொல்லப்பட்டதாகக் கூட அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால் அந்த உயரமான மனிதர் தப்பித்துவிட்டதால் அது ஒரு கனவாகி போனது” என்று கூறினார்.
ஒமரின் குழந்தை பருவத்தை பற்றி தன் புத்தகத்தில் விவரித்துள்ள பெட்டி டேம், “ஒமர் குழந்தைப் பருவத்தில், சுட்டித்தனம் செய்யும் குழந்தையாக நற்பெயரைக் கொண்டிருந்தார்.
ஆனால் பின்னர் அவர் கூச்ச சுபாவம் கொண்ட, அதிகம் பேசாத நபராக மாறினார். குறிப்பாக வெளியாட்களிடம் பேசவே மாட்டார். ஆனால் அவர் நண்பர்களுடன் இருந்த போது, மிகவும் கலகலப்பாக, மிமிக்ரி எல்லாம் செய்து மகிழ்ச்சியாக இருந்தார்” என்று எழுதியுள்ளார்.
கண்ணில் கடுமையான காயம்
1980 களின் பிற்பகுதியில் சோவியத் படைகளுடன் நடந்த போரின் போது அவரது ஒரு கண்ணில் பலத்த காயம்பட்டது.
இதுகுறித்து விவரித்துள்ள பெட்டி டேம், “சோவியத் ராணுவ வீரர்கள் தங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்துவார்கள் என்று பயந்து ஒரு நாள் முல்லா ஒமரும் அவரது தோழர்களும் மறைந்திருந்தனர்.
சோவியத் விமானப்படை அவர் இருந்த பகுதிக்கு அருகில் குண்டு வீசியது. இந்த குண்டுவெடிப்பில் அருகில் இருந்த மசூதி கடுமையாக சேதமடைந்தது.
காற்றில் பறந்து வந்த வெடிபொருட்களின் சிதைவுகளில் ஒரு துண்டு ஒமரின் வலது கண்ணில் பட்டு கடுமையான காயம் ஏற்பட்டது. மருத்துவர் அங்கு வருவதற்கு ஒரு நாள் ஆனது. அதுவரை அவரை உள்ளூர் மருத்துவர் கவனித்து வந்தார். இதற்கு முன்பும் ஒருமுறை ஒமரின் முதுகில் இருந்து ஒரு தோட்டாவை அறுவை சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர்.” என்றார்.
“சிஐஏ (CIA ) தாலிபன்களுக்கு ஆயுதம் கொடுத்து உதவி செய்தாலும், மருத்துவ உதவிகளுக்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை.
மருத்துவர், ஒமரின் இருப்பிடத்தை சென்றடைவதற்குள், அவர் கண்ணில் சிக்கியிருந்த உலோகத் துண்டைத் தன் கைகளாலேயே ஒமர் அகற்றியிருந்தார். தன் தலைப்பாகையால் ரத்தப்போக்கை நிறுத்த முயன்றார்.
மருத்துவர் அவருக்கு முதலுதவி அளித்த பிறகு, அவரது சகாக்கள் அவரை பாகிஸ்தானின் குவெட்டா நகருக்கு அழைத்துச் சென்றனர்.” என்று பெட்டி டேம் எழுதியுள்ளார்.
`பாலியல் வன்கொடுமை’ செய்த தளபதி தூக்கிலிடப்பட்ட கதை
முல்லா ஒமர் பற்றி ஒரு பிரபலமான கதை ஒன்று உள்ளது. 1994 ஆம் ஆண்டு ஆரம்பத்தில், உள்ளூர் தளபதி ஒருவர் இரண்டு சிறுமிகளை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்தார்.
சாண்டி கால், ஜூலை 30, 2015 அன்று வெளியான ‘தி கார்டியன்’ இதழில் இவ்வாறு எழுதியுள்ளார்,
“முல்லா ஒமர் முப்பது இளம் மாணவர்களை ஒன்றுகூட்டி, அவர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்து பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட தளபதியின் மறைவிடத்தைத் தாக்கினார். அவர் சிறுமிகளை விடுவித்தது மட்டுமல்லாமல் தளபதியையும் தூக்கிலிட்டார். பின்னர், வழி தவறிய முஸ்லிம்களுக்கு எதிராகவும் நாங்கள் போராடுவோம் என்றார்”
சோவியத் ஒன்றியத்துடனான போரில் 75,000 முதல் 90,000 ஆப்கானியர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் சுமார் 15,000 சோவியத் வீரர்கள் உயிர் இழந்தனர்.
10 ஆண்டுகளில், சுமார் 15 லட்சம் ஆப்கான் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 30 லட்சம் மக்கள் காயமடைந்தனர். அவர்களில் பலர் தங்கள் கைகளையும் கால்களையும் நிரந்தரமாக இழந்தனர்.
பிபிசி செய்தியாளர் உடனான சந்திப்பு
ஒருமுறை பிபிசி செய்தியாளர் ரஹிமுல்லா யூசுப்சாய், முல்லா ஒமரைச் சந்திப்பதற்காக காந்தஹாரில் உள்ள கவர்னர் மாளிகைக்குச் சென்றார், அப்போது, ஒமர் தனது தலைப்பாகையால் தன் முகத்தை மூடிக் கொண்டு புல் தரையில் மதிய உறக்கத்தில் இருந்ததை கண்டார்.
பல ஆடம்பர அறைகளைக் கொண்ட அந்த அரண்மனை கட்டடத்தில், ஒமர் படிக்கட்டுகளின் கீழ் ஜன்னல் இல்லாத அறையில் தங்க விரும்பினார்.
ஒரு ஐஎஸ்ஐ உளவுத்துறை அதிகாரி, தன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல், பெட்டி டேமிடம் சில விஷயங்களை பகிர்ந்தார்.
“தாலிபன் தலைவர்கள் அனைவரும் அங்கே ஒரு கம்பளத்தின் மீது அமர்ந்து தேநீர் அருந்துவார்கள். அவர்களின் ஆட்சியின் பணம் அனைத்தும் அடங்கிய இரும்புப் பெட்டி ஒன்று அவர்களுக்கு அருகில் வைக்கப்படும்.
முல்லா ஒமர் எப்பொழுதும் ஒரே மாதிரியான உடை அணிந்திருப்பதார். சிலர், அவர் தனது ஆடைகளை அரிதாகவே மாற்றிக் கொள்வதாக கருதுகின்றனர். அவரது உணவும் மிகவும் எளிமையானது. சூப் மற்றும் சில வேகவைத்த உருளைக்கிழங்குகளை அவர் மிகுந்த பசியில் இருப்பது போல் வேகவேகமாக சாப்பிடுவார்” என்றார்.
முல்லா ஒமர் ஒரு வார்த்தையை பலமுறை திரும்பத் திரும்பச் சொல்லும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். இது அவர் பேச்சுத் திறன் குறைபாடு உடையவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தது.
பேட்டி கொடுப்பதில் தயக்கம்
முல்லா ஒமர் திறம்பட பேசும் பேச்சாளர் அல்ல. அவரது பேச்சு, ஒரு வயதான படிக்காத மனிதரை ஒத்திருந்தது. ஒரு வார்த்தையைப் பலமுறை திரும்பத் திரும்பச் சொல்லும் பழக்கம் அவருக்கு இருந்தது, அது அவர் திக்கிப் பேசுவது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தியது.
1995 ஆம் ஆண்டில், பிபிசி மூத்த பத்திரிகையாளர் ரஹிமுல்லா யூசுப்சாய், முல்லா ஒமரை நேர்காணல் செய்யும் வாய்ப்பைப் பெற்றார். முல்லா ஒமரை நெருக்கமாகப் பார்த்த உலகின் மிகச் சில பத்திரிகையாளர்களில் ரஹிமுல்லாவும் ஒருவர்.
பெட்டி டேம் இவ்வாறு விவரிக்கிறார், “யூசுப்சாயை முல்லா ஒமர் மரியாதையுடன் வரவேற்றார். பிபிசியின் பாஷ்டோ (Pashto) சேவையில் அந்த பத்திரிகையாளரின் செய்திகளை கேட்டதுண்டு. ஆனாலும் அவர் தன் பேட்டி கொடுக்க இயலாமையை அந்த நபரிடம் வெளிப்படுத்தினார். மைக் முன் தன்னால் பேச முடியாது என்று கூறினார். அவர் தனது வாழ்நாளில் ஒரு ஊடக நேர்காணலையும் கொடுத்ததில்லை.
பல முயற்சிகளுக்குப் பிறகு, முல்லா ஒமர் டேப் ரெக்கார்டரை வைத்துவிட்டு போகுமாறு ரஹிமுல்லா யூசுப்சாயிடம் கூறினார். கேள்விகளையும் தனது பத்திரிகை ஆலோசகர் அப்துல் ரஹ்மான் ஹோடகியிடம் சொல்லிவிட்டு போகும்படி கேட்டுக் கொண்டார். அடுத்த நாள், முல்லா ஒமர் தனது அனைத்து பதில்களையும் பதிவு செய்திருந்தார்.
யூசுப்சாய் கேட்டிருந்த கேள்விகளுக்கு, பதிலளிப்பதில் அவர் மிகவும் சிரமப்பட்டிருப்பதை அவரது பதில்கள் உணர்த்தின. சில பதில்களை மீண்டும் மீண்டும் பதிவு செய்ய வேண்டியச் சூழல் ஏற்பட்டது என்று பெட்டி டேமிடம் அப்துல் ரஹ்மான் ஹோடகி கூறினார்.
கேள்விகளுக்கான பதில்களை ஒரு தாளில் ஹோடகி எழுதியிருந்தார், ஆனால் முல்லா அதை படிக்கவும் சிரமப்பட்டார்.
ஒமரின் பதில்களை கொண்ட, அந்த டேப் காணாமல் போய் விட்டதாகவும், எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் பெட்டி டேம் கூறுகிறார்.
முல்லா ஒமரை சந்தித்த ஒரு சில பத்திரிகையாளர்களில் பிபிசி செய்தியாளர் ரஹிமுல்லா யூசுப்சாயும் ஒருவர்.
கார் பயணங்களில் ஆர்வம் கொண்ட ஒமர்
முல்லா ஒமருக்கு வாகனம் ஓட்டுவதில் விருப்பம் இருந்தது. அவர் எப்போதும் தனது இருக்கையை உயர்த்தி ஸ்டீயரிங் அருகே நகர்த்துவார். ஆனால் அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை.
பல விபத்துகளில் அவர் சிக்கியுள்ளார். அவரது நெருங்கிய கூட்டாளி முடாசிம் ஆகா ஜான் இதுகுறித்து பகிர்ந்தார்.
“அவர் கார் ஓட்டுவதை நாங்கள் விரும்பவில்லை. ஆனால் ஓட்டுநரை ஒரு ஓரமாக உட்கார வைத்து தானே காரை ஓட்ட வேண்டும் என்று அவர் பிடிவாதமாக இருப்பார். பலமுறை விபத்துகள் ஏற்பட்ட பிறகும், காரை பழுது பார்ப்பதற்காக அவர் மெக்கானிக் கடையில் காத்திருப்பார். மீண்டும் கார் ஓட்டுவார்.” என்றார்.
போரில் எந்த முன்னேற்றமும் இல்லாத (stalemate) சூழலில், மற்ற தாலிபன் வீரர்களைப் போலவே ஒமரும் மோதலில் கலந்து கொள்வார்.
பிரபல எழுத்தாளர் அஹ்மத் ரஷீத் தனது ‘The Story of Afghan Warlords’ என்ற புத்தகத்தில், “முல்லா ஒமருக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால், அவர் பதுங்கு குழியில் தாலிபன் படைகளுடன் சேர்ந்து சண்டையிட்டிருப்பார், ஆனால் அவரது தளபதிகள் அவர் அவ்வாறு செய்வதை விரும்பவில்லை. `எங்களுக்கு நீங்கள் ஒரு தலைவனாக இருக்க வேண்டும், ஒரு சிப்பாயாக அல்ல; என்று அவர்கள் ஒமரிடம் கூறிவிட்டனர்” என்று அவர் எழுதியுள்ளார்.
படக்குறிப்பு, மூத்த தாலிபன் தலைவர்கள் காபூல் நகரில் காரில் பயணம் செய்வதற்குப் பதிலாக நடந்து செல்வது வழக்கம்
`நவீன வாழ்க்கையுடன் எந்த தொடர்பும் இல்லை’
“தாலிபன்கள் முதன்முதலில் காபூலுக்கு வந்தபோது, முல்லா ஒமர் காபூலுக்குச் செல்லாமல் கந்தஹாரில் தங்கினார். காபூலின் அன்றாட நிர்வாகப் பொறுப்பை முல்லா ரபானியிடம் ஒப்படைத்தார். முல்லா ரபானி, காபூலில் ராஷ்டிரபதி பவனில் வசிக்கத் தொடங்கினார்.
தாலிபன்களுக்கு நிர்வாகத்தை நடத்துவதில் எந்த முன் அனுபவமும் இல்லை, அவர்களில் பலர் மிகவும் இளையவர்கள்.
முல்லா ஜயீப் தனது ‘மை லைஃப் வித் தாலிபன்’ என்ற புத்தகத்தில் இதுகுறித்து எழுதியுள்ளார்.
“தாலிபன்களில் பலருக்கு குரான் ஓதவும், பதுங்கு குழிகளில் இருந்து சண்டையிடவும் மட்டுமே தெரியும். அவர்களில் பலருக்கு தங்கள் பெயர்களை எழுதி, கையெழுத்திடத் தெரியாது.
அதிகாரிகள் அவர்களின் ஆட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தாலிபன்கள் அவர்கள் அறையின் நாற்காலிகளை ஒரு பக்கமாக ஓரங்கட்டிவிட்டு, அமைச்சர்கள் கூட்டத்தை தரையில் போடப்பட்ட மெத்தைகளில் நடத்தினர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முல்லா ஒமர், ஆப்கானிஸ்தான், தாலிபன், ஒசாமா பின்லேடன்
மூத்த தாலிபன் தலைவர்கள் காரில் பயணம் செய்வதற்குப் பதிலாக காபூல் நகரில் நடந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒருவேளை இதற்குக் காரணம் அந்த காலக்கட்டத்தில் காபூலில் கார்கள் மிகக் குறைவாக இருந்ததாலும், பெட்ரோல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்ததாலும் அவர்கள் அப்படி செய்திருக்கக் கூடும்.
நாடு முழுவதும் பாஸ்போர்ட் புகைப்படம் தவிர மற்ற புகைப்படங்களை எடுப்பது தடை செய்யப்பட்டிருந்தது. இசைப்பதும் இசையைக் கேட்பதும் தடை செய்யப்பட்டிருந்தது.
கேசட்டுகள் மியூசிக் பிளேயர்களில் இருந்து அகற்றப்பட்டு அழிக்கப்பட்டன. பல கார்கள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டன.
தேசிய விளையாட்டான ‘புஸ்குஷி’யும் தடைசெய்யப்பட்டது. மக்கள் செஸ் விளையாட அனுமதிக்கப்படவில்லை. கால்பந்து விளையாடும் போது அரைக் கால் சட்டைக்குப் பதிலாக முழு பேண்ட் அணிய வேண்டியிருந்தது.
ஒசாமா பின்லேடன் – முல்லா ஒமர் நட்பு
அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தால், சூடான் 1996 இல், ஒசாமா பின்லேடனை தனது நாட்டை விட்டு வெளியேறச் சொன்ன போது, அவருக்கு ஆப்கானிஸ்தானுக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை.
ஒசாமா பின்லேடனின் மகன் ஒமர் பின்லேடன் தனது ‘க்ரோயிங் அப் பின்லேடன்’ என்ற புத்தகத்தில் இதுகுறித்து எழுதியிருக்கிறார்.
“ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் வழியில் செளதி அரேபியா மீது அவரது விமானம் பறந்து கொண்டிருந்த போது, ராக்கெட் மூலம் தனது விமானம் சுட்டு வீழ்த்தப்படலாம் என்ற அச்சத்தில் தந்தையின் நெற்றி வியர்த்தது” என்று எழுதியுள்ளார்.
1996-இல் ஒசாமாவின் விமானம் ஜலாலாபாத்தில் தரையிறங்கிய போது, அவரை வரவேற்க முல்லா ஒமர் அங்கு வரவில்லை.
ஒமர் பின்லேடன் இதுகுறித்து, “முல்லா ஒமரின் அழைப்பின் பேரில்தான் ஒசாமா ஆப்கானிஸ்தானுக்கு வந்தார் என்பது தவறான கருத்து. விமான நிலையத்தில் அவரை குல்புதீன் ஹெக்மத்யாரின் ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
ஆரம்பத்தில் அவர் ஆப்கானிஸ்தான் மன்னர் ஜாஹிர் ஷாவின் அரண்மனையில் தங்க வைக்கப்பட்டார். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு தோரா போரா மலைகளில் உள்ள ஒரு குகையில் வசிக்க ஒசாமா சென்றார். பலர் சொல்வது போல், ஒமர் – ஒசாமா நட்பைப் பற்றி எனக்கு நினைவில்லை.” என்று கூறுகிறார்.
,
ஆப்கனை விட்டு வெளியேற ஒசாமாவை வலியுறுத்திய ஒமர்
2001-இல் உலக வர்த்தக மைய தாக்குதலுக்குப் பிறகு ஒசாமா பின்லேடனை தனது நாட்டை விட்டு வெளியேறுமாறு முல்லா ஒமர் கூறியது ஒசாமாவின் மகன் ஒமருக்கு நன்றாக நினைவிருக்கிறது.
எழுத்தாளர் பெட்டி டேமிடம் ஒமர் இதுபற்றி பகிர்ந்து கொண்டார். அது பின்வருமாறு,
“முல்லா ஒமர் என் தந்தையை விட உயரமானவர். அவர் என் தந்தையைப் பார்க்க வந்த போது, அவர்கள் முல்லா ஒமருக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆனால் அவர் ஒசாமாவிடம் இருந்து சிறிது தூரத்தில் அமர்ந்தார். அனைவரும் தரையில் அமர்ந்திருந்ததால் சற்று சிரமமாக இருந்ததாக, அவர் தனக்கு நாற்காலி கேட்டார். அவர் என் தந்தையிடம் மிகத் தெளிவாகச் சொன்னார், ‘இங்கு சூழல் சரியில்லை, நீங்கள் இங்கிருந்து கிளம்ப வேண்டும்.”
“‘அவர்கள் (அமெரிக்கர்கள்) ஏற்கனவே போதைப்பொருள் மற்றும் பெண்களின் உரிமைகள் தொடர்பான விஷயங்களை ஒரு பெரிய பிரச்னையாக மாற்றி வருகின்றனர். உங்களை நாடு கடத்துவதும் பெரிய பிரச்னையாக மாறுவதை நான் விரும்பவில்லை.'”
ஒசாமாவிடம் முல்லா ஒமர் இவ்வாறு கூறியதாக ஒமர் லேடன் பெட்டியிடம் கூறினார்.
“இஸ்லாமிய சட்டத்தின்படி, நான் உங்களை மற்றவர்களிடம் ஒப்படைக்க முடியாது. ஆனால் நீங்களாக சொந்த விருப்பத்தின் பேரில், வெளியேறுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று ஒமர் கூறியதற்கு, ஆப்கானிஸ்தானில் மூன்றரை வருடங்களாக மட்டுமே இருக்கிறேன், ஆனால் சூடான் ஐந்தாண்டுகள் தங்க அனுமதித்ததாக என் தந்தை ஒமரிடம் கூறியதும், அவர் இருக்கையில் இருந்து எழுந்து புறப்படத் தயாரானார். அவர் ஒசாமா பின்லேடனுடன் கைகுலுக்க கூட தயாராக இல்லை” என்று ஒமர் கூறியுள்ளார்.
உண்மையில், 9/11 தாக்குதலுக்குப் பிறகு, ஒசாமா பின்லேடனை தன்னிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா ஆப்கானிஸ்தானைக் கேட்டது, ஆனால் இதுகுறித்து முல்லா ஒமரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை, அதன் பிறகு தோரா போரா மீது அமெரிக்கா குண்டு வீசத் தொடங்கியது.
தாலிபனுக்கு அவப்பெயரை ஏற்படுத்திய பாமியான் சம்பவம்
பிப்ரவரி 2001-இன் பிற்பகுதியில், பாமியானில் உள்ள இரண்டு வரலாற்று புத்தர் சிலைகளை அழிக்கும் திட்டத்தை முல்லா ஒமர் அறிவித்தார்.
இந்த சிலைகள் 174 மற்றும் 115 அடி உயரம் கொண்டவை மற்றும் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு பாறைகளில் செதுக்கப்பட்டவை. யுனெஸ்கோ அவற்றை உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்த்தது.
இந்த அறிவிப்பு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய போதிலும் ஒமர் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. மார்ச் 2, 2001 அன்று, இந்த சிலைகள் அழிக்கப்பட்டன.
முல்லா ஒமர், ஆப்கானிஸ்தான், தாலிபன், ஒசாமா பின்லேடன்
முல்லா ஒமரை கொல்ல முயற்சி
அக்டோபர் 6, 2001 இரவு, முல்லா ஒமரைக் கொல்லும் நோக்கத்துடன் கந்தஹாரில் உள்ள முல்லா ஒமரின் அலுவலகத்தின் மீது அமெரிக்கா ஆளில்லா பிரிடேட்டர் 3034 ட்ரோனை அனுப்பியது.
‘தி அட்லாண்டிக்’ இதழின் மே 30, 2015 இதழில் ‘அமெரிக்காவின் முதல் ட்ரோன் ஸ்டிரைக்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில் கிறிஸ் உட் பின்வருமாறு எழுதினார்,
“லாங்லியில் உள்ள சிஐஏ தலைமையகத்தில் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில், மூத்த சிஐஏ அதிகாரிகள் கண்காணித்து கொண்டிருந்தனர். அலுவலகத்தின் மீது வீசப்பட்ட வெடிகுண்டு பல அப்பாவி மக்களைக் கொன்றுவிடும் என்று அவர்கள் பயந்தார்கள், எனவே முல்லா ஒமர் வெளியே வருவார் என்று அவர்கள் காத்திருந்தனர்.
“அந்த கட்டடத்தில் இருந்து ஆயுதமேந்திய ஆட்கள் நிறைந்த மூன்று லேண்ட் குரூஸர் வாகனங்கள் வெளியே வந்த போது, அதில் ஒன்றில் முல்லா ஒமர் இருந்ததாக அவர்கள் உறுதியாக நம்பினர். ஆனால் தாக்குதலின் நேரம் குறித்து இரண்டு ஜெனரல்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுடப்படவில்லை. மூன்று லேண்ட் குரூஸர் வாகனங்களும் நெரிசலான தெருக்களில் சென்று கூட்டத்தில் மறைந்தன” என கிறிஸ் உட் எழுதியுள்ளார்.
ஒமர் நோய்வாய்ப்பட்டு மரணம்
முல்லா ஒமரைச் சுற்றியுள்ள மர்மம் நீண்ட காலமாக நீடித்தது; இன்றும் அவரது மரணம் பற்றி பல விஷயங்கள் பேசப்படுகின்றன.
ஜூலை 2015 இல், ஆப்கானிஸ்தான் அரசாங்கம் முல்லா ஒமர் இறந்துவிட்டதாக அறிவித்தது, ஆனால் அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஏப்ரல் 23, 2013 அன்று இறந்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
பெட்டி டேம் இதுகுறித்து எழுதியுள்ளார், “முல்லா ஒமரின் உதவியாளர் அப்துல் ஜப்பார் ஒமாரி என்னிடம் சொன்னார். அன்று கந்தஹார் முழுவதும் ஆலங்கட்டி மழை பெய்தது. முல்லா ஒமர் மூன்று மாதங்களாக இருமல் மற்றும் வாந்தி உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். ஒமாரி மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார், ஆனால் முல்லா ஒமர் அவர் சொல்வதைக் கேட்கவில்லை.”
“மிகுந்த வற்புறுத்தலுக்கு பிறகு உள்ளூர் கடையில் ஊசி மருந்தை வாங்க ஒப்புக்கொண்டார். ஒருநாள் அவர் மயக்கமடைந்தார், அவரது முகம் வெளிறியது. நான் அவரைத் தொட்டபோது அவர் கீழே சாய்ந்தார். மறுநாள் அவர் இறந்துவிட்டார்” என்று பெட்டி டேமிடம் ஒமரி கூறினார்.
-இது, பிபிசிக்காக நியூஸ்ரூம் வெளியீடு