“விரும்பத்தகாத விளைவு நேரப்போகிறது என்பதற்கான முன்னறிவிப்பு ” (The Writing on the Wall) என்பது பைபிளின் பழைய ஏற்பாட்டில் டானியலின் கதையில் இருந்து வந்த ஒரு உருவகமான மொழிநடையாகும்.
பாபிலோனிய சாம்ராச்சியத்தின் மன்னர் பெல்ஷாசாரும் அவரது நண்பர்கள் பரிவாரமும் உண்டுகுடித்து கும்மாளம் அடித்துக்கொண்டிருந்தவேளையில், வியக்கத்தக்க முறையில் கையொன்று தோன்றி அங்கிருந்த சுவரில் சில வரிகளை எழுதியதைப் பற்றி டானியல் பற்றிய நூலின் ஐந்தாவது அத்தியாயம் கூறுகிறது.
அச்சமடைந்த மன்னராலும் நண்பர்களினாலும் அந்த கை எழுதியதை வாசித்து விளங்கக்கூடியதாக இருக்கவில்லை. அறிவுக்கும் ஞானத்துக்கும் பிரபல்யமான டானியலை அழைத்துவர மன்னர் ஆளை அனுப்பினார்.
டானியல் வந்து சுவரில் எழுதியிருப்பதை வாசித்துவிட்டு மன்னரின் நாட்களை கடவுள் எண்ணியிருக்கிறார் என்றும் இராச்சியம் வேறு ஒருவரிடம் கையளிக்கப்படப் போகிறது என்று கூறினார்.சுவரில் எழுதியிருந்த வரிகளை பற்றிய டானியலின் வியாக்கியானம் இறுதியில் உண்மையாக மாறியது.பெல்ஷாசார் அன்றிரவே கொல்லப்பட்டு இராச்சியம் டேறியஸினால் கைப்பற்றப்பட்டது.
பைபிளில் உள்ள இந்த கதையே “The Writing in the Wall” ( விரும்பத்காதது நேரப்போகிறது என்பதற்கான முன்னறிவிப்பு) என்ற மரபுத்தொடருக்கு பிறப்புக்கு வழிவகுத்தது. கிடைக்கக்கூடிய சான்றுகளில் இருந்து அழிவு அல்லது தோல்வி வருவது தவிர்க்கமுடியாதது என்பதை விளங்கிக்கொள்வது அல்லது பார்ப்பது என்பதே அந்த மரபுத்தொடரின் அர்த்தமாகும்.
இந்த பின்புலத்தில், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 13 வது திருத்தத்துக்கு நேரப்போகின்ற விளைவுக்கான முன்னறிவிப்பு குறித்து இந்த கட்டுரை ஆராய்கிறது. இலங்கையில் மாகாணசபைகள் முறையை அறிமுகப்படுத்துவதற்காக 1987 ஆண்டில் கொண்டுவரப்பட்டதே இந்த 13 வது அரசியலமைப்பு திருத்தமாகும்
இலங்கையின் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தமும் 16 வது திருத்தமும் 1987 ஜூலை 29 இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையின் விளைவாக கொண்டுவரப்பட்டவை. அந்த சமாதான உடன்படிக்கையில் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவும் கைச்சாத்திட்டனர் என்பது தெரிந்ததே.
13 வது திருத்தமே மாகாணசபைகளை உருவாக்க உதவியது. குறைபாடுகளுக்கு மத்தியிலும், இலங்கையில் நடைமுறையில் இருக்கின்ற ஒரேயொரு அதிகாரப்பரவலாக்கல் வடிவம் மாகாணசபைகள் முறைாமாத்திரமேயாகும்.
சுதந்திரத்துக்கு பின்னரான எழுபத்தியாறு வருடகால வரலாற்றில், பல தசாப்தகால தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு அண்மித்தான ஒரு தீர்வாக மாகாணசபைகளே விளங்குகின்றன எனலாம். இலங்கையின் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களின அதிகாரப்பகிர்வு தேடலுக்கு ஒரளவு நேர்மறையான பதிலாக மாகாணசபைகள் இருக்கின்றன.
மாகாணசபைகள் இலங்கையின் ஒரு அரசாங்கத்தினால்தான் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், இந்தியாவின் நல்லெண்ணத்தின் விளைாகவே அது சாத்தியமாகியது என்பதை மறுப்பதற்கில்லை.
இலங்கையின் விவகாரங்களில் இந்தியா செய்த அந்த ஒரேயொரு நேர்மறையான தலையீடே அரசியலயைப்புக்கான 13 வது திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கான சூழ்நிலையை தோற்றுவித்தது.
பெருமளவு விமர்சனங்களுக்கு உள்ளானபோதிலும், மாகாணசபைகள் காலத்தின் சோதனைக்கு தாக்குப்பிடித்திருக்கிறது. அண்மைய நிகழ்வுப்போக்குகள் குறிப்பாக மாகாணசபைகளினதும் பொதுவில் 13 வது திருத்தத்தினதும் எதிர்காலம் மீது ஒரு கருநிழலை படரவிடுவதாக அமைந்திருக்கின்றன.
அந்த திருத்தத்தையும் மாகாணசபைகளையும் பற்றிய சந்தேகங்களும் அச்சங்களும் புதிய ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவின் அண்மைய இந்திய விஜயத்தையும் அவர் புதுடில்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்திய பேச்சுவார்த்தைளையும் அடுத்து மேலும் தீவிரமடைந்திருக்கின்றன.
இந்த பின்னணியிலேயே இது 13 வது திருத்தத்துக்கும் அதன் விளைவான மாகாணசபைகளுக்கும் நேரப்போகின்ற விரும்பத்தகாத விளைவின் முன்னறிவிப்பாக அமைகிறதா என்ற விசனத்தை நான் வெளிப்படுத்துகிறேன்.
இந்தியக் கொள்கை
பல தசாப்தங்களாக இலங்கை தொடர்பான இந்தியக் கொள்கை இரு முக்கிய தூண்களில் தங்கியிருந்தது. முதலாவது இலங்கையின் ஐக்கியம், இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு மீதான இந்தியாவின் கடப்பாடு. இரண்டாவது இலங்கையின் தமிழர்கள் மீதான கடப்பாடு. 13 வது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதிகாரப்பரவலாக்கல் ஏற்பாடு ஒன்றின் ஊடாக இலங்கை தமிழரர்களின் நியாயபூர்வமான அபிலாசைகள் நிறைவுசெய்யப்பட வேண்டும் என்று இந்தியா விரும்பியது.
இலங்கை தொடர்பிலான இந்த இரட்டைக் கோட்பாடுகளை ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை போன்ற சர்வதேச அரங்குகளில் இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறது.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயங்களின்போது இந்திய தலைவர்களும் முக்கியமான அதிகாரிகளும் இந்த இரட்டை மந்திரத்தை திரும்பத்திரும்ப உச்சரித்து வந்திருக்கிறார்கள். அதேபோன்றே இலங்கை தலைவர்களின் புதுடில்லி விஜயங்களின் இறுதியிலும் அத்தகைய அறிவிப்புக்கள் செய்யப்பட்டன.
கூட்டறிக்கை
ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) வினதும் தேசிய மககள் சக்தியினதும் தலைவராக இருககும் இலங்கை ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க புதுடில்லிக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தைை இந்த வருடம் டிசம்பர் 15 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை மேற்கொண்டார்.
” பொதுவான ஒரு எதிர்காரத்துக்கான கூட்டுப்பங்காண்மையை வளர்த்தல் ” ( Fostering Partnership for a Shared Future ) என்ற தலைப்பில் இந்திய அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சினால் 2024 டிசம்பர் 16 ஆம் திகதி இந்திய — இலங்கை கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
34 அம்சங்களைக் கொண்டதாக அமைந்த அந்த நீண்ட கூட்டறிக்கையில் தமிழரின் தேசிய இனப்பிரச்சினை அல்லது தமிழர்களின் நியாயபூர்வ அபிலாசைகள் அல்லது முக்கியமாக 13 வது திருத்தம் தொடர்பிலான எந்தவொரு அம்சமும் அதில் குறிப்பிடப்படவில்லை.
கடந்த வருடம் ஜூலையில் முன்னாள் ஜனாதாபதி ரணில் விக்கிரமசிங்க புதுடில்லிக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது கூட இவ்வாறுதான் நடந்தது.
ஆனால், அவ்வாறு குறிப்பிடப்படாத குறைபாட்டை விக்கிரமசிங்கவுடன் நடத்திய கூட்டு செய்தியாளர்கள் மகாநாட்டில் தனது பேச்சில் 13 வது திருத்தத்தின் நடைமுறைப்படுத்தலை பற்றி பிரத்தயேகமாகவும் உறுதியான முறையிலும் குறிப்பிட்டதன் மூலமாக இந்திய பிரதமர் மோடி ஈடுகட்டிக்காண்டார். தவிரவும், பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் விக்கிரமசிங்க உறுதிப்பாடு கொண்டவராக இருந்தார் என்பது நன்கு தெரிந்ததே.
மோடியின் கருத்துக்கள்
ஆனால், இந்த தடவை மோடி – திசாநாயக்க சந்திப்புக்கு பிறகு நிலைமை அவ்வாறு இருக்கவில்லை. கூட்டறிக்கை எதையும் குறிப்பிடாத அதேவேளை இந்த விடயத்தில் மோடியின் கருத்துக்களும் கூட ஒரு அரைகுறை ஆர்வமுடையதாகவே இருந்தது என்றே கூறவண்டும். ” இலங்கையில் புனர்நிர்மாணம் மற்றும் நல்லிணக்கம் பற்றியும் நாம் பேசினோம்.
ஜனாதிபதி திசாநாயக்க சகல சமூகங்களையும் அரவணைத்துச் செல்லும் தனது நோக்கு பற்றி எனக்கு விளக்கிக் கூறினார். இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் அபிலாசைகளைை நிறைவுசெய்யும் என்று நாம் நம்புகிறோம்.
அத்துடன் இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாகாணசபை தேர்தல்களை நடத்துவதில் தங்களது கடப்பாட்டையும் அவர்கள் நிறைவுசெய்வார்கள் ” என்று பிரதமர் மோடி கூறினார். அவரின் கருத்துக்களில் 13 வது திருத்தம் தவிர்க்கப்பட்டது பிரத்தியேகமான ஒரு குறைபாடாக தெளிவாகத் தெரிந்தது.எ
திசாநாயக்கவின கருத்துக்கள்
சகல சமூகங்களையும் அரவணைக்கும் வகையிலான ஜனாதிபதி திசாநாயக்கவின் நோக்கு என்று பிரதமர் மோடி கூறிப்பிட்டது எதை? இந்த விடயம் தொடர்பில் கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் திசாநாயக்க வெளியிட்ட கருத்துக்களில் பொருத்தமான பகுதிகள் வருமாறு ;
” தனியொரு ஆணையின் கீழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மிகவும் உயர்ந்த எண்ணிக்கையான பிரதிநிதிகளைக் கொண்டதாக இலங்கை பாராளுமன்றம் இருக்கிறது. இவ்வாறு முன்னர் ஒருபோதும் நடந்ததில்லை. எனது தலைமையின் கீழ் தேசிய மக்கள் சக்தி மக்களிடம் இருந்து பெற்ற பிரமாண்டமான ஆணை இலங்கையின் வரலாறறில் ஒரு முக்கிய மைல்கல் தருணமாகும்.
இலங்கையின் வரலாற்றில் முதற்தடவையாக அண்மைய ஜனாதிபதி தேர்தலும் பாராளுமன்ற தேர்தலிலும் மக்களினால் வெளிப்படுத்தப்பட்ட ஆணை எமது நாட்டில் புதியதொரு அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கக்கூடியதாக ஒரு அரசியல் மாறுதலுக்கான விதைகளை நாட்டியிருக்கிறது.
” வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று சகல மாகாணங்களயும் சேர்ந்த சகல சமூகங்களையும் வாழ்வின் சகல பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் இந்த ஆணைக்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.
மக்களினால் அத்தகைய ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட தலைவர் என்ற வகையில், ஜனநாயகத்தின் சாராம்சம் பல்வேறுபட்ட அரசியல் கருத்துக்களானதும் குழுக்களினதும் சகவாழ்விலேயே தங்கியிருக்கிறது என்பதை நான் தெளிவாக விளங்கிக் கொள்கிறேன்.”
நாட்டின் சகல பக்கங்களையும் ( வடக்கு, கிழக்கு உட்பட ) சேர்ந்த மக்கள் அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்கு பிரமாண்டமான ஆணையுடன் தனது அரசாங்கத்துக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதும் பல்வேறு அரசியல் கருத்துக்கள் மற்றும் குழுக்களினன சகவாழ்வுக்கான தேவையை தான் விளங்கிக் கொண்டிருக்கிறார் என்பதுமே ஜனாதிபதி திசாநாயக்கவின் மேற்கூறப்பட்ட கருத்துக்களின் உட்கிடையான அர்த்தமாகும்.
தனது அரசாங்கம் தோற்றுவிக்கவிருக்கும் புதிய அரசியல் கலாசாரத்துக்கு 13 வது திருத்தமும் மாகாணசபைகளும் பொருத்தமானவையாக இல்லை என்று திசாநாயக்க உணருகிறாரா என்ற கேள்வி எழுகிறது.
தமிழர்களின் அக்கறை
அருகிக்கொண்டுபோகும் பிறவிகளான ” சிந்தித்துச் செயற்படுகின்ற ” இலங்கை தமிழ் அரசியல் தலைவர்களும் பிரதான போக்கு தமிழ் ஊடகங்களில் ஒரு பிரிவுகளுக் இந்த நிகழ்வுப் போக்குகளினால் ஓரளவுக்கு குழப்பமடைந்திருக்கிறார்கள். 13 வது திருத்தம் குறித்து வெளிப்படையாக குறிப்பிடப்படாதது குறித்து அவர்கள் விசனமடைந்திருக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்களில் சில வார்த்தைகளை பற்றிப்பிடித்துக் கொண்டு தங்களுக்கு தாங்களே ஆறுதல் கூறுகிறார்கள். (“இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவுசெய்யும் என்று நாம் நம்புகிறோம்.
அத்துடன் இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப் படுத்துவதிலும் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதிலும் தங்களுக்கு இருக்கும் கடப்பாட்டையும் அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்றும் நாம் நம்புகிறோம்” என்று மோடி கூறினார்.) ” அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவது ” என்பதன் 13 வது திருத்தத்தையும் முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்றே அர்த்தப்படும் என்று அவர்கள் வியாக்கியானம் செய்வதன் மூலம் அவர்கள் நம்பிக்கையை வரவழைக்கிறார்கள்.
13 வது திருத்தம் குறித்து எனது நிலைப்பாடு
இலங்கையின் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தின் எதிர்காலம் குறித்து நான் விசனத்தையும் ஆதங்கத்தையும் அடிக்கடி வெளிப்படுத்தி வந்திருக்கிறேன் என்பது பத்திரிகைகளில் சஞ்சிகைகளில் எனது கட்டுரைகளை நீண்டகாலமாக வாசித்து வருபவர்களுக்கு நன்றாக நினைவிருக்கும் என்று நம்புகிறேன்.
13 வது திருத்தமே இலங்கையில் மாகாணசபை முறையை அறிமுகப்படுத்தியது. குறைபாடுகள் இருந்த போதிலும், அதிகாரப் பகிர்வு என்று வரும்போது இலங்கை தமிழர்கள் அடைந்திருக்கக்கூடிய அரசியல் சாதனை மாகாணசபைகள் மாத்திரமே. அதுவும் கூட இந்திய தலையீட்டின் விளைவாக மாத்திரமே சாத்தியமானது.
ஒரு சில கௌரவமான விதிவிலக்குகள் தவிர, மிகவும் சில தமிழ் அரசியல்வாதிகள் அல்லது கருத்துருவாக்கிகளே இந்தியாவின் நல்லெண்ணத்தின் ஊடாக கொண்டு வரப்பட்ட 13 வது அரசியலமைப்பு திருத்தத்தின் பெறுமதியையும் வரலாற்று முக்கியத்துவத்தையும் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கவலைக்குரியது.
13 வது திருத்தத்தை ஒரு துரோகம் என்றும் காட்டிக்கொடுப்பு என்றும் சில தமிழர்கள் நேர்மையற்ற முறையிலும் முட்டாள்தனமாகவும் வர்ணித்தார்கள். இந்தியா வழங்கிய 13 வது திருத்தத்தை நிராகரிப்பதன் அல்லது மலினப்படுத்துவதன் மூலமாக சமஷ்டிச் ” சொர்க்கத்தை ” தமிழர்கள் அடைவார்கள் என்ற மாயையில் பலர் வாழ்கிறார்கள்.
தமிழர்கள் 13 வது திருத்தத்தை அலட்சியம் செய்கின்ற அல்லது கண்டனம் செய்கின்ற அதேவேளை, ஒரு சமஷ்டித்தீர்வு என்ற கானல்நீரை நோக்கி ஓடுவதில் உள்ள ஆபத்தை நான் அடிக்கடி சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
விரும்பக்கூடியதை விடவும் அடையக்கூடியதன் முக்கியத்துவத்தை நான் வலியுறுத்தி வந்திருக்கிறேன்.
பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு தமிழர்கள் இப்போது கட்டியிருக்கின்ற கதர் வேட்டியையும் இழக்கும் ஆபத்தைபற்றி நான் அடிக்கடி கூறியிருக்கிறேன். தமிழ் மக்களின் நலன்கள் மீதான எனது அக்கறை காரணமாக நான் இவ்வாறு வேண்டிக்கொண்ட போதிலும், தமிழர்களின் மடமைப்பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது.
அந்த மடமைப்பயணம் இப்போது ஒரு முட்டுச்சந்தை அடைந்திருக்கிறது போன்று தெரிகிறது. 13 வது திருத்தத்துக்கு நேரப்போகிற விரும்பத்தகாத விளைவுக்கான முன்னறிவிப்பு வந்திருக்கிறது.
எவ்வாறு , ஏன் இந்த நிலைவரம் ஏற்பட்டது என்பதை விரிவாகச் சொல்ல வேண்டியது அவசியமாகும். ஆனால், அதற்கு இலங்கை தொடர்பான இந்தியக் கொள்கை மற்றும் 13 வது திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளின் அறிமுகம் தொடர்பான எனது முன்னைய எழுத்துக்களின் உதவியுடன் வரலாற்றை சுருக்கமாக திரும்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது.
தீங்கற்ற தலையீடு
இந்தியா அதன் அயல் நாடுகளின் விவகாரங்களில் காட்டுகின்ற ஈடுப்டை ” தீங்கற்ற தலையீடு” என்று இந்திய கல்விமானகளும் ஆய்வாளர்களும் வர்ணித்து வந்திருக்கிறார்கள்.
நேபாளத்தில் ராணா குடும்பத்தை மலினப்படுத்தி ஷா வம்சத்தை அதிகாரத்துக்கு கொண்டுவந்தமை, பாகிஸ்தானை துண்டாக்கி பங்களாதேஷை உருவாக்கியமை, இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையைச் செய்து இலங்கைக்கு அமைதிகாக்கும் படையாக இந்திய இராணுவத்தை அனுப்பியமை,
இலங்கையின் தமிழ்த்தீவிரவாத இயக்கங்களில் ஒன்றான தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) உதவியுடன் மாலைதீவில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சாக்கவிழ்ப்புச் சதிமுயற்சியை முறியடித்தமை எல்லாம் இந்த தீங்கற்ற இந்திய தலையீட்டுக்கு சில உதாரணங்கள்.
தீங்கற்ற தலையீடுகள் பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களுக்கும் உதவின. சர்வதேச உறவுகளின் தன்மை அத்தகையதே. சகல நாடுகளுமே அவற்றின் நலன்களை மனதிற்கொண்டே செயற்படும்.
பெரிய நாடுகளின் பொதுவான நலன்களுடன் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு இசைந்து செயற்படுகின்ற சிறிய நாடுகள் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான சிறப்பான வாய்ப்புக்களை கொண்டிருக்கின்றன எனலாம்.
ஒருபுறத்தில் இலங்கையின் ஐக்கியத்தையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பேணிப் பாதுகாத்துக் கொண்டு மறுபுறத்தில் சிறுபான்மைச் சமூகங்களின் குறிப்பாக இலங்கை தமிழர்களின் உரிமைகளை உறுதி் செய்வதே இலங்கை விவிகாரத்தில் இந்தியாவின் அடிப்படைக் கொள்கையின் இரடடைக் கூறுகளாகும்.
இலங்கையின் இனநெருக்கடி விடுதலை புலிகளும் ஏனைய தமிழ் தீவிரவாதக் குழுக்களும் அரசுக்கு எதிராக கெரில்லாப் போரைத் தொடுக்கும் கட்டத்துக்கு தீவிரமடைந்தது. யாழ்ப்பாணத்தில் விடுதலை புலிகள் நடத்திய கெரில்லா தாக்குதல் ஒன்றில் 13 சிங்கள படைவீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து நாடுபூராவும் தமிழர்களுக்கு எதிராக இனவெறி வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
1983 கறுப்பு ஜூலை வன்செயல்களுக்கு பிறகு ஒரு இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு அகதிகளாகச் சென்றார்கள். அன்றைய எதிர்க்கட்சி தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் உட்பட பல தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் நாட்டைவீட்டு வெளியேறி தமிழ்நாட்டில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்திய மண்ணில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்த நிலையில் அதை காரணமாகக் கொண்டு இலங்கை இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமான இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு நல்லெண்ண அடிப்படையில் மத்தியஸ்தம் வகிப்பதற்கு இந்தியா முன்வந்தது. அந்தக் கட்டத்தில் தலையீடு செய்வேண்டியது இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு கட்டாய தேவையாகிப் போனது.
தலையீட்டுக்கான மூன்று காரணங்கள்
அன்று இலங்கையில் இந்தியா தவையீடு செய்வதற்கு மூன்று அடிப்படைக் காரணங்கள் இருந்தன.முதலாவதாக,
ஜெயவர்தன அரசாங்கம் ” அணிசேராக்” கொள்கையை கைவிட்டு இலங்கையை மேற்குலக ஆதரவு வளையத்திற்குள் எடுத்துச் சென்றது.
அந்த நேரத்தில் நிலவிய சூழ்நிலைகளின் கீழ் ஒரு வாஷிங்டன் — டெல்அவீவ் — இஸ்லாமாபாத் இணைப்பு குறித்து புதுடில்லி அச்சம் கொண்டது. இந்தியாவுக்கு இங்கையை அடிபணியச் செய்து விரும்பத்தகாத சக்திகளை பிராந்தியத்திற்கு வெளியில் வைத்திருக்க வேண்டிய தேவை இருந்தது.
இரண்டாவதாக, உள்நாட்டு நிர்ப்பந்தம் ஒன்று இருந்தது. இலங்கை தமிழர்களின் அவலம் குறித்து தமிழ்நாடு பெரும் கவலை கொண்டிருந்தது. ஒரு காலத்தில் தமிழ்நாடு தீவிரமாக வளர்ந்துவந்த பிரிவினைவாத இயக்கத்தின் தாயகமாக விளங்கியது. இலங்கையில் நெருக்கடி தீவிரமடைந்தால் தமிழ்நாட்டில் அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து இந்தியா கரிசனை கொண்டிருந்தது.
மூன்றாவதாக, எல்லோருக்கும் தெரிந்த ஒரு ஆளுமைக் காரணி. இந்தியாவில் அடிப்படைக் கொள்கை உயர்மட்ட அதிகாரிகளினால் வகுக்கப்படும்.
அரசியல் நிறைவேற்று பீடம் அதனால் வழிநடத்தப்படும். ஆனால், தனிப்பட்ட தலைவர்கள் தங்களது ஆளுமையின் பலத்தினால் அந்த கொள்கையை நடைமுறைப்படுத்தும் பாணியில் ஒரு மாற்றத்தைச் செய்யலாம் என்றாலும் கொள்கையின் சாராம்சத்தை மாற்றமுடியாது.
அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜெயவர்தன மற்றும் பிரதமர் ரணசிங்க பிரேமதாச மீது இந்திரா விருப்பம் கொண்டவராக இருக்கவில்லை.1977 மார்ச்சில் இந்தியாவில் நடைபெற்ற தேர்தலில் இந்திரா காந்தியும் அவரது மகன் சஞ்சய் காந்தியும் தோல்வியடைந்தபோது இலங்கையிலும் ” பசுவும் கன்றும்” தோல்வியடையும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் கூறத் தொடங்கினார்கள்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவி சிறியமாவையும் அவரது மகன் அநுரா பண்டாரநாயக்கவையுமே அவர்கள் இந்திரா காந்தியுடனும் சஞ்சயுடனும் ஒப்பிட்டார்கள்.
இந்திராவின் அரசியல் எதிரி மொரார்ஜி தேசாயுடன் ஜெயவர்தன நெருக்கமாக்இருந்தார். மறுபுத்தில், இந்திரா தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி தலைவர்களுடன் குறிப்பாக அமிர்தலிங்கத்துடன் நெருக்கமான பழக்கத்தைக் கொண்டிருந்தார்.
இந்திரா தோல்வியடைந்த நேரத்திலும் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி அவருக்கு விசுவாசமாகவே இருந்தது. அந்த நேரத்தின் அரஎியலில் ஆளுமைக்்காரணியும் ஒரு கணிசமான பங்கை வகித்தது.
காரணிகளின் சங்கமம்
இந்த காரணிகளின் சங்கமம் இந்தியா மூன்று விடயங்களைச் செய்வதை அவசியப்படுத்தியது.
ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கு ஏற்படைய முறையில் இனநெருக்கடிக்கு தீர்வொன்றைக் காண்பதற்கு உதவ இலங்கையில் இந்தியா ” தீங்கில்லாத ” தலையீட்டைச் செய்வது ;
பிராந்தியத்தில் புதுடில்லியின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்வதற்கும் இந்தியாவின் பாதுகாப்பு அக்கறைகளை உணர்ந்து செயற்படவும் கொழும்பை நிர்ப்பந்திப்பது ;
தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணிக்கு அனுகூலமாகச் செயற்படுகின்ற அதேவேளை ஜெயவர்தனவுக்கு ஒரு பாடத்தைப் புகட்டுவது.
1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் தொடர்பான புதுடில்லியின் கொள்கைக்கும் 1987 ஆம் ஆண்டில் இலங்கை தொடர்பான அதன் கொள்கைக்கும் இடையில் ஒரு அடிப்படை வேறுபாடு இருந்தது. அதாவது பாகிஸ்தானைத் துண்டாடி பங்களாதேஷை உருவாக்குவது புதுடில்லியின் நலன்களுக்கு உகந்ததாக இருந்த அதேவேளை இலங்கையை துண்டாடுவதை தவிர்த்து ஐக்கியப்பட்ட ஒரு நாடாக வைத்திருப்பது இந்தியாவின் நலன்களுக்கு சிறந்தது என்று கருதப்பட்டது.
இரு தடக் கொள்கை
1983 ஜூலையில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவன்செயல் இந்தியா தலையீடு செய்வதற்கும் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ” நல்லெண்ண உதவிகளை ” வழங்குவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
அரசியல் இணக்கப்போக்கை வகுக்கும் பணியை முன்னெடுப்பதற்கு இந்தியாவின் உத்தியோகபூர்வ தூதுவராக கோபாலசுவாமி பார்த்தசாரதி அனுப்பப்பட்டார்.
ஆனால், இந்தியா ஒரு இரு தடக்கொள்கையை பின்பற்றியது. தமிழ்த் தீவிரவாதக்குழுக்கள் இந்திய மண்ணில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு ஆயுதங்களும் பயிற்சியும் வழங்கப்பட்டது. அவர்கள் தமிழ்நாட்டில் பகிரங்கமாக அரசியல் மற்றும் பிரசார அலுவலகங்களை நடத்துவதற்கும் அனுமதிக்கப்பட்டது.
இந்தியாவின் இலக்குகள் தெளிவானவை. ஜெயவர்தன அரசாங்கத்தை நிலைகுலையச் செய்வதற்கு தமிழ்த் தீவிரவாதிகளை ஒரு கருவியாக புதுடில்லி பயன்படுத்த விரும்பிய அதேவேளை அரசியல் இணக்கத்தீர்வொன்றை வழங்குவதற்கும் கொழும்பை நிர்ப்பந்தித்தது.
நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வு ஒன்று எட்டப்பட்டதும் தமிழர்களின் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தமிழீழம் என்பது ஒருபோதும் இந்தியிவின் திட்டத்தில் இருக்கவில்லை. ஆனால், தமிழர்கள் முற்றுமுழுதாக கைவிடப்படவும் மாட்டார்கள். அரசியல்்தீர்வொன்றை இந்தியா உத்தரவாதப்படுத்துவதுடன் வடக்கு, கிழக்கில் ஆயுதப்படைகளின் ஒரு பிரசன்னமும்்இருக்கும். தமிழர்களை இலங்கை பாதுகாத்து அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்த உதவ வேண்டும்.
ராஜீவ் காந்தி
இதனிடையே, இந்திரா காந்தி 1984 அக்டோபர் 31 அவரது சீக்கிய மெய்ப் பாதுகாவலர்களினால் கொல்லப்பட்டதை அடுத்து அவரது மகன் ராஜீவ் காந்தி பிரதமராக பதவியேற்றார். அவர் அதிகாரத்துக்கு வந்ததும் தமிழர் பிரச்சினையில் இங்கைக்கான இந்தியாவின் விசேட தூதுவர் என்ற பணியில் இருந்து கோபாலசுவாமி பார்த்தசாரதி நீக்கப்பட்டார். வெளியுறவுச் செயலாளரான ரொமேஷ் பண்டாரியே விசேட தூதுவராகவும் செயற்பட்டார். இந்த மாற்றங்களுக்கு மத்தியிலும், அடிப்படைக் கொள்கை மாறாமல் தொடர்ந்தது.
பல திருப்பங்கள் ஏற்பட்டன. ஆனால், இந்தியாவின் தந்திரோபாயம் பெருமளவுக்கு வேலை செய்துகொண்டிருந்தது. வடமராட்சியில் 1987 மே மாதம் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு பிறகு கொழும்பு விடுதலை புலிகளை ஒழித்துக்கட்டும் தறுவாயில் இருந்தது போன்று தோன்றியது.
ஒபறேசன் பூமாலை
அந்த கட்டத்தில் தமிழ்த் தீவிரவாதத்தை நசுக்க ஒருபோதும் அனுமதிக்கப்படப் போவதில்லை என்பதை கொழும்புக்கு இந்தியா மிகவும் தெளிவாக வெளிக்காட்டியது. ” ஒபறேசன் பூமாலை ” என்ற பெயரில் 1987 ஜூன் 4 ஆம் திகதி இலங்கையின் வான்பரப்பை அத்துமீறி இந்திய விமானங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மேலாக உணவுப் பொட்டலங்கைளை போட்டன.
ஜெயவர்தன நிலைவரத்தைச் சரியாகப் புரிந்து கொண்டார். இந்தியாவின் நெருக்குதலுக்கு அவர் வளைந்து கொடுத்து அடிபணிந்தார்.
1986 ஜூலை 29 ஆம் திகதி இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
அந்த உடன்படிக்கை இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்வதற்கான உரிமையை இந்தியாவுக்கு வழங்கியது. இணைப்புக்கள் என்று வர்ணிக்கப்பட்ட இரு கடிதங்களும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பரிமாறப்பட்டன. அவை இரு நாடுகள் மீதும் சில கடப்பாடுகளை திணித்தன.
இந்திய ” ஆக்கிரமிப்பும்” ஜே.வி.பி.யும்
இந்திய -இலங்கை சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதை தொடர்ந்து சில பாதகமான விளைவுகளும் ஏற்பட்டன. அவற்றில் பிரதானமானது இலங்கை அரசுக்கும் இந்திய ” ஆக்கிரமிப்புக்கும் ” எதிராக ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) முன்னெடுத்த ஆயுதக் கிளர்ச்சியாகும். அதற்கு பிறகு நடந்தவற்றை எதிர்வரும் கட்டுரை ஒன்றில் பார்ப்போம்.
டி.பி.எஸ். ஜெயராஜ்