காலிஸ்தானி தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியபோது, அந்த விவகாரத்தை கனடாவின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவாலாக ட்ரூடோ கருதினார்.
கனடாவின் இறையாண்மையில் சமரசம் செய்துகொள்ள முடியாது என்று ட்ரூடோ கூறியிருந்தார். ஆனால், அமெரிக்காவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் டொனால்ட் டிரம்ப், நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து, கனடாவின் இறையாண்மைக்கு வெளிப்படையாக சவால் விடுக்கிறார். இருப்பினும் ட்ரூடோ அமைதி காத்து வருகிறார்.
கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணம் என்றும் ட்ரூடோ அதன் ஆளுநர் என்றும் டிரம்ப் பலமுறை கூறியுள்ளார். ஆனால், இதற்கு ட்ரூடோ ஒருமுறை கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
புதன்கிழமையன்று டிரம்ப் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தபோது மீண்டும் அவரை கனடாவின் ஆளுநர் என்று அழைத்தார்.
‘இதை நகைச்சுவையாக பார்க்க முடியாது’
“கனடாவின் ஆளுநர் ஜஸ்டின் ட்ரூடோவின் குடிமக்கள் மிக அதிக வரி செலுத்த வேண்டியுள்ளது.
ஆனால், கனடா அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாறினால் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான வரி குறைப்பு சாத்தியமாகலாம். இங்கு வர்த்தகமும் உடனடியாக இரட்டிப்பாகும். இதுதவிர,, உலகின் மற்ற எந்த நாட்டையும் விட ராணுவ பாதுகாப்பு வலுவாக இருக்கும்,” என்று டிரம்ப் ட்ரூத் சோஷியலில் (அமெரிக்காவின் சமூக ஊடக தளம்) பதிவிட்டுள்ளார்.
“கனடா அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற வேண்டும் என்று பெரும்பாலான கனேடியர்கள் விரும்புகிறார்கள். இது நடந்தால் கனடா மக்களுக்கு அதிக வரியில் இருந்து விடுதலை கிடைப்பதுடன் ராணுவ பாதுகாப்பும் வலுவாகும்,” என்று இதற்கு முன்பே டிரம்ப் ட்ரூத் சோஷியலில் பதிவிட்டிருந்தார்.
ட்ரூடோ அரசியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தற்போதைய சூழலில் கனடாவை பற்றி டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார். கனடாவின் இக்கட்டான சூழ்நிலையை டிரம்ப் முழுமையாக பயன்படுத்திக்கொள்கிறார் என்றும் இதுகுறித்து கூறப்படுகிறது.
“டிரம்பின் அறிக்கைகள், இறையாண்மை கொண்ட கனடாவின் நிலையை பலவீனப்படுத்தும் முயற்சியாகும். டிரம்ப் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகளை பார்க்கும்போது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் சமத்துவ உறவில் மாற்றத்தை ஏற்படுத்த அவர் முயற்சிப்பதாக தெரிகிறது. இதை வெறும் நகைச்சுவையாக பார்க்க முடியாது,” என்று லெபனான் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகளின் பேராசிரியரான ஹபீப் அல் பதாவி, இண்டியன் ஸ்ட்ராடெர்ஜிக் ஸ்டடீஸ் ஃபோரமில் (ISSF) பதிவிட்டுள்ளார்.
கனேடிய மக்களின் விருப்பம் என்ன?
கனடாவின் பொருளாதாரம் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்டது. கனடாவின் மொத்த ஏற்றுமதியில் 75 சதவிகிதம் அமெரிக்காவுக்கு செல்கிறது. கனடா மீது 25 சதவிகித வரி விதிக்கப்போவதாக டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவின் பொருளாதார இறையாண்மைக்கு டிரம்ப் நேரடியாக சவால் விடுத்தாலும், அது அந்த நாட்டின் அரசியல் இறையாண்மையையும் உள்ளடக்கியது என்று சொல்லப்படுகிறது. டிரம்பின் எச்சரிக்கைக்குப் பிறகு பொருளாதார சுயாட்சியை எவ்வாறு பாதுகாப்பது என்பது கனேடிய தலைமைக்கு முன் உள்ள மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பேராசிரியர் ஹபீப் அல் பதாவி, “கனடா ஒரு அமெரிக்க மாகாணமாக மாறினால், கனேடிய குடிமக்கள் கடுமையான வரிகளிலிருந்து விடுபடுவார்கள் என்று டிரம்ப் கூறுகிறார். ஆனால், கனடா மற்றும் அமெரிக்காவின் சமூக அமைப்புகளுக்கு இடையே ஒரு அடிப்படை வேறுபாடு உள்ளது. கனடாவில் வரிகள் அதிகம், வசதிகளும் அதிகம்.” என்றார்.
மேலும், “அனைவருக்கும் சமமான மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. கனடாவின் சமூகப் பாதுகாப்பின் முன்னுரிமையையும் அது பிரதிபலிக்கிறது. வரி சேமிப்பு சலுகையால் கனேடியர்கள் கவரப்படுவார்கள் என்று டிரம்ப் நினைத்தால், அவர் கனேடிய மதிப்புகளைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார் என்றே சொல்லலாம்,” என்று எழுதியுள்ளார்.
கனடாவில் ‘லெகெர்’ (Leger) என்பது கருத்துக்கணிப்பு தரவுகளை சேகரிக்கும் ஒரு அமைப்பு. டிரம்ப் கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக ஆக்க முன்வந்தபோது, கனேடியர்கள் உண்மையில் அமெரிக்காவுடன் சேர விரும்புகிறார்களா என்பதைக் கண்டறிய ‘லெகெர்’ ஒரு கணக்கெடுப்பை நடத்தியது.
கனேடிய குடிமக்களில் 13 சதவிகிதம் பேர் மட்டுமே தாங்கள் அமெரிக்க மாகாணமாக மாற விரும்புவதாக அதில் தெரியவந்தது. கனடாவின் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் ஆதரவாளர்களில் 21 சதவிகிதம் பேர் டிரம்பின் யோசனைக்கு உடன்படுவதாகவும், ட்ரூடோவின் தாராளவாத கட்சியின் 10 வாக்காளர்களில் ஒருவர் அமெரிக்க மாகாணமாக மாறுவதற்கு உடன்படுவதாகவும் தரவுகள் தெரிவித்தன.
கனடா மக்கள் கட்சியில் இருந்து அதிக எண்ணிக்கையிலானவர்கள் (25 சதவிகிதம்) அமெரிக்காவின் மாகாணமாக ஆவதற்கு ஆதரவளித்தனர். குறைந்தபட்சமாக ஜக்மித் சிங்கின் என்டிபி (NDP) கட்சியிலிருந்து ஆறு சதவிகிதம் பேர் மட்டுமே இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
டிரம்ப், கனடாவை ஒரு அமெரிக்க மாகாணமாக மாற்ற விரும்புவது ஏன்
ட்ரூடோவின் மௌனம்
மொத்தம் 87 சதவிகித மக்கள் டிரம்பின் யோசனையை நிராகரித்துள்ளனர். டிசம்பர் 6 முதல் 9 வரை ‘லெகெர்’ இந்த கருத்துக்கணிப்பை நடத்தியது. டிரம்பின் கருத்துகளுக்கு எதிர்வினையாற்றுவதை ட்ரூடோ அரசு தவிர்த்து வருகிறது.
டிசம்பர் இரண்டாவது வாரத்தில் கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயரிடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டபோது,”டிரம்ப் வெறுமனே நகைச்சுவையாக பேசுகிறார். கனடா இறையாண்மை கொண்ட ஒரு நாடு,” என்று மழுப்பலாக பதில் அளித்தார்.
கனடாவின் பொது ஒளிபரப்பு நிறுவனமான சிபிசி தனது அறிக்கையில், “நகைச்சுவைக்காக பெல்ஜியத்தை பிரான்ஸுடன் இணைப்பது குறித்து பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோங் பேசுவார் என்று நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது.
டிரம்ப் உலகின் மிக முக்கியமான நாட்டின் உயர்மட்ட தலைவர். மேலும், கனடாவும் அமெரிக்காவும் வரலாற்று ரீதியாக நண்பர்களாக இருந்து வருகின்றன. அப்படி இருக்கும்போதிலும் டிரம்ப் இவ்வாறு பேசுகிறார்,” என்று எழுதியது.
டிரம்பின் 25 சதவிகித வரி அச்சுறுத்தல் தொடர்பாக டிசம்பர் 10 ஆம் தேதி பேசிய ட்ரூடோ, “அமெரிக்க மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதாகவும், பணவீக்கத்திலிருந்து விடுதலை அளிப்பதாகவும் வாக்குறுதி அளித்ததால் மக்கள் டிரம்புக்கு வாக்களித்தனர்.
கனடாவின் எல்லா பொருட்களுக்கும் அமெரிக்கா 25 சதவிகித வரி விதித்தால், அமெரிக்காவின் தெற்கு எல்லையில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை மிகவும் கடினமாகிவிடும்.
வரி பற்றிய முழு உண்மை யாருக்கும் சாதகமாக இல்லை. 25 சதவிகித வரி விதிப்பு கனேடிய பொருளாதாரத்திற்கு மட்டுமே பேரழிவை ஏற்படுத்தும் என்று கூறி உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ள முடியாது,” என்று குறிப்பிட்டிருந்தார்.
“இது அமெரிக்க மக்களுக்கும் பிரச்களை ஏற்படுத்தும். அமெரிக்கா கனடாவில் இருந்து 65 சதவிகித கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. இதுதவிர, அதிகளவில் மின்சாரத்தையும் இறக்குமதி செய்கிறது.
கூடவே ,இயற்கை எரிவாயுவையும் அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. அமெரிக்கா எங்களது எஃகு மற்றும் அலுமினியத்தை சார்ந்துள்ளது. விவசாயப் பொருட்களுக்கும் அமெரிக்கா நம்மைச் சார்ந்திருக்கிறது. 25 சதவிகித வரி விதிக்கப்பட்டால், அமெரிக்காவில் இவை அனைத்தின் விலையும் ஏறிவிடும்,” என்று ட்ரூடோ சுட்டிக்காட்டினார்.
டிரம்ப் தனது முந்தைய பதவிக் காலத்தில் 2018 இல் கனேடிய எஃகு மற்றும் அலுமினியம் மீது வரிகளை விதித்தார். இதற்கு பதிலடியாக கனடாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்தது. அமெரிக்காவில் இருந்து வரும் கெட்ச்அப், மதுபானம் மற்றும் தயிர் இதில் அடங்கும்.
ஜஸ்டின் ட்ரூடோ அரசியல் நெருக்கடியால் சூழப்பட்டிருக்கும் நேரத்தில் கனடாவின் இறையாண்மைக்கு டிரம்ப் சவால் விடுக்கிறார்
வரியால் பாதிக்கப்படப்போவது யார்?
இருப்பினும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கனடா மீது வரி விதிக்கப்போவதாக டிரம்ப் மிரட்டியபோது ட்ரூடோ டிரம்பை சந்திக்கச் சென்றார். ஆனால், ட்ரூடோ எந்த உத்தரவாதமும் இல்லாமல் வெறுங்கையுடன் திரும்ப வேண்டியிருந்தது, அதன் பின்னர் டிரம்ப் அவரை ‘ஆளுநர் ட்ரூடோ’ என்று அழைத்தார்.
அக்டோபர் 2014 நிலவரப்படி, கனடாவுடனான இருதரப்பு வர்த்தகத்தில் அமெரிக்கா 50 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறையைக் கொண்டிருந்தது என்று அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகம் குறிப்பிடுகிறது. அமெரிக்கா கனடாவில் இருந்து அதிகளவு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது.
டிரம்ப் இந்த வர்த்தக பற்றாக்குறையை கனடாவுக்கு அமெரிக்கா வழங்கிய மானியம் என்று அழைக்கிறார். கடந்த ஆண்டு கனடாவுக்கு அமெரிக்கா 100 பில்லியன் டாலர் மானியம் வழங்கியதாக டிரம்ப் கூறியிருந்தார். இருப்பினும், 2023 இல் கனடாவுடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை 67 பில்லியன் டாலர் ஆகும்.
கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலகின் நான்காவது பெரிய நாடாக கனடா உள்ளது. ஆனால், டிரம்பின் வரி, எரிசக்தி வருவாயை கடுமையாக பாதிக்கும். மறுபுறம், டிரம்ப் அமெரிக்காவில் உள்நாட்டு எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க விரும்புகிறார்.
அமெரிக்காவில் இருந்து வரும் டிரக் ஓட்டுநர்கள் தடுப்பூசி போட்டிருக்கவேண்டும் என்பதை 2022ஆம் ஆண்டில் ட்ரூடோ கட்டாயமாக்கினார். இதற்காக டிரம்ப், ட்ரூடோவை தீவிர இடதுசாரி கொள்கைகளுக்காக விமர்சனம் செய்துள்ளார்.
2018 ஜூன் மாதம் கனடாவின் கியூபெக்கில் நடைபெற்ற G-7 உச்சி மாநாட்டில் இருந்து டிரம்ப் வெளியேறினார். ஜஸ்டின் ட்ரூடோவை ‘மிகவும் நேர்மையற்ற மற்றும் பலவீனமான’ தலைவர் என்று அவர் அழைத்தார்.
டிரம்பின் கொள்கைகள் காரணமாக 2028 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.7 சதவிகிதம் குறையக்கூடும் என்று நிதி விவகார சிந்தனைக்குழுவான டெஸ்ஜார்டின்ஸ்-இன் பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர் என்று செய்தி முகமை ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது.
டிரம்ப் ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் அதிபராக பதவியேற்க உள்ளார். டிரம்பின் கொள்கைகள் குறித்து கனடா அச்சத்தில் உள்ளது
கடந்த 2017இல் டிரம்ப் முதல்முறையாக அதிபராக பதவியேற்றபோது, வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வது குறித்துப் பேசினார். மெக்ஸிகோ மற்றும் கனடாவுடன் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை செய்துகொண்டிருந்தது.
இந்த ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும், மற்ற இரு நாடுகளும் பலனடைவதாகவும் டிரம்ப் புகார் கூறினார்.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக கனடாவும் அமெரிக்காவும் பதட்டமான சூழ்நிலையில் 18 மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், சாதகமான முடிவு ஏதும் எட்டப்படவில்லை. இரு நாடுகளும் பரஸ்பர தயாரிப்புகளுக்கு வரிகளை விதிக்கத் தொடங்கின.
இதன் பின்னர் இந்த ஒப்பந்தம் அமெரிக்கா-மெக்ஸிகோ-கனடா ஒப்பந்தம் என்ற வடிவில் நடைமுறைக்கு வந்தது. ஆனால் அதை மறுபரிசீலனை செய்வது குறித்தும் டிரம்ப் அக்டோபர் 11ஆம் தேதி பேசினார்.
“கனடாவுக்கு, டிரம்பின் முதல் பதவிக் காலத்தை விட அவரது இரண்டாவது பதவிக்காலம் சவாலானதாக இருக்கும்” என்று இந்த ஆண்டு ஜனவரி மாதம் ட்ரூடோ தனது தாராளவாத கட்சியின் மூத்த தலைவர்களிடம் கூறினார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறியிருந்தது.
அந்தக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு நம்பத்தகுந்த வட்டாரம் மூலமாக ராய்ட்டர் செய்தி முகமைக்கு இந்த தகவல் தெரிய வந்தது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.