சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தை பதவியில் இருந்து கவிழ்க்கவும், மத்திய கிழக்கை துண்டாடவும், பிராந்தியத்தை அரபு அடிமைகளுடன் இணைந்து கட்டுப்படுத்தவும், “அகண்ட இஸ்ரேலை” உருவாக்கவும் வசதியாக சிரியாவை பலவீனப்படுத்த சிரிய எதிர்ப்புக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமுக்கு (எச்.டி.எஸ்.) அமெரிக்கா பில்லியன் கணக்கான டொலர்களை செலவிட்டது.
முஸ்லிம் சிரியாவுக்கு எதிரான இந்த சதித்திட்டத்தில், துருக்கியும் அமெரிக்க – -இஸ்ரேலிய புனிதமற்ற கூட்டணியில் இணைந்து கொண்டது.
அஸாத்தின் கொடுங்கோன்மையிலிருந்து சிரிய மக்கள் விடுவிக்கப்பட்ட போது, இந்த வாய்ப்பை பயன்படுத்தி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய போர் விமானங்கள் அனைத்து சர்வதேச சட்டங்களையும் மீறி, சிரியாவை சிதைக்கும் தனது சதித்திட்டத்தை செதுக்கும் வகையில் பாரிய குண்டுவீச்சை தொடங்கின.
ஒரு சில நாட்களுக்குள் சிரியாவின் பாதுகாப்பு திறன்களில் சுமார் 80 சதவீதம் அழிக்கப்பட்டன. அதேநேரத்தில் பலஸ்தீன மக்களிடம் இருந்து சூறையாடிய நிலங்களில் நிறுவப்பட்ட சட்டவிரோத காலனித்துவ குடியேற்ற நாடான இஸ்ரேல், சிரிய நிலப்பரப்பின் கணிசமான பகுதியை தன்னோடு இணைத்துக்கொண்டது.
உண்மையில் இன்று சிரியா இராணுவ மயமாக்கப்பட்ட பாதுகாப்பற்ற ஒரு நாடு என்ற நிலையில் தான் உள்ளது. என்ன நடந்தாலும், சிரியா மக்கள் இஸ்ரேலுக்கு எதிராக மட்டுமல்லாமல், உள்நாட்டில் இருக்கக் கூடிய பிற அச்சுறுத்தல்களில் இருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாமல் போகலாம்.
‘குளோபல் ரிசர்ச்’ கட்டுரையாளர் பீட்டர் கோயினிக்கின் கருத்தின் படி இந்த அமெரிக்க,- இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களின் குறிக்கோள் சிரியாவிடம் மீதமுள்ள அனைத்து ஆயுதங்களையும் போர் திறன்களையும் அழிப்பதாகும். ஒரு நாட்டை அதன் மக்களோடு சேர்த்து ஆக்கிரமித்து முழுமையான கையகப்படுத்தலைத் திட்டமிடுவதில் இது ஒரு பொதுவான அம்சமாகும்.
இது ஒரு புதிய மத்திய கிழக்குக்கான நிலைப்பாட்டின் தொடக்கமா என்பதே எஞ்சியுள்ள கேள்வியாகும். இந்தக் கட்டுரையோடு தரப்பட்டுள்ள வரைபடத்தைப் பார்க்கவும்.
இன்று மத்திய கிழக்கு என்று அழைக்கப்படும் பிரதேசத்தின் மூன்றில் இரண்டு பங்கை உறிஞ்சியுள்ள ஒரு ‘அகண்ட இஸ்ரேலை’ காணலாம். இது தான் திட்டம். உலகின் மிகப்பெரிய ஹைட்ரோகார்பன்கள் உட்பட- அடிப்படையில் உலகின் எரிசக்தி விநியோகத்தை இது கட்டுப்படுத்துகிறது.
அஸாத் ஆட்சியின் வீழ்ச்சியுடன், சிரியா இப்போது மூன்று மேலாதிக்க சக்திகளின் கீழ் பிரிவுபட்டு நிற்கின்றது. இவை ஒவ்வொன்றும் வெளிப்புற ஆதரவாளர்ளின் பிடியில் உள்ளவை தமக்கென தனித்துவமான குறிக்கோள்களையும் கொண்டவை.
துருக்கியின் ஆதரவுடன் இந்த குழுக்கள் இப்போது மத்திய சிரியாவைக் கட்டுப்படுத்துகின்றன. இது துருக்கியின் வடக்கு எல்லையிலிருந்து ஜோர்டானின் தெற்கு எல்லை வரை நீண்டுள்ளது. அவர்கள் ஒரு பொதுவான மத அடையாளத்தைப் பகிர்ந்து கொண்டாலும் சுன்னி பிரிவுகள் மத்தியில் வரலாறு முழுவதும் உள் மோதல்கள் உள்ளன. இது ஒரு ஒருங்கிணைந்த அரசாங்கத்தை உருவாக்கும் அல்லது நீண்டகால ஸ்திரத்தன்மையை பராமரிக்கும் திறனைத் தடுக்கலாம்.
ஐ.எஸ். இயக்கம் மற்றும் அல்-கொய்தாவிலிருந்து வந்த முன்னாள் ஜிஹாத் பிரிவினர் முதல், 2011 கிளர்ச்சிக்குப் பிறகு அஸாத்தின் இராணுவத்திலிருந்து பிரிந்த சிரிய தேசிய இராணுவம் போன்ற மதச்சார்பற்ற குழுக்கள் இந்த எதிர்ப்புப் படைகளில் உள்ளடங்குகின்றன.
குர்திஷ் படைகள் (Syrian Democratic Forces: This Kurdish-dominated, United States-backed group controls parts of eastern Syria.)
குர்திஷ் குழுக்கள் வடகிழக்கு சிரியாவில் உள்ள நிலப்பரப்பைக் கட்டுப்படுத்துகின்றன. வடக்கில் துருக்கி மற்றும் கிழக்கில் ஈராக் எல்லையில் இவை உள்ளன. இப்பகுதியில் இராணுவத் தளங்களை நிறுவியுள்ள அமெரிக்காவிலிருந்து அவர்கள் தொடர்ந்து ஆதரவைப் பெற்று வருகின்றனர். இந்த ஆதரவு துருக்கியுடன் பதற்றங்களை அதிகரிக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது.
அலவைத் (அலவத்தி இஸ்லாமிய உட்பிரிவு) படைகள் (Syrian government forces: The army fought alongside the National Defence Forces, a pro-government paramilitary group, and was supported by Hezbollah, Iran and Russia.)
இவர்கள் பிரதானமாக மேற்கு சிரியாவின் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள அஸாத் சார்பு அலவைத் பிரிவுகள், ஈரான், ஈராக் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா போராளிக் குழுவுடன் வலுவான உறவுகளைப் பேணி வருகின்றனர். பிரதான பகுதிகளை எதிர்க்கட்சிகள் கைப்பற்றிய பின்னர் அஸாத்- கூட்டணிக் குழுக்களில் எஞ்சியவர்களுக்கு இந்த பகுதிகள் ஒரு கோட்டையாக செயல்படக்கூடும். இவர்கள் குழுக்களாக பிளவுகளை நிலை நிறுத்துவர்.
இந்த குழுக்களுக்கிடையேயான கடுமையான பிளவுகளும், பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளக் கூடிய மத்தியஸ்தர் எவரும் இல்லாததும் சேர்ந்து, சிரியா இப்போது நீண்டகால ஸ்திரமின்மையையும் மோதலையும் எதிர்கொண்டுள்ளது என்பதையே குறிக்கின்றது.
இது பிராந்தியத்தை எவ்வாறு பாதிக்கும்?
அஸாத் ஆட்சியின் விரைவான வீழ்ச்சி மத்திய கிழக்கில் உள்ள முக்கிய தரப்பினர்களுக்கு ஆழ்ந்த தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியின் பலத்த ஆதரவுடன் கூடிய சுன்னி கிளர்ச்சிப் படைகள், சிரியாவில் பாதிக்கப்பட்ட ஒரு தருணத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டன.
அஸாத் ஆட்சியின் முக்கிய நண்பர்கள் வேறு விடயங்களில் தீவிரமாக இருந்தனர். உக்ரேனில் நடந்து வரும் போரில் ரஷ்யாவும் இஸ்ரேலுடன் நடந்து வரும் மோதலில் ஈரானும் அதன் பிரதிநிதிகளும் மும்முரமாக இருந்தனர். இது கிளர்ச்சியாளர்களுக்கு சிரியா முழுவதும் மட்டுமன்றி தலைநகர் டமாஸ்கஸுக்கும் விரைவாக முன்னேற ஒரு மூலோபாய வாய்ப்பை வழங்கியது.
துருக்கி ஏற்கெனவே வடக்கு சிரியாவின் ஒரு பகுதியை ஆற்றல் மிக்க விதத்தில் கட்டுப்படுத்துகின்றது. அங்கு அதன் இராணுவம் சிரியா மற்றும் குர்திஷ் படைகளுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றது.
இப்போது சிரியாவில் வெற்றியீட்டியுள்ள தரப்புடன் தனக்குள்ள நட்பின் மூலம் துருக்கி சிரியாவில் தனது அரசியல் மற்றும் இராணுவ செல்வாக்கை விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது துருக்கியிடமிருந்து சுயாட்சிக்காக போராடும் குர்திஷ் சிறுபான்மையினருக்கு அதிக சவால்களை உண்டாக்கும்.
மேலும், சிரியாவை இன மற்றும் மத பிரிவுகளாக அதிகளவில் துண்டாடுவதானது, இஸ்ரேல் பிராந்தியத்தின் மீது கவனம் செலுத்துவதைக் குறைத்து, ஊழல் நிறைந்த அரபு சர்வாதிகாரிகளுடன் இணைந்து முழு மத்திய கிழக்கையும் கட்டுப்படுத்தும் வகையில், அகண்ட இஸ்ரேலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட அதன் பரந்த விரிவாக்க இலக்குகளைத் தொடர மிகவும் வசதியாக இடமளிக்கும்.
இந்த திட்டத்தின் அமுலாக்கம் மூலம் அதிகமான இழப்புக்களை சந்திக்கும் தரப்பாக இருக்கப் போவது ஈரானாகவே இருக்கும். ஈரானின் பிராந்திய ரீதியான அதிகாரப் பிரதிநிதி வலையமைப்பில் அஸாத் ஒரு முக்கியமான பங்காளியாக இருந்தார்.
ஈரானின் ஏனைய நண்பர்களான ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் ஏற்கெனவே ஏற்படுத்திய குறிப்பிடத்தக்க சேதங்களைத் தொடர்ந்து வரும் நிலையில், அஸாத் அரசாங்கத்தின் வீழ்ச்சியால் ஈரானுக்கே அதிக இழப்பு ஏற்படுகின்றது.
ஈரானின் பிராந்திய செல்வாக்கு இப்போது கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் அது இஸ்ரேலுடன் நேரடி மோதலுக்கு தயாராகும் கட்டாயத்துக்கு தள்ளப்படலாம்.
ஈராக் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு, இந்த ஸ்திரமின்மை அவர்களின் பலவீனமான அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளை மேலும் மோசமாக்கக் கூடும்.
சிரியாவை இன மற்றும் மத அடிப்படையில் பிளவுபடச் செய்வதானது பிராந்தியத்தில் உள்ள மற்ற சிறுபான்மை குழுக்கள் தங்கள் சொந்த சுயாட்சி இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக அந்தந்த அரசாங்கங்களுக்கு எதிராக கிளர்ச்சிகளில் ஈடுபட ஊக்குவிக்கும்.
ஏற்கெனவே இஸ்லாம் பற்றிய சித்தப்பிரமையில் இருக்கும் மேற்குலகும் மற்றும் சர்வாதிகாரம் தலை விரித்தாடும் அரபு மற்றும் வளைகுடா நாடுகள், சிரியாவில் அஸாத் அரசாங்கத்தின் வீழ்ச்சி தமது நாடுகளிலும் கடும் போக்கு இஸ்லாமிய சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கக் கூடும் என்ற அச்சத்தை உருவாக்கி உள்ளது.
சவூதி அரேபியாவுடன் ஐக்கிய அரபு அமீரகமும் சேர்ந்து அஸாத்தை மறுவாழ்வு செய்வதற்காக மேற்கொண்ட மூலோபாயம் இப்போது முடிந்து விட்டது. எச்.டி.எஸ் உடன் இணைந்து துருக்கியின் செல்வாக்குக்கு இடமளிப்பதைத் தவிர வளைகுடா நாடுகளுக்கு ஒரு சில தெரிவுகளே உள்ளன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வளைகுடாவில் அமெரிக்க நலன்களுடன் ஒத்துப்போனால் அதற்கு உரிய வெகுமதி வழங்கப்படும் என்று சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஏற்கனவே சமிக்ஞைகளை அனுப்பி வருகின்றது.
சிரியாவின் புதிய அரசியல் கட்டமைப்பில் கிறிஸ்தவர்கள், குர்திஷ்கள் மற்றும் அலவத்திகள் போன்ற சிரியாவின் சிறுபான்மை சமூகங்கள் சேர்க்கப்படுவார்கள் என்று எச். டி. எஸ் ஏற்கெனவே உறுதியளித்துள்ளது.
1989 ஆம் ஆண்டில் முன்னாள் சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்ததிலிருந்து, தனிப் பெரும் வல்லரசாக உருவெடுத்த அமெரிக்கா, முஸ்லிம் மத்திய கிழக்கை சிறு சிறு கூறுகளாகப் பிரிக்க முடிவு செய்தது
இந்த சதித் திட்டத்துக்கு அமெரிக்கா அரபு சர்வாதிகாரிகளைப் பயன்படுத்தியது. இன்னமும் பயன்படுத்துகின்றது. இதன் விளைவாக மத்திய கிழக்கை இஸ்ரேல் கட்டுப்படுத்துவதை உறுதி செய்வதற்காக எட்டு ஆண்டுகால ஈராக்- – ஈரான் போர், வளைகுடா போர், ஈராக் படையெடுப்பு, லிபியாவின் அழிவு மற்றும் இப்போது சிரியா என எல்லாமே அரங்கேறி வந்தன.
அரபு சர்வாதிகாரிகள் தங்கள் சொந்த மக்களுக்கும் பிராந்தியத்துக்கும் எதிரான இந்த சதித்திட்டத்தில் தீவிர பங்காளிகளாக இருப்பது தான் இதில் மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இன்று மத்திய கிழக்கு முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் கோபத்தில் உள்ளனர்.
-லத்தீப் பாரூக்-