அமெரிக்காவின் நியூ ஆர்லீன்ஸ் நகரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கூடியிருந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே ஒருவர் டிரக்கை விட்டு மோதியதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 35 பேர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது. டிரக் ஓட்டுநர் வேண்டுமென்றே டிரக்கை விட்டு மோதியதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
நியூ ஆர்லீன்ஸ் நகரின் பிரபலமான போர்பன் ஸ்ட்ரீட்டில் புத்தாண்டு பரபரப்புகளுக்கு இடையே, மக்கள் மத்தியில் டிரக் மோதியதில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.
டிரக் ஓட்டுநர் கூட்டத்திற்கு நடுவே வேண்டுமென்றே டிரக்கை மோதியதாகவும், டிரக்கின் உள்ளே இருந்து மக்களை நோக்கி சுட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. டிரக் ஓட்டுநர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.
உள்ளூர் காவல்துறை தலைமை அதிகாரி ஆன் கிர்க்பேட்ரிக் கூறுகையில், முடிந்தவரை அதிகமானோர் மீது மோதுவதற்கு முயற்சிக்கும் வகையில் டிரக்கை அதன் ஓட்டுநர் மிக வேகமாக ஓட்டிவந்ததாக தெரிவித்தார்.
என்ன நடந்தது?
“உள்ளூர் நேரப்படி காலை 3:15 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. காவல்துறை வைத்திருந்த தடுப்பையும் அவர் மோதியுள்ளார். டிரக்கின் உள்ளே இருந்து அவர் சுட்டதில் காவல்துறையை சேர்ந்த இருவர் காயமடைந்துள்ளனர்,” என்றும் அவர் தெரிவித்தார்.
உள்ளூர் நேரப்படி புதன்கிழமை (ஜனவரி 01) அன்று காலை 3:15 மணியளவில் போர்பன் ஸ்ட்ரீட்டில் ஒருவர் மிக வேகமாக டிரக்கை ஓட்டிவந்து, வாகனத்தின் உள்ளே இருந்து காவல்துறையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
டிரக் மோதியதில், 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குறைந்தது 35 பேர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் புலன் விசாரணை அமைப்பான எஃப்.பி.ஐ இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகிறது. இச்சம்பவம் தீவிரவாதத் தாக்குதலா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
“புத்தாண்டு அன்று வேண்டுமென்றே மக்களை ஒருவர் கொலை செய்துள்ளார் என்ற செய்தியுடன் நாங்கள் விழித்துள்ளோம்,” என லூசியானா மாகாணத்தின் மூத்த வழக்கறிஞர் லிஸ் முரியல் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
“இதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக நான் பிரார்த்திக்கிறேன். அவர்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்,” என அவர் தெரிவித்துள்ளார்.
நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
ஏராளமான பார்கள், கிளப்புகள், உணவகங்கள் என, நியூ ஆர்லீன்ஸ் (New Orleans) நகரின் போர்பன் ஸ்ட்ரீட் இரவு நேரத்தில் பரபரப்பாகவே இருக்கும்.
இந்த சம்பவத்தை நேரில் கண்ட, லூசியானாவை சேர்ந்த விட் டேவிஸ் பிபிசியிடம் கூறுகையில், “மாலையிலிருந்து நாங்கள் போர்பன் ஸ்ட்ரீட்டில் இருந்தோம். நாங்கள் பாரில் இருந்தபோது, இசையின் சத்தம் அதிகமாக இருந்ததால், கார் மோதும் சத்க்தத்தையோ அல்லது துப்பாக்கிச்சூடு சத்தத்தையோ நாங்கள் கேட்கவில்லை” என்றார்.
“மக்கள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். மேசைகளுக்குக் கீழே ஒளிந்துகொண்டனர்” என்றார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதிக்கு யாரும் வரவேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
போர்பன் ஸ்ட்ரீட்டில் சூப்பர்டோம் விளையாட்டு அரங்கத்தைப் பாதுகாப்பதற்கான வேலைகளை அதிகாரிகள் மேற்கொண்டுவருவதாக நியூ ஆர்லியன்ஸ் (New Orleans) காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார். அன்றைய தினம் இரவு அந்த அரங்கத்தில் கால்பந்து போட்டி நடைபெறுவதாக இருந்தது.
எஃப்.பி.ஐ. கூறுவது என்ன?
டிரக் ஓட்டுநர் உயிருடன் இல்லை என்றும் இச்சம்பவத்தை ‘தீவிரவாத செயலாகக் கருதி” விசாரித்து வருவதாகவும் எஃப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
எஃப்.பி.ஐ- யின் சிறப்பு முகவர் அல்தியா டங்கன் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக, ஏ.பி. செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்த சரியான மற்றும் விரிவான தகவல்கள் விசாரிக்கப்பட்டு வருவதாக நியூ ஆர்லீன்ஸ் மேயர் லா டோயா கேன்ட்ரெல் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் அலுவலகம் மற்றும் லூசியானாவின் ஆளுநருடன் தான் இச்சம்பவம் குறித்து தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே, இச்சம்பவம் குறித்து அதிபர் ஜோ பைடனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மேயருடன் அதிபர் இச்சம்பவம் குறித்து கேட்டறிவதாக, அமெரிக்க அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
டிரக் ஓட்டுநர் யார்?
இந்த டிரக் ஓட்டுநர் பற்றிய விவரத்தை எஃப்.பி.ஐ வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமானவர் 42 வயதான ஷம்சுத்-தின் ஜப்பார் ஆவார். அவர் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர்.
டெக்சாஸ் பொதுப் பாதுகாப்புத் துறையின் பதிவுகளின்படி, டெக்சாஸில் இரண்டு முறை போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் திருட்டு தொடர்பான வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2007 ஆம் ஆண்டு மார்ச் முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி வரை, அவர் அமெரிக்க ராணுவத்தில் மனித வளங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவுகளில் பணியாற்றியுள்ளார் என்று அமெரிக்க ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அந்த நேரத்தில், அவர் பிப்ரவரி 2009 முதல் ஜனவரி 2010 வரை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
பின்னர், அவர் 2015 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2020 ஆம் ஆண்டு ஜூலை வரை தகவல் தொழில்நுட்ப நிபுணராக ராணுவ ரிசர்வில் பணியாற்றியுள்ளார்.