ஏழையின் சொல் அம்பலம் ஏறாது என்பார்கள். மறுதலையின் உண்மையாக, செல்வம் படைத்தவன் சொன்னால் அம்பலத்தின் ஆட்டமும் மாறும் எனலாம்.
இது எங்கு, எவருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, அமெரிக்காவுக்கு, இலோன் மஸ்க்குக்கு சாலவும் பொருந்துகிறது.
உலகின் முன்னணி தொழில்நுட்ப கம்பனிகளின் உரிமையாளர், டெஸ்லா என்ற கார்த் தயாரிப்பு கம்பனி, ஸ்பேஸ்-எக்ஸ் என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், எக்ஸ் என்ற சமூக ஊடக வலைதளம் கம்பனிகளின் பெயர்களை இப்படி பட்டியல் இட்டுக் கொண்டே போகலாம்.
சேர்த்துப் பார்த்து மதிப்பிட்டால், 400 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடக் கூடிய உலகின் மிகப்பெரும் செல்வந்தர்.
இலோன் மஸ்க் ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு உதவி செய்தார். பிரசாரத்திற்கு பெருமளவு காசு கொடுத்தார்.
இந்த உதவிக்கு பிரதி உபகாரமாக ஆட்சி அதிகார கட்டமைப்பில் முக்கியமானதொரு பதவியை வழங்கப் போவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அரச செயற்றிறன் திணைக்களம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் தலைமைப் பதவியை இலோன் மஸ்க்குக்கு வழங்குவது ட்ரம்பின் திட்டம்.
இதன்மூலம், அமெரிக்க அரசியலில் இலோன் மஸ்க்கின் ஆதிக்கத்தை வலுவாக உறுதிப்படுத்துவது ட்ரம்பின் நோக்கமாக இருக்கலாம்.
சமகால அரசியல், சமூக, பொருளாதார, தொழில்நுட்ப உலகில் இலோன் மஸ்க்கின் பாத்திரம் எந்த வகையிலும் தவிர்க்க முடியாதது. ஆனால், அது தீவிர சர்ச்சைக்குரியது.
ஒருபுறத்தில் வலுவான இலட்சியமும், தொலைநோக்கும் கொண்டு உலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் தொழில்வாண்மையாளர். மறுபுறத்தில், தமது தொழில்நுட்பத்தைத் தாண்டியும் அரசியல் ஆதிக்கத்தை செலுத்த முனையும் ஆளுமை.
அமெரிக்காவின் அரசியலைக் கட்டமைத்து, சர்வதேச அரசியல் கருத்தாடல்கள் எத்திசையில் செல்ல வேண்டும் என்பதை தீர்மனிக்கக்கூடிய சக்தியாக தம்மை மாற்றிக் கொள்ள இலோன் மஸ்க் எத்தனிக்கிறார்.
இந்த எத்தனிப்பு சமகால செயற்பாடுகளில் தெளிவாக வெளிப்படுவதை அவதானிக்கலாம்.
டுவிட்டர் என்ற சமூக வலைதளத்தை இலோன் மஸ்க் என்று கொள்வனவு செய்தாரோ, அதனை ‘எக்ஸ்’ என்று பெயர் மாற்றம் செய்தாரோ அன்றைய நாளில் இருந்து அவரது எத்தனிப்பு தீவிரம் பெற்றது.
மேற்குலகைப் பொறுத்தவரையில், ‘எக்ஸ்’ என்பது மிகவும் செல்வாக்கு செலுத்தக்கூடிய சமூக ஊடகம்.
உலகின் பல நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான பயனர்கள் எக்ஸில் இணைந்திருக்கிறார்கள். இவர்களில் செல்வாக்கு செலுத்தக்கூடிய அரசியல்வாதிகள், வர்த்தக பிரமுகர்கள், வாக்காளர்கள் என்று பல தரப்பினரும் உள்ளடங்குகிறார்கள்.
இந்த பயனர்களின் மீது தாம் விரும்பும் கருத்தை திணிக்கும் சக்தி இலோன் மஸ்க்கிற்கு உண்டு. ஒரு விடயம் பற்றி பயனர்கள் பல கோணங்களில் கருத்து சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
எந்தெந்த கருத்துக்களுக்கு இடமளிக்கலாம், எந்தக் கருத்தை பெருப்பித்துக் காட்டி, எந்தக் கருத்தை மூலையில் தள்ளி விடலாமென இலோன் மஸ்க் தீர்மானிக்கலாம்.
இதற்குரிய தொழில்நுட்ப கருவிகளும், கொள்கைகளும் எக்ஸ் தளத்திற்கு உண்டு. தொழில்நுட்ப உலகில் ‘அல்கோரிதம்’, ‘கன்டன்ட் மனேஜ்மன்ட்’ என்றெல்லாம் விபரிப்பார்கள்.
இவ்வாண்டு நடுப்பகுதியில் பிரிட்டனில் முஸ்லிம் புகலிடக் கோரிக்கையாளர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கலவரத்தைத் தூண்டியதன் பின்னணியில், எக்ஸ் தளத்திற்கு முக்கியமான பங்கு இருக்கிறது.
பிரிட்டனில் சிவில் யுத்தம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்று இலோன் மஸ்க் பதிவிட்டதையும், அதன் அரசியல் விளைவுகளையும் ஒரு உதாரணமாக கூறலாம்.
ஜேர்மனியில் வெளிநாட்டவர்கள் வந்து குடியேறுவதை ஆட்சேபிக்கும் ஏ.எவ்.டி என்ற கடும்போக்கு தீவிர வலதுசாரி கட்சியையும் இலோன் மஸ்க் ஆதரித்தார். இந்தக் கட்சியே ஜேர்மன் மக்களை மீட்டெடுக்கக்கூடிய ஆபத்பாந்தவன் என்று பதிவிட்டார்.
இது நடுநிலைத்தன்மை சார்ந்த ஊடக நெறிமுறைகளுக்கு முரணனானது மாத்திரமன்றி, ஐரோப்பிய ஒன்றியம் சார்ந்த சட்டங்களையும் மீறுகிறதா என்ற கரிசனை வெளியிடப்பட்டது.
இதேபோன்று தான், வெனிசுவேலாவின் ஜனாதிபதி தேர்தலிலும் இலோன் மஸ்க் செல்வாக்கு செலுத்த முனைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.
இதில் முக்கியமான விஷயம் யாதெனில், இலோன் மஸ்க்கிற்கு இருக்கும் அரசியல் சார்புநிலை. சுற்றாடல் பாதுகாப்பு போன்ற விடயங்களில் தாராளமயவாத சிந்தனையை அனுசரிக்கும் மஸ்க், குடியேற்றம் போன்ற விடயங்களில் ட்ரம்ப்பை விடவும் மோசமான பழமைவாதியாக செயற்படுவார்.
இந்த இரட்டை வேடம், அரசியல் நோக்கம் கொண்டது என்றும் கூறுவார்கள். வெவ்வேறு கருத்துநிலைகளை அனுசரிக்கும் அரசியல் குழுக்களை ஈர்த்து, தமது சிந்தனையை மையமாகக் கொண்ட அரசியல் கோட்பாட்டு அடித்தளத்தை உருவாக்க இலோன் மஸ்க் முனைகிறார் என்ற விமர்சனத்தை தவிர்க்க முடியாது.
ஒரு புறத்தில் தகவல் என்றால், மறுபுறத்தில் பணத்தை வீசியெறியும் ஆற்றல். அரசியல் பிரசாரங்களுக்கும், அரசியல் மாற்றத்தைக் கோரி போராடும் அமைப்புக்களுக்கும், அரசியல் செயற்பாட்டுக் குழுக்களுக்கும் நிதி வழங்கக்கூடியவராக இலோன் மஸ்க் திகழ்கிறார்.
தேர்தலில் போட்டியிட்ட பல கட்சிகளுக்கும் உதவி செய்து நடுநிலையாக உதவி செய்யக்கூடியவராக தம்மை சித்தரித்துக் கொள்வார். சகல தரப்புக்களினதும் நல்லெண்ணத்தை பெறுவதில் உள்ள அனுகூலங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் சூட்சுமம் அதில் மறைந்திருக்கும்.
அமெரிக்காவை எடுத்துக் கொள்வோம். எந்தத் தரப்பு ஆட்சி பீடத்திற்கு தெரிவான போதிலும், அதன் ஆதரவு இலோன் மஸ்க்கிற்கு அவசியம். குறிப்பாக டெஸ்லா, ஸ்பேஸ்-எக்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் பெறுவது முதற்கொண்டு, ஒப்பந்தங்களை ஏற்படுத்துவது வரை பல விடயங்களுக்கும் அரசாங்கத்தின் ஆதரவு தேவை. எனவே, வெறுமனே கோட்பாட்டு ரீதியான விடயங்களுக்காக மாத்திரமன்றி, தமது வர்த்தக நலனுக்காகவும் அரசியல் கட்சிகளை அவர் தந்திரமாக அணுகுவார். தீவிர செல்வாக்கு செலுத்தும் அளவுக்கு தம்மை வளர்த்துக் கொள்வார். இன்று நாசா நிறுவனம் செய்மதிகளை விண்வெளிக்கு அனுப்ப நினைத்தால், இலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் துணை வேண்டும்.
இந்த நிறுவனத்தின் கிளையாக இயங்கும் ஸ்டார் லிங்க் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். இவ்வமைப்பு உலகின் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களுக்கும் ‘ப்ரோட்பான்ட்’ இணைய வசதிகளை வழங்குகிறது. உக்ரேன் முதல் காஸா வரை ஆயுதமேந்தி சண்டையிடும் தரப்புக்கள் ஸ்டார் லிங்கின் இணைய வசதிகளை தவிர்க்க முடியாது.
உண்மையில், உக்ரேனிய யுத்தம் ஆரம்பித்த நாள் தொடக்கம் இலோன் மஸ்க் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொடர்பில் இருந்ததை அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையொன்று ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியிருக்கிறது.
இலோன் மஸ்க்குக்கும் டொனால்ட் டரம்புக்கும் இடையிலான உறவு சமகால அரசியல் அரங்கில் தவிர்க்க முடியாத பேசுபொருள். ஜனவரியில் டரம்ப் பதவியேற்ற பின்னர், மஸ்க் தான் நிழல் ஜனாதிபதியென ஜனநாயகக் கட்சி விமர்சிக்கும் அளவிலான உறவை இருவரும் கொண்டிருக்கிறார்கள்.
இந்த உறவில் முரண்பாடான சந்தர்ப்பங்கள் உண்டு. ட்ரம்பின் சில கொள்கைகள் தமக்கு பிடிக்காதென இலோன் மஸ்க் கூறுவார். முன்னர், உலகின் சுற்றாடல் பாதுகாப்பு பற்றிய பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து அமெரிக்காவை டொனால்ட் ட்ரம்ப் விலக்கிக் கொண்டதை அடுத்து, அப்போதைய ஆலோசனைக் குழுக்களில் இருந்து இலோன் மஸ்க் பதவி விலகியதைக் கூறலாம்.
ஆனால், டுவிட்டர் வலைதளத்தில் தடை செய்யப்பட்டிருந்த ட்ரம்பின் கணக்கை எக்ஸ் வலைதளத்தில் மீளத் தொடங்க இடமளித்து, ட்ரம்பின் ஆதரவாளர்கள் வீரியத்துடன் இயங்க களம் அமைத்துக் கொடுத்ததை மறக்க முடியாது. ட்ரம்பின் தீவிர வலதுசாரிக் கொள்கைகளுடன் தமது கருத்துக்கள் ஒத்துப் போனதால், இலோன் மஸ்க் இவ்வாறு செய்தார் என்ற விமர்சனங்கள் உண்டு.
‘மெட்டா’ நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் ஸக்கர்பேர்க் போன்றவர்களும் உலக அளவில் செல்வாக்கு செலுத்தக்கூடியவர்கள் தாம். ஆனால், ஊடகம், தொழில்நுட்பம், வணிகம் போன்ற துறைகள் சார்ந்து ஆகக்கூடுதலான செல்வாக்கு செலுத்தும் ஆற்றல் இலோன் மஸ்க்கிடமே உண்டு.
எக்ஸ் வலைதளத்தில் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தமது வணிகத்தையோ, அரசியலையோ மேம்படுத்தும் நோக்கத்துடன் இலோன் மஸ்க் செயற்படுவாராயின் அது சிக்கலை ஏற்படுத்தலாம் என்று விமர்சகர்கள் வாதிடுகிறார்கள்.
இது தவிர, இலோன் மஸ்க் என்ன நேரத்தில் என்ன செய்வார் என்பதை அனுமானிக்க முடியாமல் இருப்பதால், அரசியல் ரீதியாக செல்வாக்கு செலுத்தக்கூடிய அவரது ஆளுமை குறித்தும் பிரச்சினை இருக்கிறது. அவர் இடும் பதிவுகள் சில சந்தர்ப்பங்களில் முன்னுக்கு முரணாக இருந்த சந்தர்ப்பங்கள் உள்ளன. ஒரு குழாயடி சண்டையில் வம்பிழுத்தல் என்ற அளவிற்கு எலன் மஸ்க் கீழிறங்கிய சந்தர்ப்பங்களும் உண்டு.
ஒரு ஜனநாயக கட்டமைப்பு என்றால், அது சரி சமமான விகிதத்தில் சகலதையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். ஆனால், செல்வமும், ஊடக பலமும் இருப்பதால், எலன் மஸ்க்கின் ஆதிக்கம், சாதாரணப் பிரஜைகளின் குரல்களை ஒதுக்கி விடக்கூடிய அபாயம் உண்டு.
இந்த மனிதர் அரசியலைத் தேர்ந்தெடுக்கப்போகிறாரா அல்லது வெளியில் இருந்து செல்வாக்கு செலுத்தி அரசியலை கட்டமைக்கப் போகிறாரா என்பது தெரிய வில்லை. ஆனால், அமெரிக்க அரசியலில் இவரது தாக்கம் தவிர்கக முடியாததாக மாறியிருக்கிறது.
சமகால உலகில் அரசியலும், தொழில் நுட்பமும் மென்மேலும் பின்னிப் பிணைந்தவையாக மாறி வரும் சூழ் நிலையில், இலோன் மஸ்க் போன்ற ஆளுமைகளின் வகிபாகம் தவிர்க்க முடியாத முன்னுதாரணங்களாகவும் திகழ்கின்றது.
இலோன் மஸ்க்கின் கதையில் இனிமேல் தான் முக்கியமான திருப்பங்கள் இருக்கின்றன. எத்தகைய திருப்பங்கள் வந்தாலும், அரசியல் அரங்கில் அவரது பிரசன்னம், மெய்யாகவே மாற்றத்திற்கான காரணியாக உள்ளது.
அரசியல், வணிகம், தொழில்நுட்பம் ஒன்றையொன்று இடைவெட்டும் வட்டங்கள் என்றால், வட்டத்தின் கோடுகளை அவர் எவ்வாறு இல்லாமல் செய்கிறார் என்பதை ஒட்டுமொத்த உலகமும் ஆச்சர்யத்துடனும், அச்சத்துடனும் அவதானித்துக் கொண்டி ருக்கிறது.
சதீஷ் கிருஷ்ணபிள்ளை Virakesari