நியு ஓர்லியன்சில் வாகனத்தை கண்மூடித்தனமாக செலுத்தி பொதுமக்கள்மீது மோதிய நபர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடியுடன் தனது வாகனத்தை செலுத்தினார் என விசாரணைகளின் போது தகவல்கள் வெளியாகியுள்ளன
இது தொடர்பில் ரொய்ட்டர் செய்திச்சேவை மேலும் தெரிவித்துள்ளதாவது
சந்தேகநபர் அமெரிக்காவின் டெக்ஸாஸை சேர்ந்த 42 வயது சம்சுட் டின் ஜபார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் தனது வாகனத்தினால் பொதுமக்களை தாக்கியதை தொடர்ந்து இவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தார்.
இரண்டு பொலிஸார் உட்பட 30 பேர் காயமடைந்துள்ளனர், பொலிஸார் மீது சந்தேகநபர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளார்.
இவருடன் இணைந்து செயற்பட்டவர்களை கைதுசெய்யப்போவதாக அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் உறுதியளித்துள்ளனர்
வாகனத்தில் ஆயுதங்களும் வெடிபொருட்களும் காணப்பட்டதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் அந்த பகுதியில்இரண்டு வெடிபொருட்கள் மீட்கப்பட்டு செயல் இழக்கச்செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பிட்ட வாகனத்திலிருந்து ஐஎஸ் கொடி மீட்கப்பட்டதை தொடர்ந்து அந்த அமைப்பிற்கு இந்த வன்முறையுடன் தொடர்புள்ளதா என விசாரணைகள் இடம்பெறுவதாக எவ்பிஐ தெரிவித்துள்ளது.
ஜபார் மாத்திரம் இந்த தாக்குதலிற்கு காரணம் என நாங்கள் நம்பவில்லை, அவரது சகாக்களை தேட முயல்கின்றோம் என தெரிவித்துள்ள எவ்பிஐ அதிகாரியொருவர் பல சந்தேகநபர்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.