இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக கடல் மார்க்கமாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த இலங்கைத் தமிழர்கள், தங்களை மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு கோரி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாளரிடம் மனுவொன்றைக் கையளித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கைத் தமிழர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் இலங்கையிலிருந்து படகு வழியாக சட்ட விரோதமான முறையில் தனுஷ்கோடியில் தஞ்சம் அடையத் தொடங்கினர்.

இதுவரை 309 இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடியில் கடல் வழியாக ஏதிலிகளாக தஞ்சமடைந்து மண்டபம் ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் பொருளாதார நெருக்கடி காரணமாகத் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர்களை ஏதிலிகளாக இந்திய அரசாங்கம் இதுவரை பதிவு செய்யாத காரணத்தினால் அவர்களுக்கான எந்த விதமான நிவாரணங்களும் கிடைக்கப் பெறுவதில்லை.

இந்தநிலையில் வருமானமின்றி தவிக்கும் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை தமிழர்கள் மீண்டும் சட்டவிரோதமாகக் கடல் வழியாக அண்மையில் இலங்கைக்குத் திரும்பி வந்துள்ளதாகத் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏதிலிகளாக பதிவு செய்யாமல் உள்ள 13 குடும்பத்தினரை சேர்ந்த தங்களைப் படகு மூலம் அல்லது விமானம் மூலம் மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பி வைக்குமாறு கோரி நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியாளரை சந்தித்துப் பாதிக்கப்பட்ட இலங்கை ஏதிலிகள் மனுவொன்றைக் கையளித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version