கடந்த வாரம் (29-12-2024)  ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையில் ‘தொழினுட்பத்தில் புரட்சி, வியக்க வைக்கும் இந்தியா” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சியே இது.

இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள டிஜிட்டல் பணப் பரிமாற்ற சேவை தொடர்பாக கடந்தவார கட்டுரையில் விரிவாக ஆராயப்பட்டது.

இந்நிலையில் இந்தவாரக் கட்டுரையில் தொழினுட்பத்தை பயன்படுத்தி கட்டுமானத்துறையில், இந்தியா செய்துள்ள சாதனை தொடர்பாக ஆராய உள்ளோம்.

இந்திய வெளிவிவகார அமைச்சின் அநுசரணையுடன் ‘இந்தியாவை பற்றி அறிந்து கொள்வோம்” என்ற நிகழ்சியில் நாம் சென்று பார்வையிட்ட முக்கிய இடமாக அடல் சேது பாலம் காணப்பட்டது.

விந்தைகள் பல செய்யும் தொழினுட்ப உலகில் ஒவ்வொரு நாடுகளும் ஏதோ ஒரு பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவின் சில கட்டுமாணப்பணிகளானது பிரமிக்க வைக்கின்றன.

இதனை பறைசாற்றும் வகையில் மும்பையில் அமைந்துள்ள அடல் சேது பாலமானது பார்ப்பவர்களுக்கு பிரமாண்டத்தை ஏற்படுத்துகின்றது.

மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையையும், நவிமும்பையையும் இணைக்கும் வகையில் இப்பாலம் கட்டப்பட்டிருக்கிறது. இப்பாலத்துக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்.

ஆனால், பாலத்தின் கட்டுமானப் பணிகள், 2018ஆம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது. சுமார் 5 ஆண்டுகள் நடைபெற்ற பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து கடந்த ஜனவரி மாதம் பிரதமர் நரேந்தி மோடி திறந்து வைத்தார்.

இந்தப் பாலம் உலகிலேயே மிகவும் நீளமான 12-ஆவது பாலமாகும். இப்பாலம் 21.8 கி.மீ. நீளம் கொண்டது. இந்த பாலத்தின் 16.5 கி.மீ பகுதி கடலுக்கு மேலேயும் 5.5 கி.மீ பகுதி நிலத்திற்கு மேல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்பாலத்தின் கட்டுமான செலவு 17,840 கோடி ரூபாவாகும். அதாவது இலங்கை மதிப்பில் 60779 கோடி ரூபாவாகும்.

500 போயிங் விமானங்களின் எடைக்குச் சமமான ஸ்டீல் கம்பிகள் மற்றும் ஈபிள் கோபுரத்தின் எடையை விட 17 மடங்கு அதிக எடை கொண்டதாக இந்த பாலம் காணப்படுகின்றது. இதன் கட்டுமானத்தில் 1,77,903 மெட்ரிக் டொன் ஸ்டீல் மற்றும் 5,04,253 மெட்ரிக் டொன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஒரு கணக்கீட்டின்படி, தினமும் ஏறக்குறைய 70,000 வாகனங்கள் இந்தப் பாலத்தைப் பயன்படுத்துதாக கூறப்படுகின்றது.   இப்பாலத்தில் ஒரு வழி பயணம் மேற்கொள்ள 250 ரூபாய் கட்டணம் வசூலிக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்திருக்கிறது.

எனினும், குறைக்கப்பட்ட பயண நேரம் மற்றும் தூரத்தின் அடிப்படையில் பார்க்கும்போது பயணிகளுக்கு எரிபொருள் செலவில் 500 வரை மிச்சமாகும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. மேலும், இந்தப் பாலத்தில் அதிநவீன போக்குவரத்து மேலாண்மை அமைப்பு நிறுவப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் மூடுபனி, குறைந்த பார்வை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்புகளுக்கு அப்பால் இயங்கும் வாகனங்கள் போன்றவற்றைக் கண்டறிய முடியும். அதேபோல, போக்குவரத்து நெரிசலை பராமரிக்க, இரு சக்கர வாகனம், முச்சக்கர வண்டி  மற்றும் உழவு இயந்திரங்களுக்கு அனுமதி இல்லை.

இப்பாலத்தில் அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 100 கி.மீ. என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த பாலம் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் என்பதோடு பொறியியல் அதிசயம் என்றே சொல்லலாம். அந்தளவிற்கு அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. மும்பை பகுதியில் உள்ள போக்குவரத்தை நெரிசலை மாற்றியமைக்கும் சகத்தியாக இது காணப்படுகின்றது.

மும்பையின் கடல் மேல் கம்பீரமாக நிற்கும் இந்தப் பாலம் இந்தியாவின் வளர்ந்து வரும் பொறியியல் ஆற்றலுக்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது.

ஐந்து வருடத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்தப் பாலத்தில் பல தொழில்நுட்பங்கள் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக அடல் சேது பாலம் அதிக திறன் வாய்ந்ததாகவும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலும் உள்ளது.

ஏன் அடல் சேது பாலத்தை பொறியியல் அதிசியம் எனக் கூறுகிறோம் தெரியுமா? இதில் பயன்படுத்தப்பட்டுள்ள 8 நவீன தொழில்நுட்பங்கள் தான் காரணம். அது என்னவென்று ஒவ்வொன்றாக இப்போது பார்ப்போம்.

நிலநடுக்கத்தை தாங்கும் வடிவமைப்பு

அதிர்ச்சியை தாங்கும் வகையில் பாலத்தின் அடித்தளத்தில் ஐசோலேஷன் உருளைகள் அதாவது தனிப்பட்ட உருளைகள் பயன்படுத்தபட்டுள்ளன. இவை அதிர்ச்சியை தாங்கி கொள்ளும் வையில் செயற்படுவதால், நிலநடுக்கம் வந்தால் கூட பாலம் சிறிதளவு நகருமே தவிர உடைந்து போகாது. ரிச்டர் அளவில் 6.5 வரையுள்ள நிலநடுக்கத்தை இந்தப் பாலத்தின் வடிவமைப்பு தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

புதுமையான ஸ்டீல் தளம்

இந்தப் பாலத்தின் தள வடிவமைப்பில் நெளிந்த ஸ்டீல் பிளேட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு உறுதுணையாக பாலத்தின் கட்டுமானம் உறுதியோடும் நீடித்தும் இருக்க உறுதியான ஸ்டீல் கம்பிகள் பொறுத்தப்பட்டுள்ளன. பாரம்பரியமான கொன்க்ரீட் தளத்தை விட இந்த ஸ்டீல் தளம் லேசாக இருப்பதால், பாலத்தின் ஒட்டுமொத்த எடை குறைந்து கடலிலிருந்து வீசும் காற்று மற்றும் அலைகளை எதிர்த்து தாக்குப்பிடிக்கிறது.

நீண்ட இடைவெளி

ஸ்டீல் தளத்தை பயன்படுத்தியதால் தூண்களுக்கு இடையே நீண்ட இடைவெளி கிடைக்கிறது. இதனால் பாலத்திற்கு குறைவான தூண்கள் பயன்படுத்தினாலே போதும். இதன் காரனமாக பாலத்தின் அழகு மேலும் கூடுகிறது. அதுமட்டுமின்றி கொன்க்ரீட் தளத்தை விட இதை பராமரிப்பது பரிசோதிப்பதும் எளிதாக காணப்படுகின்றது.

ரிவர்ஸ் சர்குலேஷன் ரிக்ஸ்

இந்த பிரத்யேகமான ரிக்ஸ் பாலத்தில் ஏற்படும் சத்தம் மற்றும் அதிர்வுகளை குறைக்கிறது. இதனால் பாலத்தைச் சுற்றியுள்ள கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாக்கப்படுகிறது.

ஓசை தடுப்பு நடவடிக்கைகள்

வாகனங்களின் இரைச்சலினால் பாலத்தில் ஏற்படும் தாக்கத்தை குறைக்க பாலத்தின் இரு கரைகளிலும் ஓசை தடுப்புகளும் சைலன்சர்களும் உள்ளன.

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற விளக்குகள்

குறைந்த ஆற்றலை பயன்படுத்தும் எல்இடி  விளக்குகள் பாலத்தில் பொறுத்தப்பட்டுள்ளன. இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

திறந்தவெளி சுங்கவரி அமைப்பு

இலத்திரனியல் சுங்கவரி கட்டண வசூலிப்பு முறை இந்தப் பாலத்தில் பின்பற்றப்படுகிறது. இதனால் கட்டணம் செலுத்த வாகனத்தை நிறுத்த வேண்டிய தேவையில்லை. இதனால் தேவையில்லாத போக்குவரத்து நெரிசல் குறைகிறது.

போக்குவரத்து நெரிசல் தொடர்பான உடனடி தகவல்கள்

பாலத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிவிக்கும் தகவல் பலகைகள் இருப்பதால் வாகன ஓட்டுனருக்கு தேவையான தகவல்கள் உடனடியாக கிடைக்கின்றன.

6 வழி பாதைகளை கொண்ட இந்த பாலத்துக்கு இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவாக அடல் சேது என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஈபிள் கோபுரத்தை விட 17 மடங்கு அதிகமாகவும், கொல்கத்தாவின் ஹவுரா பாலத்தில் பயன்படுத்தப்பட்ட இரும்புகளை விட நான்கு மடங்கு அதிகமாக இந்த பாலத்தில் இரும்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது இதன் முக்கிய அம்சம்.

அடல் சேது பாலத்தின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட கொன்கிரீட் அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட ஆறு மடங்கு அடர்த்தியினை கொண்டது எனவும் கூறப்படுகின்றது.

எம்.டி. லூசியஸ்

Share.
Leave A Reply

Exit mobile version