அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்திலும், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்து நிகழ்வுகளை நினைவுபடுத்தும் வகையிலான சம்பவங்கள் நடக்க தொடங்கியிருக்கின்றன.

ராஜபக்ஷவினர் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்கு அழைக்கப்படுகிறார்கள், முன்னைய அரசாங்கத்தில் அங்கம் வகித்த அரசியல்வாதிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள், கைது செய்யப்படுகிறார்கள், சிறையில் அடைக்கப்படுகிறார்கள், பிணையில் விடுவிக்கப்படுகிறார்கள்.

இதே காட்சிகளை, சரியாக பத்து வருடங்களுக்கு முன்னர் இங்கு காணமுடிந்தது.

அப்போதும் இப்படித்தான், ராஜபக்ஷவினரின் ஆட்சியில் அங்கம் வகித்த பலர், ஊழல், மோசடி மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார்கள். சிறையில் அடைக்கப்பட்டார்கள். கடைசியில் எவரும் தண்டிக்கப்படாமலேயே, வெளியே வந்தார்கள்.

இப்போதைய விசாரணைகளும் கைதுகளும் கூட, இறுதியான தண்டனையை பெற்றுக்கொடுக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

ராஜபக்ஷவினர் செய்த தவறுகளுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டும் என, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அமைச்சர்கள் பலர் கூறுகிறார்கள்.

இவ்வாறான நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க களுத்துறையில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய போது ஆரம்பித்து வைத்த சர்ச்சை நீண்டு கொண்டே செல்கிறது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யப் போவதாகவும், அதற்கான சட்டம் கொண்டுவரப் போவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.

அதேபோல, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்கியிருக்கின்ற வீட்டின் மாதாந்த வாடகை மதிப்பு 46 இலட்சம் ரூபா என்றும், அதில் அவருக்காக அரசாங்கம் 30 ஆயிரம் ரூபா மாத்திரமே கொடுக்க முடியும் என்றும், மீதியை செலுத்த வேண்டும் என்றும் செலுத்த முடியாவிட்டால் அவர் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுர அறிவித்திருக்கிறார்.

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன போன்றவர்களும் இதேபோன்று, அரசாங்க இல்லங்களில் குடியிருக்கிறார்கள். அவர்களின் நிலையும் இது தான் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

ரணில், அரசாங்க இல்லத்தை ஏற்றுக் கொள்ளவில்லை, ஹேமா பிரேமதாசவும், கோட்டாபய ராஜபக் ஷவும், அரசாங்க இல்லங்களை மீள ஒப்படைத்து விட்டதால் இந்த சர்ச்சையில் இருந்து தப்பியிருக்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, அரசியலமைப்பு சட்டத்தின் படி, வழங்கப்பட்ட இந்த இல்லங்களில் அவர்கள் உயிருடன் இருக்கும் வரை தங்கியிருக்க முடியும்.

ஆனால், அநுரகுமார திசாநாயக்க இந்த இல்லங்களின் வாடகையை மதிப்பீடு செய்து, அதன் அடிப்படையில் வாடகையை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறார். இதற்கும் சட்டத்தில் இடம்இருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வீடு வழங்கப்பட வேண்டும் அல்லது அவர்கள் வசிக்கும் வீட்டின் வாடகையாக, அவர்களின் ஓய்வூதியத்தின் மூன்றில் ஒரு பகுதியை வழங்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.

அதன் அடிப்படையில் தான், மஹிந்த ராஜபக்ஷ தங்கி இருக்கின்ற விஜயராம மாவத்த இல்லத்தின் வாடகை மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.

அதனை மாதம் 46 இலட்சம் ரூபா வாடகைக்கு விட முடியும் என மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார் ஜனாதிபதி.

இப்பொழுது மஹிந்த ராஜபக்ஷ, 46 இலட்சம் ரூபா வாடகை செலுத்தி அங்கே இருக்க வேண்டும். அல்லது வீட்டை விட்டு வெளியேற வேண்டும்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தமது கட்சியின் மேடையில், இந்த விவகாரத்தை முன் வைத்தமைக்கு ஒரு பிரதான காரணம் இருக்கிறது.

இதன் மூலம், மஹிந்த ராஜபக்ஷ 46 இலட்சம் ரூபா வாடகை அறவிடக் கூடிய ஒரு வீட்டில் வசிக்கிறார் என்ற செய்தி மக்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

ஆட்சியில் இருந்தபோது ராஜபக்ஷவினர் கொள்ளையடித்தனர், ஊழல் செய்தனர் என குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது போலவே, அரசாங்க வளங்களை தமது சொகுசு வாழ்வுக்காக பயன்படுத்திக் கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டுகளும் இருந்தன.

இப்போது அவ்வாறான குற்றச்சாட்டை தேசிய மக்கள் சக்தியினால் சுமத்த முடியாது.

அதனால் மஹிந்த ராஜபக்ஷ 46 இலட்சம் ரூபா வாடகை வசூலிக்க கூடிய வீட்டில் குடியிருக்கிறார் என்ற கருத்து மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரத்தில் அநுரகுமார திசாநாயக்க பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாகவே ராஜபக்ஷ ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த விவகாரத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவசரப்பட்டு முடிவுகளை எடுக்கிறார் என்றே தெரிகிறது.

அவர் உள்ளூராட்சி தேர்தலை மனதில் வைத்திருக்கிறார்.

அண்மையில் நடந்த கூட்டுறவு தேர்தல்களில் தமது கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை கவனத்தில் கொண்டிருக்கிறார்.

அதனால், மீண்டும் ராஜபக் ஷவினரின் யுகத்தை பற்றி, அவர்களின் சுகபோக வாழ்வை பற்றி, மக்கள் மத்தியில் ஒரு அபிப்பிராயத்தை மீளவும் கட்டி எழுப்ப வேண்டிய தேவை அவருக்கு வந்திருக்கிறது.

ஆனால் இது ஒரு ஆபத்தான பொறி.

அநுரகுமார திசாநாயக்க இதனை அறிவித்தவுடன், எந்த நேரத்திலும் அந்த வீட்டை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக மஹிந்த ராஜபக் ஷ கூறியிருக்கிறார்.

ஆனால், அரசாங்கம் அதற்கான எழுத்து மூலமாக அறிவித்தலை கொடுத்தால், வெளியேறுவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் வரை காத்திராமல், வெளியே செல்வது தான் நல்லது என்று, அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ பதில் கொடுத்திருக்கிறார்.

அதாவது, மஹிந்தவின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவது என்பதில் அநுர அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டில் இருக்கிறது.

ஆனால், சட்டரீதியாக வெளியேறுமாறு அறிவித்தல் கொடுத்து, அதனைச் செய்வதற்கு அரசாங்கத்திடமும் தயக்கம் இருக்கிறது.

மேடைப் பேச்சுகள், ஊடகப் பரபரப்புகளினால் இதனைச் சாதிக்க அரசாங்கம் முற்படுகிறதே தவிர, சட்டரீதியாக இதனைக் கையாளுவதற்கு யோசிக்கிறது.

அது எதிர்விளைவுகளைக் கொண்டு வந்து விடலாம் என்ற பயம் அரசாங்கத்துக்கு இருப்பதாகத் தெரிகிறது.

அதேவேளை, மஹிந்த ராஜபக் ஷ இந்த விவகாரத்தை தனக்கு சார்பாகவும், தனது கட்சியின் மீள் எழுச்சிக்காகவும் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

மஹிந்த ராஜபக்ஷ பெட்டி படுக்கைகளுடன் வெளியே வந்து வீதியில் படுத்துக் கொண்டால், நிலைமை என்னவாகும்?

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், மஹிந்த ராஜபக்ஷ கார்ல்டன் இல்லத்தில் போய் தங்கி இருந்தபோது, அங்கு குழுமிய கூட்டத்தை யாரும் மறந்திருக்க முடியாது.

அதேபோல, மஹிந்த ராஜபக் ஷ வீதிக்கு விரட்டப்பட்டால், சிங்கள மக்கள் அவரை சூழ்ந்து கொள்வார்கள்.

ஆட்சிக் காலத்தில் ராஜபக் ஷவினர் செய்த தவறுக்காக தேர்தலின் மூலம் அவர்களுக்கு தண்டனை கொடுக்கப்பட்டது. அதற்காக அவர்கள் ராஜபக்ஷ வினரை முற்று முழுதாக உதறித் தள்ளிவிட்டனர் எனக் கருதி விடக் கூடாது.

எனவே, மஹிந்த இந்த விவகாரத்தை அமைதியாக கடந்து செல்வார் என எதிர்பார்க்க முடியாது. அவர் இதனை அரசியலாக்க கூடும்.

வீழ்ந்து கிடக்கும் கட்சியையும், குடும்ப அரசியலையும் மீள் நிலைப்படுத்துவதற்காக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

“நான் மஹிந்த ராஜபக்ஷ என்பதை அநுர மறந்து விட்டார்” என அவர் கூறியிருப்பதற்குப் பின்னால், ஒரு அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, ராஜபக்ஷவினருக்கு எதிரான – முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிரான ஒரு பழிவாங்கும் செயல் என்று அப்பட்டமாக தெரிகிறது.

ஏனென்றால், அரசாங்க விலை மதிப்பீட்டு திணைக்களம் விஜயராம மாவத்த இல்லம், 46 லட்சம் ரூபா வாடகை பெறுமதி கொண்டதாக மதிப்பிட்டிருந்தாலும், அதனை அரசாங்கம் வாடகைக்கு கொடுக்கப் போகிறதா என்ற கேள்வி இருக்கிறது.

அதனை பறித்துக் கொண்டால், அதனை யாருக்காவது வாடகைக்கு கொடுத்து அரசாங்க வருமானத்தை அதிகரிக்க வேண்டும்.

அவ்வாறு அதன் மூலம் வருமானத்தை பெற முடியாமல் போனால், அரசாங்கம் சிக்கலுக்குள் தள்ளப்படும்.

கொழும்பிலும் முக்கிய இடங்களிலும் உள்ள அரசாங்க கட்டடங்கள் அனைத்தையும், வாடகைக்கு கொடுக்கவோ, விற்பனை செய்யவோ முடியாது.

முன்னர் காலிமுகத்திடலில் அரசாங்க நிலத்தை விற்பனை செய்தபோது, அதனை ஜே.வி.பி எதிர்த்தது நினைவு இருக்கலாம்.

இப்பொழுது அவர்களே அரசாங்க நிலங்களை விற்பனை செய்யவும், வாடகைக்கு கொடுக்கவும் முற்பட்டால், அது அவர்களின் மீதான விமர்சனங்களை ஏற்படுத்தும்.

இந்த நிலையில், ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை போன்றவற்றைக் கூட அரசாங்கம் வைத்துக் கொள்ளுமா அல்லது வாடகைக்கு விடப் போகிறதா என்ற கேள்விகளும் இருக்கின்றன.

இப்பொழுது அநுரகுமார திசாநாயக்கவிற்கு மக்கள் ஆணை கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதேபோன்ற மக்கள் ஆணை தான், முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் கொடுக்கப்பட்டது. அந்த மக்கள் ஆணையின் அடிப்படையில் தான்,அவர்களுக்கான இருப்பிட வசதிகள் ஒதுக்கப்பட்டன.

அதனை மீறி செயல்படுவதும் கூட, மக்கள் ஆணையை மீறுவதாகவே அமையும்.

மஹிந்த ராஜபக் ஷ அந்த மக்கள் ஆணையைப் பெற்றுக் கொள்வதற்கு, ஜே.வி.பியும் துணையாக நின்றதை மறந்து விட முடியாது.

இப்பொழுது, தாங்கள் ஆதரவளித்து மக்கள் ஆணையைப் பெற்றுக் கொண்டவரை, ஜே.வி.பி. நடுத்தெருவுக்கு கொண்டு வருவதற்கு முற்படுகிறது.

அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் இந்த விடயத்தில் இருக்கிறது.

தற்போதைய அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் வலுக்கத் தொடங்கியுள்ள நிலையில், வரப்போகும் உள்ளுராட்சி தேர்தலில், வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இவ்வாறான ‘ஸ்டன்ட்’ அரசியலை முன்னெடுக்க முயன்றால், அது அரசாங்கத்துக்கு இன்னமும் அவப்பெயர்களையும் பின்னடைவுகளையுமே ஏற்படுத்தும்.

-சத்ரியன்

Share.
Leave A Reply

Exit mobile version