தமிழ் சினிமாவில், முதலில் நாயகனாக நடித்து பின்னாளில் முன்னணி வில்லன் நடிகராக மாறிய நடிகர் ரகுவரன், வில்லத்தனத்தில் முத்திரை பதித்துள்ள நிலையில், ரஜினிகாந்த் நடித்த ஒரு படத்தில் இயக்குனரிடம் பொய் சொன்னதால், அவரது கேரக்டரையே மாற்றியுள்ளார் அந்த இயக்குனர்.
1982-ம் ஆண்டு வெளியான ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ரகுவரன்.
தொடர்ந்து ஒரு சில படங்களில் நடிகனாக நடித்த இவர், 1986-ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் மிஸ்டர் பரத் என்ற படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார்.
அதன்பிறகு வில்லன், குணச்சித்திரம் என பல படங்களில் நடித்துள்ள ரகுவரன் வில்லான முத்திரை பதித்துள்ளார்.
குறிப்பாக 1995-ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் பாட்ஷா படத்தில், ரஜினிகாந்தை விடவும், ஒரு படி அதிகமாக பேசப்பட்ட கேரக்டர் மார்க் ஆண்டனி.
தனது சிறப்பான நடிப்பின் மூலம்,மார்க் ஆண்டனி கேரக்டருக்கு உயிர் கொடுத்த ரகுவரன், ஷங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலங்கு, கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
அந்த வகையில் ரகுவரன் வில்லனாக நடித்து பிரபலமான படங்களில் ஒன்று மிஸ்டர் பரத். 1986-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில், தான் ரஜினிகாந்த் – சத்யராஜ் இணைந்து நடித்திருந்தனர்.
இந்த படத்தில் மைக்கேல் என்ற வில்லன் கேரக்டரில் ரகுவரன் நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது, ரகுவரன் ஒரு விபத்தில் சிக்கி காலில் காயமடைந்துள்ளார். ஆனாலும் அடுத்த நாள் சரியான நேரத்தில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளார்.
அப்போது இயக்குனர், எஸ்.பி.முத்துராமன், உன் காலில் அடிப்பட்டிருக்கிறதா என்று கேட்க, ரகுவரன் இல்லை என்று பொய் சொல்லியுள்ளார்.
ஆனாலும், எஸ்.பி.முத்துராமன் உண்மையை தெரிந்துகொண்டு மீண்டும் கேட்க, ஆமாம் சார் அடிப்பட்டுள்ளது. ஆனாலும் நான் சரியாக நின்று நடித்துவிடுவேன் சார் என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட எஸ்.பி.முத்துராமன், இல்லை வேண்டாம். நீ நொண்டியே நட இதுதான் இந்த கேரக்டருக்கு சரியாக இருக்கும் என்று கூறி அப்படியே நடிக்க வைத்துள்ளார்.
அதன்பிறகு அந்த கேரக்டரை ஒரு வில்லன் என்பதை விட, அந்த கேரக்டருக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து, கதையை மாற்றி எழுதியுள்ளார் எஸ்.பி.முத்துராமன். இது பற்றி ரகுவரனே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.