நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்தித்தாரா, புகைப்படம் எடுக்கப்பட்டதா என்பது குறித்த விவாதங்கள் தமிழக அரசியல் களத்தை ஆக்கிரமித்திருக்கின்றன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள்?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த சில நாட்களாக பெரியார் மீது தொடர் விமர்சனங்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில், பல வருடங்களுக்கு முன்பாக அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தது தொடர்பான விவாதங்களும் எழ ஆரம்பித்திருக்கின்றன.
கடந்த ஜனவரி 19ஆம் தேதியன்று திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் என்பவர், தன்னுடைய X பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்தப் பதிவில், “இவர், அவரை சந்திக்கவே இல்லை. எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால்.. அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்கிற அடிப்படையில்” என்று குறிப்பிட்டிருந்தார்.
பின்னர் ஊடகங்களுக்கும் இது தொடர்பாக பேட்டியளித்தார் ராஜ்குமார். அந்தப் பேட்டிகளில் சீமானுக்கு பரிசளிப்பதற்காக இதுபோன்ற ஒரு படத்தை உருவாக்கித் தரும்படி ஒருவர் கேட்டதாகவும் அதற்காகவே அப்படி ஒரு படம் உருவாக்கப்பட்டதாகவும், உண்மையில் அப்படி ஒரு படம் எடுக்கப்படவே இல்லையன்றும் அவர் தெரிவித்தார்.
பிரபாகரனின் அண்ணன் மகன் கருத்து
அதற்கடுத்ததாக, பிரபாகரனின் அண்ணன் மகனான கார்த்திக் மனோகரன், சீமான் கூற்றுகளை மறுத்து தொலைக்காட்சி பேட்டி ஒன்றை அளித்தார்.
அந்தப் பேட்டியில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் குறித்து சீமானிடம் பெண் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, அவர் மிகுந்த கோபத்துடன் பதிலளித்தது, சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், திரைப்பட ஒளிப்பதிவாளரான சந்தோஷ் என்பவர், இரு நாட்களுக்கு முன்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், பிரபாகரனை சீமான் சந்தித்தது உண்மை என்று குறிப்பிட்ட அவர், அது தொடர்பாக சீமான் தெரிவிக்கும் பிற கருத்துகள், தகவல்கள் பொய்யானவை எனத் தெரிவித்தார்.
அதிநவீன துப்பாக்கியுடன் சீமான் இருக்கும் புகைப்படம், ‘எல்லாளன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின் நடுவே எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தப் பேட்டி வெளியான பிறகு, சமூக வலைதளங்களில் சீமான் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் கடுமையாக மோதி வருகின்றனர்.
“அது வெறும் 12 நிமிட சந்திப்பே”
சீமான் அளித்த பல ஊடக பேட்டிகளிலும் மேடைப் பேச்சுகளிலும் பிரபாகரனை சந்தித்த போது நடந்தது என்று கூறி பல தகவல்களை வெளியிட்டுவந்தார்.
குறிப்பாக, தான் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் ஆயுதப் பயிற்சி பெற்றதாகவும் பிரபாகரன் நீண்ட நேரம் தன்னுடன் பேசியதாகவும் அவர் தெரிவித்துவந்தார்.
அதிலும் குறிப்பாக தனக்கு அங்கு அளிக்கப்பட்ட உணவு குறித்து விரிவாகப் பேசிவந்தார் சீமான். இந்தத் தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து அவருடைய எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வந்தனர்.
தற்போது ஒளிப்பதிவாளர் சந்தோஷ் தெரிவிக்கும் தகவல்கள் உண்மை என்கிறார் புலிகளுக்கு நெருக்கமானவராக இருந்தவர்களில் ஒருவராக கருதப்படும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி.
“மொத்தமே 12 நிமிடங்கள்தான் பிரபாகரனை சீமான் சந்தித்தார்” என்கிறார் கொளத்தூர் மணி.
“ஆவணப் படம் ஒன்றை இயக்குவதற்கு சரியான ஆட்கள் தேவை என புலிகள் கேட்டுவந்தனர். சீமான் பெயர் உட்பட பலரது பெயர்கள் அடங்கிய ஒரு பட்டியலை விசிகவின் வன்னிஅரசு கொடுத்தார்.
என்னிடமும் சீமானைப் பற்றிக் கேட்டார்கள். நானும் அவரைப் பரிந்துரைத்தேன். இப்படித்தான் 2008ஆம் ஆண்டு பிப்ரவரியில் இலங்கைக்குச் சென்றார் சீமான். விமானம் மூலம்தான் அவர் அங்கே சென்றார்.
ஆனால், அந்த ஆவணப் படத்தை இயக்க இவரைப் பயன்படுத்தவில்லை. அங்கு போய்ச் சேர்ந்த சில நாட்களிலேயே பிரபாகரனை சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
மொத்தம் 12 – 13 நிமிடங்கள் அவர் பிரபாகரனுடன் இருந்தார். பிரபாகரனைச் சந்திக்கச் செல்லும் போது log – Book ஒன்றில் செல்லும் நேரத்தையும் திரும்பி வரும் நேரத்தையும் குறிப்பிட வேண்டும். அதை வைத்தே இந்தத் தகவலைச் சொல்கிறேன்.
அங்கிருந்த காலகட்டத்தில், புலிகள் குறித்து மற்றவர்கள் பேசுவது, திரும்பி வந்த பிறகு புலிகளுடன் பழகியவர்கள் சொல்வதை வைத்து, அந்த சம்பவங்கள் தனக்கு நடந்ததாகச் சொல்ல ஆரம்பித்தார் சீமான்” என்கிறார் கொளத்தூர் மணி.
“தமிழ்நாட்டில் எந்த இயக்குநரை இதனைச் செய்யச் சொல்லலாம் எனக் கேட்டார்கள். அப்போது நான் புகழேந்தி, ஜான் மகேந்திரன், சீமான் என ஒரு சிறிய பட்டியலைத் தந்தேன்”
ஆவணப் படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பையும் இழந்தார் சீமான்
தான்தான் சீமானின் பெயரை விடுதலைப் புலிகளுக்குப் பரிந்துரைத்தாகச் சொல்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு.
“2005, 2007, 2008 என மூன்று முறை அங்கே சென்றேன். 2005-ஆம் ஆண்டில் செல்லும் போது தமிழீழ தொலைக்காட்சிக்காக சில கருவிகளையும் பிரபாகரன் கேட்டதால் சில பறைகளையும் வாங்கிக்கொண்டு சென்றேன். அந்தத் தருணத்தில் ஒரு ஆவணப் படத்தை இயக்குவதற்கான ஏற்பாடுகளை புலிகள் செய்து கொண்டிருந்தார்கள்.
தமிழ்நாட்டில் எந்த இயக்குநரை இதனைச் செய்யச் சொல்லலாம் எனக் கேட்டார்கள். அப்போது நான் புகழேந்தி, ஜான் மகேந்திரன், சீமான் என ஒரு சிறிய பட்டியலைத் தந்தேன்.
இதற்குப் பிறகு 2008ஆம் ஆண்டு பிப்ரவரியில் சீமான் அங்கு சென்றார். ஆனால், அவர் அந்த ஆவணப் படத்தை இயக்கத் தேர்வாகவில்லை. திரைப்பட இயக்குநர் பயிற்சிக்கும் இவர் தேர்வாகவில்லை. பிரபாகரனை சில நிமிடங்கள் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
அந்தத் தருணத்தில் பிரபாகரனையும் பொட்டு அம்மானையும் குடும்பத்தோடு சந்தித்ததாகச் சொல்கிறார் சீமான். அப்படி நடந்திருக்க வாய்ப்பேயில்லை” என்கிறார் வன்னியரசு.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் புறந்தள்ளுகிறது நாம் தமிழர் கட்சி. இந்த விஷயங்களை வைத்தெல்லாம் நாம் தமிழர் கட்சியை வீழ்த்த முடியாது என்கிறார் அக்கட்சியின் சர்வதேச செய்தித் தொடர்பாளரான சே. பாக்கியராசன்.
“இப்போது சீமான் பெரியாரைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதனால், பிரபாகரனை வைத்துத்தானே அரசியல் செய்கிறீர்கள்,
அதைக் காலி செய்கிறோம் என இந்த ஆட்டத்தைத் துவங்கியிருக்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் வைத்து நாம் தமிழர் கட்சியை வீழ்த்த முடியாது. சந்தோஷ், ராஜ்குமார் போன்றவர்கள் சொல்வது எதுவும் உண்மையில்லை. ஆனால், இதனால் சில நல்ல விஷயங்களும் நடக்க ஆம்பித்திருக்கின்றன.
புலிகள் இயக்கத்தில் இருந்துவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் இதுவரை அமைதியாக இருந்தார்கள்.
ஆனால் சந்தோஷ் பேசியது அவர்களை ஆத்திரப்படுத்தியிருக்கிறது. அவருக்கு எல்லாம் தெரியும் என்பதைப் போலவும் சீமானைப் பற்றி பிரபாகரனுக்கு எதுவும் தெரியாது என்பதைப் போலவும் பேசுகிறார் அவர். அதனால், அவர்கள் தற்போது பேச முன்வருகிறார்கள். நாங்கள்தான் இப்போது வேண்டாம் என சொல்லி வைத்திருக்கிறோம்” என்கிறார் பாக்கியராசன்.
நாம் தமிழர் கட்சியின் அடிப்படை, சீமான் பிரபாகரனைச் சந்தித்ததும் அது தொடர்பான புகைப்படமும்தான் என பெரியாரியவாதிகள் நினைத்து, அதனைக் காலிசெய்ய நினைக்கிறார்கள்.
ஆனால், துவக்கத்தில் வேண்டுமானால் அப்படியிருந்திருக்கலாம். நாம் தமிழர் கட்சி அதனைக் கடந்துவந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதை வைத்து சீமானையோ, எங்களையோ எரிச்சல்படுத்தலாம், வேறு எதுவும் நடக்கப்போவதில்லை என்கிறார் பாக்கியராசன்.
– இது, பிபிசி செய்தி