அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் வானில் பறந்துகொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் ஒன்று, ஹெலிகாப்டருடன் நேருக்கு நேர் மோதியதாக, அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தின் 33வது ஓடுதளத்தை நோக்கி வந்துகொண்டிருந்தபோது, உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக, விமான போக்குவரத்து நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதையடுத்து, வாசிங்டன் டிசியின் அவசர சேவை பிரிவினர், ரீகன் தேசிய விமான நிலையத்துக்கு திரண்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
போடோமேக் ரிவர் பகுதியில் இந்த விமானம் நொறுங்கியுள்ளது, இந்த ஆறு வாஷிங்டன் டிசி வாயிலாக பாய்கிறது என, டிசி தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
தீயை அணைப்பதற்கு உதவும் படகுகள் மூலம், விமானத்தின் பாகங்கள் தேடப்பட்டு வருவதாக, அத்துறை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
“பிஎஸ்ஏ ஏர்லைன்ஸ் பாம்பார்டியர் சிஆர்ஜே700 ரக ஜெட் விமானம், நடுவானில் சிகோர்ஸ்கி ஹெச்-60 ஹெலிகாப்டருடன், ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தின் 33-வது ஓடுதளத்துக்கு வந்துகொண்டிருந்தபோது, உள்ளூர் நேரப்படி இரவு 9.00 மணியளவில் நேருக்கு நேர் மோதியதாக” அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“இந்த விமானம் கன்சாஸின் விசிட்டா பகுதியிலிருந்து புறப்பட்டது.”
Jan 29: American Airlines plane crashed into a helicopter while landing at Reagan National Airport near Washington, DC – this led to reported fatalities and a search and rescue in the Potomac River – flights at the airport have been halted
— Codey369 (@Codeym369) January 30, 2025
“இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) விசாரணை நடத்தும். என்.டி.எஸ்.பி இந்த விசாரணையை வழிநடத்தும்.
“இதுதொடர்பான தகவல்கள் விரைவில் பகிரப்படும்.”
அமெரிக்க விமான-ஹெலிகாப்டர் விபத்து
இந்த விமானத்தில் 60 பயணிகள் இருந்ததாகவும் நான்கு விமான பணியாளர்கள் மற்றும் ராணுவ ஹெலிகாப்டரில் மூன்று அமெரிக்க ராணுவ வீரர்கள் இருந்துள்ளனர்.
தண்ணீரில் குதித்து தேடக்கூடிய காவலர்களும், காவல் படகுகளும் உயிருடன் இருப்பவர்களை மீட்பதற்காக தண்ணீரில் தேடுதல் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த விசாரணையை அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மோசமான சம்பவம் குறித்து தனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவசர கால உதவியை மேற்கொண்டு வரும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.