ஐந்தே நிமிடங்களில் பிரிட்டனில் உள்ள பிளெனம் அரண்மனையிலிருந்து 4.8 மில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 53 கோடி) மதிப்பிலான தங்க கழிவறை இருக்கை 5 நிமிடங்களில் திருடப்பட்டதாக வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் விசாரணைக்காக வந்தது.
ஆக்ஸ்ஃபோர்ட்ஷைரில் உள்ள இந்த அரண்மனையில் உள்ள கலைப்பொருள் கண்காட்சியில் 2019 ஆம் ஆண்டு இந்த தங்க கழிவறை இருக்கை நிறுவப்பட்டது. இது தற்போது வரை முழுவதுமாக பயன்பாட்டில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
பிரிட்டனை சேர்ந்த 39 வயதான மைக்கேல் ஜோன்ஸ் இந்த குற்றச்செயலில் தனக்கு எந்த தொடர்பு இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதேபோல, விண்ட்சர் பகுதியை சேர்ந்த 36 வயதான ஃபிரெட் டோ என்பவரும் 41 வயதான போரா குச்சுக் என்பவரும், திருடப்பட்ட அந்த கழிவறை இருக்கையை இடம் மாற்றியதில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று தெரிவித்தனர்.
ஆக்ஸ்ஃபோர்ட் கிரௌன் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், இந்த தங்க கழிப்பறை பிரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அது இன்னும் மீட்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி அன்று இரண்டு வாகனங்களில் வந்த ஐந்து நபர்கள் அந்த அரண்மனையின் பூட்டிய வாயில்களை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். கையில் சுத்தியலுடன் இருந்த அந்த கும்பல் தான், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டனர் என்று வழக்கறிஞர் ஜூலியன் கிரிஸ்டோஃபர் கேசி நீதிமன்றத்தில் கூறினார்.
இதில் பயன்படுத்தப்பட்ட சுத்தியல் சம்பவ இடத்திலேயே இருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் நடைபெறுவதற்கு 17 மணிநேரத்துக்கு முன்பு அந்த கழிவறை இருக்கையின் புகைப்படம் எடுக்கப்பட்டது என்றும் அந்த புகைப்படத்தை எடுத்தது இந்த திருட்டு சம்பவத்தில் உளவு வேலை பார்த்த மைக்கேல் ஜோன்ஸ்தான் என்றும் வழக்கறிஞர் ஜூலியன் கிரிஸ்டோஃபர் தெரிவித்தார்.
இந்த மொத்த திருட்டு சம்பவமும் வெறும் ஐந்து நிமிடங்களில் நடந்து முடிந்ததாகவும் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த கலைப்பொருள் சிறிய தங்கத் துண்டுகளாக பிரித்து எடுக்கப்பட்டதால் அதை மீட்டெடுக்க முடியவில்லை,”என்று தெரிவித்தார்.
அமெரிக்கா என்று பெயரிடப்பட்ட இந்த 18 கேரட் தங்க கழிப்பறை இருக்கை, இத்தாலி நாட்டை சேர்ந்த கருத்தியல் கலைஞர் மௌரிசியோ கேட்டலனின் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.
அதன் எடை 98 கிலோவாகும். மேலும் அதனை 60 லட்சம் டாலர்களுக்கு (சுமார் ரூ. 52 கோடி) காப்பீடு செய்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த கழிப்பறை உருவாக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டின்போது இருந்த தங்கத்தின் விலை அடிப்படையில் இந்த கழிப்பறையை உருவாக்க 2.8 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 30 கோடி) செலவானது என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
ஜேம்ஸ் ஷீன், ஃபிரெட் டோ மற்றும் போரா குச்சுக் ஆகியோரின் தொலைபேசிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட குறுஞ்செய்திகள், குரல் பதிவேடுகள் மற்றும் ஸ்கிரீன்ஷாட்கள் ஆகியவற்றை கொண்டு விசாரணை நடத்தியதில், 20 கிலோ எடை கொண்ட கழிவறை இருக்கையிலிருந்து ஒவ்வொரு கிலோ தங்கக் கட்டியும் 25,632 பவுண்டுகளுக்கு (சுமார் ரூ. 28 லட்சம்) இவர்கள் மூவரும் விற்பனை செய்ததாக வழக்கறிஞர் தெரிவித்தார்.
குச்சுக் லண்டனில் பாச்சா என்ற நகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கழிவறை இருக்கையை விற்றதில், ஒவ்வொரு கிலோவுக்கும் 3,000 பவுண்டுகள் (சுமார் ரூ. 3 லட்சம்) லாபம் ஈட்டலாம் என்றும் கூறப்பட்டது.
இந்த திருட்டு சம்பவம் நிகழ்ந்த அந்த அரண்மனை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சர் வின்ஸ்டன் சர்ச்சிலின் பிறப்பிடமும் அந்த அரண்மனை தான்.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு