ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பரவிவரும் மர்ம நோயினால் பாதிக்கப்படும் மக்கள் 48 மணிநேரத்தில் உயிரிழக்கின்றனர். இதுவரை 53 பேர் இந்த நோய்க்கு பலியாகியுள்ளனர். 430 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொற்றுநோய் எங்கிருந்து தோன்றியது என்பதை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

காங்கோ நாட்டில் சில வாரங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் மர்மமான நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததை அடுத்து சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பெப்ரவரி 16ஆம் திகதி நிலவரப்படி, ஐந்து வாரங்களில் 431 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 53 பேர் இறந்துவிட்டதாகவும் உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடான காங்கோவின் ஒரு மாகாணத்தில் உள்ள கிராமங்களில் இந்நோய் தொற்றினால் இறப்புகள் பதிவாகியுள்ளன. வௌவால் கறி சாப்பிட்ட மூன்று குழந்தைகளிடம் முதன்முதலில் இந்த நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நோய், விரைவாக மற்றவர்களுக்கும் பரவி வருகிறது.

இந்த நோயின் அறிகுறிகள் காய்ச்சல், வாந்தியுடன் தொடங்கி, பின்னர் ரத்தப்போக்கு ஏற்படும் அளவுக்கு மிகவும் கடுமையானதாக மாறும். அறிகுறிகள் தோன்றிய 48 மணி நேரத்திற்குள் நோயாளிகள் இறந்துவிடுவதாக பிகோரோ வைத்தியசாலையின் வைத்திய இயக்குநர் தெரிவிக்கிறார். நோய் வேகமாகப் பரவுவதும், அறிகுறிகள் தோன்றிய பிறகு நோயாளி விரைவாக இறப்பதும் கவலை அளிப்பதாக அந்தப் பகுதியில் பணிபுரியும் வைத்தியர்கள் கூறுகின்றனர்.

ஒரு சில நாட்களுக்குள் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பது பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைகிறது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நோய்க்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லை. உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமையில் சோதனைகள் நடத்தப்பட்டாலும், கடினமான புவியியல் சூழல் மற்றும் குறைவான வைத்திய வசதிகள் காரணமாக அவர்கள் கடும் சவால்களை எதிர்கொள்வதாக உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த நோய்க்கு, ரத்தப்போக்கை ஏற்படுத்தும் ரத்தக்கசிவு காய்ச்சலின் அறிகுறிகளும் கண்டறியப்பட்டுள்ளன. எபோலா, டெங்கு, மார்பர்க், மஞ்சள் காமாலை போன்ற நோய்களும் இதேபோன்ற அறிகுறிகளைக் கொண்டுள்ளன. இருப்பினும், பத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளைப் பரிசோதித்த பிறகு, இந்த நோய்கள் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தெரியவில்லை.

இதுவரை மேற்கொண்ட சோதனைகள் மூலம் இந்த நோய்க்குக் காரணமான வைரஸ்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. நோய்க்கான உண்மையான காரணத்தையோ அல்லது தொற்று எங்கிருந்து தோன்றியது என்பதையோ கண்டறிய முடியவில்லை என வைத்தியர்கள் கூறுகின்றனர்.

இதனால், நோய்த்தொற்று ஏற்பட்டதா அல்லது ஏதேனும் நச்சுப்பொருள் உடலில் கலந்ததா எனத் தீர்மானிக்க முடியவில்லை. இந்தச் சூழலில் மேற்கொண்டு என்ன செய்ய முடியும் என்பதை ஆராய வேண்டி இருக்கிறது என உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

கடந்த ஆண்டு, காங்கோவில் டிசீஸ் எக்ஸ் (Disease X) என்ற நோய் பரவியது. அந்நோய்க்கு 143 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version