அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையில் வெள்ளை மாளிகையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கடும் வாக்குவாதம் உலக நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஊடகங்களின் முன்னிலையில் இடம்பெற்ற இந்த வாக்குவாதத்தையடுத்து அமெரிக்க – உக்ரேன் உறவு மற்றும் ரஷ்ய- –உக்ரேன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளின் எதிர்காலம் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.
டொனால்ட் ட்ரம்பை பொறுத்தவரை, அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு நெருக்கமானவர் என்பது பகிரங்கமானது. உக்ரேன் யுத்தம் தொடர்பில் அவர் ஏற்கெனவே ஸெலென்ஸ்கியை விமர்சித்திருந்தார்.
கடந்த 18 ஆம் திகதி சவூதி அரேபியாவின் றியாத் நகரில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் உக்ரேன் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை ஸெலென்ஸ்கி விமர்சித்திருந்தார். ‘உக்ரேன் தொடர்பாக, உக்ரேன் இல்லாமல் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்’ என ஸெலென்ஸ்கி கூறினார்.
மறுநாள், தனது ட்ரூத் சோஷல் சமூக வலைதளத்தில் ட்ரம்ப் வெளியிட்ட பதிவொன்றில், தேர்தல் நடத்தாமல் ஆட்சியில் நீடிக்கும் சர்வாதிகாரி என வொலோடிமிர் ஸெலென்ஸ்கியை விமர்சித்திருந்தார்.
எனினும், அடுத்த சில நாட்களில் உக்ரேனுடன் ட்ரம்ப் நெருங்கி வந்தார். உக்ரேனின் கனிம வளங்களை அமெரிக்காவுடன் பகிர்ந்துகொள்வது தொடர்பான ஒப்பந்தம் தொடர்பாக தன்னை ஸெலென்ஸ்கி சந்திக்கவுள்ளதாக ட்ரம்ப் அறிவித்தார்.
கடந்த 27 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை ட்ரம்ப் சந்தித்தபோது, “ஸெலென்ஸ்கி ஒரு சர்வாதிகாரி என இன்னும் கருதுகிறீர்களா” என ட்ரம்பிடம் செய்தியாளர்கள் வினவினர்.
அப்போது, “நான் அதை சொன்னேனா, என்னால் நம்ப முடியவில்லை” எனக் கூறிய ட்ரம்ப், ஸெலென்ஸ்கியை புகழ்ந்தார்.
“ஜனாதிபதி ஸெலென்ஸ்கியுடன் நான் இணைந்து செயற்பட விரும்புகிறேன். நாம் அவருடன் இணைந்து செயற்படுவோம். அந்த ஜனாதிபதிக்கும் எனக்கும் இடையில் சிறந்த உறவு இருக்கிறது” என ட்ரம்ப் பதிலளித்தார். அவ்வேளையில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் அருகில் இருந்தார்.
அதன் பின்னர் உக்ரேனிய கனிமங்கள் தொடர்பாக கையெழுத்திடப்படக்கூடிய உடன்படிக்கை மீது உலகின் கவனம் குவியத் தொடங்கியது.
இந்த ஒப்பந்தத்தில் உக்ரேனுக்கு அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என ஸெலென்ஸ்கி கூறினார். ஐரோப்பிய நாடுகளும் இக்கோரிக்கைக்கு ஆதரவளித்தன.
ஆனால், பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க முடியாது எனக் கூறிய ட்ரம்ப், உக்ரேனில் அரிய கனிமங்களை அமெரிக்க ஊழியர்கள் அகழ்ந்தெடுப்பதானது உக்ரேனுக்கு தன்னியக்கமான பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கும் என்றார்.
இப்பின்னணியில் கடந்த வெள்ளிக்கிழமை (28) வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்த உக்ரேனிய ஜனாதிபதி ஸெலென்ஸ்கியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றார்.
வெள்ளை மாளிகையின் ஓவல் மண்டபத்தில், இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின்போது உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் உக்ரேனிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர். கனிமவள ஒப்பந்ததுக்கு முன்னோடியான சம்பிரதாய கலந்துரையாடலாக இது அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.
சுமார் அரை மணித்தியாலம் சுமுகமாக இக்கலந்துரையாடல் நடைபெற்றது. அதன்பின் அது ஆக்ரோஷமானதாக மாறியது.
உக்ரேன் போரை இராஜதந்திர நகர்வுகள் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் கூறியதையடுத்து சர்ச்சை ஆரம்பமாகியது.
‘அது எந்த வகையான இராஜதந்திரம்’ என வான்ஸிடம் ஸெலென்ஸ்கி கேள்வி எழுப்பினார். அதையடுத்து வாக்குவாதம் முற்றியது.
அப்போது, வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திற்கு வந்து அமெரிக்க ஊடகங்கள் முன்பாகவே வாதிடுவது அவமரியாதை என உப ஜனாதிபதி வான்ஸ் கூறினார். ட்ரம்பின் தலைமைக்கு ஸெலென்ஸ்கி நன்றி தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இவ்விருவருக்கும் இடையில் அமர்ந்திருந்த ஜனாதிபதி ட்ரம்ப், ஜனாதிபதி ஸெலென்ஸ்கியை நோக்கி, “நீங்கள் போதுமான அளவுக்கு பேசிவிட்டீர்கள். நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும். இந்த ஆட்டத்தில் தொடர்ந்து நீடித்திருக்க உங்களிடம் எதும் இல்லை”என்றார்.
“நீங்கள் மூன்றாம் உலகப் போர் உருவாகும் நெருக்கடியுடன் விளையாடுகிறீர்கள். இந்த நாட்டுக்கு மிகவும் அவமரியாதையானது” எனவும் ட்ரம்ப் விமர்சித்தார்.
உக்ரேனின் போர் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்த அமெரிக்காவுக்கு ஸெலென்ஸ்கி போதுமான அளவு நன்றியுள்ளவராக இல்லை என்று ட்ரம்பும், வான்ஸும் குற்றம்சுமத்தினார்.
அமெரிக்காவுக்கான உக்ரேன் தூதுவர் தனது தலையில் கைகளை வைத்துக் கொண்டு அந்த இந்நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்தார். அங்கிருந்த செய்தியாளர்களுக்கும் இந்நிகழ்வு வியப்பை ஏற்படுத்தியது.
இரத்தான நிகழ்வுகள்
இந்த வாக்குவாதத்தின் பின்னர், உக்ரேனிய கனிமங்கள் தொடர்பான உடன்படிக்கை கையெழுத்திடும் வைபவமும், இரு ஜனாதிபதிகளும் கூட்டாக நடத்தவிருந்த செய்தியாளர் மாநாடும் இரத்துச் செய்யப்பட்டன.
அதன்பின் வெளியே காத்திருந்த வாகனத்தில் ஏறிய ஜனாதிபதி ஸெலென்ஸ்கி, வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார். அவர் சமாதானத்தை விரும்பினால் திரும்பி வரலாம் என ட்ரம்ப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
வெளியேற்றம்
ஓவல் அலுவலக மோதலின் பின்னர் ஸெலென்ஸ்கி மற்றும் ஏனைய உக்ரேனிய பிரதிநிதிகள் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறுமாறு கோரப்பட்டதாக ட்ரம்பின் ஊடக செயலாளர் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகை சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி அளித்த செவ்வியொன்றில், மேற்படி சந்திப்பு கடினமாக இருந்தபோதிலும், அமெரிக்க, உக்ரேன் உறவு மீட்கப்படக்கூடியது என தான் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்பின் எக்ஸ் வலைதளத்தில் ஸெலென்ஸ்கி வெளியிட்ட பதிவில், ஜனாதிபதி ட்ரம்புக்கும், அமெரிக்க பாராளுமன்றத்துக்கும், அமெரிக்க மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ‘உக்ரேன் நிரந்தர சமாதானத்தை விரும்புகிறது. நாம் அதற்காக செயற்படுகிறோம்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிரொலிகள்
ட்ரம்பின் குடியரசுக் கட்சி பிரமுகர்கள் பலர், வெள்ளை மாளிகை மோதல் தொடர்பில் ஸெலென்ஸ்கியை விமர்சித்துள்ளனர். அவர் மன்னிப்பு கோர வேண்டும் என அமெரிக்க இராஜங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ளனர். ஆனால், ஜனநாயகக் கட்சியினர் ஸெலென்ஸ்கியை ஆதரித்துள்ளனர்.
அதேவேளை, அமெரிக்காவின் நட்பு நாடுகள் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் ஸெலென்ஸ்கிக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
கனடா தொடர்ந்தும் உக்ரேனுக்கு ஆதரவளிக்கும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். “உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நியாயப்படுத்த முடியாதது. ஜனநாயகம், சுதந்திரம், இறையாண்மை ஆகியவற்றுக்கான அவர்களின் போராட்டமானது நம் அனைவருக்கும் முக்கியமானது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப், ஸெலென்ஸகி இருவருடனும் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தொலைபேசியில் உரையாடினார் என பிரித்தானிய பிரதமரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உக்ரேனுக்கு அவர் தனது ஆதரவை வெளிப்படுத்தியதுடன், உக்ரேனின் இறையாண்மை, பாதுகாப்பை உறுதிபடுத்துவதன் அடிப்படையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறார் எனவும் அப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர்களான ஊர்சுலா வொன் டேர் லெயென், ஐரோப்பிய பேரவையின் தலைவர் அன்டோனியோ கொஸ்டா ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ‘வலிமையாக, துணிவாக, அச்சமின்றி இருங்கள்’ என ஸெலென்ஸ்கியை கோரியுள்ளனர்.
உக்ரேன் யுத்தத்தில் ரஷ்யாவே ஆக்கிரமிப்பாளர் என பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் கூறியுள்ளார்.
ஜேர்மனியின் சான்ஸ்லர் ஒலாவ் ஷோல்ஸ், புதிய சான்ஸ்லராக பதவியேற்கவுள்ள பிரெடரிக் மேர்ஸ் ஆகியோரும் உக்ரேனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
உக்ரேனுக்கு அவுஸ்திரேலியா தேவையான வரை தொடர்ந்தும் ஆதரவளிக்கும் பிரதமர் அன்டனி அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.
‘உக்ரேனிய நண்பர்களே நீங்கள் தனிமையாக இல்லை’ என போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.
ஸ்பானிய பிரதமர் பெட்ரோ சான்சஸ், நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கோவ் ஆகியோரும் உக்ரேனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் கருத்து
இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் ட்ரம்புக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது. “ஜனாதிபதி ட்ரம்பும் உப ஜனாதிபதி வான்ஸும், ஸெலென்ஸ்கியை அடிக்காமல் பொறுமை காத்துள்ளனர்” என ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மரியா ஸக்கரோவா தெரிவித்துள்ளார்.
ட்ரம்புக்கும், புட்டினுக்கும் நெருக்கமான ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஒர்பன், சமாதானதுக்காக துணிச்சலுடன் செயற்படும் ட்ரம்பை பாராட்டுவதாக தெரிவித்துள்ளார்.
ஆர்.சேதுராமன்