– உதவியாளர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் கைது
– வாகனத்தின் முன்பகுதியில் சிதறிக் கிடந்த கஞ்சா
கொடிகாமம் திசையிலிருந்து பருத்த்தித்துறை நோக்கி சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிய டிப்பர் வாகனம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இன்று (02) காலை பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெட்டே சந்தியில் பகுதியில் வாகனம் ஒன்றினை பொலிஸார் நிறுத்த முற்பட்டபோது , பொலிசாரின் கட்டளையை மீறி வாகனத்தை சாரதி தொடர்ந்து செலுத்தி செல்ல முற்பட்டுள்ளார்.
இதன்போது, டிப்பர் வாகனத்தின் சாரதி மற்றும் அதன் உதவியாளர் வாகனத்தை கைவிட்டு, கறுப்புநிற பைகள் சிலவற்றை எடுத்துக் கொண்டு ஓடியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதன் பின்னர் குறித்த டிப்பர் வாகனதை சோதனையிட்ட போது, சந்தேகநபர்கள் பயணித்த முன்பகுதியில் அங்குமிங்கும் கஞ்சா இருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து பருத்தித்துறை, மந்திகை வைத்தியசாலையில், துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் நபர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த நபர், மேற்படி டிப்பர் வாகனத்தின் உதவியாளர் என தெரிய வந்துள்ளது.
கைதான சந்தேகநபர் 19 வயதான, தர்மபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்றுள்ளதாக, தற்போது வரை மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்துள்தோடு, தப்பிச் சென்ற மற்றைய சந்தேகநபரை கைது செய்ய பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.