வடமராட்சி கிழக்கு, குடத்தனை பொற்பதியில் 14 வயது சிறுமி ஒருவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பாக, தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பருத்தித்துறை சட்ட வைத்திய அதிகாரி, மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

குறித்த பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி ஒருவர், நேற்று முன்தினம் (23) மாலை, அயலில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார்.

இதன்போது, இனிப்பு வகையை கையாடியதாகக் கூறி, கடையின் உரிமையாளரான ஒரு பெண், சிறுமியை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உடல் காயங்களுக்கு உள்ளான சிறுமி, அன்று இரவே பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை சட்ட வைத்திய அதிகாரி, சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டறிந்து, தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, வைத்தியசாலையில் உள்ள பருத்தித்துறை பொலிஸார் மூலம் மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மருதங்கேணி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றபோது, அவர் மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தாக்கியதாகக் கூறப்படும் பெண்ணின் வீட்டிற்கு பொலிஸார் சென்றபோது, வீடு பூட்டியிருந்ததால், தொலைபேசி மூலம் அவருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த பொது அமைப்பு ஒன்று, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் தொலைபேசி வழியாக முறையிட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version