கடந்த மாதம் டொனால்ட் ட்ரம்ப் வீடியோவொன்றை வெளியிட்டார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோ அது. கரையோர நகரம்.

அதில் அழகான கட்டடங்கள். செல்வம் கொழிக்கும் செழிப்பான வாழ்க்கை. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பண நோட்டுக்கள் பறக்க சிறுவர்கள் ஆடிப்பாடுகிறார்கள். நகரின் நடுவே தங்கமுலாம் பூசப்பட்ட பெருஞ்சிலை. சிலையாக நிற்பவர் டொனல்ட் ட்ரம்ப்.

அரைகுறை ஆடையணிந்த அழகியுடன் ட்ரம்ப் ஆடிப்பாடுகிறார். கரையோரத்தில் பெஞ்சமின் நெதன்யாஹுவுடன் ஜட்டி அணிந்து காற்று வாங்குகிறார். வழமையான தமிழ்த் திரைப்பட நாயகர்கள் போல, கம்பீரமாக நடந்து வரும் இலோன் மஸ்க்கும் வீடியோவில் உண்டு.

வீடியோ லாஸ் வேகாஸ் பற்றியது அல்ல. காஸாவின் எதிர்காலம் பற்றிய ட்ரம்பின் கனவை சித்தரிப்பது. இந்த நிலப்பரப்பின் பெயர் ‘ட்ரம்ப் காஸா’

ஆண்டாண்டு காலம் உரிமைகள் மறுக்கப்பட்டு, சொந்த மண்ணில் வேலி போட்டு அடைக்கப்பட்ட மக்கள் கூட்டம். அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வோம் என்பதை விடவும், கழிந்து செல்லும் தருணத்தைத் தாண்டி உயிருடன் இருப்போமா என்ற கேள்வி மேலெழுகின்ற அவலநிலை.

இந்த மக்களின் வாழும் உரிமையை சிதைத்து, அகதிகளாக்கி, இவர்களின் முழுமை பெறாத கல்லறைகளுக்கு மேல் தனக்கு சிலையெழுப்பி, தம்மைக் கடவுளாக சித்தரித்துக் கொள்ளும் வல்லரசு தேசத்தின் தலைவன்.

காஸாவில் வாழும் பலஸ்தீன மக்களை இதை விடவும் மோசமாக கேவலப்படுத்தி விட முடியுமா? அதிகாரவெறியுடன் சுயபிம்பத்தை ஊதிப் பெருக்கிக் கொள்ளும் ட்ரம்ப் போன்றவர்களால் உலக ஒழுங்கு தீர்மானிக்கப்படுகையில், வேறென்ன நடக்கும்?

காஸா மக்கள் மீது அமெரிக்கத் தலைவர்கள் வலிந்து திணித்த போர் நிறுத்தம் தகர்ந்து கிடக்கிறது. ஹமாஸ் இயக்கம், இஸ்ரேலியத் தலைவர்களுடன் எப்படிப் பேசுவது? இன்று காஸாவுக்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் அனுப்பப்படுவது கிடையாது. மின்சாரம் இல்லை.

கடந்த 17ஆம் திகதி தொடக்கம் இஸ்ரேலியப் படைகள் நடத்தி வரும் வான் வழித் தாக்குதலில் காஸா மண் மீண்டும் கொலைக்களமாக மாறியிருக்கிறது. காஸா போர் நிறுத்தத்தை தமக்கு கிடைத்த வெற்றியாக சித்தரித்து தம்மை சமாதானப் பறவையாக காட்டிக் கொண்ட டொனால்ட் ட்ரம்ப், இன்று உக்ரேன் பக்கம் திரும்பியிருக்கிறார்.

உக்ரேனிய, ரஷ்யத் தலைவர்களுடன் போர் நிறுத்தம் பற்றி பேசி, சமாதான நாடகம் ஆடுகையில், காஸாவில் பசியும் பட்டினியும் தாண்டவமாடுகின்றன இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. அத்துடன் நின்று விடுகிறாரா, ட்ரம்ப்? அதுதான் இல்லை. யேமனில் ஹவுத்தி இயக்கத்திற்கு எதிராக தாக்குதல்கள்.

உக்ரேனில் சமாதானம் பேசிக் கொண்டு, ஏன் யேமனில் குண்டுமழை பொழிய வேண்டும்? இதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன.

பொய்த்துப் போன ‘ட்ரம்ப்-காஸா’ கனவுலகத்தில் இருந்து உலகின் பார்வையை திசை திருப்புவது, அரசியல் ரீதியாக பிழைத்துக் கொள்ள நெதன்யாஹுவிற்கு ஒரு வாய்ப்பளிப்பது, ஹவுத்தி இயக்கத்தை தாக்குவதன் ஊடாக ஈரானைத் தண்டிப்பது.

முதற்காரணம் எளிமையானது. அதை விபரிக்க வேண்டிய அவசியம் கிடையாது. இரண்டாவது காரணம், இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாஹு எதிர்கொள்ளும் சோதனைகளுடன் தொடர்புடையது. பெஞ்சமின் நெதன்யாஹு கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பதவியில் இருக்கிறார். இந்தக் கட்சிகள் தீவிர வலது சாரி போக்கை அனுசரிப்பவையாக உள்ளன.

காஸாவில் போர் நிறுத்தம் சாத்தியப்பட்டு, பணயக் கைதிகள் பரிமாறப்பட்டு, இஸ்ரேலியப் படைகள் முற்றுமுழுதாக வெளியேறக் கூடிய சூழ்நிலையை வலதுசாரிக் கட்சிகள் விரும்பப் போவதில்லை.

இந்தப் போர்வெறி பிடித்த சக்திகள், ஹமாஸ் இயக்கத்தை இல்லாதொழித்து விட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து மாறப் போவதும் கிடையாது.

வலதுசாரிக் கூட்டணிகள் ஆதரவை விலக்கிக் கொண்டால் நெதன்யாஹுவின் பாடு அதோ கதி தான். அது மாத்திரமல்ல. போர்க் குற்றங்களைப் புரிந்தவராக சர்வதேச நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நெதன்யாஹுவிற்கு எதிராக உள்ளூரிலும் வழக்குகள் உள்ளன.

மொத்தமாக மூன்று வழக்குகள். தமது பிம்பத்தை ஊதிப் பெருக்கும் நோக்கத்திலான பிரசாரத்தை முன்னெடுத்த செய்தி நிறுவன உரிமையாளர் ஒருவருக்கு சலுகைகள் வழங்கினார் என்ற ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கும் அதிலொன்று.

ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் ஏற்படுத்திய எதிர்மறைத் தாக்கத்தில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வழி வேண்டும். கூட்டணிக் கட்சிகளையும் சமாளித்துக் கொண்டு, குற்றச்சாட்டுக்கள் மீதான கவனத்தைத் திசை திருப்புவதற்கு பொருத்தமான ஒரே வழி என்ன? மீண்டும் காஸாவை கொலைக்களமாக மாற்றி விடுவது தான்.

‘ட்ரம்ப்-காஸா’வில், ஜட்டி அணிந்து கொண்டு நெதன்யாஹுவுடன் கடற்கரையில் குளிர்பானம் அருந்துவதைப் போன்று ட்ரம்ப் வெளியிட்ட வீடியோ காட்சியின் சூட்சுமம் புரிகிறதா? அடுத்த கணத்தில் உயிர் வாழ்தல் என்பது காஸா மக்களின் பிரச்சினை என்றால், ட்ரம்பிற்கும், நெதன்யாஹுவிற்கும் இந்த மக்கள் அரசியல் பகடைக்காய்கள். அங்கும் இங்கும் உருட்டுவார்கள்.

ட்ரம்ப்புக்கு அமெரிக்க மக்கள் முன்னிலையில் தம்மை சமாதானப் புறாவாக காட்டிக் கொள்ளவும் வேண்டும். ஆனால், தமது அதிகார பிம்பத்தை இழக்கவும் விருப்பம் இல்லை. பின்னையதற்காகவே அவர் ஈரானை பிரச்சினைக்குள் இழுக்கிறார்.

ஈரானின் அணுசக்தி உடன்படிக்கை பற்றி பேரம் பேசுவோம். ஒன்றாக புகைப்படம் பிடிப்போம் இல்லாவிட்டால் உங்கள் மீது குண்டுமழை பொழிவேன் என்ற தொனியை ட்ரம்பின் குரலில் காணலாம்.

ஈரானை நேரடியாக தாக்க முடியாது. இத்தகைய தாக்குதல் மோசமான மத்திய கிழக்கு முழுவதிலும் மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். ஈரான் நலிவடைந்துள்ள சந்தர்ப்பத்தில், ட்ரம்ப்பைப் பொறுத்தவரையில் யேமனில் ஈரானின் ஆதரவுடன் இயங்கும் கிளர்ச்சிக் குழுவைத் தாக்குவது நல்லதொரு மாற்றுத் தீர்வு.

ஈரானில் பணவீக்கம் உச்சத்தைத் தொட்டுள்ளது. வேலைவாய்ப்பு தீவிரம் பெற்றுள்ளது. நாணயத்தின் பெறுமதி குறைந்து வருகிறது. இது தவிர, சிரியாவில் பஷார் அல் அசாத்தின் வீழ்ச்சி, லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கம் ஒடுக்கப்பட்டமை, ஈராக்கில் செல்வாக்கு செலுத்த முடியாத நிலை போன்றவை ஈரானை பாதித்துள்ளன.

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் படைப்பலத்திற்கு சவால் விடுக்கக்கூடிய அதிகாரம் பொருந்திய நாடாக ஈரானை தொடர்ந்தும் கருத முடியாத சூழ்நிலை. இந்த சமயத்தில், அணுசக்தி உடன்படிக்கை பற்றி பேச்சுவார்த்தை நடத்துமாறு ஈரான் மீது அழுத்தம் தொடுப்பதற்காக செங்கடலில் ஹவுத்தி கப்பல்களை அமெரிக்கா தாக்குவதாக கருத முடியும்.

ஈரானின் ஆன்மீகத் தலைவர் அமெரிக்காவுடன் பேசும் யோசனையை ஆரம்பத்திலேயே நிராகரித்துள்ளார்.

அது ஏமாற்று வேலை என்பதை வெளிப்படையாகவே அவர் கூறியுள்ளார். இத்தகையதொரு பின்புலத்தில் இஸ்ரேலிய படைகள் மேற்குக் கரையில் இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கின்றன. அங்கு குடியிருப்புக்களை அமைத்து தமது ஆதிக்கத்தை வலுப்படுத்துவது இஸ்ரேலின் நோக்கமாக இருக்கலாம்.

இஸ்ரேலின் நகர்வு, மேற்குக் கரையையும் முற்றுமுழுதாக இணைத்துக் கொண்டு, காஸா மீதான கவனத்தை திசைதிருப்ப வழிவகுக்கவும் கூடும். ட்ரம்ப்பைப் பொறுத்தவரையில், காஸா போர் நிறுத்தம் என்பது குறுகிய கால வெற்றி.

ஆனால், அதன் தோல்விக்கு காரணம் ஹமாஸ் தானென அந்த இயக்கத்தின் மீது அவர் பழிபோடுவார். யேமன் மீதான வான் வழித் தாக்குதல்கள் அமெரிக்காவின் வல்லமையை வெளிப்படுத்தி உள்நாட்டில் ஆதரவு திரட்டும் முயற்சி என்பதில் சந்தேகம் இல்லை.

சுருக்கமாக கூறுவதாயின், இன்று காஸாவின் போர் நிறுத்தம் முறிவடைந்து, மீண்டும் வன்முறைகளும் மனிதப்பேரவலமும் தீவிரம் பெற்றுள்ளது. ஈரான் மீது அழுத்தம் தொடுக்க அமெரிக்கா யெமன் மீது படைப்பலத்தைப் பிரயோகிக்கிறது. ஈரான் அசைந்து கொடுக்கப் போவதில்லை என்பது திண்ணம்.

இந்த நிலவரமானது மத்திய கிழக்கின் சிக்கலான தன்மையையும், பதகளிப்பான அரசியல் அசைவியக்கங்களையும் கோடிட்டுக் காட்டுகிறது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை தீர்வு தெரியவில்லை என்பது தான் கவலைக்குரிய விடயம்.

-சதீஷ் கிருஷ்ணபிள்ளை-

Share.
Leave A Reply

Exit mobile version