மார்ச் 28 அன்று மியான்மர் நாட்டின் மையப் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 1002 பேர் உயிரிழந்ததாகவும், 2,376 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் ராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

30 பேரைக் காணவில்லை. மாண்டலே நகரில் மட்டும் 694 பேர் உயிரிழந்துவிட்டதாக மியான்மரின் ராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் தடைபட்டதால் மியான்மரின் பெருநகரங்கள் பலவும் இருளில் மூழ்கின. மியான்மர் நாட்டின் ராணுவம் மற்றும் இதர துறைகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

தாய்லாந்திலும் நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நிலடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியா மற்றும் உலக நாடுகள் பலவும் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளன.

மியான்மரை உலுக்கிய நிலநடுக்கம்

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றின்படி, நிலநடுக்கத்தின் மையப்புள்ளி மியான்மர் நகரான சர்காயிங்-ன் வடமேற்கில் 16 கிலோமீட்டரில், அமைந்திருந்தது. இந்த பகுதி தலைநகர் நேபிடோவிற்கு வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

மியான்மரில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டு 12 நிமிடங்களே ஆன நிலையில், மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரண்டாவது ஏற்பட்ட நிலநடுக்கம் 6.4 ஆக பதிவானது. இதன் மையம், சர்காயிங்கிற்கு தெற்கே 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

நேபிடோவில் சாலைகள் சிதைந்திருப்பதை படங்கள் காட்டுகின்றன. நாட்டின் ராணுவ அரசு 6 பகுதிகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆங் சாங் சூச்சி என்ன ஆனார்?

மியான்மரில் ராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சாங் சூச்சி இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்படவில்லை என்று பிபிசியின் பர்மியன் சேவைக்கு சிறைத்துறை அதிகாரிகளுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். தலைநகரில் உள்ள சிறைச்சாலையில் சூச்சி பாதுகாப்பாக உள்ளார் என்று அந்த தகவல்கள் கூறுகின்றன.

2021-ஆம் ஆண்டு ராணுவப் புரட்சியால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட சூச்சி, அது முதல் அங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 2023-ம் ஆண்டு வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்ட அவர் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தாய்லாந்தில் 6 பேர் பலி

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அண்டை நாடுகளான தாய்லாந்து மற்றும் சீனாவிலும் உணரப்பட்டது. தாய்லாந்தில் முழுமையாக கட்டி முடிக்கப்படாத 30 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது.

இதில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளதாக தாய்லாந்தில் உள்ள தேசிய அவசர கால மருத்துவ சேவை மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக 43 பேரை காணவில்லை என தெரிவித்திருந்தது.

கட்டடம் இடிந்து விழுந்தபோது சுமார் 320 தொழிலாளர்கள் அந்த இடத்தில் இருந்ததாகவும், மின் தூக்கியில் 20 பேர் சிக்கிக்கொண்டிருப்பதாகவும் முகநூல் பதிவொன்றில் தெரிவித்திருந்தது.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்து தெளிவில்லாத நிலையில், சம்பவ இடத்திலேயே ஒரு கள மருத்துவமனை அமைக்கப்பட்டு மீட்புப் பணியாளர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காணொளிக் குறிப்பு, பாங்காக்: சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த 30 மாடி கட்டடம்

சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில் பாங்காக்கில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். இரண்டாம் நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்ற சூழலில், தாய்லாந்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் ஒரு கட்டடத்தின் கூரை மீது இருந்த தண்ணீர் தெறித்து பல தளங்களை தாக்கி இறுதியாக கீழே தெருக்களில் ஊற்றியது.

பிபிசி குழுவினர் பாங்காங்கில் கட்டடங்கள் அசைந்ததாக தெரிவிக்கின்றனர். மேலும், மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

நில அதிர்வு தலை சுற்றலை தருமளவு இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version