இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடற்படை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மீளவும் உறுதி செய்து கொள்வதும், பாதுகாப்பு பங்காளித்துவத்தை வலுப்படுத்திக் கொள்வதற்கும் தான், அட்மிரல் சாமுவேல் பப்பாரோ இந்த பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
அமெரிக்காவின் இந்தோ- பசிபிக் கட்டளைப் பீடத்தின் தளபதி அட்மிரல் சாமுவேல் பப்பாரோ, மூன்று நாட்கள் பயணமாக கொழும்புக்கு வந்திருந்த சூழலில்- இலங்கையில் அமெரிக்க புலனாய்வு அமைப்பான, சி.ஐ.ஏ. யின் இரகசிய தளம் இயங்கியதான தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.
அமெரிக்காவிலும் இலங்கையிலும் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்த பின்னர், அமெரிக்காவின் உயர்நிலைப் படைத்தளபதி ஒருவர், கொழும்புக்கு மேற்கொண்டுள்ள முதலாவது பயணமாகும் இதுவாகும்.
2018ஆம் ஆண்டு இந்தோ- பசிபிக் கட்டளைப்பீடமாக மறுபெயரிடப்பட்ட பின்னர், அதன் கவனத்துக்குரிய இடமாக இலங்கை மாற்றமடைந்தது. ஏனென்றால், அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் மூலோபாயத்தில் இலங்கைக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த மூலோபாயத்தில், இலங்கையையும் ஒரு பங்காளித்துவ நாடாக இணைத்துக் கொள்வதில் அமெரிக்கா ஆர்வம் காட்டி வந்திருக்கிறது. அதற்கான முன்முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டிருந்தாலும், இரண்டு நாடுகளும் பாதுகாப்பு ரீதியாக நெருக்கத்துக்கு வருவதற்கு அவ்வப்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் தடையாக இருந்து வந்திருக்கின்றன.
இலங்கையில் இடம்பெறும் ஆட்சி மாற்றங்கள் அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவுகளை சீரான முறையில் முன்னோக்கி நகர்த்துவதற்கு இடையூறாக இருந்து வந்திருக்கிறது.
ஆனாலும், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள், பொறுப்புக்கூறல் கரிசனைகளுக்கு மத்தியிலும், இலங்கையின் கடற்படையை வலுப்படுத்துவதற்கு இந்தோ -பசிபிக் கட்டளை பீடத்தின் ஊடாக அமெரிக்கா பெரியளவில் பங்களிப்பை வழங்கியிருந்தது.
இன்று இலங்கைக் கடற்படை வலுவான ஒரு ஆழ்கடல் ரோந்து கப்பல்களை கொண்ட அணியாக இருப்பதற்கும்- மரைன் படைப்பிரிவை கொண்டிருப்பதற்கும் அமெரிக்காவே மூல காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தியப் பெருங்கடலின் ஊடாக, கிழக்கு – மேற்கு இடையிலான கப்பல் பாதையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, இலங்கை கடற்படையை பயன்படுத்துவதற்கு, அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது.
அதனை அடிப்படையாக வைத்தே, இந்த கப்பல் பாதைக்கு மிகநெருக்கமாக இருக்கும் இலங்கையின் கடற்படையை அது வலுப்படுத்தி வந்திருக்கிறது. இப்போதும், இந்தோ- பசுபிக் கட்டளைப் பீடத்தின் கட்டளை தளபதி அட்மிரல் சாமுவேல் பப்பாரோ கொழும்புக்கு பயணம் மேற்கொண்டிருப்பதற்கான அடிப்படை காரணமும் அதுதான்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடற்படை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மீளவும் உறுதி செய்து கொள்வதும், பாதுகாப்பு பங்காளித்துவத்தை வலுப்படுத்திக் கொள்வதற்கும் தான், அட்மிரல் சாமுவேல் பப்பாரோ இந்த பயணத்தை மேற்கொண்டிருந்தார். அவர் இலங்கையில் மேற்கொண்டுள்ள பயணத்தின் போது, அமெரிக்க நலன்களை உறுதிப்படுத்துவது குறித்த பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கிறார் .
தற்போதைய அரசாங்கம் விரும்பினாலும் சரி விரும்பாத போனாலும் சரி – இதனை தட்டிக் கழிக்க முடியாத நிலையிலே இருக்கிறது . ஏனென்றால், அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பும் உறவுகளும் நீண்ட பாரம்பரியத்தை கொண்டது அதனை வெளிப்படுத்தும் வகையிலேயே, அண்மையில் ஒரு இரகசிய ஆவணம் வெளிவந்திருக்கிறது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன் எவ். கென்னடி 1963 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். அந்தப் படுகொலை சதித்திட்டம் தொடர்பாக இன்றுவரை பல்வேறு கேள்விகள் இருந்து வருகின்றன. அதனை அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ. திட்டமிட்டு மேற்கொண்டதாகவும் ஊகங்கள் வெளியாகின.
இந்த படுகொலை தொடர்பாக காலத்துக்கு காலம் பல்வேறு ஊகங்கள், தகவல்கள் வெளியாகிக் கொண்டே வந்தன. கொலை இடம்பெற்று கிட்டத்தட்ட 62 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இப்போதும் கூட அந்த கொலை தொடர்பான தேடல்களும் , விசாரணைகளும் நீடித்து வருகின்றன.
இவ்வாறான நிலையில் இந்த படுகொலை தொடர்பாக இதுவரை காலமும் இரகசியமாகப் பேணப்பட்டு வந்த ஆவணங்களை பகிரங்கப்படுத்த உத்தரவிட்டிருந்தார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.
இதற்கமைய, அமெரிக்க தேசிய ஆவண காப்பகம் 2,182 பி.எவ்.எவ். பதிவுகளை பகிரங்கப்படுத்தியிருக்கிறது. 63,400 பக்கங்களைக் கொண்டதாக இந்த ஆவணங்கள் அமைந்திருக்கின்றன.
முன்னதாக ட்ரம்ப் 80 ஆயிரம் பக்கங்களை கொண்ட இரகசிய ஆவணங்களை வெளியிடப் போவதாக கூறியிருந்தார். எஞ்சிய ஆவணங்கள் வெளியிடப்படுமா என்பதை ஆவண காப்பகம் இன்னமும் உறுதி செய்யவில்லை.
சுமார் 6 மில்லியன் பக்கங்களைக் கொண்ட இந்த விசாரணை ஆவணங்களில் பெரும்பாலானவை ட்ரம்பின் உத்தரவுக்கு முன்னரே, வெளியிடப்பட்டுவிட்டன.
தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களில் ஜோன் எவ். கெனடியின் படுகொலை தொடர்பான முக்கியமான விவரங்கள் ஏதும் இடம்பெறவில்லை என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், இந்த ஆவணங்களில் ஒன்றில், அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ யின் இரகசிய தளங்கள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.
உலகம் முழுவதும் ‘பிளாக் சைட்ஸ்’ (black sites) எனப்படும் இரகசிய தளங்களை சி.ஐ.ஏ கொண்டிருந்திருக்கிறது.
என்.ஈ. டிவிஷன் என வகைப்படுத்தப்பட்டுள்ள பிரிவில், துருக்கியின் அங்காரா மற்றும் இஸ்தான்புல், எகிப்தின் ஏதென்ஸ், லெபனானின் பெய்ரூத், இந்தியாவின் கொல்கத்தா மற்றும் புதுடெல்லி, பாகிஸ்தானின் ராவல்பிண்டி, ஈரானின் தெஹ்ரான் ஆகியவற்றுடன், இலங்கையில், கொழும்பு நகரில், சி.ஐ.ஏ-யின் இந்த இரகசிய தளங்கள் இருந்ததாக அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தந்த இடங்களில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களிலேயே பெரும்பாலான இந்த இரகசிய தளங்கள் இயங்கியிருக்கின்றன. பல்வேறு புலனாய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இந்த ‘பிளாக் சைட்ஸ்’ உருவாக்கப்பட்டிருக்கின்றன.
தீவிரவாதிகளை தடுத்து வைத்தல், விசாரணைக் உட்படுத்தல் போன்றவற்றுக்கு இந்த தளங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன இந்த தளங்கள் அந்தந்த நாடுகளின் சட்டக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாக இருந்திருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தளங்களை பேணியதன் மூலம், அமெரிக்கா உலகளாவிய ரீதியாக புலனாய்வு தகவல் சேகரிப்பு கட்டமைப்புகளை வைத்திருந்தது.
அதற்கு அப்பால், புலனாய்வு நடவடிக்கைகளின் மூலம் அது தனது எதிரிகளை கட்டுக்குள் வைப்பதற்கும் பயன்படுத்தியிருந்தது. இந்தத் தளங்கள் எந்தக் காலப்பகுதியில் இருந்து எந்த காலப்பகுதி வரை – இயங்கின என்பது பற்றிய தெளிவான தகவல்கள், தற்போது வெளியாகியுள்ள ஆவணங்களில் இதுவரையில் கிடைக்கவில்லை.
இலங்கையில் அமெரிக்கா தளம் அமைக்க விரும்புவதாக ஒரு நம்பிக்கை நீண்டகாலமாக இருந்து வந்தது. அந்த சந்தேகம் இந்தியாவுக்கும் இருந்தது. அப்பொழுது இந்தியா, அமெரிக்காவுடன் நெருங்கிய உறவை கொண்டிருக்கவில்லை. அது சோவியத் ரஷ்யாவின் பக்கம் இருந்தது.
1970 களுக்கு பின்னர் இலங்கையில் அமெரிக்கத் தளம் அமையப் போகிறது என்ற இந்தியாவின் கவலைகளின் தொடர்ச்சியாகவே, 1987 ஆம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
ஆனால், இலங்கையில் தளம் அமைக்கும் திட்டம் எதையும் அமெரிக்கா கொண்டிருக்கவில்லை என அந்த நாட்டின் உயர் அதிகாரிகள் பலரும் கூறியிருந்தார்கள்.
இப்பொழுது வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, சி.ஐ.ஏ யின் தளம் ஒன்று இரகசியமாக கொழும்பில் இயங்கியிருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.
ஆனால், அது யாரை மையப்படுத்தி இயங்கியது, யாரை உளவு பார்க்கும் நோக்கில் செயற்பட்டது, யாரையேனும் அது விசாரணைக்கு உட்படுத்தியதா என்பன போன்ற கேள்விகளுக்கான பதில்கள் இல்லை.
அதற்குப் பின்னரான காலகட்டத்திலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் இலங்கையில் தமது தேவைகளை நிறைவேற்றி வந்திருக்கின்றன. அல் கைதா அமைப்புக்கு எதிராக அமெரிக்கா சர்வதேச அளவில் வேட்டையை நடத்தியபோது, அந்த அமைப்பைச் சேர்ந்த பலர் கடத்தப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடாக கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
அப்போது சிலர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர் என்ற குற்றச்சாட்டுகளும் இருந்தன. அதுபோல, ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்த பிறகு, சி.ஐ.ஏ.யின் தலைவராக இருந்த வில்லியம் பேர்ன்ஸ், கொழும்புக்கு ஒரு இரகசிய பயணத்தை மேற்கொண்டார் என்ற தகவல்களும் வெளியாகி இருந்தன. அதனை இலங்கை அரசாங்கமோ அமெரிக்க அரசாங்கமோ உறுதிப்படுத்தவும் இல்லை, நிராகரிக்கவும் இல்லை.
எனவே, இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில், ஒருபோதும் இரகசிய புலனாய்வு செயற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் இருக்கவில்லை எனக் கூறமுடியாது
எனவே, சி.ஐ.ஏயின் தளம் ஒன்று கொழும்பில் இருந்திருக்கவில்லை என்பதை யாரும் நிராகரிக்கப் போவதில்லை. ஆனால் அது ஏன் செயற்பட்டது? யாரை இலக்கு வைத்து இயங்கியது? உள்நாட்டில் தலையீடுகளை மேற்கொண்டதா? என்பது போன்ற பல கேள்விகளுக்கான பதில்கள் தான் இனித் தேடப்படும்.
-சுபத்திரா-