காதலிக்க மறுத்ததால் உயிரோடு தீவைத்து கொளுத்தப்பட்ட 17 வயது சிறுமி உயிரிழந்ததாகவும் இதுதொடர்பாக 2 இளைஞர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார், இவரது மனைவி காளியம்மாள். இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுடைய மகள் மதுமிதா (17). இவர் கடந்தாண்டு பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்தார். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் அடிக்கடி தன்னை காதலிக்குமாறு கூறி மதுமிதாவுக்கு தொல்லை கொடுத்ததாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, காளியம்மாள் அளித்த புகாரின் பேரில் பரமக்குடி போலீசார் சந்தோஷை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதையடுத்து, மதுமிதாவை தன் தாயாரின் ஊரான எட்டயபுரம் அருகே உள்ள கீழநம்பிபுரத்துக்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 23-ம் தேதி மாலையில் தன் நண்பர் முத்தையா என்பவருடன் சந்தோஷ் அங்கே சென்று, தன்னை காதலிக்குமாறு மதுமிதாவை மீண்டும் வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் மதுமிதா காதலிக்க மறுக்கவே, மதுமிதா மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சந்தோஷ் மற்றும் முத்தையா அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். உடல் கருகிய நிலையில் மதுமிதா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே, அவர் தன்னுடைய வாக்குமூலத்தையும் அளித்தார்.

அதன்பேரில் சந்தோஷ் மற்றும் முத்தையா இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை மதுமிதா உயிரிழந்தார். இதையடுத்து, இருவர் மீதான கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

Share.
Leave A Reply

Exit mobile version