2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டையே உலுக்கிய சம்பவம் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலாகும். இலங்கை நாட்டின் அனைத்து கத்தோலிக்க மக்களும் காலை ஈஸ்டர் விசேட திருப்பலி பூஜைகளில் கலந்து கொண்டிருந்த போது நாட்டின் பிரதான நகரங்களில் உள்ள பிரசித்த பெற்ற கத்தோலிக்க ஆலயங்களுக்குள் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றன.
பலர் கொல்லப்பட்டனர். அந்த ஆண்டு ஈஸ்டர் தினம் இரத்தம் சிந்தப்பட்ட தினமாக மாறியது. இதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளை கண்டு பிடிப்பதில் இன்று வரை மர்மம் நிலவுகின்றது.
இந்நிலையில் 30 ஆம் திகதி தெய்யந்திரவில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இம்மாதம் 21 ஆம் திகதிக்கு முன்பதாக ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகள் பற்றிய தகவல்களை நாட்டு மக்களுக்கு அறியத்தருவோம் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வருடத்தின் ஈஸ்டர் தினமானது ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வருகின்றது. ஆகவே அன்றைய தினம் அவர் சில தகவல்களை வெளியிடுவார் என்று எதிர்ப்பார்ப்பு நாட்டின் கிறிஸ்தவ மக்களை மாத்திரமின்றி அனைத்து மக்களின் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரிகளை கண்டு பிடிப்பதற்கு அச்சம்பவத்துக்குப்பிறகு ஆட்சியமைத்த பொது ஜன பெரமுன அதிக அக்கறை காட்டவில்லை. ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ச விசாரணை அறிக்கைகள் தொடர்பில் அலட்சியப்போக்கை கடைப் பிடித்தார்.
முன்னதாக இந்த சம்பவம் தொடர்பில் அதிக அக்கறையுடன் புலனாய்வுகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிகள் காரணமின்றி இடமாற்றம் செய்யப்பட்டனர். ராஜபக்ச சகோதரர்கள் ஆட்சியை பிடிப்பதற்கும் நாட்டில் தமது ஆட்சி இல்லாவிட்டால் அந்நிய சக்திகளின் ஆதிக்கம் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் ஏற்படும் என்ற செய்தியை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் திட்டமிடப்பட்டது என்ற பரவலான கருத்து நாட்டு மக்களிடம் மாத்திரமின்றி சர்வதேசத்திடமும் உள்ளது.
இதே வேளை ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரிகள் தமது ஆட்சியில் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படுவர் என்ற வாக்குறுதியை அநுர குமார திசாநாயக்க கடந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்தே மக்கள் மத்தியில் கூறி வந்தார். தமக்கு அதிகாரம் வழங்கினால் இச்சம்பவத்தின் பின்னணி குறித்த சகல விசாரணைகளும் எந்த வித தங்கு தடையுமின்றி முன்னெடுக்கப்படும் என அவர் நாட்டின் கத்தோலிக்க மக்களுக்கு நம்பிக்கையூட்டினார். ஆனால் அவர் ஜனாதிபதியாகிய பின்னரும், பொதுத்தேர்தல் இடம்பெற்று பெரும்பான்மையுடன் அவரது கட்சியான தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்த பிறகும் கூட ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் புதிதாக ஆரம்பிக்கப்படவில்லை.
இந்நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு ஒரு மாதம் காலம் இருக்கும் நிலையில் திடீரென 30 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி அநுரகுமார எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்பதாக உயிர்த்த ஞாயிறு குற்றவாளிகளை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
இவரின் கூற்றுப்படி பார்த்தால் மிகவும் இரகசியமாக குறித்த தாக்குதல் சம்பவ விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டனவா அல்லது தேசிய மக்கள் சக்தியினருக்கு இத்தாக்குதல் தொடர்பான தகவல்கள் தெரிந்துள்ளனவா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ராஜபக்ச சகோதரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு எதிராகவும் ராஜபக்ச காலத்தில் அதீத அதிகாரங்களுடன் வலம் வந்த அமைச்சர்களையும் ஊழல் மோசடி குற்றச்சாட்டில் அநுர அரசாங்கம் கைது செய்து வருகின்றது.
அவர்களின் ஆதரவுடன் பாராளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதியாகிய ரணில் விக்ரமசிங்கவை அதிர்ச்சியடைய செய்யும் வகையில் பட்டலந்த வதை முகாம் தொடர்பான ஜனாதிபதி அறிக்கையையும் பாராளுமன்றில் சமர்ப்பித்து அது தொடர்பான விவாதங்களை ஆரம்பிக்க தயாராகி விட்டனர்.
மேலும் ராஜபக்ச மற்றும் ரணில் இருவருக்கும் ஆதரவாக செயற்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்.கோனை கைது செய்து அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கும் அநுர அரசாங்கம் தயாராகி வருகின்றது. இது தொடர்பில் ஒன்றுமே தெரியாது என்ன பேசுவதென்றும் புரியாது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மிகவும் பலவீனமான அரசியலை முன்னெடுத்து வருகின்றார்.
இதுவே அநுர அரசாங்கத்துக்கு பலமாக உள்ள விடயங்களாகும். நாட்டு மக்களின் மனதில் உள்ள சந்தேகங்களின் படி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் ராஜபக்ச சகோதரர்களில் யாருடைய பெயரையாவது ஜனாதிபதி அநுர குமார கூறி விடுவாரா என்ற எதிர்ப்பார்ப்பும் தோன்றியுள்ளது.
எனவே ஏப்ரல் மாதம் பிறந்தவுடன் நாட்டு மக்களுக்கு தமிழ் சிங்கள புத்தாண்டு பிறப்பு கொண்டாட்டங்கள் மற்றும் அடுத்த மாதம் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஆகிய இரண்டு அம்சங்களையும் விட, 21 ஆம் திகதிக்கு முன்பதாக ஜனாதிபதி கூறப்போகும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவ சூத்திரதாரிகள் பற்றிய விடயங்களே அதிகமாக பேசப்படப் போகின்றன.
இது உண்மையில் அச்சம்பவத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தும் என்பதே உண்மை. உண்மைகள் அம்பலமானால் தாம் எவ்வாறு நாட்டு மக்களுக்கு முகங்கொடுப்பது, மீண்டும் தமக்கு எதிராக அரகலய போராட்டம் உருவாகுமா, தமது குடியிருப்புகள் , சொத்துகள் சேதமாக்கப்படுமா , தமக்கு எவ்வாறான தண்டனைகள் கிடைக்கும் போன்ற பல கேள்விகள் குழப்பங்களுக்கு அவர்கள் ஆளாகியுள்ளதாகத் தெரிகின்றது.
ஜனாதிபதி யார் பெயரை கூறப்போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சி.சி.என் Virakesari