– கொல்லப்பட்ட ஒருவரின் கையடக்கதொலைபேசி வீடியோவும் உண்மையை அம்பலப்படுத்தியது.

 

காசாவின் தென்பகுதியில் கடந்த மாதம் 23ம் திகதி தனது படையினர் மருத்துவபணியாளர்களை தவறுதலாக சுட்டுக்கொலை செய்துள்ளனர் என்பதை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளது.

அம்புலன்ஸ்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னதாக இஸ்ரேலிய படையினர் ஹமாஸ் உறுப்பினர்கள் பயணம் செய்த காரின் மீது துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டிருந்தனர் என தெரிவித்துள்ள இஸ்ரேலிய அதிகாரியொருவர் அம்புலன்ஸ்கள் அந்த பகுதிக்கு வந்தவேளை வான்வெளி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் சந்தேகத்திற்கு இடமான விதத்தில் வாகனத்தொடரணி வருவதாக அறிவித்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

அம்புலன்ஸ்கள் ஹமாசின் காருக்கு அருகில் நிறுத்தப்பட்டவேளை இஸ்ரேலிய படையினர் தங்களிற்கு அச்சுறுத்தல் என கருதி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என இஸ்ரேலிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

வாகனங்கள் வெளிச்சமின்றி வந்தன என முன்னர் தெரிவித்தது தவறு என்பதை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளது.படையினரே அவ்வாறான தகவலை வெளியிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதேவேளை இஸ்ரேலால் சுட்டுக்கொல்லப்பட்ட மருத்துவபணியாளர் ஒருவரின் கையடக்கதொலைபேசியில் பதிவாகியுள்ள காட்சிகள் உண்மையை வெளிப்படுத்தியுள்ளன.

அந்த வீடியோவில் வாகனங்கள் குறிப்பிட்ட பகுதியை நெருங்கும்போது எச்சரிக்கை எதுவுமின்றி துப்பாக்கிபிரயோகம் இடம்பெறுவதை காணமுடிகின்றது . இந்த வீடியோவை நியுயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

ஹெட்லைட்கள் அல்லது அவசரகால சமிக்ஞைகள் இல்லாமல் தங்கள் படையினரை நோக்கி சந்தேகத்திற்கு இடமான முறையில் முன்னேறிய பல வாகனங்கள் மீது தங்கள் படையினர்துப்பாக்கிபிரயோகத்தில் ஈடுபட்டமை ஆரம்பகட்ட மதிப்பீடுகளின் மூலம் தெரியவந்துள்ளதாக இஸ்ரேல் முன்னர் தெரிவித்திருந்தது.

இந்த வாகனங்கள் அந்த பகுதிக்கு தாங்கள் வரவுள்ளமை குறித்து இஸ்ரேலிய படையினருக்கு தகவல் வழங்கவில்லை இஅந்த பகுதி மோதல் இடம்பெறும் பகுதியாக காணப்பட்டதுஎன இஸ்ரேல் முன்னர் தெரிவித்திருந்தது

வாகனங்களில் தெளிவான செம்பிறை குறியீடு காணப்படுவதை காணமுடிகின்றது.

இஸ்ரேலிய படையினர் 15 மருத்துவஉதவியாளர்களையும் மீட்பு பணியாளர் ஒருவரையும் ஒவ்வொருவராக சுட்டுக்கொன்ற பின்னர் பாரிய மனித புதைகுழியில் புதைத்தனர் என ஐநா தெரிவித்துள்ளது.

ரபா நகரின் டெல் அல் சுல்தான் நகரில் இஸ்ரேலிய படையினர் அவர்களின் வாகனத்தின் மீது தாக்குதலை மேற்கொண்டனர் என தெரிவித்துள்ள ஐநா உயிரிழந்த ஒருவரின் கரங்கள் பின்னால் கட்டப்பட்டுள்ளன இதன் காரணமாக இவர் கைதுசெய்யப்பட்டே கொல்லப்பட்டுள்ளார் என கருதலாம் என தெரிவித்துள்ளது.

எகிப்தின் எல்லையில் உள்ள ரபா பகுதியில் இஸ்ரேல் தனது தாக்குதலை ஆரம்பித்த மார்ச்23ம்திகதியே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.மற்றுமொரு செம்பிறை பணியாளர் காணாமல்போயுள்ளார்.

ஏழு நாட்களிற்கு முன்னர் சிவில் பாதுகாப்பு பணியாளர்களும் பாலஸ்தீன செம்பிறை சமூக பணியாளர்களும் அம்புலன்ஸ் மூலம் இந்த பகுதிக்கு வந்தனர் என தெரிவித்துள்ள பாலஸ்தீனத்திற்கான ஐக்கியநாடுகள் மனிதாபிமான அலுவலகத்தின் தலைவர் ஜொனதன் விட்டல்இஅவர்கள் ஒவ்வொருவராக அடுத்தடுத்து இலக்குவைக்கப்பட்டனர் பின்னர் அவர்களது உடல்களை எடுத்து பாரிய மனித புதைகுழிக்குள் புதைத்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version