கடந்த 1966ஆம் ஆண்டில், தொலைதூர ஸ்பானிய கிராமமான பலோமரேஸ், “தெளிவான நீல வானத்தில் இருந்து, அணுகுண்டுகள் அதன் மீது விழுவதை” கண்டது.

இந்தப் பயங்கரமான விபத்து நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கா ஒரு ஹைட்ரஜன் குண்டை இழந்தபோது என்ன நடந்தது என்பதைக் கண்டறிய பிபிசி நிருபர் கிறிஸ் ப்ராஷர் அங்கு சென்றார்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, இதே வாரத்தில், 1966ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதியன்று அமெரிக்க ராணுவம் 80 நாட்களாக தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்த, காணாமல் போன அணு ஆயுதம் இறுதியாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

ஹிரோஷிமாவில் வீசப்பட்ட குண்டின் சக்தியைவிட 100 மடங்கு அதிக சக்தி கொண்டது அந்த அணுகுண்டு. அதை மத்திய தரைக் கடலின் 2,850 அடி (869 மீ) ஆழத்தில் இருந்து கவனமாக அகற்றி, USS பெட்ரெல் கப்பலில் கவனமாக இறக்கினர்.
விளம்பரம்

அதைக் கப்பலில் ஏற்றியதும், அதிகாரிகள் அதன் வெப்ப அணுசக்தி சாதனத்தின் உறைக்குள் கடும் சிரமத்தோடு வெட்டி செயலிழக்கச் செய்தனர். அதன் பிறகுதான் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அமெரிக்கா எதிர்பாராமல் ஸ்பெயின் மீது தவறவிட்ட நான்கு ஹைட்ரஜன் குண்டுகளில் கடைசி அணுகுண்டு மீட்கப்பட்டது.

கடந்த 1968ஆம் ஆண்டு சம்பவ இடத்திலிருந்து செய்திகளை வெளியிட்ட பிபிசி நிருபர் கிறிஸ் பிராஷர் இதை, “அணு ஆயுதங்கள் தொடர்புடைய முதல் விபத்து இது அல்ல,” என்று கூறினார்.

“ஹைட்ரஜன் குண்டுகளை சுமந்து செல்லும் விமானங்கள் தொடர்புடைய குறைந்தது ஒன்பது விபத்துகளையாவது அமெரிக்க ராணுவ தலைமையகம் பட்டியலிட்டுள்ளது.

ஆனால் இதுதான் வெளிநாட்டு மண்ணில் நடந்த முதல் விபத்து. அதுவும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட முதல் விபத்து மற்றும் உலகின் கவனத்தை ஈர்த்த முதல் விபத்து.”

அமெரிக்கா, ஸ்பெயின், அணுகுண்டு

இந்த பயங்கரமான சூழ்நிலை, குரோம் டோம் என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட அமெரிக்க நடவடிக்கையால் ஏற்பட்டது. 1960களின் தொடக்கத்தில், தன்னுடன் பனிப்போர் செய்து கொண்டிருந்த சோவியத் யூனியன், தாக்குதல் தொடங்குவதைத் தடுக்க, அமெரிக்கா ஒரு திட்டத்தை உருவாக்கியது.

ஒரே கனநேர எச்சரிக்கையில் மாஸ்கோவை தாக்கும் வகையில், அணு ஆயுதம் ஏந்திய B-52 விமானங்களை வானத்தில் தொடர்ந்து ரோந்து செல்ல வைத்தது அமெரிக்கா. ஆனால் இப்படி தொடர்ந்து நீண்ட வட்டம் அடித்துக் கொண்டிருந்த விமானங்கள் பறப்பதற்கு எரிபொருள் நிரப்ப வேண்டிய தேவை இருந்தது.

இப்படி ஒரு குண்டுவீசும் விமானம், 1966 ஜனவரி 17 அன்று, தெற்கு ஸ்பெயினின் அல்மேரியா பகுதியில், 31,000 அடி (9.5 கி.மீ) உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அதோடு, KC-135 டேங்கர் விமானம் மூலம், வழக்கம் போல வானிலேயே எரிபொருள் நிரப்பிக் கொள்ள முயன்றது.

“அணுகுண்டுகளை ஏந்தியிருந்த விமானம் மிக அதிக அளவிலான வேகத்தில் டேங்கர் விமானத்தை நெருங்கி வந்ததோடு, தன்னையும் நிலைப்படுத்திக் கொள்ளவில்லை என்று நான் நம்புகிறேன்,” என்று இந்தப் படுமோசமான விபத்தைக் கையாளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்த அமெரிக்க மேஜர் ஜெனரல் டெல்மர் வில்சன் பிராஷரிடம் கூறினார்.

தொடர்ந்து, “இதன் விளைவாக அந்த இரண்டு விமானங்களும் மிக அருகில் மோதிக்கொண்டன,” என்றார்.

B-52 விமானம், எரிபொருள் விமானத்தைக் மோதிக் கிழித்துக் கொண்டு சென்றதில், KC-135 சுமந்து சென்ற ஜெட் எரிபொருள் தீப்பற்றி, அதிலிருந்த குழுவினர்கள் நால்வரும் கொல்லப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெடிப்பில் B-52 விமானத்தின் வால் பகுதியில் இருந்த இருவர் கொல்லப்பட்டனர். மூன்றாவது நபர் விமானத்தில் இருந்து வெளியேறினார். ஆனால் அவரது பாராசூட் சரியான நேரத்தில் திறக்காததால் இறந்துவிட்டார்.

குண்டுவீச்சு விமானம் உடைந்து நொறுங்கி கீழே விழும் முன், அதன் மற்ற நான்கு உறுப்பினர்கள் வெற்றிகரமாக வெளியேறினர். அதன்பின் எரியும் விமானத் துண்டுகளும், அந்த விமானத்தில் இருந்த கொடிய தெர்மோநியூக்ளியர் குண்டுகளும் ஒதுக்குப்புற ஸ்பானிய கிராமமான பாலோமேர்ஸ் மீது பொழிந்தன.

ஒரு மைல் தூரத்தில் இருந்தும்கூட அந்தப் பெரிய தீப்பிழம்பைக் காண முடிந்தது. அதிர்ஷ்டவசமாக, அது அணு வெடிப்பைத் தூண்டவில்லை. குண்டுவீச்சு விமானத்தின் ஏவுகணைகள் ஆயுதமாக மாற்றப்படவில்லை. மேலும் எதிர்பாராத அணு சங்கிலி எதிர்வினைகளைத் தடுக்கத் தேவையான பாதுகாப்பு அமைப்புகளையும் அவை உள்ளே கொண்டிருந்தன.

ஆனால் இந்த அணுக்கரு சாதனங்களைத் தூண்டத் தேவையான முறையின் ஒரு பகுதியாக அவற்றின் புளூட்டோனியம் மையங்களைச் சுற்றி வெடிபொருட்கள் இருந்தன. விபத்து ஏற்பட்டால், தரையிறங்கும்போது ஏற்படும் தாக்கத்தைத் தணிக்கவும், கதிரியக்க மாசுபாட்டைத் தடுக்கவும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட பாராசூட்கள் குண்டுகளில் இணைக்கப்பட்டிருந்தன.

வெடிக்காத ஒரு குண்டு ஆற்றுப் படுகைகளில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. மறுநாளே அது முழுமையாக மீட்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, இரண்டு அணுகுண்டுகளின் பாராசூட்கள் திறக்கத் தவறிவிட்டன.

அன்று காலை, ஸ்பானிஷ் விவசாயி பெட்ரோ அலார்கான், பேரக் குழந்தைகளுடன் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரது தக்காளித் தோட்டத்தில் அணுகுண்டு ஒன்று விழுந்து வெடித்துச் சிதறியது.

“நாங்கள் அடித்துச் செல்லப்பட்டோம். குழந்தைகள் அழத் தொடங்கினர். நான் பயத்தில் முடங்கிப் போனேன். வயிற்றில் ஒரு கல் தாக்கியது. நான் இறந்துவிட்டதாக நினைத்தேன். குழந்தைகள் அழும்போது, நான் மரணித்துவிட்டதைப் போல் உணர்ந்தேன்,” என்று அவர் 1968இல் பிபிசியிடம் கூறினார்.

இன்னொரு ஹைட்ரஜன் குண்டு ஒரு கல்லறைக்கு அருகில் தரையில் மோதியபோது வெடித்தது.

இந்த இரட்டை வெடிப்புகள் பெரிய பள்ளங்களை உருவாக்கி, அதிக நச்சுத்தன்மை வாய்ந்த, கதிரியக்க புளூட்டோனியம் தூசியை பல நூறு ஏக்கர்களுக்குச் சிதறடித்தன. அந்த ஸ்பானிய கிராமத்தின் மீது எரியும் விமானத்தின் மிச்சங்களும் மழையாகப் பொழிந்தன.

“நான் அழுதுகொண்டே ஓடிக்கொண்டிருந்தேன்,” என்று 1968இல் பிபிசியிடம் கூறினார் செனோரா புளோரஸ் என்ற கிராமவாசி. “என் மகள், ‘அம்மா, அம்மா, நம்ம வீட்டைப் பாருங்க, அது எரிகிறது’ என்று அழுதாள்.

எல்லாப் பக்கமும் புகையாக இருந்ததால் அவள் சொன்னதை உண்மை என்றே நினைத்தேன். எங்களைச் சுற்றி நிறைய கற்களும் குப்பைகளும் விழுந்து கொண்டிருந்தன. அவை எங்களைத் தாக்கும் என்று நினைத்தேன். அதுவொரு பயங்கர வெடிப்பு. உலகமே அழிந்து கொண்டிருக்கிறது என்று நாங்கள் நினைத்தோம்.”

குண்டுவீசும் விமானம் அணு ஆயுதங்களுடன் கீழே விழுந்தது என்ற செய்தி அமெரிக்க ராணுவத் தலைமைக்கு எட்டியதும், ஒரு பெரும் செயல்திட்டம் தொடங்கப்பட்டது. பேரழிவு நடந்த நேரத்தில், கேப்டன் ஜோ ராமிரெஸ், மேட்ரிட்டில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க விமானப் படையின் வழக்கறிஞராக இருந்தார்.

“நிறைய பேர் இதுகுறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள், மாநாட்டு அறை பரபரப்பாக இருந்தது. எல்லோரும் திரும்பத் திரும்ப ‘உடைந்த அம்பு’ பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் ‘உடைந்த அம்பு’ என்பது அணு விபத்துக்கான குறியீட்டு வார்த்தை என்பதை நான் அறிந்தேன்,” என்று அவர் 2011இல் பிபிசியின் விட்னெஸ் ஹிஸ்டரி நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

அமெரிக்க ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்றனர். கேப்டன் ராமிரெஸ், பாலோமேர்ஸை வந்தடைந்தபோது, விபத்தால் ஏற்பட்ட பேரழிவையும் குழப்பத்தையும் உடனடியாகக் கண்டார். புகைந்து கொண்டிருந்த பெரிய துண்டுகள் அந்தப் பகுதி முழுவதும் சிதறிக் கிடந்தன. எரியும் B-52 விமானத்தின் பெரும்பகுதி கிராமப் பள்ளியின் முற்றத்தில் விழுந்திருந்தது.

“அதுவொரு சிறிய கிராமம். ஆனால் மக்கள் வெவ்வேறு திசைகளில் ஓடிக் கொண்டிருந்தனர். புகைந்து கொண்டிருந்த இடிபாடுகளை என்னால் பார்க்க முடிந்தது. சில தீப்பிழம்புகளையும் என்னால் பார்க்க முடிந்தது.”

பெரும் சேதம் நடந்திருந்த போதிலும், அதிசயமாக கிராமத்தினர் யாரும் பலியாகவில்லை. “கிட்டத்தட்ட 100 டன் எரியும் குப்பைகள் கிராமத்தின் மீது விழுந்திருந்தன, ஆனால் ஒரு கோழிகூட சாகவில்லை,” என்று பிராஷர் கூறினார்.

உள்ளூர் பள்ளி ஆசிரியர் ஒருவரும், மருத்துவர் ஒருவரும் தீப்பிடித்துக் கருகிய மலைப் பகுதியில் ஏறி, கொல்லப்பட்ட அமெரிக்க விமானப் படை வீரர்களின் எச்சங்களை மீட்டெடுத்தனர். “பின்னர், கிடைத்த உடல் பாகங்களை ஐந்து சவப்பெட்டிகளில் வரிசைப்படுத்தி வைத்தனர். ஆனால் அமெரிக்கர்கள் அந்த மலைப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட நான்கு உடல்களை மட்டுமே உரிமை கோர, அது ஒரு பெரும் அதிகாரபூர்வ குழப்பத்தையும், சிரமத்தையும் ஏற்படுத்தியது” என்று பிரேஷர் கூறினார்.

B-52 குழுவினரில் மூன்று பேர் கடற்கரையில் இருந்து பல மைல்கள் தொலைவில் மத்திய தரைக் கடலில் தரையிறங்கினர், விபத்து நடந்த ஒரு மணிநேரத்திற்குள் உள்ளூர் மீன்பிடிப் படகுகளால் மீட்கப்பட்டனர்.

நான்காவது நபரான, B-52 விமானத்தின் ரேடார்-நேவிகேட்டர், விமானம் வெடித்த பகுதி மூலமாக வெளியேறினார். இதனால் அவருக்கு கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. அதோடு இருக்கையில் இருந்தும் தன்னைப் பிரித்துக்கொள்ள அவரால் முடியவில்லை. இருந்த போதிலும் அவர் பாராசூட்டை திறக்க முடிந்தது. அதோடு கிராமத்திற்கு அருகில் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும், விமானத்தின் கொடிய அணுகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் சிக்கல் இன்னும் இருந்தது. “அந்த குண்டுகளை மீட்டெடுப்பதே எனது முக்கியக் கவலையாக இருந்தது, அதுதான் முதன்மையான பிரச்னை” என்று ஜெனரல் வில்சன் 1968இல் பிபிசியிடம் கூறினார்.

 

‘அணுகுண்டுகளில் ஒன்றைக் காணவில்லை’

“முதல் நாள் இரவு, கார்டியா சிவில் [ஸ்பானிஷ் தேசிய காவல் படை] பாலோமேர்ஸில் உள்ள சிறிய பாருக்கு வந்தனர். மின்சாரம் இருந்த ஒரே இடம் அதுதான். அவர்கள் வெடிகுண்டு என்று கருதியதைப் பற்றி எங்களிடம் தெரிவித்தனர். எனவே நாங்கள் உடனடியாக எங்கள் ஆட்களில் சிலரை நகர மையத்தில் இருந்து, அருகே இருந்த அந்த ஆற்றுப் படுகைக்கு அனுப்பினோம்.

உண்மையாகவே அதுவொரு வெடிகுண்டுதான். எனவே நாங்கள் அங்கே ஒரு காவலரை நிறுத்தி வைத்தோம். பின்னர் மறுநாள் காலை, வெளிச்சம் வந்தவுடனேயே, நாங்கள் எங்கள் தேடலைத் தொடங்கினோம். மறுநாள் காலை 10, 11 மணியளவில் இருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் இரண்டு குண்டுகளைக் கண்டுபிடித்தோம்.”

மூன்று அணுகுண்டுகள் கிடைத்துவிட்டன. ஆனால் இன்னும் ஒன்று கிடைக்கவில்லை. அடுத்த நாளுக்குள், அருகிலுள்ள தளங்களில் இருந்து அமெரிக்க துருப்புகள் நிரப்பப்பட்ட லாரிகள் அனுப்பப்பட்டன. கதிரியக்க மாசுபாடு ஏற்பட்டிருந்தால் அதைக் கட்டுப்படுத்தவும், நான்காவது அணுகுண்டைத் தேடவும் வந்திருந்த, சுமார் 700 அமெரிக்க விமானப் படை வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பாலோமேர்ஸ் கடற்கரை ஒரு தளமாக மாறியது.

“தேடல் தீவிரமாகத் தொடங்கியது. விமானப் படை வீரர்கள் 40, 50 பேர் கைகோர்த்து வரிசையாக இணைந்திருப்பதுதான் முதலில் கண்ணுக்குத் தெரியும். அவர்களுக்கென பகுதிகளைப் பிரித்துத் தேடச் சொன்னார்கள். கெய்கர் கவுன்டர்களுடன் சிலர் வரத் தொடங்கினர். அவர்கள் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் குறிக்கத் தொடங்கினர்,” என்று கேப்டன் ராமிரெஸ் 2011இல் கூறினார்.

அமெரிக்க வீரர்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியைக் கண்டுபிடித்ததும், அந்தப் பகுதியில் இருக்கும் மேல் மண்ணில் மூன்று அங்குல அளவுக்குத் தோண்டி அதை பீப்பாய்களில் அடைத்து அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்புவார்கள். இப்படி சுமார் 1,400 டன் கதிரியக்கத்தால் பாதித்த மண், தெற்கு கரோலினாவில் உள்ள ஒரு சேமிப்புக் கிடங்குக்கு அனுப்பப்பட்டது.

அந்த நேரத்தில் அமெரிக்காவும், ஃபிரான்சிஸ்கோ ஃபிராங்கோவின் கொடூரமான ராணுவ சர்வாதிகார ஆட்சியின் கீழ் இருந்த ஸ்பெயினும் இந்தப் படுமோசமான விபத்தின் வீச்சைக் குறைத்துக் காட்டுவதில் ஆர்வமாக இருந்தன.

குறிப்பாக, கதிர்வீச்சு பற்றிய அச்சங்கள் ஸ்பெயினின் சுற்றுலாத் துறையைப் பாதிக்கும் என்று ஃபிராங்கோ கவலைப்பட்டார்.

அது அவரது ஆட்சிக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக இருந்தது. உள்ளூர் மக்களுக்கும் வெளி உலகுக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்று உறுதியளிக்கும் முயற்சியில், ஸ்பெயினுக்கான அமெரிக்க தூதர் ஆஞ்சியர் பிடில் டியூக், விபத்து நடந்த சில வாரங்களுக்குப் பிறகு, சர்வதேச பத்திரிகைகள் முன்னிலையில் பாலோமேர்ஸ் கடற்கரையில் கடலில் நீந்த வேண்டியிருந்தது.

ஆனால் நூற்றுக்கணக்கான அமெரிக்க வீரர்கள் ஒரு வாரமாக சுற்றியுள்ள பகுதியில் தீவிரமாகவும் உன்னிப்பாகவும் தேடுதல் நடத்திய போதிலும், அவர்களால் நான்காவது குண்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் கேப்டன் ராமிரெஸ் ஓர் உள்ளூர் மீனவரிடம் பேசினார்.

அவர் கடலில் விழுந்த சில விமான வீரர்களை உயிருடன் காப்பாற்ற உதவியிருந்தார். அமெரிக்க விமானிகளில் ஒருவரைக் காப்பாற்ற முடியாமல் போனதற்காக மீனவர் கேப்டன் ராமிரெஸிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருந்தார். அவர் ஆழத்துக்கு மூழ்கிச் சென்றதாக மீனவர் நினைத்தார்.

காணாமல் போன அணுகுண்டைத்தான், மீனவர் உண்மையில் பார்த்திருக்க வேண்டும் என்பதை கேப்டன் ராமிரெஸ் உணர்ந்தார்.

“அனைத்து உடல்களும் கணக்கில் வந்துவிட்டன, அது எனக்குத் தெரியும்,” என்று அவர் கூறினார். பின்னர் தேடல் விரைவாக மத்திய தரைக் கடலுக்கு மாற்றப்பட்டது, அமெரிக்க கடற்படை 30 க்கும் மேற்பட்ட கப்பல்களைக் கொண்ட ஒரு கடற்படையை கடல் அடிவாரத்தில் தேடத் திரட்டியது.

இதில் கடலடி கன்னிவெடியைக் கண்டுபிடிக்கும் கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் அடங்கும். மைல்கணக்கில் நீண்டு கிடக்கும் கடல் தளத்தை ஆய்வு செய்வது தொழில்நுட்ப ரீதியாகச் சிக்கலானது மற்றும் மிகவும் பொறுமையாகச் செய்ய வேண்டிய செயல்முறை.

ஆனால் பல வாரங்கள் முழுமையான தேடலுக்குப் பிறகு, புதிதாக உருவாக்கப்பட்ட பெரும் ஆழத்துக்குச் செல்லக்கூடிய டைவிங் கப்பல், ஆல்வின், ஒருவழியாக காணாமல் போன குண்டை, நீருக்கடியில் இருந்த அகழி ஒன்றில் இருந்து கண்டுபிடித்தது.

தொலைந்து போனதில் இருந்து சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு, அந்த ஏவுகணை இறுதியாக மீண்டும் அமெரிக்காவிடம் பாதுகாப்பாக வந்தடைந்தது. இத்தனை நாள் அந்த அணுகுண்டைப் பற்றிய செய்திகளை அமெரிக்க ராணுவம் ரகசியமாக வைத்திருந்த போதிலும், அடுத்த நாளே உலக ஊடகங்கள் முன்பாக அந்த குண்டைக் காட்டும் எதிர்பாராத செயலைச் செய்தது.

மக்கள் தாங்களே அந்தக் குண்டைப் பார்க்காவிட்டால், அது உண்மையில் மீட்கப்பட்டதா இல்லையா என்பதைப் பற்றி அவர்கள் ஒருபோதும் உறுதியாக நம்ப மாட்டார்கள் என்று கூறிஇந்தச் செயலை தூதர் டியூக் நியாயப்படுத்தினார்.

கிட்டத்தட்ட இந்தச் சம்பவம் நடந்து அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும், இன்னும் அல்மேரியா பகுதியில் அதன் நிழலைப் பார்க்க முடிகிறது.

அமெரிக்க சுத்திகரிப்பு நடவடிக்கையில், சில கதிரியக்க மாசுபட்ட இடங்கள் விட்டுப் போயிருந்தன. அதனால், அமெரிக்காவும் ஸ்பெயினும் பாலோமேர்ஸ் குடியிருப்பாளர்களுக்கான வருடாந்திர சுகாதார சோதனைகளுக்கு நிதியளிக்க ஒப்புக்கொண்டன. அதோடு, மண், நீர், காற்று மற்றும் உள்ளூர் பயிர்களைக் கண்காணிப்பதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.

ஆனால் பாலோமேர்ஸில் இன்னமும் சுமார் 100 ஏக்கர் நிலம் (40 ஹெக்டேர்), கதிரியக்க மாசுபாட்டால், வேலி அமைக்கப்பட்டு பயனற்று இருக்கிறது. மேலும், 2015ஆம் ஆண்டில் ஸ்பெயினும் அமெரிக்காவும் அந்தப் பகுதியைச் சுத்தம் செய்ய ஒரு பரஸ்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போதிலும், இரண்டு நாடுகளும் ஒன்றும் செய்யவில்லை.

எழுதியவர், மைல்ஸ் பர்க் – இது, பிபிசி நியூஸ்ரூம் வெளியீடு.

Share.
Leave A Reply

Exit mobile version