கனடாவில் இந்திய மாணவி சுட்டுக் கொலை: போலீஸ் சொன்ன அதிர்ச்சி தகவல்

துப்பாக்கிச் சூடு உள்ளூர் சமூகத்தினரிடையேயும், சர்வதேச மாணவர்களிடையேயும் பொது பாதுகாப்பு மற்றும் வன்முறை குறித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு மாணவி, நேற்று முன்தினம் (ஏப்ரல் 17) கனடாவின் ஹாமில்டனில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் இவரை குறி வைத்து தாக்கவில்லை. அவர்களின் இலக்கு இவர் இல்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து ஹாமில்டன் காவல்துறையினர் கூறுகையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர், மொஹாக் கல்லூரி மாணவியான 21 வயதான ஹர்சிம்ரத் ரந்தாவா என அடையாளம் காணப்பட்டது.

அந்த பெண், தனது பணியிடத்திற்குச் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது இரவு 7.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

மார்பில் துப்பாக்கி குண்டு தாக்கிய காயத்துடன் இருந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கேயே மரணமடைந்தார் என்று கூறியுள்ளனர்.

இதில், கருப்பு நிற மெர்சிடிஸ் எஸ்யூவியில் வந்த பயணி ஒருவர் வெள்ளை நிற செடானில் இருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், ஹர்சிம்ரத் ரந்தாவா இடையில் சிக்கிக்கொண்டதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு இரண்டு கார்களும் சம்பவ இடத்திலிருந்து விரைவாக தப்பி ஓடிவிட்டதாகவும் தெரிவித்துள்ள காவல்துறையினர்,

அருகிலுள்ள வீட்டின் பின்புற ஜன்னலிலும் தோட்டாக்கள் தாக்கியதாக இதில், வீட்டில் வசிப்பவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது, துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

சந்தேக நபர்களை அடையாளம் காண உதவும் ஏதேனும் தகவல் அல்லது வீடியோ காட்சிகள் இருந்தால் கொடுக்குமாறு, பொதுமக்களிடம் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு உள்ளூர் சமூகத்தினரிடையேயும், சர்வதேச மாணவர்களிடையேயும் பொது பாதுகாப்பு மற்றும் வன்முறை குறித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, டொராண்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம், “ஒன்டாரியோவின் ஹாமில்டனில் இந்திய மாணவி ஹர்சிம்ரத் ரந்தாவாவின் துயர மரணம் குறித்து நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம்” என்று நேற்று (ஏப்ரல் 18) ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.

மேலும், உள்ளூர் காவல்துறையின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர் ஒரு அப்பாவி, இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது இவர் மீது தவறுதலாக தோட்டா பட்டு, படுகாயமடைந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. நாங்கள் அவரது குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம்,

மேலும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறோம். இந்த கடினமான நேரத்தில் துயரமடைந்த குடும்பத்தினருடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை சி.பி.சி (CBC) செய்திக்கு அளித்த அறிக்கையில், மொஹாக் கல்லூரி, ரந்தாவாவின் மரணத்தை அறிந்து “மிகவும் வருத்தமடைந்ததாக” தெரிவித்துள்ளது.

“இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எங்கள் எண்ணங்கள் உள்ளன. மொஹாக் கல்லூரி சமூகத்தின் உறுப்பினராக, இந்த இழப்பு பலரால் உணரப்படுவதை நாங்கள் அறிவோம், மேலும் ஹர்சிம்ரத்தின் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பரந்த கல்லூரி சமூகத்தை ஆதரிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று குறிப்பிட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version