கட்டுநாயக்க, ஆண்டியம்பலம பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கட்டுநாயக்க, ஆண்டியம்பலம பிரதேசத்திற்கு நேற்றைய தினம் காலை 10.00 மணியளவில் சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் சென்ற துப்பாக்கிதாரிகள் இருவர், வட்டிக்கு பணம் கோரும் போர்வையில் 33 வயதுடைய வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

வட்டிக்கு பணம் கோரி வந்த துப்பாக்கிதாரிகள் தொடர்பில் சந்தேகமடைந்த வர்த்தகர் அவர்களை வீட்டிற்குள் வைத்து கதவை மூடியுள்ளார்.

இதனை அறிந்துகொண்ட துப்பாக்கிதாரிகள் வர்த்தகரை சுட்டுக்கொல்ல முயன்றுள்ளனர்.

இதன்போது துப்பாக்கிதாரிகளிடம் இருந்த துப்பாக்கி செயலிழந்துள்ளது.

பின்னர் வர்த்தகரும் இரு துப்பாக்கிதாரிகளும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து, துப்பாக்கிதாரிகள் இருவரும் வர்த்தகரின் வீட்டிலிருந்து தப்பிச் செல்வதற்காக வீட்டின் மதிலிலிருந்து கீழே குதித்துள்ளனர்.

இதன்போது ஒரு துப்பாக்கிதாரி தப்பிச் சென்றுள்ள நிலையில் மற்றைய துப்பாக்கிதாரியின் கால் வீட்டின் மதிலில் மோதி காயமடைந்துள்ளது.

பின்னர் காயமடைந்த துப்பாக்கிதாரி தனது கையிலிருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொல்ல முயன்ற போது துப்பாக்கி மீண்டும் செயலிழந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த கட்டுநாயக்க பொலிஸார் காயமடைந்த துப்பாக்கிதாரியை கைது செய்துள்ளனர்.

அம்பாறை பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய துப்பாக்கிதாரியே கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் காயமடைந்த துப்பாக்கிதாரி சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரியிடமிருந்து 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தப்பிச் சென்ற துப்பாக்கிதாரி நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version