காசாவில் இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இஸ்ரேலின் முற்றுகைக்கு மத்தியில் அங்கு தொடர்ந்து இடம்பெற்று வரும் உக்கிர தாக்குதல்களில் நேற்றும் (11) பலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

தெற்கு நகரான கான் யூனிஸில் இரு கூடாரங்கள் மீது இடம்பெற்ற ஆளில்லா விமானத் தாக்குதல்கள் ஒவ்வொன்றிலும் தலா இரு குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதேபோன்று ஆடவர் மற்றும் சிறுவர் ஒருவர் சென்று கொண்டிருந்த சைக்கிள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த இருவரும் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏ.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக கடந்த சனிக்கிழமை காசா நகரின் சப்ரா பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றுள்ள கூடாரம் ஒன்றின் மீது இஸ்ரேலிய போர் விமானம் நடத்திய தாக்குதல் ஒன்றில் திலைப் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா கூறியது.

‘கூடாரத்திற்குள் மூன்று குழந்தைகள், அவர்களின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் உறங்கிக் கொண்டிருந்தபோது ஆக்கிரமிப்பு (இஸ்ரேல்) விமானம் குண்டுவீசியது’ என்று அந்த குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரான ஒமர் அபூ அல் காஸ் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

காசாவுக்கு உணவு, மருந்து உட்பட அனைத்து பொருட்களும் செல்வதை இஸ்ரேல் முடக்கி தற்போது 10 வாரங்கள் கடந்திருக்கும் நிலையில் அங்கு பாரிய மனிதாபிமான நெருக்கடி ஒன்று ஏற்பட்டிருப்பதாக உதவிக் குழுக்கள் குறிப்பிட்டுள்ளன. உணவு தீர்ந்து வரும் நிலையில் பட்டினி நிலை அதிகரித்திருப்பதாக அந்தக் குழுக்கள் குறிப்பிட்டுள்ளன.

எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்காவின் போர் நிறுத்த முயற்சிகள் தோல்வி அடைந்து வரும் நிலையில் காசா போர் மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிக்கக் கூடும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

‘ஹமாஸை தோற்கடிப்பதற்கு காசா பகுதியில் உக்கிர மோதல் குறைந்தது இரண்டு ஆண்டுகள் நீடிக்கும்’ என்று அந்த அதிகாரி இஸ்ரேலின் ‘சென்னல் 12’ செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 52,810 ஆக அதிகரித்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version