எல்லைகள், விமான கடவுச்சீட்டு, தேசிய கீதம் என ஒரு தனிநாட்டுக்குறிய அனைத்து அடையாளங்களும் இருந்தாலும், அதனை தனிநாடாக மற்ற நாடுகள் அங்கீகரிக்காத சில நாடுகளும் இவ்வுலகில் இருக்கத் தான் செய்கின்றன. முக்கிய இந்நாடுகள், ஐ.நா.வால் அங்கீகரிக்கப்படாத நாடுகளாகும்.
டிரான்ஸ்னிஸ்ட்ரியா – Transnistria
மால்டோவாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் சிக்கிக் கொண்ட ஒரு பகுதி தான் டிரான்ஸ்னிஸ்ட்ரியா. இது ஒரு நாட்டைப் போல் தனது சொந்த நாணயம், அரசாங்கம், இராணுவம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவ்வளவு ஏன், டிரான்ஸ்னிஸ்ட்ரியா தனது சொந்த பணத்தை அச்சிட்டு (வேறு யாரும் ஏற்றுக்கொள்ளாத) ஒரு உண்மையான நாடு போல் செயல்படுகிறது. ஆனால் ஐ.நா இதனை ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை.இதன் மக்கள் தொகை 4,66, 000 ஆகும்.
சீலாந்து – Sealand
இங்கிலாந்து கடற்கரையில் இருந்து தன்னை ஒரு சுதந்திர நாடு என்று அழைத்துக் கொள்ளும் ஒரு சிறிய பகுதி தான் சீலாந்து. அரச குடும்பம், விமான கடவுச்சீட்டு, ஒரு தேசிய கால்பந்து அணி என ஒரு நாடாக செயல்படும் சீலாந்தை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. இதன் மக்கள் தொகை சுமா 50 இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
சோமாலிலாந்து – Somaliland
ஒரு சாதாரண நாடு செய்யும் அனைத்தையும் சோமாலிலாந்து செய்கிறது. அதற்கென தேர்தல்கள், செயல்படும் அரசாங்கம், நிலையான பொருளாதாரம், சொந்த இராணுவம் என அனைத்தையும் கொண்டுள்ளது. ஆனாலும் இந்த நாடு அங்கீகரிக்கப்படாத நாடாகவே கருதப்படுகிறது. இதன் மக்கள் தொகை 6.2 மில்லியனாகும்.
லிபர்லாந்து – liberland
இது குரோஷியாவிற்கும் செர்பியாவிற்கும் இடையிலான டானூப் ஆற்றின் மேற்குப் பகுதியில் உரிமை கோரப்படாத நிலத்தில் உள்ள ஒரு மைக்ரோநேஷனாகும். 2015 அன்று செக் சுதந்திர ஆர்வலர் விட் ஜெட்லிச்காவால் நிறுவப்பட்டது. ஒரு தனி நாடு போல் செயல்பட்டாலும் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக உள்ள எந்த நாடும் லிபர்லாந்தை ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை.