ரஸ்யா மிகக்கடுமையான ஆளில்லா விமானதாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள உக்ரைன் 2022 இல் யுத்தம் ஆரம்பித்த பின்னர் ரஸ்யா மேற்கொண்டுள்ள மிகவும் உக்கிரமான ஆளில்லா விமானதாக்குதல் இதுவென குறிப்பிட்டுள்ளது.
ரஸ்யா மேற்கொண்ட தாக்குதல் காரணமாக உக்ரைன் தலைநகரில் ஒரு பெண் கொல்லப்பட்டுள்ளார்,மூவர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
ரஸ்யா 273 ஆளில்லா விமானங்களை ஏவியது உக்ரைன் தலைநகரின் மத்திய பகுதியை இலக்குவைத்தது,என தெரிவித்துள்ள உக்ரைனின் விமானப்படை டினிப்ரோபட்ரோவ்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பிராந்தியங்களையும் உக்ரைன் இலக்குவைத்தது என குறிப்பிட்டுள்ளது.
ரஸ்யா இதுவரை மேற்கொண்ட மிகப்பெரிய ஆளில்லா விமானதாக்குதல் இதுவென்பதை உக்ரைன் வழங்கியுள்ள தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
கடந்த பெப்ரவரி 23ம் திகதி அதாவது யுத்தம் ஆரம்பித்து மூன்றாவது வருடத்தன்று ரஸ்யா 267 ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டது.
மூன்று வருடங்களின் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு நாடுகளிற்கும் இடையில் இடம்பெற்ற நேரடி பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையிலேயே ரஸ்யா பாரிய ஆளில்லா விமானதாக்குதலை மேற்கொண்டுள்ளது.