லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேற்ற சோதனைக்கு எதிரான கலவரத்தை ஒடுக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தேசிய இராணுவத்தை நிறுத்தியதைத் தொடர்ந்து, மூன்றாவது நாளாக போராட்டம் தீவிரமடைந்தது.
கார்களுக்கு தீ வைத்து எரித்து, ஒரு பெரிய நெடுஞ்சாலையை போராட்டக்காரர்கள் மூடியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
எனினும், அமெரிக்க காவல் துறையின் நடவடிக்கையால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்டுள்ள கலவரத்தை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ட்ரூத் சமூக வலைதளத்தில், “ஒரு காலத்தில் சிறந்த அமெரிக்க நகரமான லாஸ் ஏஞ்சல்ஸ், சட்டவிரோத வேற்றுகிரகவாசிகள் மற்றும் குற்றவாளிகளால் படையெடுக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இப்போது, வன்முறை, கிளர்ச்சி கும்பல்கள் எங்கள் கூட்டாட்சி இராணுவத்தை தாக்கி வருகின்றன. ஆனால், இந்த சட்டவிரோத கலவரங்கள் எங்கள் உறுதியை வலுப்படுத்துகின்றன.
உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி ஆகியோர், மற்ற அனைத்து தொடர்புடைய துறைகள் மற்றும் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, லாஸ் ஏஞ்சல்ஸை புலம்பெயர்ந்தோர் படையெடுப்பிலிருந்து விடுவிப்பதற்கும், இந்த புலம்பெயர்ந்தோர் கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நான் அறிவுறுத்துகிறேன்.
நகரத்தில் ஒழுங்கு மீட்டெடுக்கப்படும், சட்டவிரோதிகள் வெளியேற்றப்படுவார்கள் முதலானோர் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து விடுவிக்கப்படுவர்” என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில் கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம், லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து தேசிய இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என ட்ரம்பை வலியுறுத்தினார்.
இதுகுறித்து எழுதிய கடிதத்தில், ‘தேசிய இராணுவ துருப்புக்களை மாகாணத்திலிருந்து வெளியேற்ற வேண்டும். அவர்களின் இருப்பு லாஸ் ஏஞ்சல்ஸில் பதற்றங்களை மோசமாக்குகிறது. ட்ரம்பின் இந்த நடவடிக்கை மாநில அதிகாரத்தின் பெரிய மீறல்’ என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ட்ரம்ப், நியூசம் போன்ற தலைவர்கள் நடந்துகொண்டிருக்கும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தத் தவறியதால் இராணுவ நடவடிக்கை தேவைப்பட்டது என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிவர்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பல்வேறு இடங்களில் குடியேற்றம் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் கடந்த 6 ஆம் திகதி சோதனை நடத்தினர். இதில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 44 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையைக் கண்டித்து முகக் கவசம் (மாஸ்க்) அணிந்த பலர் தொழில் பூங்காவுக்கு எதிரில் இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டக்காரர்களுக்கும் எல்லை ரோந்து அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையில் முடிந்தது.
இதையடுத்து, போராட்டத்தை மாகாண அரசு ஒடுக்கவில்லை என குற்றம் சாட்டிய ட்ரம்ப், சுமார் 2,000 இராணுவ வீரர்களை (தேசிய படையினர்) போராட்டத்தை ஒடுக்கும் பணியில் ஈடுபடுத்த உத்தரவிட்டார்.
இது குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூஸ்கம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் கரென் பாஸ் ஆகியோருக்கு போராட்டத்தை ஒடுக்கும் திறன் இல்லை. பிறரின் தூண்டுதலின் பேரிலும் பணம் வாங்கிக் கொண்டும் நடைபெறும் போராட்டங்களை பொறுத்துக் கொள்ள முடியாது.
போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் முகக் கவசம் அணிய தடை விதிக்கப்படுகிறது” என கூறியுள்ளார். போராட்டத்தை ஒடுக்க இராணுவத்தை ஈடுபடுத்தியதற்கு கலிபோர்னியா ஆளுநர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ட்ரம்பின் இந்த நடவடிக்கை பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என குற்றம் சாட்டினார்.